அத்வைத் பிறந்த போதே சமையலுக்கு தனி ஆள், வெங்கட், அலமேலு இருவரின் உதவிக்கென எப்போதுமே வீட்டில் இன்னொரு ஆள், முறை வாசல் செய்ய, தோட்டம் பராமரிக்க, மேல் வேலைக்கு என அதற்கு தனி ஆள் என நியமித்து விட்டான் யுகி. பெற்றோரையும் சிரம படுத்தவில்லை, மனைவியையும் வீட்டு வேலைகளில் சிக்கிக் கொள்ள வைக்கவில்லை யுகி.
சேகர் அவனது வேலையில் காலூன்றி விடவும் அதுவரை ஓடிக் கொண்டிருந்த பைரவி தன் மகள்களுக்காக வேலையை விட்டு விட்டாள். ஷிவானிக்கு திருமணம் முடிந்து அமெரிக்காவில் குடியேறி விட்டாள். இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
சுப்ரியா பெங்களூருவில் ஃபேஷன் டிசைன் துறையில் வேலை பார்க்கிறாள். உடன் வேலை செய்பவனை காதலிக்கிறாள். வீட்டினருக்கு தெரியும், ஆறு மாதங்களில் திருமணம்.
ரோஹித் மருத்துவம் படிக்கிறான். ரோஹித்தின் பள்ளி படிப்பு முடியவுமே இந்தியா திரும்பி விட்டான் வாசு. கோவையிலேயே வேலை தேடிக் கொண்டான். ரோஹித்திற்கு ஒரு தங்கை இருக்கிறாள், ரோஷிணி, ஆறாவது படிக்கிறாள்.
வாசு தன் குடும்பத்தோடு அவன் வாங்கிய தனி வீட்டில்தான் குடித்தனம் செய்கிறான். ஒன்றாக ஒரே வீட்டில் தனி சமையல் செய்து கொண்டு, எப்போது எந்த பிரச்சனை வரும் என பார்த்துக் கொண்டிருப்பதை காட்டிலும் அது மேல் என முடிவு செய்து விட்டான்.
வெங்கட், அலமேலு இருவருக்கும் அஞ்சலியுடன் ஒத்து போய் விட்டது. கணவனின் உடன் பிறப்புகளையும் அரவணைத்து நடத்தினாள். எதையும் யுகி வாய் விட்டு கேட்டுக் கொண்டதில்லை. மனைவியை யுகி தாங்க, அஞ்சலி தானாக அந்தக் குடும்பத்தை தாங்கிக் கொண்டாள்.
ஆகவே வாசு நிம்மதியாக தள்ளி இருந்து கொண்டான். ஆனால் யாரையும் விட்டுத் தரவில்லை, நினைக்கும் போதெல்லாம் பெற்றோரை காண வந்து விடுவான். வார இறுதியில் குடும்பத்தோடு வந்து செல்வான். அவ்வப்போது பெற்றோரை தன்னுடன் அழைத்து சென்று வைத்துக் கொள்வான். வீட்டு விஷேஷங்களில் பெரியவனாக முன்னால் நிற்பான்.
இப்போதும் அஞ்சலியும் ஸ்ரீஜாவும் சரிவர பேசிக் கொள்வதில்லை. ஆனால் ஸ்ரீஜா வந்தால் முகத்தை திருப்பாமல் இருந்து கொள்வாள் அஞ்சலி. வருடங்கள் கடக்க கடக்க ஸ்ரீஜாவின் குணத்திலும் மாற்றம் வந்திருக்கிறது. வயதும் அனுபவமும் சற்று பக்குவத்தை கொடுத்திருக்கிறது. ஆகவே, யாரிடமும் பகைமை பாராட்டாமல் துவேஷம் காட்டாமல் அமைதியாக இருக்கிறாள்.
நந்தினியும் கார்த்திக்கும் இப்போது கனடாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் தாய் நாடு வருவார்கள். ஆகவே தன் பெற்றோரை அஞ்சலிதான் அடிக்கடி போய் பார்த்து வருகிறாள்.
சொந்தங்களின் மத்தியில்இப்போது அஞ்சலியின் பெயரை சொன்னால் அவளது ஷோ ரூம் தான் நினைவுக்கு வரும். கடந்த வருடம்தான் கோவையிலேயே இன்னொரு கிளை தொடங்கியிருந்தாள். அவளது திறமையால் இன்னும் உயரங்களை தொடுவாள்.
பழைய வீட்டை இடித்து இப்போது நவீனமாக மாற்றிக் கட்டியிருந்தனர். மாடியில்தான் யுகி, அஞ்சலியின் அறை.
தம்பியின் மக்களை வளர்த்ததில் பைரவிக்கும் பெரும் பங்கு. அவள்தான் இருவருக்கும் டியூஷன் ஆசிரியர். இவர்களோடு இன்னும் சில பிள்ளைகளுக்கும் பாடம் எடுக்கிறாள். இப்படி ஆசுவாசமாக இருப்பது அவளுக்கு பிடித்திருக்கிறது.
“ம்மா… அந்த பெரிய கிளையை புடிச்சு உலுக்க போறேன், நான் இவனை விட நிறைய நெல்லிக்காய் பறிப்பேன்” என்றான் ஆத்விக்.
“நான் விட மாட்டேன் டா” என நின்றான் பெரியவன்.
வெங்கட் வந்து சொல்லிப் பார்த்தார். பையன்கள் கேட்பதாக இல்லை. அலமேலுவின் அதட்டல் கூட அவர்களிடம் பலிக்கவில்லை.
யுகி வரவும் அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே ஓடிச் சென்றனர் இருவரும். யுகி தன் மனைவியை பார்க்க, “நான் வரலைனா கூட ஒழுங்கா இருந்திருப்பானுங்க போல, என்னை கண்டதும் ஆட்டம் அதிகமாகிடுச்சு, சமாளிக்க முடியலை” என்றாள் அஞ்சலி.
“நீயும் சேர்ந்து ஆட்டம் போட்டேன்னு சொல்லு” என அவளிடம் சொல்லி, அவளை முறைப்பை ரசித்துக் கொண்டேதான் உள்ளே சென்றான்.
அதி வேகமாக சீருடை மாற்றிக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் வந்து நின்றான் யுகி. வார்த்தையே இல்லை, கடுமையான பார்வை மட்டும்தான்.
அண்ணன் தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவன்தான் நெல்லிக்காய் பறிக்கலாம் சொன்னான் என மற்றவனை கை காட்டினர். பின் “ஸாரிப்பா இனிமே ஒழுங்கா டியூஷன் கிளம்பிடுறோம்” என கோரஸ் பாடினர்.
“அழுக்கு ட்ரெஸ் ஏன்டா கீழ போட்டு வச்சிருக்கீங்க?” என யுகி அதட்டவும் சீருடையை கையில் அள்ளிக் கொண்டு அழுக்கு துணி போடுமிடத்துக்கு ஓடிச் சென்று விட்டனர்.
குழந்தைகள் பிறந்த பிறகு தன் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டிருந்தான் யுகி. மாலையில் ஒரு முறை வீடு வந்து விட்டுத்தான் கடைக்கு செல்வான். இருவரையும் வளர்ப்பதில் மனைவிக்கு உறுதுணையாக நின்றவன். மகன்கள் என்றால் உயிர் என்றாலும் எப்போதுமே கண்டிப்புதான். அதற்கு சேர்த்து வைத்து மற்றவர்கள் செல்லம் கொடுக்கிறார்கள்.
ஆச்சி கொடுத்த ஸ்னாக்ஸ் பிடிக்காமல் அம்மாவிடம் சலுகை கொண்டாடி கொண்டிருந்தனர் இரு பிள்ளைகளும். “என்னடா பண்றீங்க இன்னும்?” என கேட்டுக் கொண்டே வந்தான் யுகி.
அம்மாவை பாவமாக பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர் இருவரும். ஊருக்கு வந்திருந்த சுப்ரியா இங்கு வந்திருந்தாள். அவளே மாமாவின் மகன்களை படிக்க தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டாள்.
“இதென்னங்க முடி இவ்ளோ வளர்த்து வச்சிருக்கீங்க? ஹேர் கட் பண்ணினா என்ன?” என கணவனிடம் கேட்டாள் அஞ்சலி.
“அடுத்த வாரம் பண்றேன்” என்றான் யுகி.
“ஏன் நாளைக்கு என்ன? தினம் தலைக்கு ஊத்திக்கிறீங்க, சளி பிடிக்கும், நாளைக்கே கட் பண்ணனும்” என அவள் கட்டளையாக சொல்லவும் சரியென தலையாட்டிக் கொண்டான்.
“எப்படி ஆர்டர் போடுறாடா? நீயும் மண்டைய மண்டைய ஆட்டுற. உன் பசங்க ரெண்டும் உன்னை டெரர் பீசுன்னு நினைச்சிட்டு இருக்கானுங்க, உன் பொண்டாட்டிகிட்ட மட்டும் டம்மி பீசுன்னு அவனுங்களுக்கு தெரிய போற காலம் ரொம்ப தூரத்துல இல்லை” என கிண்டல் செய்தார் அலமேலு.