தனுஷுக்கு விபத்து நேர்ந்து விட்டதாம். அவனது அப்பாதான் வெளிநாடு சென்று மகனை அழைத்து வந்தாராம். உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் முகத்தில் பெரிய காயமாம். அது பெரிய தழும்பாகி முக அமைப்பையே சிதைத்திருக்க, வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் இருக்கிறானாம்.
அஞ்சலிக்கு செய்த பாவத்தால் தான் இப்படியாகி விட்டதாக நினைத்தார் தனுஷின் அம்மா.
அவனுக்கான தண்டனை கிடைத்து விட்டது, இனியும் மனதால் அவனை சபிக்க கூடாது என அஞ்சலியை கேட்டுக் கொள்ளத்தான் அவளின் பின்னாலேயே வருகிறாராம்.
இதை எப்படி எடுத்துக் கொள்ளவென யுகிக்கு தெரியவில்லை. தனுஷ்க்காக எவ்வித இரக்கமும் அவனுள் எழவில்லை. ஆனால் இவரை இப்போது பேச விடா விட்டால் காணும் போதெல்லாம் வந்து கொண்டே இருப்பார் என்பதால் அஞ்சலியிடம் பேச அனுமதித்தான். ஆனால் அவனும் உடன் இருந்து கொண்டான்.
தனுஷின் தற்போதைய முகத்தை கைப்பேசியில் காட்டினார் அவனது அம்மா. பார்க்க முடியாமல் கண்களை மூடி கணவனின் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள் அஞ்சலி.
தனுஷின் அம்மா சொல்ல வேண்டியதை சொன்னார். அவரை பார்த்த அஞ்சலி, “நான் எதையும் நினைக்கிறதே இல்லை. நீங்க இன்னொரு முறை என்கிட்ட பேச ட்ரை பண்ணாம ஒதுங்கி இருங்க” என்றாள்.
“அவனை மன்னிச்சிடு டா அஞ்சலி” என அவர் கெஞ்ச, கணவனை கோவமாக பார்த்தாள்.
“அதை பத்தி பேசாம இத்தோட விட்ருங்க ப்ளீஸ், இவளும் விட்டுட்டா” என சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
“அவங்களுக்கு பாவ மன்னிப்பு கொடுக்க அழைச்சிட்டு போவீங்களா என்னை?” என கணவனை கடிந்து கொண்டாள் அஞ்சலி. தான் நினைத்த காரணத்தை சொல்லி அவளை சமாதானம் செய்தான் யுகி.
தனுஷை நினைத்து அஞ்சலிக்கும் துளி கூட பரிதாப உணர்வு ஏற்படவில்லை. சட்டத்திலிருந்து தப்பிக்கலாம் கடவுள் கணக்கு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார், தக்க சமயத்தில் சரியான சன்மானம் தருகிறார் என நினைத்துக் கொண்டவளின் மனதில் ஒரு கணம் அந்த வேலாயுதன் தோன்றி மறைந்தான்.
அடுத்த வாரத்தில் நந்தினிக்கு வளைகாப்பு நடந்தது. அடுத்து அஞ்சலி கருவுற வேண்டும் என சொல்லி நந்தினி எழவும் அதே இருக்கையில் அஞ்சலியை அமர வைத்து நலங்கு செய்து வளையல் அணிவித்து விட்டனர்.
இதில் எல்லாம் அஞ்சலிக்கு நம்பிக்கை இல்லை. மாமியாருக்காக ஒத்துக் கொண்டிருந்தாள்.
மதிய சாப்பாடு முடியவும் பைரவியின் வீட்டில் தங்கிக் கொள்ள சென்று விட்டாள் நந்தினி. இன்றைய இரவே சென்னைக்கு செல்லும் கார்த்திக்கும் மனைவியுடன் சென்றான். அடுத்த வாரம்தான் பொள்ளாச்சி சென்று தங்க இருக்கிறாள் நந்தினி. கார்த்திக்கின் பெற்றோர் சொந்த பந்தங்களோடு புறப்பட்டு விட்டனர்.
வாசு தங்கையுடன் காணொளி அழைப்பில் பேசிக் கொண்டான்.
எல்லாரும் ஓய்வெடுக்க சென்று விட்டனர். அஞ்சலி முகம் கூட கழுவாமல் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.
அவள் விழித்த போது மேற் கூரையை பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் யுகி.
தான் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை ஆட்டி அவனது கவனத்தை கலைத்தாள் அஞ்சலி.
அவளை பார்த்தவன் புன்னகை செய்து, அவளது சந்தனம் ஒட்டியிருந்த கன்னத்தை வருடிக் கொடுத்தான்.
“என்ன யோசனை?” எனக் கேட்டுக் கொண்டே அவனோடு ஒண்டிக் கொண்டாள்.
“ப்ச்… ஏதுமில்லை”
“சும்மா சொல்லாதீங்க, யுகிக்கு அப்பா ஆகணும்ங்கிற ஆசை ஓவரா ஆகிடுச்சுன்னு எனக்கு தெரியும்” என் அவள் சொல்லவும் ஒன்றும் சொல்லாமல் அவளை அணைத்து கண்களை மூடிக் கொண்டான்.
ஷோ ரூம் வேலைகளில் பிஸியாக இருந்தவள் அப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள். அதிகம் வற்புறுத்த முடியாமல் அவனும் விட்டுவிட்டான்.
“பிளான் பண்ணலாம்ங்க. இதுக்கு போய் அழுது வடியாதீங்க” என்றாள்.
“எனக்காக சொல்லாத, முழு மனசோடதான் நடக்கணும்” என்றான்.
“நீங்க சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்பி சொல்றேன், ஒன்னு இல்லை ரெண்டு பெத்து தர்றேன், ஆனா பேபி வச்சு எனக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் உங்கம்மா போடக்கூடாது, நீங்கதான் அவங்கள சமாளிக்கணும்” என்றாள்.
“அதெல்லாம் நம்ம கைலயா இருக்கு, நான் சொன்னது ஒரு குழந்தை பெத்து கொடுத்திட்டு மூனு வருஷ கேப்ல இன்னொன்னு பெத்து தர்றேன்னு”
“ரெண்டுதானா?”
“உங்களுக்கு இந்த ஆஃபர் பிடிக்கலைனா விட்ருங்க, ஓவரா டிமாண்ட் பண்றீங்க” என சொல்லி விலகப் போனவளை விடாமல் பிடித்துக்கொண்டவன், “தேங்க்ஸ் டா குட்டி! உனக்கு எந்த கஷ்டமும் இல்லாம பார்த்துக்கிறேன்” என்றான்.
“எப்படி என் வலிய வாங்கிக்குவீங்களா?”
“நீ தாங்குற அளவுக்கு உன்னை தாங்கி பிடிச்சுக்கிறேன்” என்றான்.
“அதெல்லாம் இல்லை, நீ சரின்னு சொல்லிட்டீல அது போதும். நமக்கு தானா கிடைக்கும். நீயும் ஸ்ட்ரெஸ் ஆக்கிக்காத” என சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
“புள்ளையெல்லாம் வந்திட்டா இந்த கொஞ்சல்ஸ் எல்லாம் அவங்களுக்குத்தான் இல்லை” என குழந்தையாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
அவளது கன்னங்களை பிடித்துக்கொண்டு ஆசையாக கொஞ்சினான்.
“ம்ம்… உங்க பசங்க வர்ற வரைக்குமாவது நல்லா கொஞ்சனும் சரியா?” என கேட்டுக் கொண்டே அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு…
வீட்டின் வெளியில் நின்று கொண்டு தன் மகன்களோடு அரை நெல்லிக்காய் பறித்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. பத்து வயது அத்வைத், எட்டு வயது ஆத்விக் இருவரும் அஞ்சலியை மிஞ்சிய படு சுட்டிகள்.
இருவரும் சண்டை போட்டு அடித்துக் கொள்ள ஆரம்பித்தால் பிரித்து விடுவதற்குள் அஞ்சலி ஒரு வழியாகி விடுவாள். ஆனால் பள்ளியிலோ, விளையாடும் போதோ தன் சகோதரனுக்கு ஏதாவது என்றால் பக்கத்தில் வந்து நின்று கொள்வார்கள்.
“அவனுங்க டியூஷன் போக வேணாமா டி, யூனிஃபார்ம் கூட மாத்தாம நிக்கிறானுங்க” என சத்தம் போட்டுக் கொண்டிருந்தார் அலமேலு.
சமையல் செய்ய வரும் பெண், “சீக்கிரம் வந்துட்டீங்க போல…” என அஞ்சலியிடம் விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள்.