“எப்ப வீட்டுக்கு போய் சேருறது?” என அலுத்துக் கொண்டான் யுகி.

“நமக்குன்னு இப்படி சில மொமெண்ட்ஸ் கிரியேட் பண்ணிக்கணும் ப்பா. எப்பவும் விட நேரமாவே இன்னிக்கு கிளம்பிட்டோம். வீடு எங்கேயும் போயிடாது” என்றாள்.

அஞ்சலிக்கு அவனுடன் இப்படி நேரம் செலவிட வேண்டும். திட்டமெல்லாம் இல்லாமல் திடீர் திடீர் என இப்படி ஏதாவது செய்வாள்.

சேர்ந்து ஒரு குட்டி பயணம், நகரத்தின் வெளியே அமைதியான இடத்தில் மதிய உணவு, வார நாளில் கூட்டமில்லா நேரத்தில் மருதமலையில் படி ஏறிச் சென்று இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது என தருணங்களை ஏற்படுத்தி விடுவாள்.

இவர்கள் வர சற்றே தாமதமாகி விடவும் வாசலிலேயே நின்று பார்த்திருந்தார் அலமேலு.

அவர்கள் வந்து சேரவும், “ஏன் டா நீ வண்டி ஓட்டுறதுக்கு என்ன?” என மகனிடம் கேட்டார்.

“ஏன் நான் ஓட்டினா என்ன தப்பு?” எனக் கேட்டாள் அஞ்சலி.

“ஏன் அவன் தலை மேல ஏறி நின்னுகிட்டு அவனை விரட்டி ஓட்டுறது பத்தலையா உனக்கு?” என மருமகளிடம் வம்பாக கேட்டார் அலமேலு.

யுகி இப்போதெல்லாம் விவரம் ஆகி விட்டான். அவர்களை கண்டு கொள்ளாமல் அமைதியாக வீட்டுக்குள் சென்று விட்டான்.

“லாஜிக்கோட பேசுங்க அத்தை, என் வெயிட்டுக்கு அவர் தலைல ஏறி நிக்க முடியுமா என்ன? எப்பவாவது உடம்பு வலின்னு சொன்னா முதுகுல மட்டும்தான் ஏறி நிக்கிறேன்” என மாமியாருக்கு பதில் தந்தாள் அஞ்சலி.

“எம்புள்ள மாடா உழைக்கிறான், இந்த வயசுலேயே எதுக்கு அவனுக்கு உடம்பு வலி வருது, என்ன ஏதுன்னு பார்க்க மாட்டியா நீ?”

“அதான் ஏறி மிதிக்கிறேனே”

“அடியே!”

“இன்னும் தூங்காம என்ன பண்றீங்க? உள்ள வாங்க, கேட் பூட்டணும்” என்றாள் அஞ்சலி.

தானே கேட்டை பூட்டிய அலமேலு, “ஏன் இன்னிக்கு நடக்கலையா? அவனுக்கு முடியலையா என்ன?” எனக் கேட்டார்.

“இன்னிக்கு நடக்கிற மூட் இல்லையாம் உங்க மகனுக்கு? எவ்ளோ கேள்வி கேக்குறீங்க?”

“என் மாமியாரெல்லாம் இன்னும் எப்படி கேட்பாங்க தெரியமா?”

“அதனாலதான மாமாவோட இந்த ஊருக்கு தனியா வந்துட்டீங்க?”

“நீயும் அவனை கூட்டிகிட்டு போறேங்கிறியா?”

“உங்க புள்ள உங்களை விட்டுட்டு வந்திட்டாலும்… என்ன டின்னர் இன்னிக்கு”

“அடைமாவு  இருக்கு, சாப்பிட வாங்க கல்ல அடுப்புல போடுறேன்”

“நைட்ல சிம்பிலா செய்ய வேண்டியதுதானே அத்தை?”

“உனக்கு பிடிக்கும்தானே டி, எனக்கு மாமாக்குலாம் கோதுமை தோசை, உங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான், கதை அளந்துகிட்டு இல்லாம சீக்கிரம் சாப்பிட வாங்க” என சொல்லி சமையலறை சென்று விட்டார்.

யுகியும் அஞ்சலியும் குளித்து விட்டு வந்தனர். மாமியாரை அமர வைத்து விட்டு அஞ்சலியே அடை வார்த்தாள். ஏற்கனவே இருந்ததை மகனுக்கு பரிமாறினார் அலமேலு.

சேகர் மாமாவுடன் ஒத்து போகிறதா என விசாரித்தான் யுகி. எந்த குழப்பமும் இல்லை என்றாள் அஞ்சலி.

சேகரை எப்படி கையாள்வாள் என்றெல்லாம் ஆரம்பத்திலிருந்தே அலமேலுவுக்கு மருமகள் மீது சந்தேகமில்லை.

“சமையலுக்கும் அவளுக்கும்தான் ஏழாம் பொருத்தம். வேற எதுன்னாலும் சந்துல பூந்து பொந்துல வெளி வருவா” என்றார்.

“என்னம்மா சொல்ல வர்ற?”

“மத்தவங்களை வேலை வாங்குறதெல்லாம் அவளுக்கு கை வந்த கலைடா, எல்லா நுணுக்கமும் தெரியும்னு சொன்னேன்”

“இப்படி சிம்பிலா சொல்றதுக்கு என்ன?”

“உன் பொண்டாட்டி கண் அசைஞ்சா கூட அர்த்தம் விளங்கிடும், நான் பேசுறது மட்டும் புரியாது!” நொடிப்பாக சொன்ன அலமேலு, “வேகுற வரைக்கும் பொறுமை கிடையாதா உனக்கு, அரை வேக்காடா எடுக்கற, வா வந்து உட்காரு, நானே பார்க்கிறேன்” என சொல்லி மருமகளை விலக்கி விட்டு அவரே அடையை தட்டினார்.

“என்ன… என் கண் அசைவுக்கு மீனிங் தெரியும்னுலாம் உங்கம்மா சொல்றாங்க, அப்படியா?” என சின்ன குரலில் கணவனிடம் கேட்டாள் அஞ்சலி.

“இல்லையா பின்ன?”

“பாஸ்… நீங்க விடுற மூச்சு காத்துக்கே அர்த்தம் தெரியும் எனக்கு?” என்றாள்.

அம்மா வரவும் சாப்பிட மட்டும் செய்தான் யுகி.

அடையை பரிமாறி விட்டு  உறங்க சென்று விட்டார் அலமேலு.

“வயித்த ஃபுல் கட்டாதீங்க, கேட் லாக் பண்ணியாச்சு, வாக் போக முடியாது” என்றாள்.

“கேட்ட தொறக்க எவ்ளோ நேரம் ஆக போகுது?”

“இன்னிக்கு லேட் ஆகிடுச்சு, இனிமே நடந்து எப்ப தூங்கறது?”

“டைம் இருக்கே”

“நடந்திட்டு உடனே தூங்கினா பரவாயில்லை”

“அப்படித்தானே தூங்குறோம்?”

முறைத்தவள், “ம்ம்… தூங்க விட்டுட்டு நடு ராத்திரி தூக்கத்தை கெடுக்குறீங்க. காலைல எந்திருக்க முடியலை. இன்னிக்கு வழில வந்தப்பவே உங்க பேச்சு சரியில்லை, நைட் வெறும் தூக்கம் மட்டும் இல்லைனு நல்லா புரிஞ்சு போச்சு, அதனாலதான் கேட் லாக் பண்ணியாச்சு. ஒழுங்கா படுக்க வாங்க” என்றாள்.

“நீதான் வாக் போகாம நாளே கம்ப்ளீட் ஆகாதுன்னு சொல்வ”

“உங்களுக்குத்தான் என்னை டிஸ்டர்ப் பண்ணாம தூக்கம் வராது. வாக், நான் ரெண்டுல ஒன்னுதான், எது வேணும்னு நீங்களே முடிவு பண்ணுங்க”

“நீ முடிவு பண்ணித்தானே கேட்டை மூடியிருக்க? சிறப்பிச்சிடுவோம்!” என குறும்பாக சொன்னான்.

வெட்கப்பட்டு சிரித்தாள் அஞ்சலி.

அவர்களிடம் நாளுக்கு நாள் அந்நியோன்யமும் காதலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

லண்டனில் மருத்துவராக இருக்கும் தனுஷின் பெரியப்பா மகனுக்கும் ஸ்ரீஜாவின் தங்கை அனுபமாவுக்கும் திருமணம் நிச்சயக்கப் பட்டிருந்தது. வாசுவும் ஸ்ரீஜாவும் திருமணத்துக்குத்தான் வரவிருக்கிறார்கள்.

ஆகவே விஷேஷத்தில் கலந்து கொள்ள யுகியும் அஞ்சலியும் சென்னை சென்றார்கள். கார்த்திக்கின் வீட்டில்தான் தங்கியிருந்தனர். வயிறு மேடிட்டிருக்க சரியாக புடவை கட்ட  சிரம பட்டாள் நந்தினி. அஞ்சலிதான் உதவினாள்.

மீண்டும் கோவை செல்லும் போது நந்தினியையும் அழைத்து செல்கின்றனர்.

மண்டபத்தில் தனுஷின் அம்மா அஞ்சலியை சுற்றி சுற்றி வந்தார். அவள் தவிர்த்துக் கொண்டே இருக்க அவர் விடுவதாக இல்லை. எரிச்சலாகி விட்டான் யுகி.

“பாதிக்க பட்டவ மனசை புரிஞ்சு ஒதுங்கி போக என்ன கஷ்டம் உங்களுக்கு? பெரியவங்ககிட்ட மூஞ்சுல அடிச்ச மாதிரி  பேசக்கூடாதுன்னு பார்த்தா அதுக்கு தக்க நடக்க மாட்டேங்குறீங்களே” என கேட்டே விட்டான் யுகி.