அஞ்சலி ஹோம் அப்பளயன்ஸஸ் ஷோ ரூம் திறப்பு விழா முடிந்து இரண்டு மாதங்களாகி விட்டன. இடத்தையும் அதற்கான பதிவையும் பெற்று தந்ததோடு தன் பங்கு முடிந்தது என விலகி நின்று கொண்டான் யுகி.
அதற்கு பின் எல்லாமே அஞ்சலிதான். தன் கனவை மருமகள் செயல் படுத்துகிறாள் என்பதில் வெங்கட்டுக்கு மிகுந்த உற்சாகம். அவர்தான் மருமகளை வழி நடத்தியது.
“நான் வளர்த்து கொடுத்ததை தான் நீ பார்க்கிறடா, ஆனா அஞ்சலி அப்படி இல்லை, அதுதான் ஸ்டார்ட் பண்ணி வளர்க்கணும், எது சொல்லி கொடுத்தாலும் சூட்டிகையா பட்டு பட்டுனு புடிச்சிக்குது, உன்னை விட பெருசா வளர்ந்து நிக்க போகுது பாரு” என மகனிடம் மருமகளை பற்றி வாய் விட்டு பாராட்டியிருந்தார் வெங்கட்.
அலமேலுவுக்கு மருமகளை நினைத்து பெருமை என்ற போதும், இதனால் கணவன் மனைவிக்குள் பிரிவினையோ மகனுள் தாழ்வு மனப்பான்மையோ வந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை.
மருமகளிடம் தனிமையில் இது பற்றி சொல்லவும் செய்தார்.
“ஹையோ அத்தை! நாம கார சாரமா பேசிகிட்டாதான் நல்லா இருக்கும். இப்படிலாம் சாஃப்ட் மோட்ல பேசி போர் பண்ணாதீங்க” என கிண்டல் செய்தாள் அஞ்சலி.
“அடியே! எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்!” என அதட்டினார் அலமேலு.
“உங்க மகனை தெரியாதா உங்களுக்கு?”
“என் மகன்னு இல்லை டி, எல்லா ஆம்பளைக்கும் உள்ள மனப்பான்மை அது. பொண்டாட்டிக்கு எல்லாம் செய்வாங்க, அவங்கள தாண்டி போறத தாங்க முடியாது”
“எனக்கு மத்த ஆம்பளைங்க பத்தி எதுவும் தெரியாது, உங்க மகனை நல்லா தெரியும். என்னை வேற ஆளா அவர் நினைச்சாதானே கம்பாரிசன்லாம் வரும், நாங்க ரெண்டு பேரும் தனித்தனி இண்டிவிஜுவல்தான், ஆனா மனசால கருத்தால ஒன்னு. ஷோரூம் ஐடியாக்கு மட்டுமில்லை எனக்கும் அவர்தான் பேஸ். உங்க பயம் அர்த்தமே இல்லாதது” என சொல்லி விட்டாள் அஞ்சலி.
ஆனாலும் விடாமல் மகனிடம் இதைப் பற்றி பேசிய அலமேலு, “பின்னாடி நான் இருப்பேனோ என்னமோ, அதான் இப்பவே சொல்றேன், இதை வச்செல்லாம் அவ கூட மல்லுக்கு நிக்க கூடாது” என அறிவுறுத்தினார்.
“அவ பெருசா வளர்றத பார்க்கிறத விட எனக்கு வேறென்ன சந்தோஷம் இருக்க போகுதும்மா?” என அவன் கேட்டும் அவரின் முகத்தில் தெளிவு ஏற்படவில்லை.
அம்மாவுக்கு விளக்க வேண்டி, “அப்பாவை தாண்டி நாங்க வளர்ந்தா அப்பா பொறாமை படுவாரா மா? இல்லை அவர் அவரை குறைச்சலா நினைச்சுப்பாரா?” எனக் கேட்டான்.
“அவரோட பசங்கடா நீங்கல்லாம்”
“அஞ்சலி கூட எனக்கு அப்படித்தான் மா, உனக்கப்புறம் அவதாங்கிற மாதிரி என் பசங்களுக்கு முன்னாடியும் அவதான்” என்றான் யுகி.
இவன் என் மகன் என் வளர்ப்பு என அலமேலுவுக்கு அத்தனை பெருமிதம். கணவரிடம் இதை சொல்லி சொல்லி அவருக்கு வாய் வலியே வந்து விட்டது.
“போதும் போதும் உன் மகன் பெருமை, அஞ்சலியையும் சாதாரணமா நினைக்காத, யுகிக்காக என்ன வேணா செய்யும் அந்த பொண்ணு. இந்த ஷோ ரூம்லாம் அதுக்கு பெரிய விஷயமே இல்லை, ரெண்டு வருஷம் வெளில விட்டா அது எங்கேயோ உயரத்துக்கு போயிடும். உன் புள்ளைக்காகத்தான் அப்படி போகாம அவன் கூடவே இருக்கு” என்றார் வெங்கட்.
“போங்க, அவளை தூக்கி வச்சு பேசினாதான் உங்களுக்கு ஆச்சு. அவன் எப்படி அவளை முதல் குழந்தை ரெண்டாவது அம்மான்னு சொல்றான், வாசுகிட்ட சொல்றேன்” என சொல்லி கைப்பேசியை எடுத்துக் கொண்டார்.
யுகிதான் உன்னதமானவன் என யாரையாவது சொல்ல வைக்கா விட்டால் அவருக்கு தூக்கமே வராது.
ஷோ ரூம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த வாசு மகனின் ஆண்டுத் தேர்வு முடிய சில நாட்களே இருந்ததால் அதுவரை தங்கியிருந்தான். மனைவியையும் மகனையும் தன்னோடே அழைத்தும் சென்று விட்டான்.
நந்தினிக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்திருக்கிறது. வளைகாப்புக்கு நாள் குறித்து விட்டார்கள். அதற்கு பின் அம்மாவின் வீட்டிலிருந்துதான் வேலை செய்ய போகிறாள்.
தன் கணவனை பற்றி பைரவிக்கு வருத்தம் என்பது அஞ்சலிக்கு தெரியும், ஆதலால் சேகரை ஷோ ரூமில் முக்கிய பொறுப்பில் அமர்த்த மாமனாரிடம் பேசினாள். அவரே மகள் மருமகனிடம் பேசி ஒத்துக் கொள்ள வைத்து விட்டார்.
“மாமா நல்லவர்தான், ஆனா அவர் ஒர்க்ல நீ சேட்டிஸ்ஃபை ஆவியான்னு தெரியாது. பின்னாடி மனஸ்தாபம் வராம இருக்கணும்” என அந்த நேரமே சொல்லியிருந்தான் யுகி.
“சொல்றத சரியா செய்றது கூட டேலண்ட்தான். அந்த வகைல அண்ணாவை குறை சொல்ல முடியாது. ஏதும் பிரச்சனை வராம பார்த்துக்குவேன்” என அஞ்சலியும் சொல்லியிருந்தாள் .
அது போலவே சேகருக்கு அங்கு பொருந்திப் போய் விட்டது. நல்ல உழைப்பாளிதான், அவனுக்கான இடம் எதுவென கணிக்க தெரியாமல் பல தொழில் மாறி எதிலும் சோபிக்க முடியாமல் போய் விட்டது. இப்போது ஷோ ரூமில் கண்ணும் கருத்துமாக வேலை செய்கிறான்.
பைரவியின் முகத்தில் இப்போதுதான் மலர்ச்சியை காண முடிகிறது.
முதல் திருமண நாளுக்கு கார் வாங்கித் தருகிறேன் என முன்னர் சொல்லியிருந்தான் யுகி. இப்போது அவனால் வாங்க முடியவில்லை. வீட்டிலிருக்கும் பொதுவான காரை எடுத்துக் கொள் என அவன் சொல்லியிருந்தாலும் ஸ்கூட்டர்தான் இப்போதைக்கு வசதி என சொல்லி மறுத்து விட்டாள் அஞ்சலி.
இரவில் தனியாக அவள் வரவேண்டுமே என தானே துணையாக இருந்து மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவான் யுகி. இவனால் முடியா விட்டாலும் பிரச்சனை இல்லை, சேகர் பார்த்துக் கொள்வான்.
வெங்கட்டின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம். பகலில் மருமகளின் ஷோ ரூம் சென்று விட்டு மதியத்துக்கு வீட்டுக்கு வந்து விடுவார்.
கணவர் பழைய படி மீண்டு விட்டதில் அலமேலு கூட சுறு சுறுப்பாக இருந்தார்.
தன் பைக் சர்வீசுக்கு சென்றிருப்பதால் அன்று ஸ்கூட்டரில் மனைவியை விட்டு விட்டு அதிலேயே தன் கடைக்கு வந்திருந்தான் யுகி. இரவில் அவளை அழைக்க சென்றான். தயாராக இருந்தவள் தானே ஓட்டுகிறேன் என சொல்லவும் சரியென்றான்.
புதிதாக கட்டப் பட்டிருக்கும் மேம்பாலத்தின் வழி செல்ல அவளுக்கு பிடிக்கும். வீட்டுக்கு செல்லும் வழி இல்லை என்றாலும் சுற்றிக் கொண்டு பாலத்துக்கு விட்டாள் ஸ்கூட்டரை.