சூரியன் 22

பிரியசகியுடன் வந்த சஞ்சய் மனம் சோர்வடைய கட்டிலில் படுத்து விழிகளை மூடினான். நகையை அதற்குரிய பெட்டியில் வைத்து அலமாரியில் பூட்டி விட்டு கணவன் அருகே சென்று அமர்ந்தாள் பிரியசகி.

“சகி எப்படி இந்துவிற்கு புரிய வைப்பதென்று தெரியல?” வருத்தமுடன் பேசினான். இரு கரத்தையும் அவன் கன்னத்தில் வைத்து சஞ்சய் முகத்தை நிமிர்த்தி, நிம்மதியா தூங்குங்க சஞ்சய். எல்லாம் சரியாகும்..

எனக்கு தோன்றவில்லை..

“எப்படி ராகவன் அண்ணா தான் செய்தார்னு உங்களுக்கு தெரியும்? ஆதாரம் இருந்தால் காட்டி விடலாமே!”

ஆதாரம் இருக்கு சகி..அதுவும் அவரிடம் தான் இருக்கு.

என்ன?

முதல் முறை ஹரி எனக்கு கொடுத்த செய்தி என்னோட சித்தி கொலை சம்பந்தப்பட்டது தான். அதில் ஆதாரமாக மாமா தான் திருடன் நகைக்காக கொல்ல முயன்றதாக கூறினார்.

சித்தி நகை மட்டும் தான் வீட்டில் இருந்தது. அதுவும் பெரியதாக இல்லை. இந்துவிற்கு சேர்த்து வைத்த எல்லாம் பேங்க் லாக்கரில் தான் இருக்கு. மாமா இன்ஸ்பெக்டர் என்பது அவ்வேரியாவில் அனைவருக்கும் தெரிந்தது. அந்த திருடன் இவர் தான் ஏற்பாடு செய்திருக்கணும்..

ஏனென்றால் மறுநாளே அவன் தப்பித்து விட்டான் என்று செய்தி வந்தது. தப்பிய அவனை யாரும் தேடவில்லை. அவனுக்கு பதிலாக வேறொருவன் லாக்கப்பில் இருந்தான். அன்று யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்று தான் எண்ணி இருந்தேன்.

ஹரிக்கு தான் அனைத்தும் தெரிந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கவனித்து இருக்கிறான். அவனுக்கு பின்னும் யாரோ இருக்காங்க சகி..

அவன் இப்ப நல்லா இருக்கானா?

“பிழைச்சிருவான்னு நம்பிக்கையோட இருக்கேன்” பிரியசகியை பார்த்தான்.

சஞ்சய், எதுவானாலும் இருக்கட்டும். இந்து கோபம் உங்களுக்கு தெரியும்ல? அவ சரியாகிடுவா. நான் கூட அவர் கூட போகணும்னு பிடிவாதம் செய்வான்னு பயந்துட்டேன்..

ராகவன் எங்களை கவனித்து தேர்ந்தெடுத்து தான் எங்கள் வாழ்க்கையில் வந்தது போல இருக்கு. அவர் தன் மனைவியே கொன்றிருக்கிறார். இதில் இந்து அவருடன் சென்று அவளுக்கு ஏதாவது ஆனால்? மனதினுள் திக்திக் என இருந்தது சஞ்சய்கு.

“சகி உன்னோட மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா?” சஞ்சய் கேட்க, அவனை நெருங்கி அமர்ந்தாள் பிரியசகி.

பிரியசகி மடியில் படுத்து விழிகளை மூடியவனால் தூங்க முடியவில்லை. சஞ்சய் தலையை கோதிக் கொண்டிருந்த அவளது கரத்தை தடுத்து பிடித்தான்.

என்னாச்சு?

எழுந்து அமர்ந்து, அவளை தோளில் சாய்த்துக் கொண்டான்.

சஞ்சய் என்ன எண்ணுகிறான் என்று அவளுக்கு கெஞ்சித்தும் புரியவில்லை.

சகி, என்ன நடந்தாலும் என்னை விட்டு போக மாட்டேல்ல?

பிரியசகிக்கு அவன் தனக்காக பேசியது நினைவில் வர, அவனை நிமிர்ந்து கண்ணோடு கண் நோக்கினாள். அவளது பார்வையில் அவன் மனம் அவளிடம் சிக்குண்டது.

“சாகும் வரை உங்கள் பக்கம் தான் நிற்பேன் சஞ்சய்” விழிகளை நகர்த்தி அவன் இதழ்களில் இதழ் பதித்தாள்.

விழிவிரித்து அவன் பார்க்க, அவளது விழிகளின் புன்னகையில் இதழ் முத்தத்தை தனதாக்கிக் கொண்டான். இருவரின் இதழ்தீண்டலும் நீண்டு கொண்டிருந்தது.

சஞ்சய் கைபேசி சிணுங்க, அவள் இதழ்களை விடுவித்து அவளை பார்க்க, அவள் முகம் சிவந்து நாணப்புன்னகையுடன் திரும்பி அமர்ந்தாள். அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு, கைபேசியை எடுத்தான்.

மாமா, ஹரிக்கு சிகிச்சை முடிந்தது. அவனை இரு நாட்கள் கவனமா பார்த்துக்கணும்னு ரக்சன் சொன்னார்.

“ம்ம்! ரக்சன் வீட்டிலே அவனை பத்திரமா பார்த்துக்க சொல்லு. கமிஷ்னர் சாருக்கு கூட தெரியக் கூடாது” இனியவனிடம் கூறினான் சஞ்சய்.

சரி மாமா..

நீ வீட்டுக்கு கிளம்பு. ராகவன் மாமா ஏதும் கூறி வீட்டிற்குள் வந்தால் அவரை அனுமதிக்க வேண்டாம்னு ரக்சனிடம் சொல்லு. நீயும் உன்னோட வீட்டிலும் அனுமதிக்காத…

ஏன்? என்னாச்சு? ஏதும் பிரச்சனையா மாமா?

ம்ம்! என்று இந்து நடந்து கொண்டதை கூறினான்.

“சரி மாமா, இந்து வெளிய போகாம பார்த்துக்கோங்க..” கைபேசியை வைத்து ஹரியை பார்த்து சிந்தனையுடன் ரக்சனா, ரக்சனை பார்த்து விசயத்தை கூறி சென்றான்.

இனியவன் வைத்த சிலமணி நேரத்திலே ரக்சன் சஞ்சயை அழைத்தான்.

சொல்லு?

சஞ்சய், ரக்சி திருமணத்திற்காக நாளையே சொந்தபந்தங்கள் வீட்டுக்கு வருவாங்க. ஹரி இங்கிருந்தால் பிரச்சனையாகும்..

“சரி..நான் வாரேன்” கைபேசியை வைத்து பிரியசகியை பார்த்தான்.

பிரியசகியை அணைத்தவாறு, சகி உன்னிடம் ஒரு விசயம் சொல்றேன்.

ரகசியமா? அவன் முகம் நோக்கினாள்.

ம்ம்!

ஹரி நல்லா இருக்கானா?

அதான்..அது…நீ சிட்டி சொன்னேல்ல.

“ஆமா…” அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

சிட்டி தான் ஹரி…

“வாட்?”  அவனிடமிருந்து பிரிந்து திகைத்து கேட்டாள்.

சரணிடமிருந்து அன்று தப்பியவனை யாரோ காப்பாற்றி இருக்காங்க. அவன் அம்மாவை மட்டுமல்ல அப்பாவையும் அந்த ராஜன் தான் கொன்றிருக்கான்.

அப்பாவா? அவர் விபத்தில் இருந்ததாக மேம் சொன்னாங்க?

இல்ல..ரக்சனோட மெடிக்கல் கல்லூரி சீனியர் தான் ஹரிஹரனின் தந்தை. அவர் ராஜன் மருத்துவமனையில் நடக்கும் அனைத்தையும் கண்டுபிடிச்சிட்டார். கொன்னுட்டானுக…எதற்கும் ஆதாரமில்லை. கார்த்திகா மேமிற்கு தெரியும்..

என்ன சொல்றீங்க சஞ்சய்?

இது போல நிறைய பேரை கொன்றிருக்கிறான் ராஜன். ரக்சனிற்கு அவர் தவறு செய்கிறார் என்று தெரிந்து தான் அவனாகவே மருத்துவமனை தொடங்கினான்.

அப்புறம் இனியவன்…

“அவர் பிரபசர் இல்லை தானே! அவரும் போலீஸா?” சஞ்சயை முறைத்து கேட்டாள்.

குற்றவியல் துறையின் ரகசிய உளவாளி தான் இனியவன்..

ம்ம்! நினைச்சேன். அத்தனை வருடமாக நான் அவ்வீட்டில் இருப்பதை கூட பலர் அறியவில்லை. இவர் மட்டும் உதவ வரும் போதே தோன்றியது..

இப்ப அது பிரச்சனையில்லை. ஹரி என்ன இருந்தாலும் சின்னப்பையன். அவனால இது போல குண்டடியை தாங்கிக் கொள்ள முடியாது. உன்னால அவனை பார்த்துக் கொள்ள முடியுமா?

முதல்ல ரதியை தான் சிந்தித்தேன். ரதிக்கு திருமணமாகவில்லை. அதுவும் இல்லாமல் அவள் பெற்றோர் இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டாங்க..

“எனக்கு அவனை மிகவும் பிடிக்கும்” என்று ஹரி கொடுத்த மலர்ச்செண்டை பார்த்தாள். ஆனால் ராகவன் அண்ணாவிற்கு தெரிந்து விட்டால்…

தெரியாதவாறு பார்த்துக் கொள்ளலாம்..

“அவனுக்கு சீரியஸ் மாதிரியெல்லாம் இல்லையே!” விழிகள் கலங்க கேட்டாள்.

இல்லை, இப்பொழுதே அவனை நம் அறைக்கு வர வைக்க ஏற்பாடு செய்கிறேன். இந்துவிற்கு தெரியவே கூடாது என்றான் சஞ்சய்.

தனியா எப்படி?

பிரசாத், நவீன் இருக்காங்கல என்று கைபேசியில் அழைத்து இருவரிடமும் விசயத்தை கூறி உடனே சஞ்சய் கிளம்ப, “சஞ்சய்” ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

பார்த்து அழைச்சிட்டு வாங்க..

ம்ம்! தலையசைத்து மூவரும் ரக்சன் வீட்டிற்கு சென்று ஹரிஹரனை அழைத்து வந்தனர்.

பிரியசகி அவனை கண்டு, “சிறுவயதில் பார்த்தது போலவே இருக்கிறான்” எண்ணமுடன் அவனருகே அமர்ந்தாள்.

எப்பொழுது விழிப்பான்?

சற்று நேரத்தில் விழிக்க வாய்ப்புள்ளதுனு ரக்சன் சொன்னான். பெயின் அதிகமா தான் இருக்குமாம். அவன் வெளியே எங்கும் போகாமல் நீ தான் கவனமா பார்த்துக்கணும் சஞ்சய் கூறிக் கொண்டிருக்க, “மாமா..” அழைத்தான் நவீன்.

நாகேந்திரன் வாயிலில் கையை கட்டிக் கொண்டு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்பா…” சஞ்சய் அழைக்க, “வீட்டுக்கு எதுக்கு இவனை அழைச்சிட்டு வந்த? இந்து பார்த்தால் பிரச்சனை செய்திடுவா..”

மாமா நான் பார்த்துக்கிறேன்..

அவர் அமைதியாக, ஹரிஹரன் தனது இமைகளை பிரித்தான்.

ஷ்ஷ்ஆ…உஃப் காற்றை ஊதியவாறு அவனை சுற்றி இருந்தவர்களை பார்த்து, பிரியசகியை கண்டு அதிர்ந்து எழ முயன்றான்.

“என்ன பண்ற? ரெஸ்ட் எடுக்கணும்” அவனை எழ விடாமல் தடுத்தாள்.

“நான் போகணும்” வலியில் முகம் சுளித்து பிரியசகியை பார்த்தான்.

எங்க போகணும்? ஒழுங்கா ரெஸ்ட் எடு.

“இந்த வயசுல எப்படிடா இப்படி பண்ண?” நவீன் ஆர்வமுடன் அவனிடம் பேச, உங்களுக்கு சீரியஸ் இன்னும் புரியல..

“என்ன சீரியஸ் சொல்லு நாங்க புரிஞ்சுக்கிறோம்” பிரசாத் கேட்டான்.

பேச முடியல..

அப்புறம் எதுக்கு பேசுற? அமைதியா ரெஸ்ட் எடு. எனக்கு ஒன்று மட்டும் சொல்லு. போதும். உனக்கு உதவுவது யார்? கரெக்டா நான் சண்டையிடும் போது பயன்படுத்தும் மூவ்வை பயன்படுத்துற? சஞ்சய் புருவம் உயர்த்தினான்.

அது..எனக்கு உங்களை முதலில் இருந்தே பிடிக்கும்.  ஷ்ஷ்ஆ… உங்களை போல இருக்கணும்னு ஆசையில அதை செய்து பழகிட்டேன்..

“எப்பொழுதிலிருந்து உனக்கு என்னை தெரியும்?” சஞ்சய் கேட்க,

ஷ்ஷ்..

“அவன் பெயின்ல்ல இருக்கும் போது இப்படி எங்கொரியரி பண்றது நியாயமா?” பிரியசகி ஓரக்கண்ணால் கணவனை பார்த்தாள்.

“ஓய்..அதுக்குள்ள அவனுக்கு சப்போர்ட் பண்ற?” நவீன் அவளது காதை பிடிக்க, அவன் கரத்தை தட்டி விட்ட சஞ்சய், “இனி எங்கும் வெளிய போகாத. நீ சொல்லவில்லை என்றாலும் நானே கண்டுபிடிப்பேன்” என்றான்.

உங்களால யாருன்னு கண்டுபிடிக்க முடியாது..

புன்னகைத்த சஞ்சய், அப்படியா? ஹரிஹரனை நெருங்கி.. “என்னை பற்றி முற்றும் முழுதும் அறிந்தவர் ஒருவர் தான். கமிஷ்னர் சார்” கண்ணடித்தான்.

என்னது? அவரா? நவீன் வாயை பிளக்க, பதட்டமுடன் இல்லையே! அவரெல்லாம் இல்லை..

உன் பதட்டமே தெரியுதுடா. என்னிடம் கூறி முடியாது எனவும் உன்னை துரும்பு சீட்டாக்கி விட்டாரோ?

இல்ல..

“உனக்கு அவர் எவ்வளவு முக்கியமோ அதை விட எனக்கும் அவர் முக்கியம்..” சஞ்சய் நகர,

அவன் கரம் பிடித்த ஹரிஹரன், “உங்க மாமா நல்லவர் இல்லை. அந்த லிஸ்ட் அவர் கையில் இல்லை. ஆனால் ராஜனுடன் சிரித்து பேசுவதை கண்டேன். என்ன பேசினார் என்று தெரியவில்லை…” பாவமாக கூறினான்.

இதையெல்லாம் விடு. முதல்ல ஓய்வெடு. எது வேண்டுமானாலும் சகியிடம் கேளு.

ம்ம்! சகி நான் அமரணும்..

“மாமா மட்டும் தான் பிரியாவை சகின்னு அழைப்பார்…” நவீன் கூற, புன்னகையுடன் அவனுக்கு பிரியசகி உதவ, ஹரிஹரன் அவளை அணைத்துக் கொண்டான்.

“டேய், என்னடா பண்ற?” பிரசாத் அடிக்க கையை ஓங்க,

“நீங்க இவங்களோட பழகி இருக்கலாம். சகி கஷ்டப்பட்ட நேரம் நான் தான் கூட இருந்தேன் கேட்டுக்கோங்க” விழிகளை மூடினான்.

சஞ்சய் அவனை முறைத்து பார்க்க, சகி உன்னோட புருசன் என்னை முறைக்கிறார்…

அட, கேடிப்பயலே….

“ஹரி ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத” சஞ்சய் சினமுடன் கூறி நகர, “மாமா இவனை வேற யாராவது பார்த்துக்கட்டும்” நவீன் கூறவும்,

உனக்கென்ன? சஞ்சய் என்னை தவறாகவெல்லாம் எண்ண மாட்டார்..

“வலிய வச்சிட்டே இவன் இவ்வளவு பேசுறான்?” பிரசாத் கேட்க, “உங்க எல்லார் மாதிரியும் வேடிக்கை பார்க்கணுமா?”

“இப்ப தானடா பேச முடியலன்னு சொன்ன?” பிரசாத் கேட்க,

“ஆமா வலிக்குது. அதான் எனக்கு எனர்ஜி கிடைச்சாச்சே!” சஞ்சயை கடுப்பேற்றும் விதமாகவே பேசினான்.

“சகி அவனை விட்டு தள்ளியே இரு” சஞ்சய் இருவரையும் நகர்த்தினான்.

“தள்ளி இருந்தா எப்படி பார்த்துக்குறது சஞ்சய்?” அப்பாவியாக அவளும் கேலியுடன் சிரிக்க, சஞ்சய் அவளை முறைத்து செல்ல,

சஞ்சயை அணைத்து, “அவன் சின்னப்பையன் சஞ்சய். மகன் மாதிரி வச்சுக்கோங்க” அவன் முகம் பார்த்தாள்.

சஞ்சய் ஹரிஹரனை பார்க்க, அவன் முகத்தை பாவமாக்கி காட்ட, நாகேந்திரனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

வச்சுக்கலாம் வச்சுக்கலாம்..இருந்தாலும் டிஸ்டன்ஸ் மெயிண்டயின் பண்ணனும்..

சரிங்க சார். நீங்க உங்க அறைக்கு வரும் போது கொஞ்சமா தள்ளி படுத்துக்கிறேன்..

உன்னை…

“சஞ்சய்…நீ வா. பேசணும்” புன்னகையுடன் தன் மகனை அழைத்து சென்றார் நாகேந்திரன்.

ஹரி பேச எண்ண, “நீ எதுவும் பேச வேண்டாம். அமைதியா தூங்கு. இனி எல்லாவற்றையும் சஞ்சய் பார்த்துப்பார்…” பிரியசகி அவன் தலையை கோத, முணுக்கென கண்ணீர் வந்து விட்டது அவனுக்கு.

“ஷ்ஷ்…தூங்கு” பிரியசகி கூற, விழிகளை மூடி நித்திரையில் ஆழ்ந்தான் ஹரிஹரன்.

 தந்தையிடம் பேசி வந்த சஞ்சயை தடுத்த நவீன், “தடிமாடு மாதிரி இருக்கான். இவன் உங்களுக்கு மகனா? பிரியாவிற்கு பைத்தியம் பிடிச்சிருச்சோ?”

“அவனுக்கும் இப்பொழுது யாரும் இல்லை. அவன் மீண்டும் கொலைன்னு இறங்காமல் இருந்தால் போதும்” சஞ்சய் அறைக்கு சென்றான்.

“என்ன? இப்படி சொல்றாரு? இவன் என்னை அங்கிள்னு கூப்பிட்டா அசிங்கமா போயிருமே!” புலம்பியவாறு அவனறைக்கு சென்றான் நவீன்.

அறைக்கு சென்ற சஞ்சய் ஹரியை பார்த்துக் கொண்டே பிரியசகி கரம் பிடித்து அழைத்தான்.

என்ன சஞ்சய்?

பிரியசகியை அமர வைத்து அலமாரியை திறந்து ஒரு பெட்டியை எடுத்தான். ஹரிக்கு விழிப்பு வந்தது.

ஆர்வமுடன் சஞ்சயை பிரியசகி காண, பெட்டியை திறந்து அடுக்குடனான கொலுசை எடுத்து பிரியசகி முன் மண்டியிட்டு அவன் தொடையில் அவளது காலை இழுத்து அவனே வாங்கிய கொலுசை போட்டு விட்டான்.

சஞ்சய்….? அவள் காலை இழுக்க,

போட்டு விட்டு, “பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, “ரொம்ப நல்லா இருக்கு. இது என்னோட சின்ன வயசு ஆசை” என்றாள்.

“தெரியும்” அவளருகே அமர்ந்தான். பார்த்தும் பார்க்காதது போல ஹரி இருந்து கொண்டான்.

“எதுக்கு சஞ்சய் இவ்ளோ? செலவு அதிகமாக இருக்கும்” வருத்தமுடன் கூறினாள்.

நீ ஹாப்பி தான. அது போதும். ஹரி வெளியே எங்கும் போகாமல் பார்த்துக்கோ சகி. அவன் இருக்கும் நிலையில் அவனால் ஏதும் செய்ய முடியாது. காலை அவனிடம் நான் பேசிக்கிறேன்.

சஞ்சய் நீங்க ரெஸ்ட் எடுக்கலையா?

“ஒரு வேலை இருக்கு. முடிந்தால் வருகிறேன்” அவன் தனது காக்கி ஆடைக்கு மாறி, “நீ படுத்துக்கோ” சொல்லி சென்றான்.

 அதிகாலை வேளை இனியவன் தாள முடியாது இந்துஜாவை பார்த்தே ஆக வேண்டும் என்று சஞ்சய் வீட்டிற்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.

இடையிலே ராகவனையும், அவன் பின் முக்காடிட்டு அமர்ந்திருந்த இந்துஜாவை பார்த்து அவர்கள் பைக் முன் இவன் வண்டியை நிறுத்தினான்.

“ஹேய்..வழி விடு” ராகவன் சத்தமிட,

“இந்து இவரோட எங்க போற?” சினமுடன் கேட்டான் இனியவன்.

“நான் எங்க போனால் உங்களுக்கு என்ன சார்?” திமிறாக பதிலளித்தாள்.

“இவர நம்பாத இந்து…” இனியவன் எச்சரித்தான்.

“எல்லாரும் என்னோட மாமாவையே குறை சொல்றீங்க” பொங்கினாள்.

இவரை பற்றி தெரிந்து தான் சொல்கிறேன்..

உங்களுக்கு என்ன இவரை பற்றி தெரியும்? பிரியாவிற்கு உதவினால் பெரிய இவனா நீங்க? ஏளனமாக கேட்டாள்.

“உன்னோட அக்கா, அம்மா இறப்பிற்கும் காரணமே இவர் தான்…” பல்லை கடித்தான்.

சும்மா ஏதாவது சொல்லி என்னை உங்க பக்கம் வர வைக்க நினைக்காதீங்க சார். எனக்கு என்னோட மாமாவை நன்றாக தெரியும்..

ராகவன் சினமுடன் பைக்கிலிருந்து இறங்கி, “உன்னோட வேலையை மட்டும் பாரு. உனக்கு எதுக்கு இந்த வீண் விதாண்டாவாதம்..போயிரு..”

“இந்து, நாம கிளம்பலாம்..” அவர் நகர, இனியவன் வண்டியிலிருந்து இறங்கி ராகவனை எத்தி தள்ளினான்.

“இனியவன்…” சினமுடன் இந்துஜா ராகவன் அருகே வந்தாள்.

“ஷ்ஷ்ஆ…எழமுடியவில்லை”

நடிப்புக்கலையை இறக்கினான் அவன்.

“அய்யோ மாமா! என்னாச்சு? இருங்க வாரேன்” இந்துஜா ராகவனை தன் தோளில் தாங்க, அவன் இனியவனை பார்த்து நக்கலாக சிரித்தான்.

“இந்து சொன்னா கேளு” இனியவன் மீண்டும் எச்சரித்தான்.

“நான் என்னோட மாமாவை தான் திருமணம் பண்ணிப்பேன். இனி என்னை சந்திக்க கூட நினைக்காதீங்க” சினமுடன் கூறி, “ஆட்டோவை வர வைக்கவா மாமா?” கனிவுடன் ராகவனிடம் கேட்டாள்.

“போ…எனக்கென்ன?” இனியவனும் கோபமுடன் பைக்கை எடுக்க, “இல்ல இந்து. நான் பைக்கை எடுக்கிறேன்” அவன் இந்துஜாவுடன் அவன் வீட்டை நோக்கி பயணித்தான்.

கோபம் சற்று மட்டுப்பட, “மாமாவிற்கு தெரியுமா?” சிந்தனையுடன் சஞ்சயை அழைத்தான் இனியவன்..

சற்று நேரத்தின் முன் தான் வீட்டிற்கு வந்திருந்தான் சஞ்சய்.

“சொல்லு இனியவா?”

இனியவன் விசயத்தை கூற, “அம்மா…இந்து எங்க?” சத்தமிட்டான் சஞ்சய்.

“குளிக்க போயிருக்கான்னு நினைக்கிறேன்” சுவர்ணலதா அவரறைக்கு செல்ல, நாகேந்திரனும் சென்று பார்த்தார்.

“சஞ்சய், இந்து இல்லை…ராக்கி தான் தூங்கிட்டு இருக்கான்” பதட்டமுடன் வெளியே வந்தனர்.

இனியவா, நீ அவங்கள பாலோ பண்ணு..

“மாமா, அவங்க போயிட்டாங்க. அந்தாளு வீட்டுக்கு தான் அழைச்சிட்டு போறான்னு நினைக்கிறேன். சீக்கிரம் வாங்க” சொல்லி கைபேசியை வைத்து இனியவன் கிளம்பினான்.

“இந்து…” சத்தமிட்ட சஞ்சய், வீட்டிற்கு வெளியே வந்தான்.

“புள்ள எங்கப்பா?”  நாகேந்திரன் பதற, “அவ ராகவன் மாமா வீட்டுக்கு அவரோட போயிட்டு இருக்கா. நான் பார்த்துக்கிறேன்” கிளம்பினான் சஞ்சய். நவீனும் காரில் கிளம்பினான்.

பிரசாத் இரவிலே அவன் பணிக்காக சென்று விட்டான்.

ராகவன் வீட்டிற்கு செல்லவும், “உங்களிடம் பேச வந்தேன் மாமா” இந்துஜா கூற,

உள்ள வா இந்து. முதல்ல குளிச்சி ப்ரெஷ்ஷாகிட்டு வா. சாப்பிட்டு பேசலாம்.

மாமா பெரியப்பா தேடுவாங்க..

சொல்லிக்கலாம் இந்து..

“ஆடை எடுத்து வரலை” அவள் கூற,

“இதுல என்ன? மாமா ஆடை தான் இருக்குல்ல?” அவரது சர்ட்டை எடுத்து கொடுத்தார்.

“தேங்க்ஸ் மாமா” புன்னகையுடன் குளித்து வெளியே வந்தாள்.

ராகவனின் மடிக்கணினி ஆனிலே இருந்தது. அதில் புகைப்படங்களை பார்த்து வந்து கொண்டிருக்க, வீடியோவை பார்த்து அதிர்ந்து அதனை கீழே போட்டு உடைத்தாள்.

இந்துஜா குளிக்கும் போது எடுத்த வீடியோ இருந்தது.

“மா..மா…என்னோட மாமாவா?” நெஞ்சுக்குள் பயப்பந்து உருண்டது.

குளியலறைக்கு சென்ற இந்துஜா கேமிராவை தேட எதுவும் கிடைக்கவில்லை.  பயத்துடன் வெளியே வர, ராகவன் கையில் ஜூஸூடன் வந்தார்.

அவரது மடிக்கணினியில் தான் அனைத்து விவரங்களையும் வைத்திருந்திருப்பார். ராஜன் இவருக்கு குடைச்சல் கொடுத்தால் இந்த ஆதாரங்களை பயன்படுத்தலாம் என பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் அந்த மடிக்கணினியோ உயிரருந்து கிடந்தது.

சீற்றம் பிறக்க, “இந்து என்ன பண்ணி இருக்க?” கத்தினான்.

நீ..நீங்க…எ…என்னை…பற்கள் பயத்தில் தந்தியடித்தது.

இந்து…இந்து…இந்து…கத்தினான்.

தைரியத்தை வர வழைத்து, “ஏன் மாமா நான் குளிக்கும் வீடியோ எடுத்து வச்சிருக்கீங்க?” அவள் கேட்க, நிலையறிந்து “இந்து அது சும்மா தான்” அவளை நெருங்கினான் ராகவன்.