கடந்த மூன்று நாள் வழக்கமாக அன்றைய இரவும் மஞ்சள் மிளகு பனங்கற்கண்டு போட்டு பால் ஆற்றி கணவனுக்கு எடுத்து வந்தாள் அஞ்சலி.
“நீ சாப்பிட்டியா?” என கேட்டறிந்து கொண்டு பருகினான். அவ்வளவுதான், பின் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன்.
இருவரும் இன்னும் படுக்காமல் படுக்கையிலேயே ஆளுக்கொரு பக்கம் கைப்பேசி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
அவன் தொடர்ந்து இரும, காய்ச்சல் இருக்கிறதா என தொட்டுப் பார்த்தாள். அந்தக் கையை பிடித்துக் கொண்டவன், “எதுக்கு இவ்ளோ அக்கறை காட்டணும், விட்டுட்டு போறவ அக்கறையெல்லாம் எனக்கு வேணாம்” என்றான்.
அவனது உடல் லேசாக சுடுவது போலத்தான் இருந்தது.
“பக்கத்துல படுக்கிறேனே எனக்கும் ஒட்டிக்கும், அதான்” என கடுப்பாக சொல்லிக் கொண்டே தெர்மாமீட்டர் எடுத்து வந்து பரிசோதனை செய்தாள்.
அது நூறு டிகிரி என காட்ட, காய்ச்சலுக்கான மாத்திரை எடுத்துக் கொடுத்தாள். உச்சு கொட்டியவன் அதை வாங்காமல் கைப்பேசியில் கவனம் வைத்தான்.
அவன் முகத்தை வலிந்து நிமிர்த்தியவள், “போடுங்க இதை” என அதட்டினாள்.
“நீ சென்னை போயிட்டா யாருடி செய்வா இதெல்லாம், நான்தானே என்னை பார்த்துக்கணும்? நீ போ” என்றான்.
“நான் எங்கேயும் போகல போதுமா?” எனக் கோவமாக கேட்டாள்.
முகத்தில் ஒரு ஆசுவாசம் பரவ, “நிஜமா?” எனக் கேட்டான்.
“அதானே வேணும் உங்களுக்கு? இந்த கல்யாணம் என்னை முட்டாளா மாத்தி வச்சிடுச்சு. உங்களுக்கு பயந்து ஒன்னும் போகாம இல்லை” என்றவள் தன் நெற்றியில் அறைந்து கொண்டு, “கண்ணு மண்ணு தெரியாம யார் மேலேயும் அன்பு வைக்க கூடாதுன்னு தெரியாம போயிடுச்சு. மூஞ்சு திருப்பிகிட்டு போறதும் தள்ளி போய் உட்கார்ந்துக்கிறதும்… தனியா படுக்கிறதும்… போனா போறான் நீ உன் வேலைய பாருடின்னு இருக்க முடியலையே என்னால. அறிவு மழுங்கிடுச்சு எனக்கு, அதான் உன்னை போய் வுட்டுட்டு போக மனசு வராம…” என்றவள் தேம்பினாள்.
அவன் அவளையே பார்த்திருக்க, “நீ அதுக்கெல்லாம் ஒர்த்தே இல்லை, ஆனா கூட உன்னைத்தான் புடிச்சு தொலைக்குது. உன் மூஞ்சு முகரகட்டய பார்க்காமலாம் என்னால இருக்க முடியாது. நீ என்னை இக்னோர் பண்றப்பலாம் நெஞ்ச அடைச்சு வருது, சரியான டாக்சிக் ஹஸ்பண்ட் நீ. ஒரு வருஷமும் நீ இப்படிலாம் ட்ராமா பண்ணினா எதையும் சகிக்க முடியாது என்னால” என வாய்க்கு வந்ததை பேசினாள்.
வேலைக்கு போக விட மாட்டேன் என்கிறான் என்ற கோவத்தை விட தன்னை அவன் தவிர்ப்பதைத்தான் அவளால் தாள முடியவில்லை. அப்படியிருந்தும் அவனிடம் தொங்கிக் கொண்டு நிற்கிறோமே என அவள் மீதே அவளுக்கு கோவம்.
“அந்த வேலை வேணாம்னு சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.
“இந்த வேலைதான் வேணாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஆனா நான் வேலைக்கு போறத உங்களால மட்டுமில்ல வேற யாராலேயும் தடுக்க முடியாது. அடுத்த மாசமே கோயம்புத்தூர்லேயே ஏதாவது வேலைக்கு போகத்தான் போறேன்” என்றாள்.
அவன் மீண்டும் கைப்பேசி திரைக்கு கவனத்தை மாற்ற, “மாத்திரைய முழுங்கிட்டு அந்த கருமத்தை பாருங்க” என்றாள்.
“இந்த கருமத்தைதான் நீயும் இவ்ளோ நேரம் பார்த்துகிட்டு இருந்த”
“குழந்தையை ரொம்ப நாள் தள்ளி போட வேணாம். என் வயசுக்கு இப்ப குழந்தை பொறந்தாதான் எல்லாத்தையும் கரெக்ட்டா செய்ய முடியும் அஞ்சலி. தானா தள்ளி போனா அது வேற, நாமளா தள்ளி போட வேணாமே. பெத்து மட்டும் கொடுடி, நான் பார்த்துக்கிறேன்” இரைஞ்சலாக கேட்டான்.
கண்கள் கரித்துக் கொண்டு வர, அவனை முறைத்தாள்.
“என்ன அஞ்சலி…”
“நீங்க என் வீக்னெஸ் ஆகிட்டீங்க, அதை வச்சு என்னை உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய்ய வைக்குறீங்க. உங்க கூட எதிர்த்து போராட தைரியம் இல்லாத கோழை ஆகிட்டேன், ஐ ஹேட் மைசெல்ஃப்!” என்றாள்.
“குழந்தை கேட்டதுக்கு இவ்ளோ பேசுவியா நீ?”
“ஈஸியா கேட்குறீங்க, அந்த பிராசஸ்ல என்னால… எப்படிங்க நான் நினைச்ச மாதிரி இருக்க முடியும்? குழந்தைன்னு வந்தா பிரேக் வரும், அப்புறம் அந்த குழந்தைக்கு துணைக்கு வேணும்னு இன்னொரு குழந்தை கேட்பீங்க, எனக்கு தெரியும் உங்களை. உங்க பிளான் தெரியாம உங்களை லவ் பண்ணி தொலைச்சிட்டேன். என் மிஸ்டேக்தான்” என்றாள்.
தூரமாக கிடந்த அவனது கைப்பேசியில் மெல்லிய சத்தத்தில் அலாரம் அடிக்க ஆரம்பித்தது, அவள் அவனை முறைக்க அவனோ சிரித்தான். அலாரம் சத்தம் ஓய்ந்தது.
“என்ன… பர்த்டேக்கு விஷ் பண்ணவா? அது ஒன்னுதான் இப்ப எனக்கு குறைச்சல்…” அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.
பரிதவித்துக் கொண்டிருந்தாலும் விலகாமல் அவளும் அவனுடன் இணங்கி நடந்து கொண்டாள். விலகியவன், “ஹேப்பி பர்த் டே அஞ்சலி!” என்றான்.
மலர்ச்சியே இல்லாமல் தலையாட்டிக் கொண்டாள்.
“கிஃப்ட் கொடுக்க போறேன், கொஞ்சம் சிரி” என்றான்.
அவனை கட்டியணைத்துக் கொண்டவள், “என்னை வேலைக்கு போக விட்டா அதுவே பெரிய கிஃப்ட்தான். சண்டை போட வைக்காதீங்க, எனக்கு உங்களோட சண்டை போட பிடிக்கவே இல்ல, நீங்க எல்லா விதத்திலேயும் எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கங்கிற என் எண்ணத்தை பொய் ஆக்காதீங்க ப்ளீஸ்” என்றாள்.
“உண்மைய சொல்லனும்னா என் பொண்டாட்டி வேற ஒருத்தர்கிட்ட வேலைக்கு போறத நான் விரும்பல” என அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவனை விட்டு விலகி படுத்தாள்.
“என்னை போட்டு இந்த பாடு படுத்தி வைக்கிற, உனக்கு வேற யாரும் வேலை சொல்ல நீ அதை கை கட்டிக்கிட்டு பார்ப்பியா?” எனக் கேட்டான்.
அவள் முறைக்க, “நீ உனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ள பிறந்தவள், யாருடைய கட்டளையின் கீழும் வேலை செய்ய அல்ல” என்பதை ஆங்கிலத்தில் சொன்னான்.
என்ன சொல்ல வருகிறான் என அவள் அவனை பார்த்தாள்.
தலையணையின் கீழிருந்து ஏதோ காகித உறை எடுத்தவன், மென்மையாக அவளின் நெற்றியில் முத்தமிட்டு அதை அவளின் கையில் கொடுத்தான்.
உறையை திறந்து உள்ளே இருந்த காகிதங்களை எடுத்துப் பார்த்தாள்.
‘அஞ்சலி ஹோம் அப்ளயன்ஸஸ்’ என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களுக்கான ஷோ ரூம் துவங்க இருக்கிறது, அதற்காக பதிவு செய்யப் பட்டிருக்கிறது, லைசென்ஸும் வாங்கியாகி விட்டது. அதற்கான தஸ்தாவேஜ்கள்தான் அவளின் கையில் இருந்தவை.