பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -19

அத்தியாயம் -19

அஞ்சலிக்கு நல்ல இருமல், சளி. கஷாயம் செய்ய துளசி, வெற்றிலை, கற்பூர வல்லி  எல்லாம் வீட்டின் பின்பக்கத்திலிருந்து பறித்துக் கொண்டிருந்தான் யுகி. மூக்கு நுனி சிவந்திருக்க, சோர்ந்து போன முகத்தோடு அவனுக்கு காஃபி எடுத்து வந்து கொடுத்தாள் அஞ்சலி.

நேற்றைய முன் தினம் பெய்த மழையில் பைரவியின் பெண்களோடும் ரோஹித்தோடும் மொட்டை மாடியில் நனைந்திருக்கிறாள். பிள்ளைகளுக்கு ஏதும் செய்யவில்லை, இவளுக்குத்தான்  படுத்த ஆரம்பித்து விட்டது.

“என்ன மூஞ்ச உர்ருனு வச்சிருக்கீங்க?” என குறையாக கேட்டாள்.

“நீயே இவ்ளோ பண்றியே, நீ எனக்கு பெத்து கொடுக்க போற புள்ளைங்கள பத்தி நினைச்சிட்டு இருந்தேன். கொஞ்சம் கண்ண கட்டி வருது” என்றான்.

“இவ்ளோலாம் செல்லம் கொடுக்காதீங்க, ஸ்ட்ரிக்ட்டா இருங்க, மேனேஜ் பண்ணிக்கலாம்” என யோசனை சொன்னாள்.

“பொறக்காத புள்ளைக்கு இப்பவே என்னை வில்லன் அப்பா ஆக்க பார்க்கிறியா?”

“ஹீரோ ஆகணும்னா நீங்கதான் கஷ்ட படணும், எனக்கென்ன?” என சொல்லிக் கொண்டே தும்மினாள்.

“ஸ்பிரே பண்ணாத டி!”

“வாயை மூடிக்கிட்டுத்தான் தும்மினேன், நேத்து நைட் எனக்கு அவ்ளோ இருமல், அப்ப மட்டும் நீங்க…”

“ஷ்ஷ்ஷ்!” என அதட்டினான்.

“என்ன ஸ்னேக் மாதிரி மிமிக்ரி பண்றீங்க? நைட் மட்டும் எதுவும் சொல்லலை, இப்ப மூஞ்ச சுளிக்கிறத பாரு. பகல் போனா நைட் வந்துதான் ஆகும் பாஸ், அப்ப பேசிக்கிறேன்” என மிரட்டினாள்.

அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவளுக்கு முடியவில்லை என பாவப்பட்டு அவனே தள்ளிப் படுத்தால் கூட “எப்படி கேப்  விட்டு படுக்கலாம்?” எனக் கேட்டு சண்டை போடுவாள்.

கணவன் மீது கால்களை தூக்கிப் போட்டுக் கொண்டால்தான் அவளுக்கு உறக்கமே வரும். எப்போதாவது இவன் சோர்வாக இருக்கும் போதும் அவள் அவனை அணைத்துக் கொள்வாள், ஆக மொத்தம் அவளுக்கு கொழு கொம்பு பற்றி படரும் கொடி போலவே படுக்கையில் அவனை படர்ந்தே இருக்க வேண்டும்.

காஃபியை பருகி விட்டு காலி டம்ளரை அவளிடமே கொடுத்தவன் சமையலறை வந்தான்.

அலமேலு சட்னிக்கு தயார் செய்து கொண்டிருக்க, “எல்லாம் பறிச்சிட்டு வந்திட்டேன் மா, என்னம்மா செய்யணும்?” எனக் கேட்டான் யுகி.

அம்மா சொல்ல சொல்ல கஷாயம் வைக்க ஆரம்பித்தான். தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. உதவுகிறேன் என வந்ததிலிருந்து ஒரே தும்மலும் இருமலுமாக இருந்தவளை எதுவும் செய்ய வேண்டாம் என அலமேலுதான் சொல்லியிருந்தார்.

“ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்மாக்காக இப்படி அடுப்படில வந்து நின்னுருப்பியாடா  நீ? அதான் சமைக்க தெரியாதவளா பார்த்து உனக்கு பொண்டாட்டி ஆக்கி வச்சிட்டார் கடவுள்” என்றார் அலமேலு.

“அப்பா மட்டும் ஆச்சிக்கு ஏதும் ஹெல்ப் பண்ணிட்டா இருந்தார்? சும்மா அடிச்சி விடாதம்மா. சீரகமும் மிளகும் அளவு சொல்லு” என்றான். பின்னர் கரண்டி வைத்து கிண்டிக் கொண்டிருந்தான்.

“வாசல்ல தென்ன மரம் காக்கா குருவினு கோலம் போட்டு மானத்த வாங்கி வைக்குற, பொண்டாட்டிய சொகுசா நிக்க வச்சிட்டு கரண்டி பிடிக்கிற. வெக்கமா இல்லடா உனக்கு?”  என மருமகளை முறைத்துக் கொண்டே கேட்டார் அலமேலு.

“நிஜமா இல்லை மா” என்றான் யுகி.

“அதானே, அவளுக்கும் இல்லை உனக்கும் இல்லை. மரியாதையா நாளைலிருந்து நீ கோலம் போட கூடாது சொல்லிட்டேன், நான் பார்த்துக்கிறேன்” என கண்டிப்போடு சொன்னார்.

மகன் கண்டு கொள்ளாமல் போகவும், “உன்கிட்டதான்டா சொல்றேன்” என்றார்.

“பனியில நீ செய்வியா? நாளைக்கு உனக்கு முடியாம போனாலும் நாந்தான் அவஸ்தை படணும், இவளுக்கு முடியாதப்பதானே செய்றேன், அதெல்லாம் பெருசாக்கி பேசாதம்மா” என்றான்.

“சொல்லுவடா, நாளுக்கு நாள் யுகியோட டிராயிங் ஸ்கில் கூடிக்கிட்டே போகுதுன்னு எதிர்வீட்டம்மா கிண்டலா சொல்லுது” என்றார் அலமேலு.

“கசக்குமா மா, தேன் ஆட் பண்ணலாமா?” எனக் கேட்டான் யுகி.

வந்த சிரிப்பை அடக்க வழி தெரியாமல் இருமி சமாளிக்க பார்த்து, அதுவும் முடியாமல் திணறினாள் அஞ்சலி.

“அடியே!” என கடிந்தார் அலமேலு.

“ம்மா! இருமல் வந்தா என்ன பண்ணுவா அவ?” எனக் கேட்டான் யுகி.

“டேய்!” என மகனையும் அதட்டினார்.

“சுடு தண்ணி வேணுமா அஞ்சலி?” எனக் கேட்டவன்,   ஃபிளாஸ்க்கில் இருந்து சுடு தண்ணீர் எடுத்து அதை குடிக்கும் பதத்துக்கு மாற்றி மனைவிக்கு கொடுத்தான்.  மீண்டும் பொறுப்பாக கஷாயத்தை கிண்டினான்.

மகனை மருமகள் வேலை வாங்கினால் அலமேலுவுக்கு பிடிக்காது. அதனால் வேண்டுமென்றே அவர் இருக்கும் போது கணவனிடம் ஏதாவது வேலை ஏவுவது அஞ்சலிக்கு வாடிக்கைதான். இன்று அவள் சொல்லாமலே அவன் அவளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருக்க, மாமியாரை தோரணையாக பார்த்து வைத்தாள்.

கடுப்பான அலமேலு, “கை விடாம கிண்டிகிட்டே இருக்க அல்வாவா செய்ற? கொதிச்சு பாதி ஆனதும் வடி கட்டிடு. அப்புறம் சங்குல வச்சு  அவளுக்கு வாய்ல ஊத்தி விடு” என்றார்.

“சங்குலதான் கொடுக்கணுமா? அப்பதான் மருந்து வேலை செய்யுமா? டம்ளர்லேயே கொடுத்தா என்னாகும்? இப்ப சங்குக்கு எங்க போவேன் நான்?” அம்மாவின் கிண்டல் புரியாமல் சங்கில் கொடுப்பது சம்பிரதாயம்  போலும் என நினைத்து கேட்டான்.

இடுப்பில் கை வைத்து மகனை முறைத்தவர் மருமகளை பார்க்க, “என்னை பார்த்தா? இவ்ளோ அப்பாவியா இவரை வளர்த்து வச்சது நீங்களா நானா? உங்க வளர்ப்பு சரியில்லை அத்தை” என்றாள் அஞ்சலி.

“நக்கலுக்கு  சொன்னியா மா? ஏம்மா நீ வேற?” என அலுத்தான் யுகி.

“தலைகால் புரியாம ஆடுறியே, எப்படி நான் பேசுறது சரியா புரியும் உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே சட்னிக்கு வதக்கி வைத்ததை மிக்ஸியில் அரைத்தார் அலமேலு.

சட்டென கணவனின் முகத்தை திருப்பி அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட்டாள் அஞ்சலி.

திகைத்துப் போனவன் விழித்துக் கொண்டு நிற்க, மிக்ஸியை அணைத்து விட்டு  மகனை பார்த்த அலமேலு, “பேயடிச்ச மாதிரி நிக்கிற, என்னடா ஆச்சு?” எனக் கேட்டார்.

விழித்துக் கொண்டே ஒன்றுமில்லை என மறுப்பாக தலையை ஆட்டினான்.

“தள்ளி போ, சமைக்க அடுப்பு விடாம இடைஞ்சல் பண்ணிக்கிட்டு” என்றார்.

கஷாயத்தை வடிகட்டி எடுத்துக் கொண்டு அவனும் சென்று விட்டான்.

“நல்ல பசங்க ரெண்டும். இப்படியே நல்லா இருந்தா சரிதான்” என தானாக முணு முணுத்துக் கொண்ட அலமேலுவின் முகம் மலர்ந்து கிடந்தது.

அறைக்கு வந்த கணவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தாள் அஞ்சலி.

“அம்மா பார்த்திருந்தா என்னடி ஆகியிருக்கும்? நானா கேட்கும் போதெல்லாம் பிகு பண்ண வேண்டியது, அம்மா கூட இருக்கிறப்போ போய்… உன்னை…” பற்களை கடித்தான் யுகி.

“அதெல்லாம் ஒரு கிக் மச்சி!” என கண்களை சிமிட்டி சொன்னவள், “எப்ப பிகு பண்ணினேனாம்? கேட்கிறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் தாராளமா கொடுக்கல நான்? என்ன குறை வச்சேன் எதுல குறை வச்சேன்?” எனக் கேட்டாள்.

தங்களுக்குள் நடக்கும் அந்தரங்கம் எல்லாம் அவனக்கு நினைவுக்கு வர சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டான்.

“நீங்க ஏதோ அக்கறையில செய்றதா  உங்கம்மாவுக்கு நினைப்பு, சீக்கிரம் எனக்கு சரியானாதான் உங்க இஷ்டத்துக்கு என்கிட்ட சில்மிஷம் பண்ண முடியும்? புள்ள அடுப்படிக்கு வரவுமே பிபி ஏறுது உங்கம்மாவுக்கு!”