நிறைமதியைக் கண்டதும் கண்கள் பொலிவுற, “மதி! புகுந்த வீட்டிலிருந்து எப்பொழுது வந்தாயடி?” எனக் கேட்டாள் முத்தரசி.
“இன்று தான் என்னவருடன் வந்து சேர்ந்தேனடி” என்றவள், “நீ ஏனடி இப்படி கருத்து இளைத்து வதங்கிய கொடியாய் வாடியிருக்கிறாய்?” எனக் கேட்டாள் நிறைமதி.
மென்னகையுடன் தோழியைப் பார்த்த முத்தரசி, “ஏன் இந்த உயிர் பாரமாய் இந்த உடலில் இருக்கிறது என அன்றாடம் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” சலிப்புடன் உரைத்தாள்.
அவளின் பேச்சில் பயந்து போன நிறைமதி, “ஏன் இவ்வாறு பிதற்றுகிறாய்? உன் தந்தை எங்கே? நீ உண்ணாது உறங்காது உடலைக் கெடுத்துக் கொள்வதை எவ்வாறு கண்டிக்காமல் இருக்கிறார்?” எனக் கேட்டாள்.
“தந்தை தூர தேசம் சென்று ஒரு திங்கள் ஆகிறதடி!” என்றாள் முத்தரசி.
“ஓ அதனால் தான் அரசாங்கக் காவலர் வீட்டு வாயிலில் உன் காவலுக்காக நிறுத்தப்பட்டுள்ளாரா?” நிறைமதி கேட்க, ஆமெனத் தலையசைத்தாள் முத்தரசி.
“நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் உன்னை ஏன் அவர் தனித்து விட்டு சென்றார்? அப்படி என்ன அவசர வேலை அவருக்கு? ஆனால் அவருக்காக வருந்தி நீ இப்படி இருப்பதாகத் தெரியவில்லையே! உன்னவரிடம் உன் காதலை மொழிந்தாயோ?” யோசனையுடன் முத்தரசியைப் பார்த்தவாறு நிறைமதி கேட்க, தோழி தன்னைக் கண்டு கொண்டதில் ஆச்சரியமும், அதேயளவு வருத்தமும் பிரதிபலித்தது முத்தரசியின் முகத்தில்.
“இந்த காதல் பொல்லாதது மதி! சுகமான ரணமாய் உயிரினில் உணர வைத்து உடலை உருக்கிவிடும்” சோகம் தளும்பிய கண்களுடன் அவள் உரைக்க,
“உன்னவர் உன் காதலை நிராகரித்தாரா அரசி? ஆனால் இது எப்படிச் சாத்தியம்? எங்கள் அரசியை மணக்க அவரல்லவா பேறு பெற்றிருக்க வேண்டும்!” மனம் தாளாமல் நிறைமதி புலம்ப,
“ஆம் அப்பேறு அற்றவர் அவர் என்றே என் காதலை உதறித் தள்ளினார் மதி” கண்ணீர் கண்களைச் சூழ உரைத்த முத்தரசி, அன்று நிகழ்ந்ததை முழுவதுமாக உரைத்தாள்.
இது வரை முத்தரசி சிவநேசனைக் காதலித்ததை மட்டுமே அறிந்திருந்த நிறைமதி, சிவநேசனின் ஆயுள் கண்டத்தையும் முத்தரசி கேட்ட அசரீரியையும் கேட்டு அதிர்ந்து போனாள்.
“இதென்ன சோதனை அரசி! நீ தான் அவரது மணவாட்டியாக வேண்டுமென இறைவன் கூற அதை தடுப்பதற்கு இவர் யார்?” கோபமாகக் கேட்ட நிறைமதி,
தோழியின் கண்களைத் துடைத்தவளாய், “நீ கலங்காதே அரசி! உனக்குத் தூது செல்ல இந்தத் தோழி இருக்கும் போது நீ ஏன் துயர் கொள்ள வேண்டும்! நான் இங்கிருந்து செல்வதற்கு முன்பு உன்னவனை உன்னிடம் சேர்பிப்பேன்” என்று ஆறுதல் மொழி உரைத்தாள்.
தோழியை ஆர தழுவிக் கொண்ட முத்தரசி, “இங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நீ ஏன் இங்கு வந்தாய்?” எனக் கேட்டாள்.
“நாட்டின் நிகழ்வுகள் எதுவும் தெரியாமல் வீட்டினுள்ளேயே அடைப்பட்டு கிடக்கிறாயா அரசி?” என்று நிறைமதி கேட்க,
“ஏன்? என்னாயிற்று? நாட்டின் சூழல் இயல்பு நிலைக்கு வந்து விட்டதா? எனில் தந்தை ஏன் இன்னும் வரவில்லை?” பதட்டத்துடன் கேட்டாள் முத்தரசி.
“என்னடி இது! பல நாட்கள் மயக்கத்தில் இருந்து விழித்தவள் போல் இப்பொழுது இக்கேள்விகளைக் கேட்கிறாய்! சிவநேசர் உன்னை ஒதுக்கியதில் இருந்து உயிரற்ற உடலாய் தான் உலவிக் கொண்டிருக்கிறாயா? வெளியில் நிற்கும் காவலரிடம் நாட்டின் நிலவரத்தைக் கேட்டிருந்தால் கூட உரைத்திருப்பாரே? காதல் பித்து முற்றிப் போய் விட்டதோ” என்று நாடியில் கை வைத்து வியந்தவளாய் நிறைமதி கேலிச் செய்ய, நாணி முகம் சிவந்தவளாய் அவளின் தோளில் அடித்தாள் முத்தரசி.
“நான் அன்றாடம் ஆலயத்திற்குச் சென்று என்னுடைய நித்திய சேவையைச் செய்து கொண்டு தான் இருக்கிறேன் மதி! அன்றிலிருந்து என்னவரையும் நான் பார்க்கவில்லை” என்றாள் முத்தரசி.
“சிவநேசரை காண இயலாத துக்கத்தில் தான் நாட்டின் நிலவரத்தைக் கூட கேட்டறிந்து கொள்ளாமல் இருந்து விட்டாயோ?” என்று கேட்ட நிறைமதி,
“நம்மூருக்கு வருகை புரியவுள்ள அடியாரைக் காணத் தான் நானும் என் கணவரும் வந்துள்ளோம்” என்றவளாய் தற்போதைய நாட்டின் நிலவரத்தைக் கூறலானாள்.
****
ஒரு மாதத்திற்கு முன்பு முத்தரசி தனது காதலை மொழிந்ததும் அதனை மறுத்து பேசி வேதனையுடன் அங்கிருந்து கிளம்பிய சிவநேசன் தனது இல்லத்திற்குச் சென்றான். அங்கே அவனுக்காகக் காத்திருந்தார் மதுரகவிராயர்.
மதுரகவிராயரைக் கண்டதும், ‘தங்களது காதலை அறிந்து அதனை பற்றி பேச தான் வந்திருப்பாரோ’ என்று எண்ணியவாறே,
“வாருங்கள் ஐயா! வணக்கம்” இரு கரம் கூப்பி அவரை வரவேற்றவன்,
“என்னை அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே! தாங்கள் ஏன் இத்தனை தூரம் இந்த மலைப்பாதையில் பயணித்து உடலை வருத்திக் கொள்கிறீர்கள்” எனக் கேட்டான்.
“உடனே உன்னைக் கையோடு அரண்மனைக்கு அழைத்து வரச்சொல்லி மகாராணியின் உத்தரவு! தாமதமாகி விடக் கூடாதெனத் தான் உன்னை அழைத்துச் செல்ல நானே நேரில் வந்தேன். செல்லும் வழியில் மீதி விடயங்களைப் பேசிக் கொள்ளலாம். கிளம்பு நீ” என்றவராய் அவனைச் சிந்திக்கவும் விடாது குதிரையில் அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றார்.
*****
மகாராணி உமையம்மையாரின் அந்தபுரத்தில் அவரின் முன் அமர்ந்திருந்தனர் மதுரகவிராயரும் சிவநேசனும்.
பட்டாடை உடுத்தி நெற்றியில் மூன்று பட்டை திருநீறிட்டு கழுத்தினில் சூடியிருக்கும் தங்க நகைகளுடன் தங்க பூண் கட்டிய ருட்ராட்ச மாலை அணிந்து சிவ பக்தையாகக் காட்சியளித்த மகாராணியாரைக் கண்டு பூரித்தவனாய் வணங்கி நின்றான் சிவநேசன்.
சிவபக்தை எனக் கேள்விப்பட்டிருந்த மகாராணியை முதல் முறையாக நேரில் காண்கிறான் சிவநேசன். அவரின் இந்த சிவ கோலமே நாட்டின் நிலையை மகாராணியார் அவர்கள் சீர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கையை அளித்தது அவனுக்கு.
“நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அரசர் அவரின் முடிவில் தீர்மானமாக இருக்கிறார் சிவநேசரே! இந்த ஆணை நிறைவேற்றப்பட்டால் மக்களின் ஒற்றுமை குலையும்! சண்டையும் குழப்பங்களும் அதிகரிக்கும்!” என்று கவலையுடன் உரைத்தார் மகாராணி.
“அரசர் பிறப்பிக்கப்போகும் ஆணை யாது தாயே?” எனக் கேட்டான் சிவநேசன்.
“சமண அடியார்களுடன் நட்பு பூண்டு அந்த சமயத்தவராய் மாறியுள்ள நமது அரசர், அவர்களின் மூளைச்சலவையில் மயங்கி நம் நாட்டில் இருக்கும் சிவாலயங்களை சமணக் கோவிலாக மாற்றும் ஆணையை நாளை பிறப்பிக்கப் போவதாக தயார் நிலையில் இருக்கிறார்!” என்று மகாராணியார் உரைத்ததும்,
“சிவ சிவா! என்ன ஓர் அபத்தமான ஆணை இது!” கண்களில் கோபம் பொங்கக் கேட்டான் சிவநேசன்.
“அரசருக்கு இந்த அபத்தம் புரிய மறுக்கிறதே! அரண்மனை வாசிகளிலிருந்து மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள் வரை அனைவரும் அரசருக்கே ஆதரவாக இருக்கின்றனர்! நானும் கவிராயர் அவர்கள் மட்டுமே தனித்து இதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்” வருத்தத்துடன் தெரிவித்த மகாராணியார் மேலும் தொடர்ந்து,
“இந்த ஆணை நிறைவேற்றப்பட்டால் சாக்கியர்கள் வைணவ ஆலயங்களை அவர்களுக்கானதாய் அறிவிக்க விண்ணபிப்பர்! இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிந்தால் தான் சமய அடியார்கள் எவரும் மக்களை சமய மாற்றத்திற்கு ஈடுபடுத்த பயம் கொள்வர்! நம் நாட்டில் எவரும் அவருக்கு விருப்பமான சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமை இருக்கிறது ஆனால் மூளைச்சலவை செய்து மாற்றம் பெறச் செய்யும் எந்தச் சமயத்தவரையும் மக்களுக்குள் செல்வாக்குள்ள சமயமாக பரவ விட்டு விடக் கூடாது என்பதில் திண்ணமாக இருக்கிறேன் சிவநேசரே” என்று தீர்க்கமாக உரைத்தார் மகாராணி உமையம்மையார்.
மகாராணியார் கூறியதைக் கேட்டு தலையசைத்து ஆழ்ந்த மூச்செடுத்த சிவநேசன், “அரசர் இந்த ஆணையை பிறப்பிக்காது தடுக்கும் உபாயத்தை கண்டறிந்து விட்டீர்களா தாயே” எனக் கேட்டான்.
“ஆம்! எம்பெருமான் ஈசன் மகாராணியார் அவர்களின் கனவில் தோன்றி உபாயமளித்திருக்கிறார்” என்றார் மதுரகவிராயர்.
“எம் ஈசனை கண்டீர்களா? பாக்கியம் பெற்றேன் தாயே! எம் ஈசனைக் கண்ட தங்களைக் கண்டதில் பெரும் பாக்கியவானேன்” நெஞ்சம் நெகிழ பணிந்து கரங்களைக் கூப்பியவாறு உரைத்தான் சிவநேசன்.
“உபவாசம் இருக்கிறேன் சிவநேசரே! எம் மன்னர் சமண சாக்கியர்களுடன் நட்புறவாய் பழகிய நாளிலிருந்தே எம்பெருமான் ஈசனுக்கு உபவாசம் இருந்து, ‘எம்மையும் எம் நாட்டையும் நீர் தான் காக்க வேண்டும்’ எனச் சரணடைந்து விட்டேன். அதன் பலனை நேற்றைய கனவில் கண்டேன். அந்த உபாயத்தை நிறைவேற்றவே தங்களை அழைந்து வரக் கட்டளையிட்டேன்” என்றார் மகாராணியார்.
“ஆணையிடுங்கள் தாயே! நாட்டிற்கான என் கடமையைச் செய்ய நான் சித்தமாய் உள்ளேன்” என்று எழுந்து நின்றான் சிவநேசன்.
“நீர் எம்பெருமானின் அடியவராக வேண்டுமென ஈசனே விரும்பி அடியாரை அனுப்பி தீட்சை அளித்து தங்களை ஆட்கொண்டாராமே! எத்தகைய பேறு பெற்றவர் தாங்கள்! அத்தகைய பேற்றினைப் பெற்ற அனுபவம் வாய்ந்த மற்றொரு அடியவரை இங்கு அழைத்து வர வேண்டும். சைவ நெறியை தழைத்தோங்கச் செய்வதே தனது வாழ்நாள் சேவையெனச் செய்து வரும் அந்த அடியவர் தற்பொழுது திருமறைக்காட்டில் இருக்கிறார். சிவனடியாரான தாங்கள் அவரிடம் சென்று பேசும் பொழுது அவரால் இச்சூழலை விளங்கிக் கொள்ள முடியும் என முடிவு செய்து தான் தங்களைத் தூதுவராய் அனுப்ப முடிவு செய்தோம். தாங்கள் நம் நாட்டின் தூதுவராய் சென்று மன்னரின் மனநிலையையும் நம் நாட்டின் நிலவரத்தையும் எடுத்துக்கூறி அழைத்து வர வேண்டும். தங்களுடன் மதுரகவிராயரும் இரு காவலர்களும் உடன் வருவர்” என்றார் உமையம்மையார்.
தன்னைப் போலவே எம்பெருமான் ஈசனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர் என்று மகாராணி உரைத்த பொழுதே அந்த அடியவர் யாரெனப் புரிந்து போனது சிவநேசனுக்கு.
“ஆகட்டும் தாயே! இந்த நல்லூரான் எனது அடிமை என இப்பிறவிப்பெருங்கடலில் இருந்து தடுத்தாட் கொண்ட எம்பெருமானின் பெரும் கருணையையும் அன்பையும் பெற்ற சிவனடியாரான சிவஞானச்சந்திரரைக் காணப்போகிறேன் என்பதே என்னைப் பூரிக்கச் செய்கிறது தாயே!” கண்கள் மின்ன முகம் பொலிவுற கூறியவன்,
“ஆனால் அவரை அழைத்து வரவே ஒரு திங்கள் ஆகிவிடுமே! நாளையே மன்னர் ஆணைப் பிறப்பிக்க சித்தமாய் உள்ளார் அல்லவா?” நெற்றிச் சுருங்கக் கேட்டான் சிவநேசன்.
அவனின் கேள்விக்குப் பதிலளிக்காது எழுந்து நின்ற மகாராணியார் அவனிடம் ஓர் ஓலை கொடுத்து வாசிக்க சொன்னார்.
அதனை வாசித்து விட்டு அதிர்ச்சியுடன் விலுக்கென நிமிர்ந்து மகாராணியை சிவநேசன் பார்க்க, “இந்த ஓலையை எம்பெருமான் சந்திரரிடம் சேர்ப்பித்து அவரை அழைத்து வாருங்கள்” என்று முடித்துக் கொண்ட மகாராணியார் அங்கிருந்து அகன்றார்.
இன்னும் கண்களில் அதிர்ச்சி மீதமிருக்க கவிராயரைத் திரும்பி பார்த்த சிவநேசன், “மன்னர் நலமாகத் தானே இருக்கிறார்” எனக் கேட்டான்.
ஆமென மதுரகவிராயர் தலையசைக்க, “பின் ஏன் இப்படி ஓர் ஓலை..” வார்த்தை வராமல் அவன் நிறுத்த,
“ஈசரின் ஆணைக்கிணங்க நாளை நிகழப்போவது தான் இந்த ஓலையில் எழுதப்பட்டுள்ளது சிவநேசரே! ஈசனின் திருவிளையாடல் தான் நம் நாட்டை காப்பாற்றப் போகிறது” என்று மென்னகை புரிந்தார் மதுரகவிராயர்.
“எல்லாம் அவன் செயல்” என ஈசனை வணங்கி தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள் கவிராயரும் சிவநேசரும். ஒரு திங்கள் ஆகியும் இருவரும் இன்னும் நாட்டை வந்தடையாமல் இருக்கின்றனர்.