அஞ்சலிக்கு இனி கவுன்சிலிங் தேவையில்லை என சொல்லி விட்டார் மருத்துவர். இப்போது புகுந்த வீடு அவளுக்கு நன்றாக பழகி விட்டது. ஸ்ரீஜாவும் அவளும் மட்டும் அந்நியர்கள் போலவே நடந்து கொண்டனர்.
அலமேலு பராமரித்து வைத்திருந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இப்போது அஞ்சலியின் பராமரிப்புக்கு மாறியிருந்தன. நந்தினியின் திருமணம் முடியவுமே வெங்கட் பெரிய நிம்மதி பெற்றார், அது அவரது உடல் நலத்திலும் எதிரொலித்தது.
யுகிக்கு மனைவியிடமிருந்து சின்ன சின்ன அணைப்புகளும் முத்தங்களும் போதுமானதாக இருக்கவில்லை. அவள் பக்கமிருந்து எந்த சிக்னலும் இல்லாமல் போக, மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு இன்னும் பொறுமை காத்துக் கொண்டிருந்தான்.
மற்றபடி வாழ்க்கை நிம்மதியாகவே செல்வதாக நினைத்தான்.
“கோர்ஸ் முடிய போகுதுங்க, ஜாப்’க்கு அப்ளை பண்ண போறேன்” என அன்றைய இரவில் அஞ்சலி அறிவிக்கவும் கொஞ்சம் விழித்தான்.
அவள் முறைக்க, “இன்னும் கொஞ்ச நாள் அஞ்சலி” என கெஞ்சலாக சொன்னான்.
“என்னங்க ஸார் உங்க பிளான்?” என கிண்டலாக கேட்டாள்.
“அது இருக்கு நிறைய, வாக் போலாம் வா” என சொல்லி வெளியே அழைத்து சென்றான்.
எப்பொழுதும் போல அஞ்சலி குறும்பு செய்து கொண்டிருக்க, அவளை சமாளித்து நடந்து கொண்டிருந்தான் யுகி.
“உங்க லவ் ஸ்டோரீலாம் சொன்னதே இல்லை நீங்க, சொல்லுங்களேன் கேட்போம்” என்றாள்.
“சொல்லிக்கிற மாதிரி அப்படிலாம் பாஸ்ட் லவ் ஸ்டோரீஸ் இல்லை”
“சொல்லிக்கிற மாதிரி இல்லைனா? அப்போ ஏதோ இருக்கு, சுமார் ஸ்டோரியா இருந்தாலும் எனக்கு ஓகே தான்”
“அப்படியும் இல்லை அஞ்சலி. ஆனா அம்மாக்கு என்னை நினைச்சுதான் பயம், அண்ணா காலேஜ் போறப்ப பஸ்லதான் போவார். மெயின் ரோட் போயிதான் பஸ் ஏறணும், அப்ப இங்க தெருவுல நிறைய வீட்ல அண்ணா வயசுல பொண்ணுங்க இருந்தாங்க. ‘ஆனாலும் லவ் அது இதுன்னு போகாம குனிஞ்ச தலை நிமிராம போவான் வருவான், படிப்பு படிப்புன்னு இருந்து நல்ல வேலைக்கு போனான். நாங்க பார்த்த பொண்ணதான் கட்டினான், நீயும் அப்படி இருக்கணும்’னு அம்மா என்கிட்ட சொல்லிட்டே இருப்பாங்க”
“உங்க கதையை கேட்டா உங்க அண்ணா கதை சொல்றீங்க. வாசு மாமா அப்படி சைட் கூட அடிக்காம இருந்து என்ன சாதிச்சார்? பேசாம யாரையாவது லவ் பண்ணியிருந்திருக்கலாம்” என்றவளை கண்டனமாக பார்த்தான்.
“என்ன சைட்டிங் அவ்ளோ பெரிய குத்தமா என்ன?”
“மேடம் பயங்கர சைட் போல…” அவளை மார்க்கமாக பார்த்துக் கொண்டே கேட்டான்.
“வாலிப வயசுல அதெல்லாம் இல்லாம இருக்குமா பாஸ்?” எனக் கேட்டு கண்கள் சிமிட்டினாள்.
“உங்க பொண்டாட்டிக்கு ஓவரா இடம் கொடுத்து வச்சிட்டீங்க பாஸ். ஃபில்டர் இல்லாம பேசுறா” என்றவள், “உங்க லவ் ஸ்டோரி?” எனக் கேட்டு சிணுங்கினாள்.
“காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஃபேமிலியா தூத்துக்குடி போனோம். ட்ரெயின்ல வந்த பேசஞ்சர் ஒருத்தர் ஜோசியக்காரர். என் கையை பார்த்திட்டு ஆஹா ஒஹோன்னு வருவேன்னு சொன்னார். அம்மாக்கு ஒரே சந்தோஷம், கடைசியா ‘உங்களுக்கு பொண்ணு பார்க்கிற கஷ்டமே வைக்க மாட்டான், இவனே பொண்ணு பார்த்துப்பான்’னு சொல்லிட்டார். அம்மா முகம் போன போக்க பார்க்கணுமே…” என சொல்லி புன்னகைத்தான்.
“அப்புறம்?”
“அவர் ஏதோ அடிச்சி விடுறார், அப்படிலாம் நான் இல்லம்மான்னு எத்தன தடவ அம்மாட்ட சொல்றது, அப்பா திட்டித்தான் எனக்கு அட்வைஸ் பண்றத நிறுத்தினாங்க. அமைதியா இருந்தாலும் எப்ப வேணா லவ்னு வந்து சொல்வேன்னு எதிர்பார்க்க கூட செஞ்சாங்க. எனக்குத்தான் ஒன்னும் செட் ஆகல”
“செட் ஆகலைனா… அப்போ ரூட் விட்ருக்கீங்க?”
“பெரிய கதையெல்லாம் இல்லை அஞ்சலி. அதோ அந்த முனை வீட்டுலதான் ஒரு மலையாளகாரங்க இருந்தாங்க. நான் காலேஜ் போகும் போது எனக்கு பைக் வாங்கி கொடுத்திருந்தார் அப்பா. அந்த பொண்ணு காலேஜ் போக ஒரு நாள் லேட் ஆகிடுச்சு, எக்ஸாம் போல, என்னை ட்ராப் பண்ண சொல்லி கேட்டுக்கிட்டாங்க அந்த பொண்ணோட அம்மா” என்றான்.
“ஆஹா! இனிமே உங்க முகத்தை பார்த்துகிட்டேதான் கேட்கணும்” என்றவள் அவனுக்கு முன் வந்து, அவனை பார்த்துக் கொண்டே பின்னால் நடந்தாள்.
“ஒழுங்கா நேரா நட, தடுக்க போகுது” என அவன் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.
அந்த பெண்ணின் பெயர் பிந்து. முதல் முறை அவளை கல்லூரியில் ட்ராப் செய்த பிறகு, இரண்டொரு முறை அப்படியான சந்தர்ப்பங்கள் மீண்டும் வந்தன.
யுகியை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பாள் பிந்து. அவளுக்கு தன்னை பிடிக்கிறதோ என இவனுக்கும் சந்தேகம். இப்படியே சில மாதங்கள் செல்ல, இன்னொரு முறையும் அவளை கல்லூரியில் விட சொன்னார் அவளின் அம்மா.
போய்க் கொண்டிருக்கையிலேயே வேறு வழி காட்டி போக சொன்னாள். ஓரிடத்தில் நிறுத்த சொன்னாள். ஒருவன் அவளுக்காக காத்திருந்தான். வீட்டில் சொல்ல வேண்டாம் என யுகியிடம் கேட்டுக் கொண்டு அவனோடு சென்று விட்டாள்.
இரவு நேரத்தில் அஞ்சலியின் சிரிப்பு சத்தம் அலாதியாக கேட்டுக் கொண்டிருந்தது.
யுகியும் சிரித்தவன், “நாந்தான் அவ ஓடிப் போக ஹெல்ப் பண்ணினேன்னு அவ வீட்லேருந்து ஆளுங்க என் வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட ஒரே சண்டை. ஆனா அப்பா என்னை எதுவுமே சொல்லலை, அவங்கள சமாளிச்சு அனுப்பிட்டார். இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வரும்” என்றான்.
“அவ்ளோ மோசமில்லை ஸ்டோரி” என்றவள் இப்போது அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.
“அந்த ஸ்டோரிதான் முடிஞ்சது, வேறொன்னு இருக்கு, சொல்லவா?” எனக் கேட்டான்.
“விடாமுயற்சியோட இருந்திருக்கீங்க போல, சொல்லுங்க சொல்லுங்க” என ஆர்வமாக கேட்டாள்.
“திடீர்னு இன்னொருத்தி வந்தா என் லைஃப்ல, ஆரம்பத்துல அவ மேல கொஞ்சம்… ம்ஹூம் நிறையவே பயம். அவகிட்ட என்ன அழகுன்னு தனியா எதையும் பிரிச்சு சொல்ல முடியாது. அவ சிரிப்பு, பேச்சு, குறும்பு, கோவம் சொல்லிட்டே போலாம்” என சொல்லிக் கொண்டே அவளின் கையை பற்றிக் கொண்டான்.
“ஹேய் என்னையதான சொல்றீங்க?” எனக் கேட்டு அவனது முகத்தை எட்டிப் பார்த்தாள்.
“ம்ம்… அந்த ஜோஷியக்காரர் சொன்ன மாதிரி அப்பாம்மா தேடாம நானா போய் தேடி கட்டி மாட்டிகிட்ட பொண்ணு”