“நீ இப்போ நல்லாத்தான் இருக்க, யுகி உன்னை எப்படி பார்த்துக்கிறார்னு நான் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். என்ன குறை உனக்கு? அண்ணா தப்பான வாழ்க்கையை அமைச்சு கொடுத்தேன்னு உனக்கு தோணுதா?” தன்னை நியாய படுத்திக் கொள்ளதான் பார்த்தான் கார்த்திக்.
“எங்களுக்குள்ள செட் ஆனதால ஓகே, இல்லைனா? என்னை புரிஞ்சுக்காத ஒருத்தரா இவர் இருந்திருந்தா? என்னோட தேவை என்னன்னு அண்ணனா நீ யோசிக்கவே இல்லை. கல்யாணத்தை தீர்வா பார்த்த. ப்ச்… விடு, நீ என்னை ஏமாத்தினது இல்லைனு ஆகிடாது” என்றாள்.
“உன் பக்கம் எனக்கு புரியுது அஞ்சலி, என்ன இருந்தாலும் இவர் உன் அண்ணன். நீ ஒதுங்கி போக வேணாமே” என்றாள் நந்தினி.
“அண்ணாகிட்ட பேசுறேன்தானே?” எனக் கேட்டாள் அஞ்சலி.
“பழைய மாதிரி இல்லை நீ” என வேகமாக சொன்னான் கார்த்திக்.
“என்னை பழைய படி மாத்த என்ன செஞ்ச ண்ணா நீ? இனிமேலும் ஏதாவதுன்னா உன்னை தேட மாட்டேன் நான். என் ஹஸ்பண்ட்டைதான் தேடுறேன், தேடுவேன். நீ என்கிட்ட எப்படி நடந்தியோ அதுக்கான ரியாகஷன் என்னை மீறி வெளிப்படுது. என் பொறுப்பை நீ தட்டி கழிச்சு நாள் ஆகிடுச்சு, உன் லைஃபை நீ பாருண்ணா” என அஞ்சலி சொல்ல, யாராலும் ஏதும் பேச முடியவில்லை.
“தோசை ஊத்த சொல்லிட்டு என்னடி பண்ற?” என உள்ளிருந்து சத்தம் கொடுத்தார் சித்ரா.
யுகியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அஞ்சலி.
ஹாலில் நின்றிருந்த யுகி, உணவு மேசையில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மாமியாரை பார்த்தான். “ரெஃப்ரெஷ் ஆகிட்டு இதோ வர்றோம் அத்தை” என சொல்லி அஞ்சலியையும் அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
தன் தோளோடு மனைவியை அணைத்துக் கொண்டான்.
“அண்ணா எனக்கு பண்ணி வச்சது கட்டாய கல்யாணம், அது சரி கிடையாதுதானே?” என கணவனிடம் நியாயம் கேட்டாள்.
“என்னை நல்லா புரியும் உங்களுக்கு, வேணும்னே இப்படிலாம் கேட்க கூடாது”
“சரி, ரிலாக்ஸ் ஆகு”
“என்னை அவன் தங்கையா உணர வைக்காம போனது அவன்தான். நான் யுகியோட வைஃப், அப்படித்தான் என்னை நினைச்சுக்கிறேன். சீக்கிரம் அஞ்சலிக்கு தனி அடையாளத்தை உருவாக்கிப்பேன். எனக்கும் அண்ணாக்கும்… ப்ச்… இது இப்படித்தான், தானா மாறுனா மாறட்டும்”
“அப்படியென்ன நான் உனக்கு பெருசா போயிட்டேன்? அப்படி ஏதும் செஞ்சிடல நான்”
“உங்களுக்கு தெரியாது, நான் என்னவா இருந்தேன் இப்ப எப்படி இருக்கேன் எல்லாம் எனக்குதான் தெரியும். நீங்களும் உங்க வீட்லேயும் எனக்கு நடந்தத வச்சு ஏதும் பேசினது இல்லை. மாமாவும் அத்தையும் போன ஜெனரேஷனா இருந்தா கூட இத பெருசு பண்ணிக்கவே இல்லை. அதே மாதிரி இங்கேயும் என்னை நடத்தியிருந்தா… ஒன்றரை வருஷம் நான் என்ன கோ த்ரூ பண்ணினேன்னு நினைச்சு பார்க்க கூட விரும்பல நான். அதையெல்லாம் பேச வேணாம் நம்ம”
“சரி அதையெல்லாம் பேச வேணாம். உன் அண்ணா இப்படி ஃபீல் பண்ணிட்டே இருக்க வேண்டியதுதானா?”
“அண்ணா போய் அப்படி நடப்பான்னு… ப்ச்… உங்களுக்கு சொன்னா புரியாது, எம்மேல அன்புதான் அவனுக்கு, எனக்கும் நிறைய இருக்கு. இது வேற இஸ்யூ. அவன் மேல எனக்கிருந்த நம்பிக்கையை உடைச்சிட்டான். என்னால ஏதும் பண்ண முடியாது” என்றாள்.
அதற்கு மேல் யுகியும் அது பற்றி பேச விரும்பவில்லை. அண்ணனிடம் அவளுக்கு பழைய ஒட்டுதல் மீண்டும் ஏற்பட வேண்டுமென்றால் தானாகத்தான் நடக்க வேண்டும்.
“இப்ப பேசின மாதிரி எப்பவும் உன் அண்ணாகிட்ட பேசாத. நிறைய ஹர்ட் ஆகிடுவார், என்னை தவிர யார்கிட்டேயும் நீ ஷேர் பண்ணிக்க வேணாம், ப்ளீஸ்” என மட்டும் கேட்டுக் கொண்டான்.
“உங்க தங்கை ஹஸ்பண்ட்டோட மகிழ்ச்சிய நான் ஒன்னும் ஸ்பாயில் பண்ணிட மாட்டேன்” என சற்றே கோவமாக சொன்னாள்.
“நானும் ஒரு சாதாரண அண்ணன்தான் அஞ்சலி” எனக் கூறிய யுகி, “அதுசரி, நானும்தான் கல்யாணம் வேணாம்னு சொல்லிடுறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு இங்க வந்து எல்லார் முன்னாடியும் சம்மதம்னு சொன்னேன். கார்த்தி மேல உள்ள வருத்தம் எம்மேல இல்லையா?” என கொஞ்சம் பயத்தோடே கேட்டான்.
“அப்ப நிறைய கோவம் இருந்தது. அந்த டைம்ல நீங்க எனக்கு வர போற அண்ணியோட அண்ணா. அவ்ளோதான் நமக்குள்ள இருந்த உறவு. அதனால பெருசா பாதிக்கல” என சொல்லி அவனை நிம்மதி மூச்சு விட வைத்தாள்.
அடுத்த நொடியே, “இனிமே அப்படி இருக்காது. சின்னதா ஏதாவது நீங்க என்னை ஏமாத்தினாலும் கண்டிப்பா…” என சொல்லாமல் நிறுத்தி விட்டாள்.
“அஞ்சலி…” என மெல்லிய குரலில் அழைத்தான்.
“எப்பவும் என் மனச நொறுக்குற வேலைய செஞ்சிடாதீங்க, என்னால ஈஸியா எடுத்துக்க முடியாது” என சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.
யுகிக்கு கொஞ்சம் கலவரம்தான். தன் விஷயத்தில் மிகவும் நுண்மையான உணர்ச்சி உடையவளாக இருப்பவள் தன்னை மீறி ஏதாவது நடந்து விட்டாலும் எப்படி எதிர் வினை ஆற்றுவளோ, கடவுளே அப்படியொரு நிலை மட்டும் வந்து விடக்கூடாது என இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொண்டான்.
தங்கையை நினைத்து மனைவியிடம் வருத்தப் பட்டான் கார்த்திக்.
உங்கள் தவறை மன்னிக்க அவளுக்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது போல, இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமானால் அதற்கு கடினமாக மெனெக்கெட வேண்டும், அவசர படாமல் காத்திருங்கள் என்றாள் நந்தினி.
அவளையும் முன்னிறுத்தியே தன்னிடம் இதை சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் இனி எதுவாக இருந்தாலும் அவர்கள் இடத்திலிருந்தும் யோசித்துதான் செயல்பட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் கோவை வந்து விட்டனர். ஒரு வாரத்தில் எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு கார்த்திக்கும் நந்தினியும் சென்னை புறப்பட்டு விட்டனர். கார்த்திக்கின் பெற்றோர் நான்கு நாட்கள் உடன் இருந்து வீட்டை செட் செய்ய உதவி விட்டு வந்தனர்.
அடுத்த ஒரு வாரத்தில் வாசு மஸ்கட் சென்று விட்டான்.
யுகியின் விரல் காயமும் நன்றாக குணமாகி வந்தது. சாப்பிட மட்டும் முடியவில்லை. மற்ற வேலைகள் எல்லாம் தானே செய்து கொண்டான். அஞ்சலி தன் கணவனை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள்.