சூரியன் 19

பிரியசகி அருகே வந்த சஞ்சய், “என்ன பிளான் பண்ணி இருந்த?” கேட்டான்.

“புரியாதது போல” அவன் முகத்தை ஏறிட்டாள்…

“என்னடா பேசுற?” நாகேந்திரன் கேட்டார்.

“அப்பா, நான் அவகிட்ட பேசிட்டு இருக்கேன். சொல்லு? என்ன பிளான் வச்சிருந்த?” சீற்றமுடன் அவளை நெருங்கினான்.

நா…நா..நான்…திக்கினாள் பயத்துடன்.

சஞ்சயின் விழிகள் அவளது பையில் விழ, ஓடிச் சென்று பிரியசகி அதனை எடுக்க அவனும் பிடித்தான்.

“இத விட்ருங்க” பிரியசகி இழுக்க, “அத குடுத்துரு” சஞ்சயும் இழுத்தான். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக இழுக்க, அப்பை கிழிந்தது. அதிலுள்ள பொருட்கள் கீழே விழ, கடைசியாக கத்தியும் கைபேசியும் விழுந்தது.

தன் பாட்டி தோளில் சாய்ந்திருந்த ராக்கி பையிலிருந்து விழுந்த பொம்மை ஒன்றை எடுக்க ஓடி வந்தான். அவன் முன் தான் ஒரு கைபேசியும் கத்தியும் விழுந்தது.

“நோ ராக்கி” சத்தமிட்டு அவனை தன் பக்கம் இழுத்து அழுதாள் பிரியசகி.

“பிரியா கத்தி எதுக்கு?” இந்துஜா அனைவரையும் பார்க்க, கைபேசியை சஞ்சய் எடுக்கவும் இதயம் வேகவேகமாக துடித்தது பிரியசகிக்கு…

“வேண்டாம். ஆன் பண்ணாதீங்க” கண்ணீருடன் கூறினாள் பிரியசகி.

சஞ்சய் கைபேசியை ஆன் செய்யவும் அழைப்பு வந்தது. அவன் பிரியசகியை பார்த்தான்.

யாரு? சஞ்சய் கேட்க,

ப்ளீஸ் எடுக்காதீங்க..

“எதுக்கு? என்ன பிளான் உன்னிது கேக்குறேன்ல சொல்லு?” சத்தமிட்டான்.

அழுது கொண்டே ராக்கியை இந்துஜாவிடம் ஒப்படைத்து, அது..கமலா எண்.

வாட்?

அவங்க பழைய எண் தான். இந்த கைபேசி எப்படி என்னோட அறைக்கு வந்ததுன்னு தெரியல. ஆனால் நான் தனியே இருக்கும் போது தான் இருந்தது. அழைப்பு சத்தம் கேட்டு தான் யாரோட கைபேசின்னு தெரியாமல் எடுத்தேன். பேசியது கமலா தான்..

என்ன சொன்னாங்க?

என்னை வரச் சொன்னாங்க…

“முழுசா சொல்றீயா?” சினமுடன் கேட்டான் சஞ்சய்.

இந்து மீது நான் வைத்திருக்கும் பாசத்தை பயன்படுத்த பார்க்குறாங்க. நான் அவங்க சொல்ற இடத்துக்கு போகலைன்னா இந்துவையும் உங்க குடும்பத்தையும் கொன்றுவேன்னு சொன்னாங்க. அதான்..நான் போனேன்.

“இந்த கத்தி எதுக்குடி?”

அது…தயங்கி சஞ்சயை பார்த்தாள்.

“பூஜையா பண்ணப் போறா? வேற எதற்காக வச்சிருக்க போறா? கமலாவை கொன்றால் பிரச்சனை முடிந்து விடும்னு எடுத்துட்டு போறா…” என்று பல்லை கடித்த சஞ்சய்…நீ போனா யாரையும் ஏதும் செய்ய மாட்டாளா? இந்த கத்தியால ஒரு பயனும் இல்லை. அந்த கமலா உனக்கு விரித்த வலை இது..

“தெரியும்” விழிகளை உயர்த்தி சஞ்சயை பார்க்க, அவனுக்கோ கண்கள் சிவப்பேறி இருந்தது கோபத்தில்.

என்னால என்னை காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் அந்த கமலாவை கொல்லாமல் நானும் செத்திருக்க மாட்டேன். எதுவும் நடக்காம இப்படி பண்ணீட்டீங்களே! அழுதாள் பிரியசகி.

இந்துஜா பிரியசகியை ஓங்கி அறைந்தாள்.

உன் வாழ்க்கையை எண்ணி நான் கஷ்டப்பட, நீ சாக போனேன்னு சொல்ற? இதுல நீ கொலை செய்யப் போறீயா? சத்தமிட்டாள்.

சஞ்சய் பிரியசகி பொருட்களை பையில் அமைதியாக அடுக்கினான்.

மீண்டும் அழைப்பு வந்தது.

உங்க பிரச்சனையை அப்புறம் வச்சுக்கோங்க என்ற சஞ்சய், இங்க பாரு. அழாம ரிலாக்ஸ் பண்ணீட்டு பேசு.

இரு நாட்களுக்கு பின் மீட் பண்ணலாம் என நடந்ததை கூறு…

“நடந்ததை சொல்லணுமா?” பிரியசகி சஞ்சயை புரியாமல் பார்த்தாள்.

“ஆமா, நான் தாலி கட்டியதை கூறு. கமலா உன்னை சந்திக்க கூறி பேசியது எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லு. முக்கியமாக சாகப் போறேன்னு ஏதும் செய்யாத!” அவளை வெறித்தான்.

ம்ம்! கமலாவிடம் நிதானமாக பேசி வைத்தாள்.

அப்பொழுது கூறினாயே! உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்குன்னு? அப்ப இல்ல பட் இப்ப இருக்கு அவளது மஞ்சள் கயிற்றை வருடினான் சஞ்சய். மலங்க மலங்க அவனை பார்த்தாள்.

“என் மீது உனக்கும் உன் மீது எனக்கும் உரிமை இருக்கு..” சஞ்சய் கூறிக் கொண்டிருக்க, ராக்கியை கீழே விட்டு சுவர்ணலதா தன் மகன் கரம் பற்றினார்.

சஞ்சய் அவர் கரத்தை நகர்த்தி, அம்மா நான் உங்க மகன் சஞ்சய்ங்கிறது மாறாது. எப்போதும் நான் உங்களது மகன் தான். அதற்காக என்னை உங்க கட்டுக்குள் வைக்க முடியாது. இதுவரையும் நான் நானாக தான் இருந்தேன். இனியும் அவ்வாறு தான் இருப்பேன்.

உங்களுக்கு சகியை பிடிக்கலைன்னா பேசாம இருந்துக்கோங்க. அவ மனசு கஷ்டப்படுற மாதிரியோ இல்லை ஏதாவது செய்தோ அவளை காயப்படுத்துனீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று பிரியசகியை தன் தோளோடு அணைத்து….

அவ என்னோட சரி பாதி. அவளை என்ன செய்தாலும் அது என்னை நீங்கள் அவமதிப்பதற்கு சமம். உங்களுக்கு நான் இப்படி தான்னு சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவளுக்கு என்னை பற்றி பெரியதாக ஏதும் தெரியாது. இனி தெரிஞ்சுப்பா..அவளை நகர்த்தினான்.

கண்சிமிட்டாது தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியசகி.

 உனக்கே தெரியும் சகி. அம்மா அப்பாவுக்கு நான் ஒரே மகன். பாசம் அதிகம். பொசசிவ். அம்மா ஏதாவது சொன்னால் உன்னால் முடிந்தவரை பொறுத்துக்கோ. முடியலைன்னா என்னிடம் சொல்லு. யாராலும் பிரச்சனை பெரியதாகக் கூடாது. அது குடும்பத்திற்கு நல்லதில்லை.

இன்னொரு முக்கியமாக விசயம்….

“எனக்கு குழந்தை முக்கியமில்லை. நம் வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் போதும். பழச நினைச்சு நீ அழுதுட்டே இருக்கக் கூடாது” அவள் கரம் பற்றினான். விழிகள் கலங்க அவனை பார்த்தாள்.

“இப்ப தான சொன்னேன். அழாம நம்ம குடும்பத்தினருடன் நன்றாக நேரம் செலவழிக்கணும்” வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு, சரண் பற்றிய எல்லா நினைவுகளையும் அழிக்க முயற்சி பண்ணு. நீ இப்ப தனி ஆள் இல்லை. உனக்கு குடும்பம் இருக்கு” தன் தந்தையை பார்த்தான்.

“ஆமாம்மா, இனி தவறாக எண்ணமோ முடிவுகளோ நீ எடுக்கக் கூடாதும்மா. அந்த சரணால் நீ கஷ்டப்பட்டது போல உன்னோட தவறான முடிவால் எங்க புள்ளைய கஷ்டப்படுத்தீறாதம்மா” விழிகளில் நீர் கோர்க்க பேசினார் நாகேந்திரன்.

தலையை மட்டும் அசைத்தாள்.

“நான் நம்பமாட்டேன்” முகத்தை திருப்பினாள் இந்துஜா.

பிரியசகி இதழ்களில் புன்னகை தவழ, “ஜா மேல பிராமிஸ். இனி தவறாக எண்ண மாட்டேன்” தயங்கி சஞ்சயை பார்த்தாள்.

“என்ன?” புருவம் உயர்த்தினான்.

“எனக்கு ஒரு சந்தேகம். இப்ப நாம இந்த கிச்சன் யூஸ் பண்ணனுமா இல்லை ஆன்ட்டி….” என்று சுவர்ணலதாவை பார்த்தாள். அவர் தன் மகனை எறிப்பது போல பார்த்தார்.

அது அம்மா தான் சொல்லணும்…

பிரியாம்மா, நீ நம்ம வீட்டு கிச்சன்லயே சமையல் பண்ணு. உன்னோட அத்தை அவளுக்கு பிடித்ததை அவ செஞ்சு சாப்பிட்டுப்பா என்றார் நாகேந்திரன்.

“எம் புள்ளைக்கு நான் தான் சமைப்பேன்..” முகத்தை திருப்பினார் சுவர்ணலதா.

“ஓ.கே ஆன்ட்டி…” பிரியசகி பெருந்தன்மையுடன் கூற, சஞ்சய்…அழைத்தார் நாகேந்திரன்.

அப்பா, இருவர் சமையலையும் நான் சாப்பிடுகிறேன். எனக்கு என்று இருவரும் அதிகம் சமைக்காமல் பார்த்து சமைத்தால் என் உடலுக்கு நல்லது.. தேனீர் காலை சகி போட்டு தரட்டும். ஈவ்னிங் அம்மா கொடுப்பதை பருகிக் கொள்கிறேன். தன் அன்னையை கண்டு புன்னகைத்தான்.

“நல்ல பிளான் மாமா” சினமுடன் நவீனும் பிரசாத்தும் உள்ளே வந்தனர். நவீன் அவனது அலுவலகபையை விட்டெறிந்தான்.

“என்ன நடக்குது?” பிரசாத் சத்தமிட்டான்.

“ஏன் நானா? உனக்கு பார்த்தா தெரியல” சஞ்சய் பிரியசகி கரம் கோர்த்து இடையில் நின்றாள் இந்துஜா.

மாமா நீங்க செஞ்சது தப்பு. பிரியா உங்களாலும் கஷ்டப்பட்டிருப்பாள். உங்க அம்மாவுக்கு தான் அவளை பிடிக்கவில்லையே! எதுக்கு தாலி கட்டுனீங்க? பேசிக் கொண்டே பிரியசகியிடம் சென்றான் பிரசாத்.

“பிரியா, அதை கழற்றி கொடு” அவன் கேட்க, அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

சஞ்சய் சினமுடன் அவனருகே வர, நான் கஷ்டப்படலை பிரசாத். இவரோட காதல் முன்னாடியே தெரிந்திருந்தால் நான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டேன்.

தன்னை முழுமனதுடன் பிரியசகி ஏற்றுக் கொண்டாள் என்று சஞ்சய்கு மகிழ்ச்சி தாளவில்லை.

“பிரியா, என்ன பேசுற? குழந்தை விசயத்தில உங்கள் இருவருக்கும் என்றாவது பிரச்சனை வர வாய்ப்புள்ளது” சத்தமிட்டான்.

நாகேந்திரன் பிரசாத்தை தன் பக்கம் இழுத்து, “கண்டிப்பாக வராது. என் மனைவி பிரியாவிற்கு குழந்தை பிறக்காதுன்னு ஏதாவது பேசினால் அவளை விவாகரத்து செய்யவும் தவற மாட்டேன்னு அவளுக்கு தெரியும்” என்று மனைவியை பார்த்தார்.

“அப்பா….” சத்தமிட்டான் சஞ்சய்.

உன்னோட அம்மாவோட என்னால போராட முடியல. நான் எம் மருமக கையால தான் சாப்பிடுவேன் அவர் கூற, தூக்கி வாரி போட்டது சுவர்ணலதாவிற்கு.

நான் உங்களை என்ன செய்தேன்?

“எதுவும் செய்யவில்லையா?” நக்கலாக நாகேந்திரன் கேட்டார்.

“அப்பா…” சஞ்சய் அழைக்க,

நீ எங்க விசயத்துல தலையிடாத சஞ்சய்.

ஓ.கே அப்பா. ஆனால் விவாகரத்து பேச்சே நம்ம வீட்ல வரக் கூடாது.

“அது உன் அம்மா நடந்து கொள்வதில் தான் இருக்கு” ஒரே அடியாய் போட்டார்.

அப்பா..ப்ளீஸ்..

உன் அம்மா என்னை எடுத்தெறிஞ்சு பேசிட்டா சஞ்சய். என்னாலும் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்..

சஞ்சய் தன் அன்னையை காண, அவர் திகைத்து கணவரை பார்த்தார்.

உங்க பிரச்சனையை நீங்க பாருங்க என்ற சஞ்சய் சகி விருப்பமில்லாமல் அவளை தீண்ட மாட்டேன். பிரியசகிக்கு சஞ்சயின் உறுதியில் அவளுக்கு இருந்த மொத்த பயமும் அகன்றது.

பிரசாத், ப்ளீஸ்….எதுவும் பேசாத…

உனக்காக தான பேசிட்டு இருக்கேன்.

எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு. அவர் காதலை மதிக்கிறேன்..புரிஞ்சுக்கோடா..

“என்னமும் செய்யுங்க” அவன் வெளியேற, எங்க போற? இடை மறித்தாள் இந்துஜா.

அதான் மாமா மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்லீட்டாளே! அதுக்காக அவளை யாராவது காயப்படுத்துனீங்க? சுவர்ணலதாவை பார்த்தான்.

பிரசாத் அருகே வந்த இந்துஜா, அவனது சட்டையை இழுத்தாள்.

என்ன?

நானா, நீயும் யாரையும் இழுத்துட்டு வர்ற ஐடியா இருந்தா சொல்லு. இருவருக்கும் சேர்த்தே பங்சன் வச்சிறலாம்..

வாட்?

உனக்கு ஆள் இருக்கான்னு கேட்டேன்..

புன்னகைத்த நாகேந்திரன், “இருந்தால் சொல்லலாம். பொண்ணு கேட்றலாம்” என்றார்.

“என்னை விட்ருங்கப்பா” அவன் வெளியேற, அனைவரும் புன்னகைத்தனர்.

அப்பா, வரும் முகூர்த்தத்தில் எல்லாரையும் வர வைத்து பங்சன் நடத்திறலாமா? கேட்டான் சஞ்சய்.

பிரியசகியின் பயம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

பயப்படாத சகி. யார் என்ன பேசினாலும் சில நாட்கள் தான். அவங்களுக்கு அடுத்த ஏதாவது கிடைத்தால் நம்மை மறந்துடுவாங்க. உன்னை யாரும் பார்த்ததில்லை. கேட்டால் கூட எனக்கு பிரச்சனையில்லை. நான் பேசிக்கிறேன்.

உன்னிடம் கேட்டால் நடந்ததை கூறி விடு..

முகம் மாறி இருந்தாலும் அவள் மனதில் லேசான தெளிவு பிறந்திருந்தது.

அண்ணா, ஈவ்னிங் ஷாப்பிங்.

இன்று வேண்டாம். இந்து சகியை பார்த்துக்கோ. நான் கிளம்புகிறேன்… சென்று விட்டான் சஞ்சய்,.

“விட்டு போயிட்டான்னு வருத்தப்படுறீயாம்மா?” நாகேந்திரன் பிரியசகி வாயிலை பார்ப்பதை கண்டு வினவினார்.

இல்ல அங்கிள், இவரை நான் முன்பே திருமணம் செய்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு சிந்தித்தேன் என்று சுவர்ணலதாவை பார்த்து, “ஆன்ட்டி என்னை ஏற்றுக் கொள்ள கூட வாய்ப்பு இருந்திருக்கும்ல” சொல்லி நிற்க முடியாமல் அவளறைக்கு சென்றாள்.

விரக்தியுடன் நாகேந்திரன் தன் மனைவியை கண்டவாறே அறைக்கு சென்றார்.

சற்று நேரத்தின் பின் சஞ்சயை அழைத்து, மாலை கோவிலுக்கு போகணும். விரைந்து வர சொல்லி அணைத்து விட்டார்.

மாலை சஞ்சய் வீட்டிற்கு வந்தான். பட்டுப்புடவையில் தலைநிறைய மணக்கும் மல்லிகையுடன் குலுங்கும் கண்ணாடி வளையல்களுடன் முகம் வாட்டமாக அமர்ந்திருந்தாள் பிரியசகி. அவளருகே இந்துஜாவும் நவீனும் தயாராகி இருந்தனர்.

சுவர்ணலதா முகத்தை தூக்கி வைத்தும் நாகேந்திரன் புன்னகையுடன் ஜாதக்காரருடன் பேசிக் கொண்டிருந்தார்.

“இதோ சஞ்சய் வந்துட்டான்” அவர் கூற, அனைவரும் சஞ்சயை பார்த்தனர்.

“கோவிலுக்கு போகணும்னு சொன்னீங்க?” சஞ்சய் தந்தையை பார்த்தான்.

போகணும்பா. நீ மருமகளுக்கு தாலி கட்டிய விசயம் தெரிந்து என்னை பார்க்க வந்தார். அதான் அப்படியே அனைவருக்கும் சொல்லி பங்சன் நடத்த நாள் பார்க்க சொன்னேன்.. பார்த்திருக்கார்.

தன் தாய் அருகேயும் செல்லவில்லை. பிரியசகி அருகேயும் செல்லாது ஜாதகம் பார்க்கும் சொந்தக்கார சித்தப்பா அருகே அமர்ந்தான் சஞ்சய்.

“சஞ்சய், இரு நாட்களில் நல்ல நாள் வருது. பங்சன் முடிச்சிறலாம்” அவனை பார்த்தார்.

ம்ம்! சிந்தனையுடன் பெண்கள் மூவரையும் பார்த்தான். இந்துஜா தோளை குலுக்கினாள். தாயோ முகத்தை சோகமாக வைத்திருந்தார். பிரியசகியின் விழிகள் அவ்வப்போது சுவர்ணலதாவிடம் இருந்தது.

“எல்லாருக்கும் ஓ.கேன்னா வச்சிறலாம் சித்தப்பா…” அனைவரையும் பார்த்தான்.

“மாமா…” நவீன் தயங்கி அழைக்க,

என்ன நவீன்?

தனியா பேசலாமா? கேட்டான்.

வா..சஞ்சயும் நவீனும் தனியே சென்றனர்.

“ஆன்ட்டியை நினைச்சால் பயமா இருக்கு. ஏற்கனவே பிரியா அனுபவிக்காத கஷ்டம் இல்லை. திருமணத்திலே பயந்து இருப்பாள். ஆன்ட்டியும் அவளை அந்நியமா பாக்குறாங்க…” விழி உயர்த்தி சஞ்சயை பார்த்தான்.

என்ன பண்ணலாம்னு சொல்ற?

அதான் தெரியல…பிரியா… என்றான்.

புன்னகைத்த சஞ்சய், “நான் தானே அவ கழுத்துல தாலி கட்டினேன். என் அம்மா இல்லையே!”

“மாமா..” அதிர்ந்து சஞ்சயை பார்த்தான் நவீன்.

சகியையும் எனக்கு தெரியும். என்னோட அம்மாவையும் தெரியும். அம்மா பிரச்சனை சகியை நான் திருமணம் செய்து கொண்டேன் என்பதல்ல நவீன். அவளால நம்ம வீட்டுக்கு வாரிசு கிடைக்காதுன்னு தான். மற்றபடி அவள் மீது விரோதமல்ல…அம்மா புரிந்து கொள்ள அதிக நேரம் எடுக்கும்.. சகி இப்பொழுது என்னோட மனைவி. அவளுக்கு பிரச்சனை வர விடுவேன்னு நினைக்கிறியா?

அய்யோ மாமா! அப்படியில்ல. அவளோட முதல் திருமணத்தில் பட்ட கஷ்டம்…பயப்படுவா. ஆன்ட்டியும் அவளை முறைச்சுட்டே இருக்காங்க..

“குடும்பத்தில் பிரச்சனை என்பது வழமை தான். நான் பார்த்துக்கிறேன்” நவீனுடன் வெளியே வந்தான்.

“நாளை மறுநாள் பங்சன் வச்சுக்கலாம்” என்ற சஞ்சய், மனைவி தாய் முகத்தை ஆராய்ந்தான். இருவரும் அமைதியாக இருந்தனர்.

“சித்தி எப்படி இருக்காங்க சித்தப்பா?” அவர் குடும்பத்தை விசாரித்து அவரருகே அமர்ந்தான்.

சஞ்சய் காதருகே வந்த சித்தப்பா, “நீ நினைக்கிற மாதிரி பங்சன் சாதாரணமா போகாது. உன்னோட பொண்டாட்டி பத்தி பேச்சு வரும். மருமக கஷ்டப்படுவா… உறவுக்காரவங்களே பேசுவாங்க. உன்னோட அம்மா எல்லார் கிட்டயும் சொல்லி வச்சிருக்காங்க…” அவன் காதில் ஓதினார்.

“எம் புள்ளகிட்ட என்ன பேசுறீங்க?” சினமுடன் கேட்டார் சுவர்ணலதா.

அண்ணீ, நான் மருமக ஜாதகம் கிடைக்குமான்னு தான் கேட்டேன்.

அம்மா, எல்லாரையும் மிரட்டிட்டே இருக்காதீங்க. எல்லாரும் கோவிலுக்கு போகலாம் தயாராகுங்க. சித்தப்பா நீங்களும்….

சஞ்சய், நான் கிளம்புகிறேன். உன்னோட சித்தி தேடுவா அவர் நகர்ந்தார்.

பிரியசகியை அளந்தான்.

கழுத்தை ஒட்டியிலிருந்த லேசான கவரின் செயின் மட்டுமே அணிந்திருந்தாள்.

சிறுவயதில் தன் தங்கையிடம் பிரியசகி கொலுசு சத்தம் பிடிக்கும் என்று ஆசையாக பேசியது எண்ணத்தில் வந்தது.

“நான் தயாராகிட்டு வாரேன்” சஞ்சய் அவனறைக்கு செல்ல, அவன் தந்தையும் அவனறைக்கு வந்தார்.

சஞ்சய் தாலி கட்டிய பின் புள்ள அந்த அறையில் இருப்பது சரியாக இல்லை. உன் அம்மா இதான் வாய்ப்பு என்று பிரியாவை குத்தி பேசுவாள்.

கோவிலுக்கு சென்று வந்த பின் என்னோட அறையில் அவளது பொருட்களை வச்சுக்கலாம். முதல்ல கிளம்புவோம். நேரமாகுது…

ஹா… அப்பா….ஜூவல்லரி ஷாப் சென்று அதன் பின் கோவிலுக்கு அங்கிருந்து கிளம்பலாம். பிரசாத்தை வரச் சொல்லி இருந்தேன். இந்துவை அவனுக்கு கால் பண்ண சொல்லுங்க. நான் வாரேன் என்று கூற, அவர் சென்றார்.

சிலமணி நேரத்திலே சஞ்சய் பட்டு வேஷ்டி, நீலநிற சட்டையுடனும், கழுத்தில் தங்கசெயின், வெள்ளிக்காப்புடன் மீசையை முறுக்கி நுனி வேஷ்டியை பிடித்தவாறு இறங்கினான். ஆவென அவனை பார்த்தாள் பிரியசகி..

இந்துஜா அவளை இடித்து, “யாரையோ சைட் அடிக்கிற மாதிரி பாக்குறடி. உன்னோட அத்தானை இப்படி பார்த்த…எவளாது என் அண்ணாவை தள்ளீட்டு போயிறாம..” குறும்புடன் கூற, வெட்கமுடன் தரையை பார்த்த பிரியசகி கலங்கிய விழிகளை மறைக்க பாடுபட்டாள்.

சஞ்சய் சரண் போலில்லை என்றாலும் சஞ்சய் கோபமும் அவன் தாய் மீதான பாசமும் மீண்டும் தனக்கு திருமணம் நிலைக்காமல் போய் விடுமோ? பயம் வந்தது பிரியசகிக்கு.

இந்துஜா நவீனிடம் பிரியசகியை கேலி செய்து அவன் காதில் பேச, அவன் கலகலவென சிரித்து, “பிரியா” அழைத்தான்.

“உன்னோட அண்ணா எங்கடா?”

அண்ணா நானாவுக்கு முக்கிய வேலையாம். வர முடியாதாம்..

தன்னவள் அருகே வந்து சஞ்சய் அவள் கரம் பற்ற, நவீன் சிரித்தான். சஞ்சய் கண்டுகொள்ளவில்லை. சுவர்ணலதா அவனை முறைக்க,

பிரியா..நீ என் பிரியா…அவர்கள் பின்னாலே பாடிக் கொண்டு வந்தான்.

சஞ்சய் கரம் பிடித்த பிரியசகி நடந்தவாறே பின்னே வந்த ஆருயிர் நண்பனின் வயிற்றில் மறுகரத்தால் குத்தினாள்.

“அய்யோ அம்மா! மாமா உங்க காதலி..ச்சீச்சீ…பொண்டாட்டி என்னை குத்திட்டா” கத்தினான்.

பிரியசகியையும் அவனையும் சஞ்சய் பார்க்க, “அவன் என்னை கேலி செஞ்சிட்டே இருக்கான்” நிமிராமல் கூறினாள்.

புன்னகைத்த சஞ்சய் பிரியசகியை பூஜை அறைக்கு அழைத்து சென்றான்.

கடவுளை வழிபட்டு அவளது நெற்றியிலும் மஞ்சள் கயிற்றிலும் செந்தூரத்தை இட்டு யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் அவளது நெற்றியில் முத்தமிட்டான். விழிவிரித்து மூச்சடைக்க அவனை பார்த்தாள் பிரியசகி.

இப்பொழுது வாயை பிளந்து இந்துஜாவும் நவீனும் அவனை பார்க்க, நவீனை பார்த்து கண்ணடித்தான் சஞ்சய். மேலும் வாயை திறந்தான் நவீன்.

“ச்சீ, வாய மூடு” இந்துஜா கூற, ராகவனும் ராக்கியும் வந்தனர்.

“மாமா..” சஞ்சய் அழைக்க, “வாழ்த்துக்கள் சஞ்சய்” பிரியசகியிடம் கையை நீட்டினான். அவள் சஞ்சயை பார்த்தாள். அவன் கண்ணை காட்ட கை குலுக்கினாள்.

“பரவாயில்லை” சுவர்ணலதா மனதில் எண்ணினார். ஆனால்  காட்டிக் கொள்ளவேயில்லை. அனைவரும் கிளம்பினார்கள்.