அவனைப் பிடித்திருந்தது அவளுக்கு! கண்ட நொடியினிலேயே அவளின் மனதை ஈர்த்திருந்தான் அவன்! அவனது பக்தியும் இறைத்தொண்டும் அவன் மீதான மரியாதையையும் பேரன்பையும் அவளுள் உருவாக்கியிருந்தன! ஆகையால் தான் பெருமாள் அசரீரியாக உரைத்ததைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்தது அவளுக்கு. தன்னால் சிவநேசரைக் காக்க இயலும் என்ற எண்ணமே தித்திப்பை அளித்தது அவளுக்கு.
சிவநேசனை மணமுடித்து இனிய இல்லறத்துடன் தம்பதி சமதேராய் இறைத்தொண்டு புரிந்து தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் என்பதே இப்பொழுது இவளின் கனவாக மாறி இருந்தது. அக்கனவினை அடைய தனது முழு மனத்தையும் இறைவனிடம் சரணாகதியாக்கி இருந்தாள் முத்தரசி.
முதன் முதலாக சிவநேசனைக் கண்ட போது அவளின் உள்ளம் அவன் பால் ஈர்க்கப்பட்டதின் காரணம் விளங்கியது இப்பொழுது. தன்னவனைத் தன் மனம் அடையாளம் கண்டுக்கொண்டதனால் தான் அவனைக் கண்டதும் தன் மனம் மையல் கொண்டது என்று விளங்கியது அவளுக்கு.
ஆனால் தனது வேண்டுதலும் பிரார்த்தனையும் நிறைவேறி சிவநேசனின் ஆயுள் கண்டம் நீங்கப்பெறும் முன்பு தனது மனத்தினை எவரிடமும் பகிர வேண்டாமென முடிவு செய்திருந்தாள் முத்தரசி. இந்நிலையில் தந்தையிடமோ சிவநேசனிடமோ தான் கேட்ட அந்த அசரீரியைப் பற்றி கூறினால் நம்ப மாட்டார்கள் என உறுதியாக நம்பினாள். அவன் மீதுள்ள விருப்பத்தினால், தான் அவ்வாறு உரைப்பதாகக் கூட எண்ணக் கூடும். மேலும் ஆயுள் கண்டம் உள்ளவனுக்கு மணம் முடித்து வைக்க எவ்வாறு தந்தை சம்மதிப்பார்! ஆக சிவநேசனின் ஆயுள் கண்டத்தைப் போக்கிய பிறகே, தங்களின் இணைவு இறைவனின் சித்தமெனப் புரிய செய்து இத்திருமணத்தை நிகழ்த்தி வைக்க கேட்க வேண்டுமெனத் தீர்க்கமாக இருந்தாள்.
மறுநாளும் முந்தைய நாட்களைப் போன்றே சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து தியானத்தில் இருக்கும் சிவநேசன் முன்பு தானும் கண்களை மூடியவாறு அவனுடனான தனது நல்வாழ்விற்காகத் தியானித்தவளாய் அமர்ந்து விட்டாள் முத்தரசி.
கண் விழித்துப் பார்த்த சிவநேசன் தியானத்திலிருக்கும் அவளைப் பார்த்து விட்டு தனது வழமைப்போல் சிவனை ஆர தழுவி வணங்கி விட்டு எழுந்து சென்றான்.
அன்றாட நிகழ்வாக இதனை முத்தரசி தொடர்ந்திருக்க, அமைதியாக இதனை கண்டும் காணாதவாறு கடந்திருந்தான் சிவநேசன்.
தினமும் ஒரு வேளை உணவை உட்கொண்டு காலை வேளை மட்டும் சிவலிங்கம் முன்பு அமர்ந்து நமசிவாய மந்திரத்தை ஓதி தியானிப்பவள், நாள் முழுவதும் நாராயண மந்திரத்தை உச்சரித்தவாறே அன்றாட பணிகளை மேற்கொள்வாள்.
பெருமாளின் பக்தையான தனக்கு தனது மணாளனை அடையும் மார்க்கத்தைக் காண்பிக்க கோரி நாராயண மந்திரத்தை உச்சரிப்பவள், ஈசனது அடியவரின் மனத்தில் தான் நீங்கா இடம் பெறவும் அவரின் ஆயுள் கண்டம் நீங்கி பூரண ஆயுள் பெறவும் அருள் புரிய வேண்டும் என ஈசனிடம் தியானிப்பாள்.
இவ்வாறான தவ வாழ்வை மேற்கொண்டு இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில், அந்த மூன்று நாட்களில் வீட்டில் இருந்தாள் முத்தரசி.
“அரசி! முத்தரசி! எங்கிருக்கிறாயடி?” என்றவாறே அந்த வீட்டினுள் நுழைந்தாள் நிறைமதி.
“பின்னறைக்கு வா மதி” என்றாள் முத்தரசி.
“ஓ ஒதுங்கி அமரும் நாளோ!” என்றவாறு அறையின் வாயினில் சென்று நின்றாள் நிறைமதி.
“ம்ம்ம்ம்” சோகமாக முத்தரசி கூற,
“ஒதுங்கியிருக்கும் வேளையிலும் நாராயண மந்திரத்தை உச்சரித்து அவரைக் கனவில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவள் அல்லவா நீ! பின் ஏன் இந்த சோக ராகம்?” என்று கேட்டாள் நிறைமதி.
‘என்ன விந்தையான உணர்வு இது! எப்பொழுதும் இந்நாட்களில் பெருமாளைத் தரிசிக்க இயலாத தன் நிலையை எண்ணி கவலைக்கொள்ளும் என் மனம் இன்றோ சிவநேசரை எண்ணி பரிதவிக்கிறதே! அவரைக் காண முடியாத நிலையை எண்ணி மனம் வேதனைக் கொள்கிறதே!’ மனதோடு எண்ணியவளாய் அமைதியாக முத்தரசி அமர்ந்திருந்தாள்.
அவளின் அமைதியைப் பார்த்து சிரித்தவளாய், “நீ ஏன் சோக ராகம் இசைக்கிறாய் என தெரியுமடி எனக்கு! நான் ஓர் உபாயம் சொல்லவா?” என்று கண் சிமிட்டிய நிறைமதி,
“சிவசிவா சிவசிவா என சிந்தையில் நிறைந்திருப்பவரின் பெயரை உச்சரித்திரு!” என்று உரைத்தாள்.
“எம்பெருமான் ஈசனையா வணங்க சொல்கிறாய்? அவரைக் காணாது தான் சோக ராகம் இசைக்கிறேன் என்கிறாயா?” நெற்றிச் சுருங்கக் கேள்வியாய் முத்தரசி கேட்டிருக்க,
“இல்லைப் பெண்ணே! சிவசிவா சிவசிவா என்று உச்சரித்திருந்தாயானால் அந்தச் சிவனடியாரான சிவநேசர் உனக்கு காட்சி கொடுத்து உன் மனத்தை மகிழ்விப்பாரெனக் கூற வந்தேன்” என்று நிறைமதி கேலியாய் சிரிக்க, அவளை முறைத்தாள் முத்தரசி.
நிறைமதியை அடிக்கவென முத்தரசி எழுந்து வர, “அனுதினமும் உன்னவரான அவரின் முன் தியானத்தில் அமரும் உன் மனத்தை நான் அறிவேனடி! உங்களிருவருக்கிடையில் நான் எதற்கு என்று தான் காலை காலதாமதமாக வருகிறேன்” என்று முத்தரசியைப் பார்த்து கூறிச் சிரித்த நிறைமதி, அவள் அடிக்கக் கை ஓங்கியதில் தாவி ஓடியிருந்தாள்.
சிவநேசனைக் காண தவித்த நெஞ்சத்தினை அடக்கும் வழி தெரியாது ஒரு நாளினைக் கடப்பது ஒரு வாரத்தினைக் கடப்பதை போல நெட்டி தள்ள வேண்டியதாய் இருந்தது அவளுக்கு.
நான்காம் நாள் உள்ளம் துள்ள ஆலயத்திற்கு வந்தவளிடம், “இனி நான் இருக்கும் நேரம் தாங்கள் இங்கு வர வேண்டாம் தேவி” என்றான் சிவநேசன்.
அவளின் வருகைக்காகக் காத்திருந்தவன் போல் அமர்ந்திருந்தவன், தன்னைக் கண்டதும் அவளின் முகத்தினில் ஏற்படும் மகிழ்வையும் அவளின் பூரிப்பையும் உணர்ந்தவனுக்கு மேலும் இதனை தொடரச் செய்வதில் உடன்பாடு இல்லை.
அவன் கூறியது தனது காதினில் விழுந்தது போலவே காண்பிக்காது சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து விட்டு அவன் முன் அமர்ந்தாள்.
அவனின் பார்வை அவள் மீதே இருக்க, “தங்களிடம் தான் பேசுகிறேன் தேவி” என்றான் அவன்.
அவனின் பார்வையைத் தீர்க்கமாக எதிர்கொண்டவளாய், “காரணம் என்ன ஐயனே?” என்றாள்.
என்னவென்று உரைப்பான் அவன்! இந்த மூன்று நாட்களில் தங்களைக் காணாது தவித்த மனத்தினைக் கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடாகிப் போனது என்றா கூற முடியும்!
உர்ரென அவளை முறைத்து பார்த்தவனாய், ‘காரணகர்த்தவாகிய உன்னிடம் என்ன காரணம் உரைப்பேன்’ என்றெண்ணியவனாய், “என்னால் தியானத்தில் முழு மனதாக ஈடுபட முடியவில்லை! தங்களின் இருப்பு என் மனத்தை அலைபாயச் செய்கிறது” என்றான்.
“பொய்யுரைக்கிறீர்கள்” என்றாள் அவள்.
அவளின் குற்றச்சாட்டில் கோபம் கொண்டவனாய், “சிவனடியார்கள் பொய்யுரைப்பதில்லை தேவி” என்றான்.
“தங்களின் வாழ்நாளில் சிவனடியாராக சங்கல்பம் செய்த நாளிலிருந்து இந்நாள் வரை பொய்யுரைத்ததே இல்லையா?” எனக் கேட்டாள்.
“இல்லை! பொய்யுரைத்ததில்லை” என்றவன் கூறியதும் அவளின் முகம் பொலிவுற,
“கடந்த மூன்று நாட்களாக என்னைக் காணாது தவித்தீர்களா? என் இன்மையுணர்ந்து என்னைத் தேடுனீர்களா?”
தன்னை போலவே அவனும் தன்னைக் காணாது தவித்தானா? தன்னைத் தேடினானா? தனது இன்மையை உணர்ந்தானா? என அறிந்து கொள்ளும் ஆவலில் பெருத்த எதிர்பார்ப்புடன் கேட்டிருந்தாள் முத்தரசி.
சட்டெனக் கண்களை அவள் மீதிருந்து சிவலிங்கம் மீது பதித்தவனின் முகம் இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
‘தன்னைக் கண்டு கொண்டாளோ!’ மனதோடு எண்ணியவாறு மீசையுடன் உதட்டினைக் கடித்து தனது உணர்வுகளை அவளிடம் காண்பிக்காது மறைக்க போராடியவனாய்,
‘ஈசனே! எம்பெருமானே! இதென்ன சோதனை? ஏன் என் உணர்வுகளுடன் விளையாடுகிறாள் இப்பெண்!’ என்றவாறு கண்களை மூடித் திறந்தவனின் முன்பு அவனின் பதிலுக்காக எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தாள் முத்தரசி.
அவன் பதிலுரைக்கும் முன்பு, “பொய்யுரைப்பதில்லை என்று சங்கல்பம் செய்திருக்கிறீர்கள்! நினைவிருக்கட்டும்” குமிழ்ச்சிரிப்பை உதட்டினுள் அடக்கியவளாய் உரைத்தாள் அவள்.
அவளின் குறும்பான சிரிப்பைத் தன்னையும் மறந்து ரசித்துப் பார்த்தவன், “ஆம் தங்களைத் தேடியது என் மனம்! அன்றாடம் கண் விழிக்கும் போது தங்களின் முகத்தினைக் கண்ட பழக்கத்தினால் மட்டுமே தேடியது” என விளக்கமளித்தான்.
அவனின் பதிலில் அவளின் முகம் சுருங்கிப் போக, “பழக்கத்தினால் மட்டும் தான் என்னைத் தேடுனீர்களா?” என மீண்டுமாய் வினவினாள்.
“ஆம் தேவி! பழக்கத்தினால் மட்டும் தான் தேடினேன் என்பது என் எண்ணம்” என்றான்.
“சரி இனி நான் தாங்கள் இருக்கும் போது இங்கு வரமாட்டேன்” என்றவளாய் எழுந்து செல்ல, செல்லும் அவளையே அமைதியாகப் பார்த்திருந்தான்.
சட்டென அவள் அவ்வாறு கூறியதும் அவனின் மனம் சுணங்க, “என்ன தான் வேண்டும் இந்த மனத்திற்கு” என்று வாய்விட்டே புலம்ப,
“என்னைத் தான் வேண்டும் என்கிறது தங்களின் மனம்” என்று வாயிலில் இருந்து எட்டிப் பார்த்து, உங்களைக் கண்டுகொண்டேன் என்ற பார்வை மொழியுடன் இவ்வாக்கியங்களைக் கூறியவளாய் கொலுசொலி சலசலக்க அவ்விடத்தில் இருந்து ஓடியிருந்நாள்.
கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தவனின் நினைவை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தாள் முத்தரசி.
*****
நாட்கள் அதன் போக்கில் நீண்டு செல்ல, ஆறு மாதங்கள் கடந்திருந்தன.
காலை வேளையில் சிவநேசன் ஈசனை நோக்கி தியானித்து வணங்கி விட்டு சென்ற பிறகே அங்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள் முத்தரசி.
தன் மீதான அவனது விருப்பத்தைத் தெரிந்து கொண்டவளுக்கு நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளியது. ஆயினும் அவனது ஆயுள் கண்டம் நீங்கும் வரை ஒதுங்கி இருக்கவே முடிவு செய்தாள்.
அதனால் கோவிலில் அவனது தியான நேரத்தில் சந்திப்பதைத் தவிர்த்தவள், சிவனடியார்களுக்கான அன்னச்சத்திரத்தில், சந்தையில், யாகச்சாலையில், கோச்சாலையில், ஆற்றங்கரையில் என வேறு எங்கேனும் ஒரு நேரமாவது அன்றாடம் அவனைக் கண்டுவிட்டு வந்துவிடுவாள்.
அவ்வப்போது அவனது வணிகத் தொழிலுக்காகத் தூரதேசத்திற்குச் சென்று விட்டு சில மாதங்கள் கழித்து வரும் சமயங்களில் அவனைக் காணாது தவித்துப் போவாள்.
அவளுள் அழகாய் ஒரு காதல் கிளைப்பரப்பி நெஞ்சாங்கூட்டில் ஆழியின் ஆழமாய் வேரூன்றியிருந்தது.
ஆறு மாதங்கள் ஆகியும் தனது வேண்டுதலுக்கான எவ்வித எதிர்வினையும் இறைவனிடமிருந்து வரவில்லையே என்று மிகுந்த சோகத்தில் இருந்தாள்.
நிறைமதி திருமணம் முடிந்து கணவனின் ஊருக்குச் சென்றுவிட, முத்தரசியைப் பெண் கேட்டு வந்திருந்தான் செழியன்.
அன்று இரவு தந்தையுடன் உரையாடியவாறு இருந்த முத்தரசியிடம், “செழியன் உன்னை மணம் செய்து கொள்ள விரும்புவதாய் கூறினானம்மா!” என்றார் மதுரகவிராயர்.
என்றேனும் இச்செய்தி தன்னை வந்தடையும் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் இதில் தந்தையின் மனநிலை என்னவென்று தான் புரியவில்லை அவளுக்கு.
“தாங்கள் என்ன கூறினீர்கள் தந்தையே” எனக் கேட்டாள்.
“உன் விருப்பத்தைக் கேட்டு பதிலுரைப்பதாய் கூறிவிட்டேன். நீ என்றுமே விருப்பத்துடன் செழியனைக் கண்டதில்லையே! ஆயினும் மணம் செய்து கொள்வதில் சம்மதமிருக்குமோ என்று தான் கேட்க வந்தேனம்மா” என்றார்.
“எனக்குச் சம்மதமில்லை தந்தையே!” என்றவள் இதற்கு மேல் தந்தை கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாதென வீட்டினுள் சென்று விட்டாள்.
தாய் அறியாத சூல் உண்டோ என்பதை போல தனது மகளைப் பற்றி அறிந்தவராய் புன்னகைத்துக் கொண்டார் மதுரகவிராயர்.
சிவநேசனை விரும்பும் மகளின் மனத்தினை அறிவார் மதுரகவிராயர். நாட்டிற்கே காலத்தைக் கணித்து சொல்லும் சோதிட வல்லுநர், தனது மகளின் இணைவு மட்டுமே சிவநேசனைக் காக்கும் என்பதை அறியாமலா இருப்பார்! காலம் இழுத்துச் செல்லும் போக்கிற்கு மகள் இழுபடுவதைப் பார்வையாளராய் பார்த்திருந்தார் மதுரகவிராயர்.
“அரசி! மகாராணி என்னை அவசரமாக அழைத்து வரச் சொல்லி அரண்மனை காவலர்களை அனுப்பியிருக்கிறார்” என்றவாறு அவளை எழுப்பிட,
தந்தையின் முகத்தில் இருந்த பதட்டத்தை அவதானித்தவளாய், “புலராத இக்காலை வேளையில் எதற்காக அழைத்திருக்கிறார் தந்தையே?” எனக் கேட்டாள்.
“மன்னர் ஏதோ அவசர ஆணையை மக்களுக்குப் பிறப்பிக்கப் போவதாகவும், அந்த ஆணை நிறைவேற்றப்பட்டால் அது மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி போர் மூளச்செய்யும் அபாயம் இருப்பதாகவும் நேற்றே மகாராணியார் வருத்தத்துடன் தெரிவித்தார். எவரின் சொல்லுக்கும் செவி சாய்க்கும் நிலையில் மன்னர் இல்லை எனவும் கலக்கத்துடன் கூறினார். இது குறித்து பேச தான் அழைத்திருப்பாராய் இருக்கும். ஏற்கனவே மன்னரின் இந்த ஆணை குறித்து நம் நாடு முழுவதும் வதந்திகளும் புரளிகளும் பரவியிருக்கிறது அரசி! நாராயணன் தான் நம்மை காக்க வேண்டும்” என்றவாறு புரவியில் ஏறிச் சென்றார் அவர்.
முந்தைய நாள் தந்தை செழியனைப் பற்றிப் பேசியதிலேயே, இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் விரைவாகத் தனது மனத்தை சிவநேசனிடம் தெரிவிக்க வேண்டுமென எண்ணியிருந்தாள் முத்தரசி.
ஆறு மாதங்களாய் சிவநேசனை ஆலயத்தினுள் பாராது தவிர்த்திருந்தவள் இன்று அவனிருக்கும் பொழுதே ஆலயத்திற்குச் சென்று ஈசனுக்கு மாலை அணிவித்துத் தியானத்தில் இருக்கும் அவன் முன்பு அமர்ந்தாள்.
அவளின் பார்வை அவனை வருடியிருக்க, ‘இவரைக் கரம் பிடிக்க இன்னும் தான் எத்தனை நாட்களுக்கு காத்திருக்க வேண்டுமோ’ பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டாள்.
தியானத்திலிருந்து கண் விழித்து அவளை பார்த்தவனின் முகத்தில் அதிர்ச்சியைத் தாண்டி அத்தனை பரவசம்!
“தேவி” அவளைப் பார்த்த பரவசத்தில் தன்னையும் மீறி அழைத்திருந்தவன், பின் சுதாரித்தவனாய்,
“நானிருக்கும் நேரம் ஏன் வந்தீர்கள் தேவி?” எனக் கேட்டான்.
“என் மனது தங்களுக்கு புரியவில்லையா சுவாமி! ஏன் புரிந்தும் புரியாதது போல் என்னைத் தவிர்க்கிறீர்கள்! நெஞ்சம் முழுவதும் நிரம்பியுள்ள தங்கள் மீதான காதலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் நான்! இப்பேதையைத் தாங்கள் தவிக்கச் செய்வதும் தகுமோ” கண்களில் நீர் சூழ தனது மனத்தினை வெளிப்படுத்தியிருந்தாள் முத்தரசி.
அவளின் இந்தக் காதல் முன்மொழிதலை எதிர்பார்த்திராதவன் திடுக்கிட்டுத் தான் போனான். அவனின் முகத்தில் பலவிதமான உணர்வுகள் வந்து போக,
“கூறுங்கள் சுவாமி! தாங்கள் என்னை விரும்புகிறீர்களா இல்லையா?” எனக் கேட்டாள்.
அவன் ஏதோ கூற வாயெடுக்கும் முன், “சிவனடியாரான தாம் பொய்யுரைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” கன்னங்களில் கண்ணீர் துளிகள் மின்ன, தீர்க்கமான பார்வையுடன் உரைத்தாள்.
ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்தியவனாய், “ஈசனே என்ன இது சோதனை” கண்களை மூடி எம்பெருமானிடம் கேட்டான்.
சில நொடிகளுக்குப் பின் கண்களைத் திறந்தவன், “எமது ஈசனை நேசிக்குமளவு தங்களையும் நேசிக்கிறேன் தேவி” அவளது விழிகளைக் கூர்ந்து நோக்கியவனாய் திடமாக உரைத்தான்.
அவனின் கூற்றில் அவள் உடல் புல்லரிக்க, கண்களில் நீர் திரையிட இதழ்கள் புன்னகைத்தன. ஆனால் அவன் முகத்தில் எவ்விதமான பாவனையும் இல்லை.
“ஆம் தங்களை விரும்புகிறேன்! நித்தம் தங்களை நினையாது ஒரு நாளும் கடந்ததில்லை என் வாழ்வில் எனுமளவிற்குத் தங்களைப் பிடிக்கும் எனக்கு” என்றவன் மேலும் தொடர்ந்தவனாய்,
“ஆனால் நாம் இப்பிறவியில் இணைய வாய்ப்பில்லை தேவி” என்றான்.
“ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள்?” பதட்டமாக வந்தன அவளின் வார்த்தைகள்.
“எனது தலைவிதியை அறிந்தவன் நான் தேவி! நெடுங்காலம் வாழும் பேறு அற்றவன் நான்! அதுவும் இல்லாளனாக வாழும் பேறு அறவே அற்றவன் நான்! என்னை மணந்து தாங்கள் துன்ப கடலில் நீந்த வேண்டுமென எவ்வாறு எண்ணுவேன்” சற்றுக் கரகரத்தக் குரலில் உரைத்தவன்,
“மேலும் நாட்டின் நிலை சரியில்லை தேவி! சாக்கியர்கள், சமணர்கள், சைவர்கள், வைணவர்கள் என மக்களுக்குள் பிரிவினை ஏற்படும் போது தாங்கள் வைணவர் ஆவீர்கள்! என்னால் எம் ஈசனைப் பிரிந்து வேறு சமயத்திற்குள் வர இயலாது! மேலும் இப்பிரிவினை ஏற்படுத்தப் போகும் போரில் சண்டையிட்டு நான் மாளவும் வாய்ப்புகள் உண்டு! எம் ஈசனைக் காக்கவும் சிவனடியார்களைக் காக்கவும் நான் என்றும் முந்தி நிற்பேன். என்னை நம்பி தாங்கள் கரம் பிடித்து வந்தால், தனி மரமாவீர்கள்! நான் வேண்டாம் தங்களுக்கு” என்றவன் நில்லாது அங்கிருந்து சென்று விட்டான்.
“நாராயணா” எனக் கதறிவிட்டாள் நங்கை.
“அவரில்லாமல் வாழ்வேது எனக்கு?” இதழ் துடிக்க அழுகைக் குரலில் ஈசனிடம் முறையிட்டாள்.
“ஈசனே அவருக்குப் புரிய வையுங்களேன்! ஒரு நாள் ஆயினும் அவருடன் வாழ்ந்த நிம்மதியுடன் வாழ்நாள் முழுவதும் கழித்திடுவேனே! தங்களின் அடியாருக்கு என் நிலையை எடுத்துக் கூறுங்களேன் எம்பெருமானே! தாயே ஈஸ்வரியே ஏன் எனக்கு இந்த நிலை” என்று சிவசக்தியிடம் மன்றாடினாள்.
“நிகழ்வது அனைத்தும் அரி அரனின் செயல்” என எம்பெருமான் ஈசன் தனது திருவிளையாடலை நிகழ்த்த ஆயத்தமானார்.