தம்பியால் கார் ஓட்ட இயலாது என்பதால் சேகர் மூலமாக டிரைவர் ஏற்பாடு செய்து வர செய்திருந்தான் வாசு.
பொள்ளாச்சியில் திருமண மண்டபத்தில் மணமகள் வீட்டினரை வரவேற்ற கார்த்திக்கின் பெற்றோர் அஞ்சலியை காணாமல் சுணங்கி போனார்கள்.
“ரெண்டு முக்கியமான கெஸ்ட், அழைச்சிட்டு வருவாங்க” என சொல்லி சமாளித்தான் வாசு.
வழியில் அஞ்சலியின் தோளில் சாய்ந்த வண்ணம் உறங்கி விட்டான் யுகி. அவனை வாகாக மடியில் படுக்க வைத்துக்கொண்டாள். பொள்ளாச்சிக்குள் கார் நுழையும் போதுதான் அவனை எழுப்பி விட்டாள்.
மண்டபம் வந்து விட்டனர். யுகி ஆர்ம் ஸ்லிங்கை கழட்டி விட்டாலும் விரலின் கட்டை கண்டு விட்டு எல்லாரும் என்னவானது என விசாரணை செய்ய ஆரம்பித்து விட்டனர். நகசுத்தி என சொல்லி விட்டான்.
வாசு மூலமாக அம்மாவுக்கு மட்டும் உண்மை தெரிந்து விட்டது. சின்ன மகனுடன் சரிவர பேசாமல் இருந்தவர் அவனை தேடிக் கொண்டு வந்து விட்டார்.
கலங்கிப் போய் நின்றவரை அறைக்கு அழைத்து வந்து, “கட்டுதான் பெருசா போட்ருக்காங்க, சின்ன காயம்தான் அம்மா” என சொல்லிக் கொண்டிருந்தான் யுகி.
“நீ கூட சொல்லலைலடி என்கிட்ட?” எனக் கேட்ட அலமேலு அழுதே விட, மனைவியை முறைத்தான் யுகி.
“உங்க ரெண்டு பேரோடவும் போராட என்னால முடியாது. அடிச்சுகிட்டு முறைச்சுக்க வேண்டியது, அப்புறம் ஒன்னு சேர்ந்துகிட்டு என்னை முறைக்க வேண்டியது” என திட்டிய அஞ்சலி, வாசுவை அழைத்து வந்தாள். அவன் வந்துதான் அம்மாவை அதட்டி சரி செய்தான்.
நிச்சயம் ஏற்கனவே முடிந்து விட்டதால் மண மக்களுக்கு நலங்கு மட்டும் செய்தனர்.
யுகியை அவனது உடன்பிறப்புகள் வந்து சூழ்ந்து கொண்டு கவனமாக இருக்க மாட்டாயா என கடிந்து கொண்டனர். வெங்கட்டும் கவலை பட்டார். ஸ்ரீஜா கடமையாக விசாரித்து சென்றாள்.
இரவு உணவுக்கான சாப்பாட்டு பந்தி ஆரம்பமானது.
கணவனுக்கு தனியே தட்டில் எடுத்து வந்து ஊட்டி விட்டாள் அஞ்சலி. இரவுக்கான மாத்திரை எல்லாம் போட்டுக் கொள்ள வைத்தாள். மண்டபத்தின் முதல் மாடியிலிருந்த தங்கும் அறைகளில் ஒன்றில் இருந்தனர் இருவரும்.
அங்கு வந்த அலமேலு, “இன்னிக்கும் படிக்க போறேன்னு கிளம்பிடாத, பொறுப்பா அவனை கொஞ்சம் கவனி” என மருமகளிடம் சொன்னார்.
இன்றுதான் அம்மா தன்னுடன் ராசியாகியிருக்க அவரை எதுவும் கடிய மனமில்லாமல் நெற்றியை பிடித்துக் கொண்டான் யுகி.
“நான் எல்லாம் நல்லா ஊட்டி வளர்த்துதான் எம்புள்ளய உன் கைல ஒப்படைச்சிருக்கேன். இனிமே உன் பொறுப்புதான் டி அவன்!” என்றார் அலமேலு.
“அப்ப நானே பார்த்துப்பேன்” என்றாள்.
அம்மா ஏதும் பேசும் முன், “இன்னிக்கு கூடவா மா? தூங்குமா போம்மா” என்றான் யுகி.
மகனை முறைத்தவர், “நீ சாப்பிட்டியா டி, அவனுக்கு பயப்படற மாதிரி எதுவும் இல்லை, ஒழுங்கா உன்னையும் பாரு, நீ நல்லருந்தாதான் அவனை பார்க்க முடியும்” என மருமகளிடம் சொல்லி விட்டு அகன்றார்.
“அம்மாக்கு உம்மேலயும் அக்கறைதான் அஞ்சலி” என சமாதானம் செய்தவனை கடுப்பாக பார்த்து விட்டு காலி தட்டை வைக்க சென்று விட்டாள்.
ஏற்கனவே யுகியை பார்த்து நலம் விசாரித்திருந்தாலும் பிரத்யேகமாக இன்னொரு முறை விசாரிக்க அறைக்கு வந்திருந்தனர் அஞ்சலியின் பெற்றோரும் பாட்டியும்.
அஞ்சலி வரவும், “அசட்டையா இல்லாம மாப்ளய நல்ல விதமா கவனிச்சுக்க டா. புருஷனை வச்சுத்தான் பொண்டாட்டிக்கு எல்லாம்” என பேத்தியின் கன்னம் பிடித்து அறிவுறுத்தினார் பாட்டி.
“விளையாட்டா இல்லாம மாப்ளய பாரும்மா” என புகழேந்தி சொல்ல, அதே விஷயத்தை கொஞ்சம் வார்த்தைகள் மாற்றிப் போட்டு சொன்னார் சித்ரா.
அவர்கள் சென்றதும் கணவனிடம், “எல்லாரும் என்னை என்ன நினைச்சிட்டு இருக்காங்க?” எனக் கேட்டாள்.
அவள் ஆடை மாற்றிக் கொள்ள போக, சற்று நடந்தால் தேவலாம் போல இருக்கிறது மொட்டை மாடிக்கு செல்கிறேன் என்றான்.
ஆடை மாற்றிக் கொண்டு தானும் வருவதாக சொல்லி அவனை முதலில் அனுப்பி வைத்தாள். ஆனால் அங்கே ஏற்கனவே கார்த்திக்கும் நந்தினியும் நின்றிருந்தனர்.
“சும்மா பேசலாம்னு நாந்தான் வர சொன்னேன் இவளை. அரை மணி நேரத்துல போயிடுவோம்” என கார்த்தி சொல்ல, அண்ணனை சங்கடமாக பார்த்தாள் நந்தினி.
அறைக்கு திரும்பிய பின் எனக்கு செய்தி அனுப்ப வேண்டும் என தங்கைக்கு அறிவுறுத்தி விட்டு அகன்றான் யுகி.
திரும்பி வந்து கொண்டிருந்த யுகி, படி ஏற வந்த அஞ்சலியிடம் விவரம் சொல்லி அறைக்கே அழைத்து வந்து விட்டான்.
“நாளைக்கு கல்யாணம் ஆக போகுது, ஒழுங்கா தூங்காம இப்ப என்ன பேசுவாங்க?” கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டாள் அஞ்சலி.
“எல்லாம் ஒரு த்ரில்தான்”
“அதெல்லாம் இல்லை, கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டிட்டு இருப்பான் என் அண்ணன்” என்றாள்.
“இருக்கும். நம்ம கல்யாணத்தப்போ எனக்கு தூக்கமே வரலை, நாளையிலேருந்து நம்ம கூடவே இருக்க போறாளே ஒரு அடங்காரி, அவளை எப்படி சமாளிக்கன்னு நினைச்சு பயந்து போய் ஜுரம் வர்ற மாதிரியே இருந்துச்சு. ஹாரிபிள் நைட்” என்றான்.
“எனக்கு மட்டும் என்னவாம்? குளு குளுன்னா இருந்துச்சு?” எனக் கேட்டவள், “நிறைய மிஸ் பண்ணிட்டோம்ல?” என வருத்த பட்டாள்.
“சரி சொல்லு, உன் விருப்பத்துல கல்யாணம் ஆகியிருந்தா முத நாள் என்ன பண்ணியிருப்போம்?” எனக் கேட்டான்.
“அது தெரியல” என்றாள்.
வலியில் முகத்தை கோணலாக்கியன் அதை அவளிடம் பகிராமல், “யோசிச்சு சொல்லு” என்றான்.
“வலிக்குதுதானே? டேப்லெட் போட்டும் வலி கேட்கலையா?” என விசாரித்தாள்.
“பகல்ல அவ்வளவா ஏதும் தெரியலை, இப்பதான்… நீ படு” என்றான்.
“ஏதாவது மைண்ட் டைவெர்ட் ஆனா பெட்டரா இருக்கும்ல? பாட்டு போட்டு விடவா?”
“அதெல்லாம் வேணாம் படும்மா” என அவன் சொல்லியும் அவளுக்கு மனம் கேட்கவே இல்லை.