“ம்… கிளம்புறேன், முதல்ல இத என்னன்னு பாரு, ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடு” என சொல்லி தன் கையை காட்டினான்.
பதறி விலகியவள் வேகமாக கைக்கட்டை அவிழ்த்து பார்த்தாள். கட்டை விரல் நகம் முழுதாக பெயர்ந்து, சதையும் கிழிபட்டு இரத்தம் வந்து கொண்டிருந்தது. வலியில் அவஸ்தை படுகிறான் என்பதும் அவன் முக பாவனையிலிருந்தே விளங்கியது.
“நகம் பேந்து போயிடுச்சு, விரல்லேயும் காயம் ஆழமா இருக்கு, சாதாரணமா பேசிட்டு இருக்கீங்க? ஹாஸ்பிடல் போகணுங்க” என அஞ்சலி சத்தம் போட, வேகமாக அவளின் வாயை பொத்தினான்.
“எதுக்கு சவுண்ட் போடுற, யாருக்கும் தெரிய கூடாது சொல்லிட்டேன். அபச குணமா நினைப்பாங்க”
“படிச்சவன் மாதிரி பேசுங்க, இத இப்படியே விட முடியாது”
“மத்தவங்க அப்படித்தான் நினைப்பாங்க அஞ்சலி. நந்துக்கு தெரிஞ்சாலும் அப்செட் ஆகிடுவா. அவ கல்யாணம் சின்ன மனவருத்தம் கூட இல்லாம நல்ல விதமா நடக்கணும். இங்கேருந்து புறப்படும் போது சந்தோஷமா கிளம்பணும் அவ. விரலுக்கு ஏதாவது பண்ண முடிஞ்சா பண்ணு, இல்லைனா விடு நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி அவளிடமிருந்து தன் கையை பறித்துக் கொண்டான்.
“என்கிட்ட எதுக்கு கோவ படுறீங்க? சரி யாருக்கும் தெரிய வேணாம். ஆனா ஹாஸ்பிடல் போகணும், வாசு மாமாவை கூப்பிடுறேன்”
“நாங்க ரெண்டு பேருமே இங்க இல்லைனா சரி வராது” என அவன் சொல்லவும் சேகருக்கு அழைத்தாள். தன் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த சேகர் அழைப்பை எடுக்கவில்லை.
“அவசரத்துக்கு யாரும் கிடைக்க மாட்டாங்களே, நானே வர்றேன், போலாம்” என்றாள்.
“அஞ்சலி…”
“ஷ் ஷ்… ஷர்ட் மட்டும் மாத்துங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அவனது மறுப்பை பொருள் செய்யாமல் அவளே சட்டையை மாற்றி விட்டாள். வேறொரு கைக்குட்டையை ஈரத்தில் நனைத்து காயத்தில் கட்டி விட்டாள்.
அதற்குள் அவளின் கன்னமெல்லாம் கண்ணீர்.
“அஞ்சலி ஒன்னும் இல்லடா இது” என சமாதானம் சொன்னான்.
“பேசாதீங்க, கவனம் எங்க இருந்தது உங்களுக்கு?” அழும் குரலில் கேட்டாள்.
அவளது தவிப்பில் அவனும் தவித்தான்.
வேகமாக மாமியாரிடம் சென்றவள் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த என் தோழிகள் வழி தெரியாமல் நிற்கின்றனர், அவர்களை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறோம் என்றாள்.
அதற்கு அவன் போதுமே, நீ எதற்கு என கேட்டார் அலமேலு.
“எனக்குத்தான் அவங்கள அடையாளம் தெரியும் அத்தை” என்றவள் அவர் அடுத்து பேசுவதற்குள் நழுவி வெளியே வந்து விட்டாள்.
வீட்டின் வெளியிலும் ஆட்கள். அவர்களிடமும் அதையே சொல்லி ஸ்கூட்டரை எடுத்தாள் அஞ்சலி. பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்திருந்ததால் யாருக்கும் யுகியின் காயம் தெரியவில்லை.
“புடவை கட்டிக்கிட்டு நீ ஏம்மா வண்டி ஓட்டுற, யுகிய எடுக்க சொல்லு” என்றார் யுகியின் பெரியப்பா.
காதில் வாங்காதது போல ஸ்கூட்டரை எடுத்து விட்டாள் அஞ்சலி. பெரியப்பாவை சங்கடமாக பார்த்துக் கொண்டே அவளின் பின்னால் ஏறிக் கொண்டான் யுகி. அவர்களை கோவமாக பார்த்தவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.
“அவர் பேசிட்டு இருக்கார், நீ பாட்டுக்கும் கண்டுக்காம வர்ற” என கடிந்தான் யுகி.
“நீங்களும் பேசாம வாங்க, அவசரம் புரியாம ஆளாளுக்கு ஏதாவது சொன்னா நான் என்ன பண்ண? அவர்கிட்ட என்னன்னு சொல்லி சமாளிக்கிறது? தப்பா நினைச்சா நினைச்சுக்கட்டும், அப்புறமா போயி ஸாரி சொல்லிக்கிறேன்” என சொல்லி விட்டாள்.
பக்கத்திலிருந்த மருத்துவமனைக்கு வந்தனர். கொஞ்சம் மட்டும் விரலில் ஒட்டிக் கொண்டிருந்த நகத்தை முழுதாக நீக்கி விட்டு, விரலில் மூன்று தையல் போட்டு மருந்திட்டு கட்டு போட்டு விட்டனர். தண்ணீரில் நனைக்க கூடாது, விரலை அசைக்க கூடாது எனவும் சொல்லி விட்டனர்.
டி டி ஊசி போட்டு வலிக்கும் ஊசி போட்டு மருந்துகள் கொடுத்தனர்.
கையை கீழே தொங்க போடக்கூடாது என சொல்லி ஸ்லிங் போட்டு விடவும் இதெல்லாம் வேண்டாம் என்றான் யுகி.
மண்டபம் செல்லும் வரையிலாவது போட்டுக் கொள்ளுங்கள் என தாஜாவாக பேசி அஞ்சலிதான் அவனை ஒத்துக் கொள்ள செய்தாள்.
அதற்குள் எங்கே என கேட்டு அழைத்து விட்டான் வாசு.
அண்ணனிடம் மட்டும் விஷயத்தை சொன்ன யுகி, “என்னை இப்போ யாரும் பார்க்காம இருக்கிறதுதான் நல்லது. எனக்கு வெயிட் பண்ணாம நீ கிளம்பு அண்ணா. ஏதாவது சொல்லி சமாளிச்சுக்க, நாங்க பின்னாலேயே வந்திடுறோம்” என்றான்.
‘ஜாக்கிரதையாக வா, நான் கவனித்துக் கொள்கிறேன்’ என சொல்லி விட்டான் வாசு.
அஞ்சலியும் யுகியும் வீடு வந்து சேர்ந்த போது மற்ற அனைவரும் கிளம்பியிருந்தனர். எதிர் வீட்டில்தான் சாவி கொடுத்து சென்றிருந்தான் வாசு.
அறைக்கு வரவுமே படுத்து விட்டான் யுகி. அஞ்சலிக்கு அழைத்து விவரம் கேட்டான் வாசு. வீடு வந்து விட்டோம், ஒரு மணி நேரத்தில் புறப்பட்டு விடுகிறோம் என சொல்லி வைத்தவள் கணவனை பாவமாக பார்த்தாள்.
“டென் மினிட்ஸ் படுத்திட்டு அப்புறம் குளிக்க போறேன் அஞ்சலி” என சொல்லி கண்களை மூடிக் கொண்டான்.
களைத்துப் போயிருந்தவனுக்கு பருக எலுமிச்சை சாறு கொடுத்தாள். பெருவிரலில் காயம் என்பதால் யுகியால் அந்த கையையே உபயோகிக்க முடியவில்லை.
பட்டுப் புடவையை அள்ளி சொருகி கொண்டு அஞ்சலிதான் அவனை கவனித்தாள். “ஒரு கை நல்லாதான் இருக்கு, நான் ரெடி ஆகிப்பேன்” என அவன் சொல்லியும் அவள் விடவில்லை.
தயாராகி விட்டவன், “என்னை கிளப்புறேன்னு நீ எப்படி ஆகிட்ட பாரு” என்றான்.
“அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்” என்றவள் தளர்ந்த புடவையை சரி செய்ய எண்ணி அவன் முன்னால் இருப்பதை மறந்து போய் செயல் பட்டு விட்டாள்.
சிறு சிரிப்புடன் அவனே திரும்பி நின்று கொண்டான். அவனது இருப்பு நினைவுக்கு வந்து அவனை பார்த்தவள் விரிந்த சிரிப்புடன் திரும்பி நின்று கொண்டு புடவையை நன்றாக கட்டிக் கொண்டாள்.
முகம் கழுவி வந்து வேகமாக ஒப்பனை செய்து கொண்டவள் அவனை பார்க்க, அவளின் ஒப்பனைக்கு ஆபத்து இல்லாதவாறு கவனமாக மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான்.
“கைல பட்டிட போகுது, வலிக்கும் உங்களுக்கு” என கடிந்தாள்.
“வலிச்சாலும் பரவாயில்லை”என்றவன் ஒரு நிமிடம் சென்றுதான் அவளை விட்டான்.