வெளியில் பனிப் படலமாக இருந்தது. கால் மணி நேர பிரயாணத்தில் அஞ்சலியின் மூக்கு நுனி சிவந்து போய் விட்டது.
சூரிய உதயம் பார்க்கவென மஞ்சகுட்டை வியூ பாயிண்ட் அழைத்து வந்திருந்தான். நேரம் ஆறை தொடப் போனது. அவர்கள்தான் முதலில் வந்திருந்தவர்கள் போலும், வேறு சுற்றுலா பயணிகளே தென்படவில்லை.
அமைதியாக சூரிய உதயத்தை பார்த்திருந்தாள் அஞ்சலி. கண்ணோரம் கசிய சிரித்துக்கொண்டே யுகியை பார்த்தவள், “எவ்ளோ அழகுல்ல?” எனக் கேட்டாள்.
“உன்னை விடவா?” என ரசனையாக கேட்டான் அவன்.
அவன் தலையில் செல்லமாக கொட்டு வைத்தவள், “உள்ளுக்க உள்ள எல்லா ஆர்கன்ஸ்ம் குளிர்ல நடுங்கிட்டு இருக்கு, நீங்களும் சேர்ந்து சில் ஆக்காதீங்க என்னை. எனக்கு தெரியும் நான் எப்படின்னு” என்றாள்.
“நிஜமா நீ அழகு அஞ்சலி”
“எஸ் எஸ், அதைத்தான் எனக்கு தெரியும்னு சொன்னேன். என் பக்கத்துல நீங்க சுமார்தான் இல்லை?”
“ஓஹோ அப்படியா!”
“ஆனா பார்த்திட்டே இருக்கணும் போல அப்பப்ப தோணும். கொஞ்சமா நீங்களும் அழகுதான்” கண்களை சுருக்கிக் கொண்டு சொன்னாள்.
“அதான் உன் பக்கத்துல சுமார்னு சொல்லிட்டியே, இந்த சப்பக்கட்டெல்லாம் வேணாம். இந்த சொப்பன சுந்தரி பக்கத்துல நாங்க சுமார் மூஞ்சு குமாராவே இருந்திட்டு போறோம்” என பொய்யாக ரோஷப் பட்டான்.
அவனது கன்னங்களை பிடித்து செல்லம் கொஞ்சியவள், “ச்சோ ஸ்வீட் பையன் நீங்க!” என்றாள்.
அவளது கையை பொய் கோவத்தோடு விலக்கி விட்டான். அவனது மீசையை முறுக்கி விட்டவள், “கோவத்துல மீசை துடிக்கிற அழகை பார்க்கவே ரெண்டு கண்ணு போதாது!” என்றாள்.
அவன் சிரித்து விட, “இந்த சிரிப்புக்கு ஏற்காட்டுல பாதிய உங்களுக்கு எழுதி வச்சிடலாம்” என்றாள்.
“அடியே!” என செல்லமாக அதட்டி அவளை அடக்கினான்.
சற்று நேரத்தில் ஆட்கள் வர ஆரம்பித்து விட்டனர். வெளிச்சம் வரவும் அவ்விடம் வேறு விதமான அழகில் பரிமளித்தது.
வியூ பாயிண்ட்கள் சென்று இயற்கை அள்ளிக் கொடுத்த கொடையை கண்களால் பருகிக் கொண்டனர்.
படகு சவாரியின் போது நீரோடு சேர்த்து கிண்டல் கேலிகளையும் ஒருவர் மீது மற்றொருவர் வாரி இரைத்து கல கலத்து சிரித்தனர்.
பூந்தோட்டத்தில் பூக்களின் நடுவே நின்று கொண்டு அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டனர். கைப் பிடித்துக்கொண்டு சேர்ந்தே சுற்றினார்கள். நகரும் ஒவ்வொரு நொடியும் தித்திப்பாக அவர்களின் நினைவில் பதிந்து கொண்டே இருந்தது.
அன்றைய அவர்களின் நாள் மிகவும் இனிமையாக தருணங்களை அவர்களுக்கு வஞ்சமில்லாமல் வழங்கியிருந்தது.
அன்றைய இரவும் ஏரிக் கரையில் நடை போட்டனர். காற்றின் சில்லிப்பு கூடுதலாக இருக்க, இயல்பாக யுகியோடு ஒன்றிக் கொண்டு நடந்தாள் அஞ்சலி.
அவளின் உடல் வெட வெடப்பதை உணர்ந்தவன், சூடாக ஏதாவது பருகினால் நன்றாக இருக்கும் என சொல்லி சூப் வாங்க சென்றான்.
சில வாலிப பெண்களின் கூட்டம் அங்கிருந்தது. யுகியை பார்த்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டனர். அவன் அஞ்சலியிடம் வந்த பின்னும் யுகியை பார்ப்பதை அவர்கள் நிறுத்தவில்லை.
அப்பெண்களை அவனுக்கு சுட்டிக் காட்டிய அஞ்சலி, “உங்களை சைட் அடிக்கிறாங்க ப்பா அவங்க” என்றாள்.
“சும்மான்னு இரு அஞ்சலி, நீ ஏன் அங்க பார்க்கிற?” என்றான் அவன்.
“வாங்க அந்த பக்கம் போலாம்” என்றாள்.
“இந்த பக்கம்தான் லேக் வியூ நல்லாருக்கும், யாருக்காகவோ ஏன் திரும்ப போகணும்? சூப் சாப்பிடு” என்றான்.
திரும்பிக் கொண்டு சூப் பருகினார்கள். அவன் பேசியதை கவனிக்காமல் அந்த பெண்கள் இன்னும் இவனை பார்க்கிறார்களா என்பதை சோதனை செய்து கொண்டிருந்தாள்.
“வா நடக்கலாம்” என சொல்லி அந்த பகுதியிலேயே நடந்தான்.
சரியென சொல்லி அவனுடன் நடை போட்டவள், சில நிமிடங்களிலேயே “ரொம்ப டிஸ்டர்ப் ஆகுதுங்க. ப்ளீஸ் போயிடலாம், இல்லைனா அவங்கள்ட்ட போய் சண்டை போட்டாலும் போட்ருவேன்” என்றாள்.
“அவங்க வேற பக்கம் போறாங்க பாரு, சின்ன புள்ளயாட்டம் நடக்காத”
“யாருடி நீ? கட்டின பொண்டாட்டிய சைட் அடிக்க வைக்க முடியாம திணறிட்டு இருக்கேன், யார் பார்க்கிறதால எனக்கு குஷி வர போகுது?” என அவன் கேட்கவும் அமைதியாகி விட்டாள்.
அவனாகவே வேறு பேச்சை மாற்றி அவளை இலகுவாக்கினான். பின் சாப்பிடுகையிலும் சரி, அறைக்கு திரும்பிய பிறகும் சரி அமைதியாகத்தான் இருந்தாள்.
கோவமோ என நினைத்தவன் படுத்த பிறகு ‘என்னவானது?’ என அவளிடம் கேட்டான்.
“ஒன்னுமில்ல” என சொல்லி கண்களை மூடி விட்டாள். உடல் அலுப்பில் யுகியும் விரைவாக உறங்கி விட்டான்.
அடுத்த நாள் ஸ்கை பார்க் சென்றனர். எந்த சாகசத்தையும் விட்டு வைக்காத அஞ்சலி குதூகளித்தாள்.
நூறடி உயரத்தில் இருக்கும் கண்ணாடி பாலத்தில் நடக்கும் போது மட்டும் அவளுக்கு பயம். கை பிடித்துக்கொண்டு அவளை நடக்க வைத்தான் யுகி. கீழே இறங்கிய பிறகு திக் திக் என இருந்த அந்த நிமிடங்களை நினைத்து கணவனிடம் சிலாகித்தாள்.
“இவ்ளோ என்ஜாய் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லைங்க, தேங்க் யூ ஸோ ஸோ மச்…” என கூறிக் கொண்டே அவனது கன்னங்களை கிள்ளப் போனாள்.
முகத்தை இழுத்துக் கொண்டவன் அவளை கண்டனமாக பார்த்தான்.
“செய்யக் கூடாதுன்னு சொன்னாதான் செஞ்சே ஆகணும்னு தோணும்” என்றவள் சட்டென அவன் கன்னங்களை பிடித்து கொஞ்சி விட்டு தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
சுற்றிலும் பார்த்தவன் சிலரின் பார்வை தங்களிடம்தான் இருந்தது என தெரிந்து கொண்டான். வெட்கம் கொண்டவன் தலை கோதி கொண்டே மனைவியை முறைத்தான்.
அவளோ கன்னங்கள் பூரிக்க சிரித்துக் கொண்டிருந்தாள்.
நேரம் குறைவு என்பதால் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. இன்னொரு சமயம் வரலாம் என்றவன் மதிய உணவுக்கு அழைத்து சென்றான். அறைக்கு திரும்பும் போது நன்றாக மழை பிடித்துக்கொண்டது.
அரை மணி நேரம் காத்திருந்தனர். மழை விடுவது போல தெரியவில்லை. பெரிய மாமா அழைத்து இவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். நாளை காலையில் சென்னை போய் விடுவாராம், அழைப்பிதழ் வாங்கிக் கொள்ள எனவே இப்போது வீட்டில் தங்கியிருக்கிறாராம்.
அலுத்துக் கொண்ட யுகி, “மழைல நான் பைக் ஓட்டிடுவேன், பயப்படாம இருந்துப்பியா?” எனக் கேட்டான்.
“நிஜமா இந்த மழையில மலை இறங்க போறோமா?” என கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள்.
அவள் உற்சாகமாக சம்மதம் சொன்னாள். அருகிலிருந்த கடையில் மழை கோட் மட்டும் வாங்கி வந்தான். அதை அணிந்து கொண்டு கிளம்பி விட்டனர்.
பத்து நிமிடங்களில் கன மழை மித மழையாக மாறி விட்டது. இயற்கையை விட மனதிற்கு அரு மருந்து வேறெதுவும் இல்லை. அஞ்சலியின் உள்ளமெல்லாம் சிலிர்ப்புதான்.
அவளின் கைகளும் பாதங்களும் மட்டும் மழை நீரில் நனைய, மனமோ யுகேந்திரன் மீதான நேசத்தால் பொங்கி வழிந்தது.
பாதி வழியில் மழை தூறலாகி விட்டது. ஓரிடத்தில் நின்று பார்வைக்கு அகப்பட்ட அடர்ந்து விரிந்த காட்டை பார்த்துக் கொண்டிருந்தனர். தூரத்தில் வழியை கடந்து கொண்டிருந்தன காட்டெருமைகள். பார்த்தவள் பயத்தில் யுகியை அணைத்துக் கொண்டாள்.