சற்று நேரம் வெளியில் சுற்றி மனப் புழுக்கத்தை குறைத்துக் கொண்ட வாசு, தன் அக்காவின் வீட்டுக்கு சென்றிருந்தான். வீடு சென்று மனைவியை காண அவனுக்கு பிடிக்கவில்லை.
ஸ்ரீஜாவை பெண் பார்க்க சென்ற நாள் நினைவுக்கு வந்தது. என் மனைவியின் குடும்பத்தை என் குடும்பமாக நான் ஏற்றுக்கொள்வேன், என் மனைவியும் அப்படி இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறேன் என்பதைத்தான் அவளிடம் சொல்லியிருந்தான்.
“ஒரு வரியில் என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க” என சொல்லி அவள் சிரித்த காட்சி இன்னும் அவனுக்கு மறக்கவில்லை.
தம்பி இங்குதான் இருக்கிறான் என அம்மாவுக்கு அழைத்து சொல்லி விட்டாள் பைரவி.
வாசு இல்லாமல் ஸ்ரீஜா அழுவாளோ, இல்லை வேறு ஏதும் செய்து கொள்வாளோ என அலமேலுவுக்கு பயம். மகனுக்கு அழைத்து அவளை தனியாக விட வேண்டாம், இரவு உறங்க வீட்டுக்கு வந்து விடு என அறிவுறுத்தினார்.
“நீ பயப்படற மாதிரிலாம் ஏதும் நடக்காதும்மா, நான் வருவேன் நீ வை” என சொல்லி விட்டான் வாசு.
அம்மா மூலமாக நடந்தவை அனைத்தும் பைரவிக்கு தெரிந்திருந்தது. தம்பியிடம் ஏதும் கேட்டுக் கொள்ளாமல் சாப்பிட வைத்தாள். என்ன இங்கு இருக்கிறார் உன் தம்பி என கேட்ட கணவனிடம், பிறகு சொல்வதாக சொல்லி விட்டாள்.
மற்றவர்கள் உறங்கிய பின் வெளி வராண்டாவில் அக்காவும் தம்பியும் மட்டும் இருந்தனர்.
ஸ்ரீஜா செய்ததை நியாய படுத்தாமல் அதே சமயம் அதிக கோவம் கொள்ளாமல் ரோஹித்தை நினைத்து செயல் படு என தம்பியிடம் எடுத்து சொன்னாள் பைரவி.
“என்ன சம்பாதிச்சு என்ன பிரயோஜனம் சொல்லு, ஒரு மாதிரி இருக்கு பைரவி, எவ்ளோ மட்டமா பல்பு கடைனு பேசியிருக்கா, அந்த கடை நமக்கு எப்படி? அஞ்சலிய பத்தி கூட…” மேலே பேச முடியாமல் வேதனையாக பார்த்தான் வாசு.
“சொல்றேன்னு கோச்சுக்காத வாசு, அவ இங்க எங்கேஜ்டாவே இல்லை, ரோஹித் ஸ்கூல் போனதுக்கப்புறம் நிறைய நேரம் கிடைக்குது அவளுக்கு, அதை எப்படி யூஸ்ஃபுல்லா செலவழிக்கன்னும் தெரியாம, இப்படிலாம் யோசிக்கிறா. நீ இங்க வர முடியும்னா வந்திடு, இல்லைனா உன் கூட கூட்டிட்டு போ. நடந்தத ரொம்ப கிளறாம அப்படியே விடு” என்றாள் பைரவி.
வாசுவுக்கு மனம் ஆறவே இல்லை. அக்காவை முறைத்தான்.
“உன் கோவத்தை திட்டியும் சண்டை போட்டும்தான் காட்டணும்னு இல்லை வாசு. ரோஹித் மனநிலைமைய யோசிடா. வீட்டுக்கு போ இப்போ” என்றாள்.
மேலும் அரை மணி நேரம் அங்கேயே இருந்து விட்டுத்தான் வீட்டுக்கு புறப்பட்டான்.
அவன் வீடு செல்லும் போது யுகியும் அஞ்சலியும் தெருவில் நடந்து கொண்டிருந்தனர்.
“எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா என்ன?” எனக் கேட்டான் வாசு.
“டெய்லி நைட் இது வழக்கம் எங்களுக்கு, இன்னிக்கு உன்னால நிறைய நேரம் நடந்திட்டு இருக்கோம் அண்ணா. நீ ஓகேவா?” எனக் கேட்டான் யுகி.
“எனக்கென்ன?” என்ற வாசு, அஞ்சலியை வருத்தமாக பார்த்தான்.
“நான் அவங்க பேசினதையெல்லாம் நினைவு படுத்திக்கிறது இல்லை மாமா. நீங்க ஒர்ரி பண்ணிக்காதீங்க. உங்ககிட்ட சொன்னது கூட கம்ப்ளைண்டா இல்லை, உங்களுக்கு தெரிஞ்சாதான் அவங்க மாறுவாங்குன்னுதான். ரோஹித் ரொம்ப பிரிலியண்ட், நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு சப்போர்ட்டா இருக்கணும்” என்றாள் அஞ்சலி.
மகனின் நினைவில் வாசுவுக்கும் கலக்கமானது.
“நீ தூங்க போயேன் அஞ்சலி, நாங்க இப்ப வந்திடுறோம்” என யுகி சொல்லவும், அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்று விட்டாள் அஞ்சலி.
சகோதரர்கள் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டார்கள். வாசுவின் மனநிலை ஓரளவு சரியாகியிருந்தது.
தன் அறைக்கு வாசு திரும்பிய போது ஸ்ரீஜா உறங்கியிருக்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசாமல் படுத்தவன் மகனை அணைவாக பிடித்துக்கொண்டான்.
ஸ்ரீஜாவுக்கு எதுவும் கேட்கவோ சொல்லவோ பயம். மீண்டும் கணவன் இங்கு வந்ததே போதும் என நினைத்தவளும் அமைதியாக படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் ரோஹித் பள்ளிக்கு சென்ற பிறகு ஸ்ரீஜாவை அமர வைத்து கண்டித்தான் வாசு. மனமாற இல்லா விட்டாலும் பயத்தால் அவனிடம் மன்னிப்பு கேட்டாள் ஸ்ரீஜா.
இந்த வருடம் ரோஹித்துக்கு பள்ளி முடியவும் என்னுடன் வந்து விட வேண்டும் என உறுதியாக சொன்னான். அவள் பதில் சொல்லாமல் பாவமாக பார்த்தாள்.
“நீ இங்க இருக்கிறதுன்னா இருந்துக்க, வைஃப் கூட இல்லாம எப்படி நல்லா வாழறதுன்னு நானும் பழகிக்கிறேன்” என சாதாரணமாக சொன்னான் வாசு.
“என்ன அர்த்தத்துல இப்படி சொல்றீங்க?” சற்றே கோவமாக கேட்டாள்.
“நீ எப்படியெல்லாம் நினைக்கிறியோ அந்த எல்லா அர்த்தத்திலேயும்னு வச்சுக்க” என கடுமையான தொனியில் சொன்னான்.
அவள் அழுது விட, “இனி இந்த அழுகைக்கு எல்லாம் இறங்கி வர்றதா இல்லை ஸ்ரீஜா. வர முடியாதுன்னா தெளிவா சொல்லிடு, மேல என்ன செய்யலாம்னு நான் பார்த்துக்கிறேன், என் பையனை நீ இல்லாம கூட என்னால வளர்த்தெடுக்க முடியும்” என்றான்.
நிஜமாவே அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அழுகையின் ஊடே, “நான் வர்றேன், இப்படிலாம் பேசாதீங்க” என்றாள்.
“நீ பேசினதெல்லாம் சரியான்னு நினைச்சு பாரு. அந்த பொண்ணு உனக்கு என்ன அநியாயம் பண்ணிச்சு. உன் சாப்பாட்டுல மண்ணு அள்ளி போட்டுச்சா? எதுக்குடி இவ்ளோ வன்மம் உனக்குள்ள?” என சத்தம் போடாமல் கோவமாக கேட்டான்.
இனியும் அவள் சொன்னது பொய் என எப்படி வாதிடுவாள். அதை விட தன் வாழ்க்கை மீதான பயம் அவளின் தொண்டையை கவ்விப் பிடித்திருக்க வார்த்தையே இல்லை அவளிடம்.
“நீ சொல்றதையெல்லாம் நம்ப வச்சு என்னை முட்டாளாக்கியிருக்க, வீட்டை விட்டு போயிடுவேன்னு என் தம்பிகிட்ட மறைமுகமா மிரட்டுற? எங்க போய்த்தான் பாரேன், உன்னால ஒன்னும் இந்த கல்யாணம் நின்னு போயிடாது” என்றான்.
“என்னங்க…” கெஞ்சலாக அழைத்தாள் ஸ்ரீஜா.
சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் ஹாலிலேயே நடை போட்ட வாசு, “இனி இப்படிலாம் பண்ணின… என்னை ஒரே அடியா மறந்து போயிடு. இப்ப அழுது வடிஞ்சு எரிச்சல் பண்ணாம போ போய் சாப்பாடு எடுத்து வை” என்றான்.
ஸ்ரீஜாவும் முகத்தை கழுவிக் கொண்டு வந்து அவனுக்கு உணவு பரிமாறினாள்.
காலையிலிருந்து யுகியிடம் முகம் கொடுக்கவில்லை அலமேலு. ‘எங்களுக்குள் உள்ள விஷயம் உனக்கு சொல்ல என்ன இருக்கிறது?’ என மகன் கேட்டதில் கோவம் அவருக்கு. இரண்டு முறை தானாக பேசிப் பார்த்த யுகி அப்படியே விட்டு விட்டான்.
நான் அத்தையிடம் பேசிப் பார்க்கிறேன் என சொன்னாள் அஞ்சலி.
“எனக்கும் என் அம்மாவுக்கும் நீ சமரசம் பண்ணி வைக்க போறியா?” எனக் கேட்டு புன்னகைத்தான் யுகி.
“இன்னும் பெட்டரா அவங்க உங்களை புரிஞ்சுக்கிற மாதிரி எடுத்து சொல்வேன்” என்றாள் அஞ்சலி.
“எனக்கு அம்மாவை தெரியும், அவங்களுக்கும் என்னை புரியும். நீ எதுவும் பேச வேணாம். சில விஷயங்கள் பேச பேசத்தான் இன்னும் காம்ப்ளிகேட் ஆகும்”
“அப்ப ரெண்டு பேரும் பேசாமலே இருக்க போறீங்களா?” கவலைபட்டாள் அஞ்சலி. அவளுக்கு தன்னால்தான் இப்படி ஆனது என்ற குற்ற உணர்வு.