“உன் துடுக்குத் தனத்துக்கு அளவே இல்லாம போச்சு. கொஞ்ச நேரம் வேற கடைக்கு போனா உன்னை மறந்திட்டேனான்னு எல்லாம் கேட்கிற” என கடிந்தான் யுகி.
“இல்லையா நெனப்பிருந்தா சொல்லிட்டு போயிருப்பீங்கல்ல? நான் தேடுவேன்னு தெரியாதா?” எனக் கேட்டாள்.
அவள் கேட்ட விதத்தில் ஒரு நொடி மறுமொழி வரவில்லை அவனிடம்.
“நீங்க எப்படி என்னை நினைச்சிட்டே இருந்தீங்களா?” என சின்ன குரலில் கேட்டான் யுகி.
“பின்ன? சீக்கிரம் வாங்க எனக்கு ஒரே கன்ஃபியூஷன் எத எடுக்கன்னே தெரியலை” என்றவள் இப்போது அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.
“வர்றேன் வர்றேன், கையை விடு” என யுகி சொன்னதெல்லாம் எங்கே அவளின் கவனத்தில் பதிந்தது.
அவர்களை நந்தினிக்கு சுட்டிக் காட்டினான் கார்த்திக்.
“அவங்க ஹேப்பியாதான் இருக்காங்க, உன் அண்ணாக்கு நான் தப்பா ஏதும் செஞ்சிடல, அதை புரிஞ்சுக்க. லவ் பண்ணி வருஷக் கணக்கா வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறோம், ப்ளீஸ் கோவத்தையெல்லாம் ஒழிச்சு கட்டு நந்து” என கெஞ்சலாக சொன்னான் கார்த்திக்.
வீட்டில் இருந்த கடந்த சில நாட்களாக நந்தினியும் அவர்களை கவனித்துதான் வருகிறாள். அண்ணனின் மண வாழ்க்கை குறித்து அவளுக்கு இப்போது கவலையில்லை.
கார்த்திக் மீதான கோவத்தின் வீரியம் கூட குறைந்து போயிருந்தது. காலப்போக்கில் எல்லாம் சுமூகமாகி விடலாம், ஆனால் திருமணம் இன்னொரு முறையா செய்து கொள்ள முடியும் என நினைத்தாள்.
“ரிசப்ஷனுக்கு ட்ரெஸ் பார்க்கலாம் வாங்க” என சொல்லி கார்த்திக்கோடு இணக்கமாக நடந்து சென்றாள் நந்தினி.
அஞ்சலிக்கு முகூர்த்த பட்டு எடுத்த போது அவள் வரவே இல்லை. உங்கள் விருப்ப படி எடுத்து விடுங்கள் என சொல்லியிருந்தார் புகழேந்தி. அக்காவுடன் வந்து யுகிதான் எடுத்தான்.
இப்போது புடவைகளை வைத்துக் காட்டி தன் அபிப்ராயம் கேட்கும் மனைவியை நினைத்து யுகிக்கு வியப்பாகத்தான் இருந்தது.
“உனக்கு எது கட்டினாலும் நல்லாருக்கும் போல அஞ்சலி. எதைன்னு சொல்லுவேன்?” என்றான் யுகி.
“ஏதாவது ஒன்னை சொல்லுங்க ப்பா” என்றாள்.
அவள் எடுத்து வைத்திருந்த நான்கையும் விட்டு விட்டு வேறொரு புடவை எடுக்க சொன்னான். இளம் பச்சை வண்ண பட்டை அவள் கையில் கொடுக்கவும், “உங்க செலக்சன் எல்லாம் தாறுமாறுதான். பாவம் லைஃப் பார்ட்னர் விஷயத்துலதான் சொதப்பிட்டீங்க” என்றாள்.
“அப்படியா?” என சாதாரணமாக கேட்டான்.
“அதையும் பக்காவாதான் செலக்ட் பண்ணியிருக்கேன்னு சொல்லணும்” மூக்கை சுருக்கிக் கொண்டு அவனுக்கு சொல்லிக் கொடுத்தாள்.
சிரித்தவன், “நீயே சொல்லிக்க, வேற வாங்கலையா?” எனக் கேட்டான்.
மாமியார் சொன்னதை சொன்னாள்.
“புதுசு புதுசா என்ன ரூல்ஸ் இதெல்லாம்? திரும்பவும் என்னால ஷாப்பிங் வர முடியாது அஞ்சலி, அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன், தயவுபண்ணி எல்லாத்தையும் இன்னிக்கே வாங்கிடு” என கண்டிப்போடு சொன்னான்.
அவளும் வரவேற்புக்கு, திருமணத்தின் முதல் நாள் அணிந்து கொள்ள, பிறந்த வீட்டில் எடுத்துக் கொள்ள சொன்னதற்கும் சேர்த்து என எல்லாம் வாங்கி விட்டாள். யுகிக்கும் சேர்த்து ஆடைகள் எடுத்தாள்.
மாலையில் வீடு வந்த பிறகு தாங்கள் வாங்கியதை எல்லாம் மற்றவர்களுக்கும் காண்பித்து கொண்டனர். தனக்கானதை எல்லாம் பூஜை அறையில் வைத்த நந்தினி படுக்க போவதாக சொல்லி மாடிக்கு சென்று விட்டாள்.
பைரவி மற்றும் சுப்ரியாவை அவர்களின் வீட்டில் விட சென்றான் யுகி.
அலமேலு சொன்னது போலவே ‘அஞ்சலிக்கு மட்டும் நிறைய எடுத்துக் கொள்ள சொல்லி மருமகள்களுக்குள் பாகுபாடு காட்டி விட்டீர்கள்’ என மாமியாரிடம் குறை சொன்னாள் ஸ்ரீஜா.
“ஒரு புடவை தவிர மத்தது எதுவும் உங்க பில்’ல வரலை அத்தை, எல்லாம் என் வீட்டுக்காரர் அவர் சம்பாத்தியத்துல எடுத்து கொடுத்தது, இதை யார்கிட்டேயும் சொல்லணும்னு கூட எனக்கு அவசியம் இல்லை, ஆனா நீங்க எக்ஸ்பிளைன் செய்யணுமே, உங்க எனர்ஜிய ஸேவ் பண்ணத்தான் இதெல்லாம் நான் சொல்றேன்” என்ற அஞ்சலி பில்லை எடுத்து வைத்தாள்.
“நான் பேசிக்கிறேன், நீ சும்மா இரு” என அஞ்சலியை அதட்டினார் அலமேலு.
“பணத்தை கைல கொடுத்து தனியா பில் போட்டுக்க முடியாதா? உங்களை செய்ய வேணாம்னு சொல்லலை அத்தை, எதுக்கு ஒளிச்சு மறைச்சு செய்யணும்? உரிமைய விட்டு கொடுக்க கூடாதுன்னுதான் கேட்டேன், இனிமே இவளுக்கு செய்றத தாராளமா வெளிப்படையாவே செய்யுங்க. என் புருஷன் ஒன்னும் மத்தவங்க மாதிரி பல்பு கடை வச்சு நடத்தல, ட்ரெஸ் நகைன்னு எதுல குறை எனக்கு? ஐஸ்வர்யம் அத்தனையும் என்கிட்ட கொட்டி கெடக்கு” என்றாள் ஸ்ரீஜா.
கோவம் கொண்ட அலமேலு மூத்த மருமகளையும் கண்டித்து பேச வாய் திறப்பதற்குள், “அவ்ளோதான் லிமிட் உங்களுக்கு சொல்லிட்டேன்” என விரல் நீட்டி ஸ்ரீஜாவை எச்சரித்தாள் அஞ்சலி.
பார்த்துக் கொண்டிருந்த ரோஹித் அப்பாவை தேடிக் கொண்டே மாடிக்கு ஓடி சென்றான்.
“பார்த்தீங்களா மரியாதை இல்லாம எப்படி பேசுறான்னு, எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தானே அத்தை?” என்றாள் ஸ்ரீஜா.
“எனக்கான இடம் என்னன்னு எனக்கே தெரியும், யாரும் அதை கொடுக்கணும்னு இல்லை. அவரை சொல்றத எல்லாம் நான் பொறுமையா கேட்டுகிட்டு நிப்பேன்னு நினைச்சீங்களா? என்ன ரைட்ஸ்ல நீங்க அவரை மட்டமா பேசுவீங்க?” என கோவமாக கேட்டாள் அஞ்சலி.
“எனக்கு ரைட்ஸ் இல்லைங்கிறியா? யுகி என் புருஷனோட தம்பி, உனக்கு முன்னால ஏழு வருஷத்துக்கு முன்னாடியே இந்த வீட்டுக்கு வந்தவ நான். உன்னை மாதிரி கட்டிக்க எவனும் இல்லாம இந்த வீட்டு பொண்ண காரணம் காட்டி பிளாக் மெயில் பண்ணி அடாவடியா நுழைஞ்சவ இல்லை நான்” என்றாள் ஸ்ரீஜா.
“திரும்ப திரும்ப தேவையில்லாம பேசுறீங்க நீங்க. நான் எப்படி வந்தேன் ஏன் வந்தேன்னு நீங்க கவலைப் பட வேணாம்” என்றாள் அஞ்சலி.
பதில் பேசப் போன ஸ்ரீஜாவின் கையை பிடித்திழுத்த அலமேலு, “வாயை மூடிக்கிட்டு மேல போடி, இப்படி அராஜகமா ஏதோதான் அன்னிக்கும் நீ பேசியிருப்ப, அதான் ஸ்கூட்டரை தள்ளி விட்ருக்கா அஞ்சலி” என்றார்.
உறக்கம் கலைந்த வெங்கட் வெளியில் வர, யுகியும் உள்ளே நுழைய, ரோஹித்தை தூக்கிக் கொண்டு வாசுவும் உடன் நந்தினியும் பின்பக்கம் வழியாக ஹாலுக்கு வந்தனர்.
பெண்கள் மூவரும் வந்து கொண்டிருந்த யாரையும் கவனித்திருக்கவில்லை.
“நான் பேசினதால ஒன்னும் இவ ஸ்கூட்டரை தள்ளலை. இவ ஆள் சரியில்லை அத்தை, இவ அப்நார்மல் பொண்ணு. உங்களை ஏமாத்தி யுகி தலையில கட்டி வச்சிட்டாங்க. இவ சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்திட்டு இருக்கா, போன வாரம் கூட போயிருக்கா, இல்லைனு சொல்ல சொல்லுங்க பாப்போம்” என்றாள் ஸ்ரீஜா.
அஞ்சலியையும் சேர்த்து அனைவரும் திகைத்து விட்டனர். வேகமாக உள்ளே வந்த யுகி, மனைவியின் தோள் பற்றி, “உள்ள போ, நான் பேசிக்கிறேன்” என்றான்.
கணவனை கண்ட ஸ்ரீஜா அவனிடம் ஓடிச் சென்றாள். இவளுக்கு மட்டும் உங்கள் அம்மா அதிகமாக ஆடைகள் எடுத்துக் கொடுத்திருக்கிறார், இதையெல்லாம் இனி மறைக்காமலே செய்யுங்கள், என் கணவர் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை என நான் சொன்னேன். அதற்கு இவள் அதிகமாக பேசுகிறாள். எனக்கு எது பேசவும் உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லி விட்டாள் என கண்கள் கலங்க கதை சொன்னாள்.
அலமேலுவுக்கு ஸ்ரீஜாவின் கட்டுக் கதையெல்லாம் இரண்டாம் பட்சம் ஆகி விட்டது. அஞ்சலி மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கிறாள் என்பதிலேயே நின்று விட்டார்.
குழம்பி போயிருந்த வாசுவும் நந்தினியும் பாவமாக யுகியை பார்த்தனர். ஸ்ரீஜா பேசியதை விட மற்றவர்களின் பார்வையில் காயப்பட்டு போனாள் அஞ்சலி.
“உங்களுக்கு எப்படி தெரியும் அண்ணி?” என கேள்வி கேட்டாள் நந்தினி.
உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த தன்னுடன் வேலை செய்பவரை பார்க்க சென்றிருக்கிறாள் அனுபமா. அங்கே யுகியையும் அஞ்சலியையும் கண்டிருக்கிறாள். அவர்கள் இவளை பார்க்கவில்லை.