திருமண வேலைகளை இழுத்துக் கட்டி கொண்டு வாசு செய்ய, ஸ்ரீஜாவுக்கு கொஞ்சம் முதுகு ஒடிவது போலிருந்தது. எதுவும் கணவனிடம் வாய் திறக்க முடியாது, இவள் எப்படி நடக்கிறாளோ அப்படியேதான் மனைவியின் பிறந்த வீட்டில் நடந்து கொள்வான்.
அதற்காகவே உள்ளுக்குள் பொறுமினாலும் கணவன் போக்குக்கு சென்று கொண்டிருந்தாள் ஸ்ரீஜா.
தன் மனைவி தன்னிடம் குறை சொன்னது போன்ற குணம் கொண்டவள் இல்லை அஞ்சலி என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டிருந்தான் வாசு. ஆனால் அதைப் பற்றி இப்போது விசாரணை செய்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் ஸ்ரீஜா என்பதால், தங்கையின் திருமணம் வரை பொறுமையாக இருப்பது என முடிவு செய்திருந்தான்.
தன் திருமணத்தின் போது திண்டாடிப் போன யுகேந்திரனுக்கு அண்ணனின் வரவு பெரிய ஆசுவாசம்.
நந்தினிக்கு முகூர்த்த புடவை எடுக்க கார்த்திக் தன் பெற்றோரோடு கோவை வந்திருந்தான். அப்பாவை தான் பார்த்துக் கொள்வதாக வாசு பொறுப்பெடுத்துக் கொள்ள அவனையும் வெங்கட்டையும் தவிர மற்றவர்கள் நந்தினியுடன் ஜவுளிக்கடைக்கு வந்திருந்தனர்.
திருமணத்துக்கான ஆடைகளை அனைவருக்குமே இன்றே தன் மேற்பார்வையிலேயே எடுத்து கொடுத்து விட முடிவு செய்திருந்தார் அலமேலு.
அஞ்சலிக்கு டெஸ்ட் முடிந்து விட்டதால் பதட்டம் ஏதுமில்லாமல் அவளும் ஆடையெடுக்க வந்திருந்தாள்.
இவர்களை கட்டி மேய்ப்பதுதான் யுகியின் வேலை.
“அப்பாவோட இருந்துக்கிறேன்னு அண்ணா சொன்னப்போ புரியலை இப்ப புரியுது” என அலுத்துக் கொண்ட தம்பிக்கு செல்லமாக அடி வைத்தாள் பைரவி.
கார்த்திக் நந்தினியை நெருங்க முயல்வதும் அவள் தவிர்ப்பதுமாக அவர்களுக்கு இடையில் வேறு கதை ஓடிக் கொண்டிருந்தது.
அஞ்சலி தன் அண்ணன் மற்றும் பெற்றோரிடம் எந்த ஒதுக்கமும் காட்டாமல் இயல்பாக நடந்து கொண்டாள். தனிமையில் யுகியின் கையை பற்றிக் கொண்டு கண்கள் கலங்க நின்றான் கார்த்திக்.
“நீங்க பண்ணினது சரியில்லைதான் கார்த்தி, நாங்களா சரி பண்ணிகிட்டோம். எங்கள விட்டுட்டு உங்க லைஃப் பாருங்க” என சொன்னான் யுகி.
அஞ்சலி கூட நந்தினியிடம் அண்ணனுடன்தான் திருமணம் என முடிவெடுத்து விட்ட பிறகு, கருத்து வேறுபாடுகளை பேசி களைந்து விடுங்கள், கோவதாபங்களை ஒதுக்கி வைத்து மன்னிப்பை கொடுத்து விடுங்கள் அண்ணி, உங்கள் மகிழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது என சொல்லியிருந்தாள்.
இப்போது கார்த்திக் தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் நந்தினிக்கும் மெல்ல மனம் இளக ஆரம்பித்திருந்தது.
முகூர்த்த புடவை எடுக்க பட்டதுமே ‘கடைக்கு போகவா?’ என அம்மாவிடம் கேட்டு வாங்கி கட்டிக் கொண்டான் யுகி.
எனக்கு இந்தக் கடையில் ஏதும் பிடிக்கவில்லை, வேறு கடைக்கு போகலாம் என தன் அம்மம்மாவிடம் சொன்னாள் ஷிவானி.
யுகியை அழைத்த அலமேலு பேத்தியை வேறு கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு பிடித்ததாக வாங்கிக் கொடுத்து அழைத்து வருமாறு சொன்னார். தன் கைப்பேசியில் சார்ஜ் முடிந்து போயிருக்க, அதே கடையில் சார்ஜ் போட்டு விட்டு அம்மாவிடம் பார்த்துக் கொள்ள சொன்ன யுவி, அஞ்சலியை தேடினான்.
“அவ சுப்ரியாவுக்கு ட்ரெஸ் எடுக்க வேற ஃப்ளோர் போயிருக்கா, நான் சொல்லிக்கிறேன் நீ போ” என அனுப்பி வைத்து விட்டார் அலமேலு.
சுப்ரியாவுக்கு எடுத்து விட்டு மீண்டும் புடவைகள் பிரிவுக்கு வந்து விட்டாள் அஞ்சலி. தனக்கு புடவை பார்த்தவளுக்கு எதை எடுக்க என ஒரே குழப்பம். பைரவி நந்தினியெல்லாம் ஆளுக்கொரு அபிப்ராயம் சொன்னார்கள்.
“நாலு புடவையும் எடுத்துக்கோம்மா என்ன இப்போ?” என்றான் சேகர்.
“அதெல்லாம் நீயும் உங்க புருஷனும் தனியா வந்து எடுத்துக்கோங்க, கல்யாணத்துக்கு கட்டிக்க போறத எடுத்து கொடுக்கதான் நான் அழைச்சிட்டு வந்திருக்கேன் உங்களை எல்லாம், நீ பாட்டுக்கும் நிறைய எடுத்து உனக்கு மட்டும் நிறைய எடுத்து கொடுத்தேன்னு புடிச்சுக்குவா ஸ்ரீஜா” என இன்றைக்கு ஒன்றுதான் எடுக்க வேண்டும் என தீர்மானமாக சொன்னார் அலமேலு.
“ஓ அப்படியா? உங்க கோட்டாக்கு ஒரு சாரீ எடுத்துப்பேன், மத்தது எனக்கு பிடிச்சா எடுப்பேன்தான்” என சொல்லி மாமியாரை கொஞ்சம் கடுப்பாக்கி வைத்தாள் அஞ்சலி.
“நீ சாதாரணமா சொல்லியிருந்தா கேட்ருந்திருப்பா, அண்ணி பேரை சொல்லி அவளை ஏத்தி விட்டுட்ட, வேணும்னே நிறைய வாங்க போறாளா இல்லையா பாரு” என்றாள் நந்தினி.
“அவளை அண்ணின்னு கூப்பிடுன்னு பலதடவ சொல்லிட்டேன் உன்கிட்ட” என மகளிடம் கோவப்பட்டார் அலமேலு.
“பழக்கத்தை எப்படி மாத்த முடியும், அவ என்னை விட சின்ன பொண்ணுதான், நீ வீட்லேயே இருந்திருக்கலாம் போம்மா” என்றாள் நந்தினி.
இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தாள் பைரவி.
கணவன் எங்கே என கண்களால் தேடிக் கொண்டே இருந்தாள் அஞ்சலி. அவன் கைப்பேசிக்கு அழைக்க அது அணைக்க பட்டிருந்தது. அலமேலுவும் இவளிடம் சொல்ல மறந்து விட்டார்.
ரோஹித் உடன் தனியாக வாங்கிக் கொண்டிருந்தாள் ஸ்ரீஜா.
அஞ்சலியின் பெற்றோர் அவர்களுக்கு, தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு வைத்துக் கொடுக்க என ஆடைகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஷிவானி தனக்கு ஆடை எடுத்த உடனே படிக்க இருப்பதாக சொல்லி வீட்டுக்கு போக வேண்டும் என்றாள். ஆகவே சேகரை வெளியில் வர சொல்லி, அவளை அவனோடு அனுப்பி வைத்து விட்டான் யுகி.
தான் இருந்த பகுதிக்கு யுகி வரவும் அவனிடம் வேகமாக வந்த அஞ்சலி, “எவ்ளோ நேரம் காத்துக்கிட்டே இருக்கிறது, என்னை மறந்தே போயிட்டீங்களா?” என செல்லமாக கோபித்துக் கொண்டாள்.
அவன் விவரம் சொல்லவும், “வைஃப் என்ன எடுக்கிறா அவளுக்கு செட் ஆச்சான்னு எல்லாம் கண்டுக்கவே இல்லை, நிஜமாவே மறந்துதான் போயிட்டீங்க என்னை, என்ன?” என விளையாட்டாக கேட்டாள்.
அஞ்சலியின் முக பாவனையை அலமேலு பார்த்திருக்கவில்லை. ஆகவே கோவமாக பேசுவதாக நினைத்தவர், “ஏன் உன் பின்னாலேயே சுத்திட்டு நிக்கணுமா அவன்? நாந்தான் ஷிவானி கூட அவனை அனுப்பி வச்சேன், எல்லாருக்கும் உரிமை பட்டவன்தான் அவன்” என்றார்.
மாமியார் பக்கத்தில் இருப்பதை கவனித்திருக்கவே இல்லை அஞ்சலி. இந்த பேச்சு அவர்களுக்குள், அதற்கு விகல்பமாக மாமியார் கருத்து சொல்லவும் அவளுக்கு சுள் என கோவம் வந்து விட்டது.
“இவர்கிட்ட எல்லாருக்கும் உள்ள உரிமையும் எனக்குள்ள உரிமையும் ஸேம் கிடையாது, நாந்தான் இவருக்கு ஃபர்ஸ்ட், அப்புறம்தான் யாரா இருந்தாலும்” என்றாள்.
“நானா இருந்தாலுமா?” என அலமேலுவும் உடனே கேட்டார்.
“எனக்கு இவரை விட என் அம்மா முக்கியம்னா நீங்க ஒத்துப்பீங்களா?” என திருப்பி கேட்டாள் அவள்.
யுகி இடுப்பில் கை வைத்துக்கொண்டு இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.
“எவ்ளோ பேசுறடி நீ!” என அலமேலுவும் அலுத்தார்.
“இவருக்கு எல்லாரும் முக்கியம்தான்” என்றவள் யுகியின் கையை சலுகையாக தன்னிரு கைகளாலும் வளைத்து பிடித்துக்கொண்டு “ஆனா நான் மட்டும்தான் இவருக்கு ஸ்பெஷல்” என்றாள்.
விளையாட்டாக என்றாலும் என் கணவனுக்கு நான் தனித்துவமாக விளங்குகிறேன் என மாமியாருக்கு அறிவிப்பு செய்வது போலவே இருந்தது.
என்னிடம் தனியாக சொல்ல வேண்டியதை எல்லாம் அம்மாவை வைத்துக்கொண்டு சொல்கிறாளே, இவளை என்ன செய்யலாம் என சங்கடத்தோடு அம்மாவை பார்த்தான் யுகி.
“ஒத்துக்குறீங்களா அத்தை?” என மாமியாரிடம் கேட்டாள் அஞ்சலி.
மகன் வாழ்க்கையை நினைத்து கலங்கி கொண்டே இருந்த அலமேலுவுக்கு அவர்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டது என்ற நம்பிக்கை உண்டானது. இருவரையும் அப்படி பார்த்தவரின் மனமும் நிறைந்து போனது.
மருமகளின் அடாவடியில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவர், “நீயே வச்சுக்கடி இவனை, எனக்கு என் பெரிய புள்ளை இருக்கான்” என்றார்.
“அப்ப அண்ணிங்க எல்லாம்? இருங்க…” என சொல்லி திரும்பிப் பார்த்தவளை, “போதும் அஞ்சலி உங்க ரகளை” என சொல்லி இழுத்துக் கொண்டு சென்றான் யுகி.
“சொல்லிட்டு போயிருந்தா டென்ஷன் ஆகாம பொறுமையா வெயிட் பண்ணிருப்பேன்ல?” என சொல்லிக் கொண்டே கணவனோடு நடந்தாள் அஞ்சலி.