அத்தியாயம் 23

“கோப முகம் காட்டிய போதும் சாதுவான சிவனடியாரென நினைத்திருந்தேனே முத்தரசி! இவர் முரடனான சிவனடியாராக இருக்கிறாரே” உடை வாளோடு ஒருவரைத் துரத்திக் கொண்டிருந்த சிவநேசனைப் பார்த்தவாறு தாடையில் கை வைத்தவளாய் நிறைமதி கூற,

“முரட்டுத்தனம் அல்ல! அதை வீரம் எனவும் கூறலாம் மதி” ஓடும் சிவநேசனைப் பார்த்தவாறே உரைத்த முத்தரசியைச் சட்டெனப் பார்த்த நிறைமதி, “ஓஹோ கதை அப்படி போகிறதோ! சரி தான்” என்றவாறு கேலியாய் தலையை ஆட்டினாள்.

“முரட்டுத்தனத்தில் நியாயம் இருந்தால் அது வீரம் தானே மதி! இந்த சிவனடியார் நியாயமற்றவராய் இருக்க வாய்ப்பில்லை என்று என் மனம் சொல்கிறது” தன் பேச்சுக்கு விளக்கமளித்து அவளின் கேலிக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

பட்டாடை உடுத்தியிருந்த அந்நபரின் கைகளை முறுக்கியவனாய் சிவநேசன் கத்தியை அவரின் கழுத்தினருகில் எடுத்துச் செல்ல, “என்னை விட்டு விடு சிவநேசா! இனி எந்த சிவனடியாருக்கும் தொந்தரவு தர மாட்டேன்” என கைகளைக் கூப்பியவாறு மன்றாடினார்.

கத்தியுடன் கையைக் கீழே இறக்கியவனாய் ஏதும் பதிலிறுக்காமல் அந்நபரைத் தள்ளிக் கொண்டு நடந்தான் சிவநேசன்‌. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மாந்தர்கள் அனைவரும் அவர்களின் பின்னே சென்றனர்.

“எங்கே செல்கிறார்கள் மதி? வழக்காடு மன்றத்திற்கு அழைத்துச் செல்கிறாரோ?” நிறைமதியின் கையைப் பற்றியவாறு அவன் பின்னே சென்றவளாய் முத்தரசி கேட்க,

“யாம் அறியேன் பராபரமே” என்று நிறைமதி‌ கூற, சிரித்தாள் முத்தரசி.

அழகிய மாதவப் பெருமாள் கோவிலுக்குள் அவரை இழுத்துச் சென்ற சிவநேசன், “எம் ஈசனிடம் மன்னிப்புக் கோரி வாக்கு அளியுங்கள்” என்றான்.

பயந்து நடுங்கியவாறு சிவலிங்கத்தின் முன்பு வந்து நின்ற அந்நபர்,

“இந்த கைலாசநாதர் மீது ஆணையிட்டு கூறுகிறேன்! இனி எந்த சிவனடியாருக்கும் தொந்தரவு தர மாட்டேன்” என்று சத்தியம் செய்தார்.

அவர் சத்தியம் செய்த மறுநொடி, அவரின் பாதத்தில் வணங்கி எழுந்தவனாய், “என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா! சிவனடியாருக்கு நேரிடும் துன்பத்தைக் களைவதே எமது ஈசனுக்கான திருப்பணியாய் செய்து வருபவன் நான். அதன் பொருட்டே தங்களைத் தாக்க விழைந்தேன்” கைக்கூப்பி உரைத்தவன் நிமிர்ந்து நின்றவனாய்,

“ஆணையை மீறி நடந்தீரானால் மீண்டுமாக என் உடை வாள் தங்களின் கழுத்தை அறுக்க பாயும் என்பதையும் மறக்க வேண்டாம் ஐயா” என்றவன் சிவலிங்கத்தின் முன்பு விழுந்து வணங்கி விட்டு அங்கிருந்து சென்றான்.

உடன் வந்த மாந்தர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்ல, சிவநேசனையே தொடர்ந்திருந்தது முத்தரசியின் பார்வை.

“தவறை சுட்டிக்காட்டி தண்டிக்கத் துணிந்த அதே சமயம், மூத்தோருக்கான மரியாதை அளித்து வணங்கியும் விட்டாரே! இந்த சிவனடியார் யாரெனத் தெரிந்ததா மதி?” சிவநேசனின் குணத்தை எண்ணி வியந்தவளாய் கேட்டாள் முத்தரசி‌.

“அத்தை! செண்பகம் அத்தை” செல்லும் மக்களின் கூட்டத்தில் ஒருவரைக் குறிப்பிட்டு அழைத்த நிறைமதி, “அந்நபர் சிவனடியாருக்குச் செய்த தீங்கு தான் யாது?” என வினவினாள்.

“அன்றாடம் ஏதேனும் ஒரு சிவனடியாரின் உடையைச் சலவை செய்து கொடுத்த பின்பே மற்றைய துணிகளைச் சலவை செய்யும் முருகனாரின் சிவ தொண்டை அறிந்திருக்கிறாய் அல்லவா நிறைமதி! இன்று முன் மாலை பொழுதிற்கு பின்பே முருகனாருக்குச் சிவனடியாரின் துணிச் சலவை செய்ய கிடைத்ததாம். அதனால் இந்நபரின் துணியைத் துவைக்கக் காலத்தாமதமாகி விட இவர் முருகனாரிடம் சண்டையிட்டு அடிக்க கை ஓங்கி விட்டாராம்! இதனைக் கண்ட சிவநேசன் கோபாவேசமாகிப் போனான்” என்றார் செண்பகம்.

‘சிவநேசன்’ தனக்குள்ளாக கூறிக் கொண்டாள் முத்தரசி.

“ஆமாம் யாரிந்த சிவநேசன்? இதற்கு முன் இவரை நம் ஊரில் கண்டதில்லையே அத்தை” என்று கேட்டாள் நிறைமதி.

“நம்மூரின் பெரிய வணிகர் திருநீலகண்ட ஐயாவை அறிவாய் அல்லவா! அவரின் மகன் தான் இந்த சிவநேசன்” என்றதும் ஆச்சரியத்தில் விழி விரித்த முத்தரசி,

“தாய் தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தந்தையை விழுங்கிவிடும் என என் தந்தை கணித்துக் கூறியதற்காகத் தனது புத்திரனை உறவினரிடம் தத்துக் கொடுத்து வளர்த்து வருவதாய் திருநீலகண்ட ஐயா உரைப்பாரே! அந்தப் புத்திரன் தான் இவரா?” எனக் கேட்டாள்‌.

“ஆம் முத்தரசி! அவரே தான்” என்ற செண்பகம், தனது இல்லத்தை நோக்கி கிளம்பிச் சென்றார்.

“செல்வ வளமிக்க பெரும் வணிகரின் செல்வன் எவ்வாறு இத்தகைய சிவனடியாரானார் மதி?” ஆச்சரியமாக முத்தரசி கேட்க,

“நாடாள்வாரும் சிவனடியாராய் மாறிய நிகழ்வுகள் நம் நாட்டில் நடந்திருக்கிறதே! இதில் வணிகர் சிவனடியாராய் இருப்பதில் என்ன வியப்பு முத்தரசி” என்றாள் நிறைமதி.

“உண்மை தான்” என்று முத்தரசி அமைதியாக,

“இவரைப் பற்றி அறியும் ஆர்வம் வந்ததும் ஏனோ?” எனக் கேட்டாள் நிறைமதி.

“ஒரே சிந்தை, ஒரே செயல், ஒரே உணர்வு என எல்லாமும் ஒரே இடத்தில் குவிக்கும் மனிதனிடம் ஒரு தெளிவு இருக்கும். அத்தெளிவு அம்மனிதனிடத்தில் ஒரு தெய்வீக ஆளுமையினைக் கொண்டு வரும் மதி! அன்றாடம் நாராயணனுக்கு பூ மாலை சூடும் பணிவிடை செய்து வரும் எனக்கு இறையருளித்த அத்தெய்வீக உணர்வை அவரிடம் என்னால் உணர முடிகிறது! ஆனால் ஈசனின் அடியவரிடத்தில் எவ்வாறு மனம் இவ்விதமாக உணருகிறது என்று தான் விளங்கவில்லை மதி” தனது மனக்குழப்பத்தை தோழியிடம் பகிர்ந்தாள்.

“உன்னைப் போலவே இவரும் தீவிர இறைப்பணியில் ஈடுபடுவது அவ்வாறு உன்னை உணரச் செய்கிறது போலும் அரசி” என்று நிறைமதி கூற,

“இருக்கலாம் மதி! அரியும் அரனும் வேறாயினும் அவர்களை வணங்கும் ஆன்மாவின் உணர்வும் இறைபக்தியும் ஒன்றல்லவா!” என்றவளாய் மாலை கோர்ப்பதற்குத் தேவையான பூக்களைச் சேகரிப்பதற்காக நிறைமதியுடன் பூந்தோட்டம் சென்றாள்.

*****

அன்று இரவு தந்தைக்கு உணவை பரிமாறியவாறு அமர்ந்திருந்த முத்தரசி, “முகத்தில் ஏனிந்த கலக்கம் தந்தையே! அவசர ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நிகழ்ந்தது?” என வினவினாள்.

“அரசாங்க ரகசியத்தை பொதுவெளியில் உரைப்பது பெருங்குற்றம் அரசி” என்றவர் பெருமூச்செறிந்தவராய்,

“உன்னை ஒவ்வொரு முறையும் அரசி என்று விளிக்கும் பொழுது நம் மன்னரை எண்ணி நெகிழும் என் நெஞ்சம் இன்று அவரை எண்ணி கலங்கியிருக்கிறதம்மா” என்றார்‌.

“ஏன்? என்னவாயிற்று தந்தையே?” அவள் கேட்க,

“எல்லோரும் இந்நாட்டு மன்னரின் செல்வங்களென ராஜாக்களின் பெயர்களைத் தங்களது நாட்டு மக்களின் செல்வங்களுக்கு இடுவதற்கு உரிமையளித்து அவரவர் விருப்பம் போல் நன்னெறியுடன் இன்புற்று வாழ சுதந்திரமளித்திருக்கும் எம் அரசன் சூழ்ச்சியில் சிக்கிவிடுவாரோ என்ற அச்சத்தினால் உண்டான கலக்கமிது மகளே” கலங்கிய குரலில் உரைத்தார்.

“என்னது? சூழ்ச்சியா?” அதிர்ந்த உள்ளத்துடன் அவள் கேட்க,

“ஆம்! இறைமையே ஒரு நாட்டின் ஆணிவேராய் விளங்குகிறது அரசி! வேற்றுமையில் ஒற்றுமையென வந்தோரை வாழ வைக்கும் தேசமாய் அனைவரையும் அன்னையின் கரம் கொண்டு அரவணைக்கும் நம் மன்னர் சாக்கியர்களுடனும் சமணர்களுடனும் நட்பு பூண்டிருக்கிறார்! மன்னர் அவர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து விடக் கூடாதென அஞ்சுகிறேன்” என்றார்.

“சன்னியாசிகளான அவர்கள் என்ன சூழ்ச்சி செய்யக் கூடும் தந்தையே! அவர்கள் அரசாட்சி புரிபவர்கள் அல்லரே! அரசாங்கம் மீது அதிகாரப்பற்று கொண்டவர்களும் அல்லரே!” யோசனையுடன் அவள் கேட்க,

“அதிகாரப் பற்றற்றவர்கள் ஆயினும் தாம் சார்ந்த சமயம் மீது பற்றுள்ளவர்கள் அல்லவா!”

“மகாராணி என்னைத் தனியே அழைத்துப் பேசினார்! அவரிடம் உரையாடியப்பின் எழுந்த ஐயமே இது! மக்களை அவர்களின் சமயத்துக்கு இழுத்து செல்ல அரசரிடம் நட்புறவாடுகிறார்களோ என்ற ஐயத்தில் இருக்கிறார் மகாராணி! வருங்காலத்தை கணித்ததில் இத்தகைய இடரை நம் நாடு கடந்து வர தான் ஆக வேண்டுமென்றே கணிப்புகள் தெரிவிக்கின்றன அரசி! காலத்தைக் கணித்த என் கண்களுக்கு வருடங்கள் தாண்டி நிகழப் போவது கலக்கத்தை அளிக்கிறதம்மா”

தந்தையின் கூற்றில் முத்தரசியின் நெஞ்சம் பதைத்தாலும் தந்தையின் கலக்கத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு, “நம்மை காக்கும் இறைவனால் தம்மை காத்துக் கொள்ள முடியாதா? இடரைக் களைய இறைவன் துணையிருப்பான் தந்தையே!” என்றாள்.

“தம்மை காக்கவே இறைவன் அடியார்களுக்குப் பிறவி அளிக்கிறான் அரசி! அரசனைக் காக்கும் காவலர்கள் போல் மக்களை காக்கும் இறைவனைக் காக்க வேண்டியது அடியவர்களின் கடமை! அவர்களின் பிறவிப்பயனை உணர்ந்து அப்பணியில் ஈடுபட்டு கடமையாற்ற வேண்டும். வருங்காலத்தின் இடரைக் களைய இறைவன் துணையுடன் இறையடியார்கள் செயல்பட வேண்டும்” என்றார்.

“இதோ இதற்கான விடையும் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே! பின் ஏன் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை இழக்கிறீர்கள்! மாதவனை நம்பி அடி பணிவோம் தந்தையே” என்றாள்.

மகளின் தீர்க்கமான பேச்சில் தெளிவுற்றவராய், “நாராயணா” என்று மனதோடு பெருமாளை நினைந்து கொண்டார்.

இருவரும் உண்டு முடித்துத் திண்ணையில் சாய்வாக அமர்ந்ததும், “இன்றைய நாளை குறித்து நீ உரைக்கவில்லையே” எனக் கேட்டார்.

“இன்று என் வாழ்நாளில் மிகுந்த சுவாரசியமான நாள் எனலாம் தந்தையே” மென்சிரிப்புடன் உரைத்தாள்.

“அப்படி என்னம்மா சுவாரசியம் நிகழ்ந்தது?” என்றவர் கேட்கவும்,

காலை முதல் மாலை வரை சிவநேசன் கொண்டு நடந்த நிகழ்வுகளை விவரித்தாள் முத்தரசி.

கண்கள் மின்ன, “திருநீலகண்டரின் மகன் நம் ஊருக்குள் சிவனடியாராக வந்திருக்கிறாரா! நான் கூறிய இருபது ஆண்டுகள் நிறைவாகி விட்டதா! தந்தையும் தனையனும் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி” என்றவர்,

“ஈசனை நாராயணனுடன் ஒப்பிட்டு பேசியது தவறு அரசி! ஈசனின் மறு உருவமான ஆஞ்சநேயர் நாராயணின் நாமமான ராம நாமத்தை மூச்சாய் கொண்டு வாழ்ந்தது போல் ராம அவதாரத்தில் ராமர் ஈசனைப் பூஜித்து வழிபட்டார்! இருவரும் சிவசக்தி போல் சங்கரநாராயணராய் உன்னுள் நான், என்னுள் நீ என்னும் தத்துவத்தைக் கொண்டு இயங்கும் இறை சக்திகள்”

“மன்னிக்க வேண்டும் தந்தையே! நான் அப்பொழுதே என் தவறை உணர்ந்து ஈசனிடம் மன்னிப்புக் கோரினேன்” குற்றயுணர்வுடன் மெல்லிய குரலில் அவள் கூற,

“என்னவென்று மன்னிப்பு கோரினாய்?” எனக் கேட்டார்.

“இது நாள் வரை தங்களை வணங்காத நான், இன்று தங்களின் அடியவரின் மனத்தை வருத்தியதற்காக மன்னிப்பு வேண்டி வணங்கி நிற்கிறேன் ஈசனே! அவருக்கு மன அமைதி அளித்து எம் குற்றயுணர்வையும் களைவீராக எம்பெருமானே என்று கூறி வணங்கினேன் தந்தையே” என்றாள்.

“இச்சொற்களில் ஈசனை அவ்வாறு கூறியது தவறு என்று எங்கேயும் நீ குறிப்பிடவில்லையே மாறாக சிவனடியாரின் மனத்தை நோக செய்ததற்காகத் தானே வருந்தி மன்னிப்பு வேண்டியிருக்கிறாய்! அப்படி என்றால் உன் மனம் வருந்தியது ஈசனுக்காகவா அல்லது சிவனடியாருக்காகவா?” என்று அவர் பொறுமையாக வினவ,

அவளின் உள்ளம் படபடத்துப் போக, “நாராயணா” சற்றுச் சத்தமாகவே கூறியிருந்தாள்.

தந்தையின் கூற்றில் ஈசனுக்கு அல்லாது சிவனடியாருக்காக அல்லவா என் மனம் கலங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட முத்தரசி, தனது மனம் போகும் திசை எண்ணி பயம் கொண்டாள்.

“மன்னித்து விடுங்கள் தந்தையே! நாளை ஈசனிடத்தில் மன்னிப்புக் கோருகிறேன்” என்றாள்.

மகளின் மனத்தைப் புரிந்து கொண்ட மதுரகவிராயரின் மனம் சுணங்கிப் போனது. ‘இது என்ன விளையாட்டு நாராயணா’ மனதோடு கேட்டுக் கொண்டவராய், மகளின் ஆருடத்தை ஆராய வேண்டுமெனக் குறித்துக் கொண்டார்.‌ மகளின் மன்னிப்பையேற்று அறிவுரை கூறினார்.

“தங்களின் தங்கை மகன் ஏன் இன்று திடீர் விஜயம் செய்தார்?” எனக் கேட்டாள்‌ முத்தரசி.

“ஓ செழியனை கேட்கிறாயா? அவனின் நாட்டில் நடக்கவிருக்கும் சித்திரை திருவிழாவிற்கு நமது மன்னரை குடும்பத்தாருடன் வந்து கலந்து கொள்ளுமாறு வரவேற்பு ஓலையை இவன்‌ மூலம் அனுப்பியிருக்கிறார் அந்நாட்டு மன்னர்! வழியில் நம்மையும் பார்த்து விட்டு செல்லலாம் என வந்ததாய் உரைத்தான்”

“ஓ அரச குடும்பத்தினருக்கு மட்டும் தான் அழைப்போ?” என்று விளையாட்டாய் அவள் கேட்க,

“நீ விரும்பினால் உன்னையும் அழைத்துப் போக அவனுக்கு ஆசை தான் அரசி” பூடகமாக அவனின் ஆசையை அவர் உரைக்க,

திடுக்கிட்டவளாய், “உறங்கலாம் தந்தையே” என்றவளாய் எழுந்து உள்ளே சென்றாள்.

 மறுநாள் காலை அழகிய மாதவப் பெருமாளுக்கு மாலை அளித்து வணங்கியவள், சுற்று பிரகாரத்தில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றாள்.

முந்தைய தினம் போலவே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்த சிவநேசனைக் கண்டவள் நிமிட நேரம் தன்னையும் மறந்து அவனைப் பார்த்தாள். பின் சுதாரித்தவளாய், அவனின் தியானம் கலையாத வண்ணம் சிவலிங்கத்தை நோக்கி சென்றவள், தனது கையினாலேயே கோர்த்த மாலையினை அவளே லிங்க திருமேனிக்குச் சாற்றி மன்னிப்பு கோரி விட்டு கண்களை மூடி அமர்ந்து விட்டாள். தியானத்தில் இருந்து விழி மலர்த்தியவன் அவளைக் கண்டு அதிர்ந்து போனான்.