“ரோஹித் ஸ்கூல் போற டைம் என்னடா பண்றது நான்? ஸ்ரீஜாவையும் சேர்த்து அழைச்சிட்டு போனா அவ கூடவும் இருந்த மாதிரி ஆகிடும்” என்றான் வாசு.
“அதானே யுகி, குடும்பத்துக்கு செய்றது விட என்ன பெருசா நாங்க சேர்ந்து டைம் ஸ்பெண்ட் பண்றது முக்கியம்?” என்றாள் ஸ்ரீஜா. தன்னுடன் பேசுவதை தவிர்க்கும் யுகி, எப்படியும் அண்ணன் முன்னிலையில் பேசித்தானே ஆக வேண்டும் என நினைத்து விட்டாள்.
பொதுவாக சிரிக்க மட்டும் செய்து அண்ணியுடன் பேசுவதை அப்போதும் தவிர்த்து விட்டான் யுகி.
பைரவி தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு அஞ்சலிக்கு கொடுக்க சென்றாள்.
“நீங்களே எப்பவோ ஒரு நாள்தான் வீட்ல இருக்கீங்க அண்ணி, ரெஸ்ட்டா இருக்கிறது விட்டுட்டு நீங்க ஏன் அவளுக்கு எடுத்திட்டு போறீங்க? ஏன் அவ சாப்பிட்டுக்க மாட்டாளா?” என கேட்டாள் ஸ்ரீஜா.
“இருக்கட்டுமே, சாப்பிடுறப்ப வந்து சாப்பிட்டு போகட்டும். உங்களை சரியா கவனிக்கலைன்னு உங்க தம்பி என்னையில்ல சொல்வாரு, வாங்க வந்து உட்காருங்க, பாருங்க இவரு என்னை முறைக்கிறாரு” என வாசுவை கை காட்டி பைரவியின் கையை பிடித்திழுத்து தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டாள் ஸ்ரீஜா.
பைரவியின் மீது வாசுவுக்கு எப்போதுமே கூடுதல் கரிசனம் உண்டு, அதை அழகாக பயன் படுத்திக் கொண்டாள் ஸ்ரீஜா.
“ஏன் டா அஞ்சலிய இங்க வந்து சாப்பிட சொல்றதுக்கு என்ன உனக்கு?” என தம்பியிடம் கேள்வி கேட்டான் வாசு.
“பசிச்சா அவளே வந்து சாப்பிட்டுக்குவா, அக்காக்கு அவன்னா அப்படித்தான் ஸ்பெஷல், ஏதாவது செய்யும்” என சாதாரணமாக கூறினான் யுகி.
“அடடா நான் என்ன வேற ஆளா? போடா நீ” என சொல்லி எழுந்து சென்று விட்டாள் பைரவி.
தம்பியின் பதிலுக்காக பார்த்தான் வாசு.
“என்ன ண்ணா ஏன் அஞ்சலிய பத்தி அப்படி சொல்ற? அவ எல்லாரோடயும் நல்லாதான் பழகுறா, மரியாதை குறைவா யார்கிட்டேயும் நடக்கிறவ இல்லை. அக்காவும் அவளும் க்ளோஸ் அண்ணா” என்றான் யுகி.
“வைஃபை விட்டு கொடுக்காம பேசுறது எப்படின்னு உங்க தம்பிகிட்ட கத்துக்கோங்க” என்றாள் ஸ்ரீஜா.
“என்ன நான் உன்னை விட்டு கொடுத்திட்டேன்?” என மனைவியிடம் கேட்டான் வாசு.
“இந்நேரம் நான் இங்க இல்லாம மாடியில இருந்திருந்தா நீங்களும் இப்படி முட்டு கொடுக்கணும், செய்வீங்களா? என்னடி பண்ற அங்கன்னு சத்தம்தான் போடுவீங்க. யுகி தாங்குற மாதிரிலாம் யாரும் பொண்டாட்டிய தாங்க முடியாது” என்றாள் ஸ்ரீஜா.
“என்னடா அப்படியா?” எனக் கேட்டான் வாசு.
“என் பொண்டாட்டி நான் தாங்குறேன், நீயும் தாங்கு யார் வேணாம்னா? டிப்ஸ் வேணும்னா நாம தனியா இருக்கும் போது எக்ஸ்பிளைன் பண்றேன் அண்ணா, உனக்கு தெரியாத விஷயங்கள் இருக்கலாம், சொல்லி தர்றேன் தெரிஞ்சுக்க, அப்படியே கத்துக்க” என சற்று விளையாட்டாக சொன்னான் யுகி.
தான் அஞ்சலியை பற்றி சொன்னதை சொல்லி கொடுத்து விடுவேன் என்ற உள் பொருளில் பேசுகிறானோ என்ற பயத்தில் ஸ்ரீஜா அதற்கு மேல் வம்பாக ஏதும் பேசாமல் இருந்து கொண்டாள்.
சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்த யுகி, அஞ்சலியையும் சாப்பிட்டு வர சொன்னான். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்றாள்.
தயக்கமாக அவளை பார்த்தவன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டே, “படிச்சிட்டே இருந்தா ஒரு மாதிரி இருக்கும்ல அஞ்சலி, இடைல இடைல போய் ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டு செய். உனக்கும் ரிலாக்ஸ் பண்ணின மாதிரி இருக்கும்” என்றான்.
“ஏன் யாரும்…” என ஆரம்பித்தவள், “யாரும் என்ன யாரும் உங்கண்ணி என்ன பிளே பண்ணினாங்க இப்போ?” எனக் கேட்டாள்.
“நான் ஒன்னு சொன்னா நீ ஏதோ பேசக்கூடாது”
“சரி அதுக்கு ஏன் சுள்ளுனு பேசுறீங்க?” எனக் கேட்டு முகத்தை சின்னதாக்கினாள்.
“அதெல்லாம் இல்லை, நான் கிளம்புறேன்” என சொல்லி அவன் அறையை விட்டு வெளியேற, அவனை வழியனுப்ப அவளும் வெளியில் வந்தாள்.
வாசு அவளுக்காக வாங்கி வந்திருந்த புதிய கைப்பேசியை கொடுத்தான்.
“ரொம்ப நல்லாருக்கு மாமா, தேங்க் யூ” என முகம் மலர சொன்னாள். ரோஹித் சித்தியிடம் ஓடி வந்து ரிமோட் காரை காட்டினான்.
“டேய் என்னை ஒரு ரைட் கூட்டிட்டு போடா” எனக் கேட்டாள் அஞ்சலி.
“சித்தி நீ எப்படி இதுல உட்கார முடியும்?” எனக் கேட்டான் ரோஹித்.
“நான் உட்கார முடியாதாடா வெரி சேட். எங்க நீ ஓட்டு நான் பார்க்கிறேன்”
ரிமோட் கொண்டு காரை இயக்கி காட்டி பெருமையும் வெட்கமுமாக சிரித்தான் ரோஹித்.
“ஹையோ செல்லத்துக்கு வெட்கத்த பாரு” என சொல்லி அவனை கொஞ்சினாள். அவளின் காதில் ஏதோ ரகசியம் பேசினான் ரோஹித், இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.
“என்னங்கடா ரெண்டு பேரும் பேசிக்கிறீங்க?” என கேட்டான் யுகி.
ரோஹித் உடனே சித்தியை பார்த்தான். அவள் சொல்லாதே என கண் காட்ட, “சொல்ல முடியாது சித்தப்பா” என சொல்லி விட்டான்.
“அப்படியா! அண்ணா நீ வாங்கி வச்சிருக்க இன்னொரு காரை இவன்கிட்ட தராத” என்றான் யுகி.
ரோஹித் பாவமாக சித்தியை பார்த்தான்.
“அதெல்லாம் சும்மா, உனக்குன்னு வாங்கினது உனக்குத்தான், ஒளிச்சு வச்சா கூட நாம கண்டு பிடிச்சிக்கலாம்” என அஞ்சலி சொல்ல, சித்தப்பாவுக்கு பழிப்பு காட்டி விட்டு ஓடிச் சென்று விட்டான் ரோஹித்.
குழந்தையிடம் இன்னொரு கார் இருப்பதாக ஏன் பொய் சொன்னீர்கள் என கணவனிடம் கடிந்து கொண்டாள் அஞ்சலி.
“அவன் மறந்து போயிடுவான்” என சொல்லிக் கொண்டே வெளியே நடந்தான் யுகி.
“அதெல்லாம் கரெக்ட்டா ஞாபகம் வச்சிருப்பான், டைம் ஆச்சேன்னு ஃபாஸ்ட்டா போகாம நீங்க பைக் மெதுவா ஓட்டுங்க” என சொல்லிக் கொண்டே அஞ்சலியும் அவன் பின்னால் சென்றாள்.
பார்த்திருந்த வாசுவுக்கு தம்பியின் மனைவி குறித்து தன் மனைவி சொன்ன குறைகளை நினைத்து குழப்பம் ஆனது.
யுகி சென்ற பின் தானும் சாப்பிட்டு அறைக்கு சென்று விட்டாள் அஞ்சலி. வாசுவும் மாடிக்கு சென்று விட்டான். மதிய உணவுக்கு அவன் வந்த போது விடைத்தாள்கள் திருத்திக் கொண்டிருந்தாள் பைரவி. மதிப்பெண்கள் கூட்டி போட்டு அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
நந்தினி இயல்பாக அஞ்சலியிடம் ஏதோ நகை டிசைன் காட்டி வாங்கலாமா என ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பாவுக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்த வாசுவுக்கு ஏதோ சந்தேகம், அவன் அம்மாவிடம் கேட்க, “என்னையவே குழப்பிட்ட, யுகிதான் சொல்லி தருவான், இல்லைனா இதோ அஞ்சலிகிட்ட கேளு, இவளுக்குத்தான் எல்லாம் தெரியும்” என்றார்.
அவர் சொன்னது போலவே அஞ்சலிதான் விளக்கினாள். ரோஹித்தும் அஞ்சலியின் பின்னால்தான் அதிகமாக சுற்றினான்.
வந்த அரை நாளில் அஞ்சலி பற்றி தானாகவே கணித்து விட்டான் வாசு. மனைவியிடம் இது பற்றி பின்னர்தான் விசாரிக்க வேண்டும் எனவும் தீர்மானித்துக் கொண்டான்.
காலையில் முறை வாசல் செய்வதை அஞ்சலி, ஸ்ரீஜா இருவரும் வாரம் ஒருவர் என பிரித்துக் கொண்டிருந்தனர். ரோஹித்துக்கு விடுமுறை என்றால் தன் முறையாக இருந்தாலும் வர மாட்டாள் ஸ்ரீஜா.
ஸ்ரீஜாவின் முறையா இன்று, அவள் செய்கிறாளா இல்லையா என்பதையெல்லாம் கணக்கு போட்டெல்லாம் பார்க்க மாட்டாள் அஞ்சலி. அவள் எழுந்து வரும் நேரம் வாசல் பெருக்காமல் இருந்தால் அவளே செய்து விடுவாள். வெளியில் நிற்கும் மரங்களுக்கும் தண்ணீர் விட்டு விடுவாள்.
என்றாவது அஞ்சலி செய்யவில்லை என்றாலும் இதற்காக என அவளை கடிந்து கொள்ள மாட்டார் அலமேலு, புதுப்பெண் என்பதால் எழ தாமதம் ஆவது வாடிக்கைதானே என அவரே செய்து விடுவார்.