“உன்கிட்ட கொஞ்சம் நிதானம் வேணும் அஞ்சலி” என்றான்.

“வாங்கி கொடுங்க, வச்சுக்கிறேன்” என்றாள்.

அவன் முறைக்க, “என்ன அது காஸ்ட்லியா, உங்க பட்ஜட் தாங்காதா?” எனக் கேட்டாள்.

“வாய குறைடி” என செல்லமாக கடிந்து கொண்டான்.

புத்தகம் வாங்கியதும் அவளை வீட்டுக்கு கிளம்ப சொன்னான். உங்கள் அம்மாவை நான் மட்டும் தனியாக சமாளிப்பதா? நீங்கள் இல்லாமல் போக மாட்டேன் என சொல்லி கடைக்கே வந்து விட்டாள். அலுவலக அறையிலேயே புத்தகம், நோட்டு, பேனா என ஒரு ஓரமாக அமர்ந்து விட்டாள். அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

அனைவருக்கும் தேநீர் வாங்கி வந்த லோகேஷ், அஞ்சலிக்கு கொடுக்கவும் அறைக்கு சென்றான். திரும்ப வந்தவன், “இந்த டீ நல்லாவே இல்லையாம் அண்ணா, இத குடிக்கிறதாலதான் நம்ம எல்லாரும் மந்தமா இருக்கோமாம், டீ கடைய மாத்த சொல்லிட்டாங்க அண்ணி” என்றான்.

“ஒரு நாள் வந்திட்டு ஆயிரம் சேஞ்சஸ் சொல்வாளாமாம் உன் அண்ணி. இந்த ஏரியால இதான் பெஸ்ட் டீ. நீ போடா” என்றான் யுகி.

“இருங்க அண்ணிகிட்ட சொல்லிட்டு வர்றேன்” என திரும்பினான் லோகேஷ்.

வேகமாக அவனை பிடித்த யுகி, “எதுக்குடா இந்த வேண்டாத வேலை உனக்கு? போடா”  என்றான்.

“அண்ணி புண்ணியத்துல கூட நல்ல டீ குடிக்க விட மாட்டீங்க இல்லை” என அலுத்துக் கொண்டான் லோகேஷ்.

“நான் சொன்னத ஏத்துக்காம மாத்தி பேசுவியான்னு அண்ணனுக்கு அடி விழும் டா, அதான் பயப்படுறார்” என இளவரசன் கிண்டல் செய்ய, மற்றவர்கள் சிரித்தனர்.

“எல்லாருக்கும் ரொம்ப ஏத்தம் ஆகி போச்சுங்கடா. வேலைய பாருங்க” என சிரித்துக்கொண்டே அதட்டினான் யுகி.

பேனாவால் காற்றில் கிறுக்கிக் கொண்டே படிக்கும் அஞ்சலியை பார்த்த யுகி, ‘இவ படிக்கிறது கூட அழகா இருக்கே!’ என சிலாகித்துக் கொண்டான்.

எதேச்சையாக கணவனை பார்த்தவள் வேலையை பாருங்கள் என கண்களால் அதட்டினாள். ‘நீங்க உங்க வேலையை பாருங்க, நாங்க எங்க வேலையைத்தான் பார்க்கிறோம்’ என சாடையாக அவன் சொல்ல, முகத்தை குவித்து அவனை பழித்தவள் மீண்டும் படிப்பில் கவனம் வைத்தாள்.

இரவில் இருவரும் வீடு வந்து சேர்ந்த போது முகத்தை உர் என வைத்துக்கொண்டுதான் வரவேற்றார் அலமேலு. மாமியாரை எதிர்கொள்ள பயந்து யுகியின் முதுகுக்கு பின்னால் பதுங்கினாள் அஞ்சலி.

என்ன சொல்லவென அம்மாவை சங்கடமாக பார்த்தான் யுகி.

“மதியானம் கிளம்பி போனவ இப்பதான் வீடு வந்து சேருறா, எல்லா வேலையும் இங்க நானே தனியா செய்றேன். ஒருத்திதான் எந்த வீட்டு விருந்தோன்னு இங்க எட்டி பார்க்கிறதே இல்லை, இவளாவது பொறுப்பா இருப்பான்னு நினைச்சா… ஹ்ம்ம்…  என்னடா இதெல்லாம்?” என கடினமாக கேட்டார் அலமேலு.

யுகி ஏதோ சொல்ல வருவதற்குள், “அவ்ளோ நேரம் கடைல இவளை உட்கார வச்சிருக்க, உனக்கு அறிவிருக்கா இல்லையா? இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லடா” என்றார் அலமேலு.

“அத்தை நான் ஒன்னும் சும்மா உட்கார்ந்து இல்லை, படிச்சிட்டுதான் இருந்தேன்” என முந்திக் கொண்டு சொன்னாள் அஞ்சலி.

“ம்ம்…  எது கேட்டாலும் இது ஒரு பதிலு. படிச்சு என்னடி பண்ண போற? வீடும் புருஷனும்தான் முதல்ல, அப்புறம்தான் எல்லாம். அடுத்த வருஷம் புள்ள வந்தா அப்ப என்ன பண்ணுவ? புள்ளய பார்க்காம படிக்கிறேன் புக் வாங்குறேன்னு இருப்பியா?” என சிடு சிடுத்தார் அலமேலு.

“அடுத்த வருஷம் குழந்தை வரும்னு யார் சொன்னா உங்களுக்கு? கல்யாணம் ஆன அன்னிக்கே உங்க பையன் சொல்லிட்டார், ஆறு மாசத்துல என்னை வேலைக்கு அனுப்புறேன்னு. இன்னிக்கு ஒரு நாள்தானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணலை, மத்த நாளெல்லாம் எதுவுமே செஞ்சது இல்லையா நான்? இந்த ஒரு நாள் வச்சு இப்படி பேசுவீங்களா? உங்க முத மருமக உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்றாங்க, அவங்கள மட்டும் எதுவும் சொல்றீங்களா? என்னை மட்டும் ஏன் இப்படி பேசுறீங்க?” எனக் கேட்டாள் அஞ்சலி.

அதிர்ந்த அலமேலு  மகனை கோவமாக பார்த்தார்.

“உள்ள போ முதல்ல நீ” என மனைவியை அதட்டினான் யுகி. அவள் அங்கேயே நிற்க, கட்டாயப் படுத்தி அறையில் கொண்டு போய் விட்டு வந்தான்.

“என்னடா சொல்றா அவ? அவ வேலைக்கு போயிதான் இந்த குடும்பம் ஓடணுமா?” என மகனிடம் சீறினார் அலமேலு.

“அவ ஆசை படறா ம்மா. அக்கா, நந்து எல்லாம் வேலைக்கு போகலையா?” எனக் கேட்டான் யுகி.

“உங்க அக்காவோட தலையெழுத்து சரியா இருந்திருந்தா அவ ஏன் வேலைக்கெல்லாம் போய் அல்லாடணும்? நந்தினி இப்ப வேலைக்கு போறா, கல்யாணத்துக்கு அப்புறம் அவ புருஷன் மாமனார் மாமியார் சொல் படி கேட்டுக்குவா. உன் நல்லதுக்கு சொல்றேன் கேட்டுக்க, இப்பவே இவ வாலை கத்திரிச்சு வை” என்றார் அலமேலு.

“இந்த டாபிக் இப்ப தேவையே இல்லாதது. வேலையெல்லாம் ஆறு மாசத்துக்கு அப்புறம்ன்னுதான் அவகிட்ட சொல்லியிருக்கேன், அதுக்கு இன்னும் நாள் இருக்கேம்மா. இப்ப போய் படும்மா” என்ற யுகி அம்மாவை வற்புறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

மனைவியை காண யுகி அறைக்கு வந்த போது அஞ்சலியும் அவனை பிடித்துக்கொண்டாள்.

“இன்னும் நாள் இருக்குன்னா என்ன அர்த்தம்? இப்படி நாளை கடத்திகிட்டே போய் என்னை ஏமாத்தலாம்னா? வாலை நறுக்க சொல்றாங்க உங்கம்மா, ஏன் உங்கண்ணி வாலெல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாதா? நீங்களும் அவங்கள ஏதும் கேட்க மாட்டீங்களா?” என கோவமாக கேட்டாள்.

“அடுத்து நீ ஸ்டார்ட் பண்ணாத. குளிச்சிட்டு வர்றேன் சாப்பாடு எடுத்து வை” என சொல்லி குளியலறை சென்று விட்டான்.

குளித்து விட்டு அவன்  வந்த போது படுத்திருந்தாள் அஞ்சலி.

“சாப்பாடுதானே உன்னை எடுத்து வைக்க சொன்னேன்?” என அதட்டல் போட்டான்.

அவனை முறைத்துக் கொண்டே எழுந்து சென்றாள். சாப்பிடும் போதும் அவனிடம் பேசவில்லை அவள்.

நடக்க அவன் அழைக்க, “என்னை ஏமாத்த மாட்டீங்கதானே நீங்க?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் வாய் வார்த்தையால சொல்ல முடியாதுடி. எம்மேல நம்பிக்கை இருந்தா வா” என சொல்லி வெளியேறி விட்டான்.

அவன் பின்னாலேயே மெல்ல நடை போட்டு வந்தாள் அஞ்சலி.

அவன் ஏதோ யோசனையிலேயே நடந்தான். மாமியார் பேசியதிலும் அதற்கு கணவன் சரியான பதில் தரவில்லை என்பதிலும் கோவமாக இருந்த அஞ்சலியும் அவனிடம் ஏதும் பேசவில்லை.

அவர்கள் சேர்ந்து நடக்க ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுதான் இப்படியொரு அமைதியான நடை. இருவருக்கும் இடையில் அவர்களின் நிழல்கள் தொட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு இடைவெளி.