பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -13

அத்தியாயம் -13

இரண்டாவது கட்ட கவுன்சிலிங் சென்று வந்து விட்டாள் அஞ்சலி. இப்போது அவளிடம் நல்ல மாற்றம். யுகியின் தொடுகையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள். காலை நேர நடைப் பயிற்சி யுகிக்கு சரி வரவில்லை, ஆகவே இரவில் மனைவியை நடைப் பயிற்சிக்கு அழைத்து செல்கிறான்.

அஞ்சலியின் பிறந்த வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் வைத்து கொடுத்த யுகியும் அஞ்சலியும் ஒரே நாளில் கோவை திரும்பியிருந்தனர்.

கணவனுடன் மகள் இணக்கமாக இருக்கிறாள் என நினைத்து அஞ்சலியின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அங்கிருந்த போது கார்த்திக் தங்கைக்கு அழைத்து பேச முயன்றான். அவள் பேச மறுத்தாள்.

 “இன்னும் கோவமா? என்னை கல்யாணம் பண்ணி வச்சதாலதான் கார்த்தி மேல கோவம்னா இனியும் பேசாம இருப்பியா?” எனக் கேட்டு யுகிதான் அவளை அவளின் அண்ணனோடு பேச வைத்திருந்தான். கல கலப்பான பேச்சில்லை என்றாலும் எப்படியோ தங்கை பேசி விட்டாள் என்பதிலேயே கார்த்திக்கிற்கு நிம்மதி.

இன்று இரவு யுகி வீடு வரவே நல்ல தாமதமாகி விட்டது. அஞ்சலிக்கு உறக்கம் வருவது போலிருக்க முன்னரே சாப்பிட்டு படுத்து விட்டாள். தூங்கிவிட்டாலும் ஆழ் மனதில் யுகி இன்னும் வந்து சேரவில்லை என்ற நினைவுதான்.

பத்து மணிக்கு மேலே வீடு வந்த யுகி, புரண்டு கொண்டேயிருந்த அஞ்சலியை பார்த்து விட்டு அவளருகில் சென்றான்.

“ஏய் என்ன உடம்புக்கு முடியலையா?” என அவன் கேட்கவுமே விழித்துக் கொண்டாள்.

“வந்துட்டீங்களா?” என மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே எழுந்தாள்.

“நான் வந்திட்டேன், நீ என்ன உருண்டுக்கிட்டே இருந்த, என்னாச்சு?”

“அப்படியா? தெரியலை” என சொல்லி எழுந்து கொண்டாள்.

நானே சாப்பிட்டுக் கொள்வேன், நீ படு என அவன் சொல்லியும் அவள் கேட்கவில்லை.

அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே, “உங்களோட ஒரு வாக் போகலைனா அந்த நாள் கம்ப்ளீட் ஆன மாதிரியே ஃபீல் ஆகாது” என்றாள்.

“இன்னிக்கு முடியாது, நான் ரொம்ப டயர்ட்” என்றான்.

“அப்படியா?” என்றவளின் குரல் உள்ளே போய் விட்டது.

அவளின் பாவனைகளை எல்லாம் கவனித்துக் கொண்டே சாப்பிட்டான். உன்னுடன் நடந்தால்தான் நாள் முழுமையடையும் என அவள் சொல்லும் போது சோர்வையெல்லாம் பொருட்படுத்துவானா என்ன? ஆனாலும் வர முடியாது என வம்பு செய்து கொண்டேதான்  சாப்பிட்டான்.

உணவு முடியவும் நேராக படுக்கையறைக்கு சென்றவனை பிடித்துக்கொண்டவள், “தெருமுனை வரை ஒரே ஒரு தடவ நடந்திட்டு வந்திடலாம்” என்றாள்.

“ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியாது” என சொல்லி கைகள் விரித்தான்.

“தூக்கிட்டு நடக்கவா?”

“என்ன!” என முதலில் அதிர்ந்தவன், “உன்னால தூக்க முடியுமா என்னை?” எனக் கேட்டான்.

உடனே அவனை தூக்க முயன்றாள் அவள். அவன் நெளிய, என்ன முயன்றும் முடியாமல், “இப்போ ஹெவியா சாப்பிட்டிட்டீங்க போல, வெறும் வயித்தோட இருக்கும் போது தூக்கிடுவேன்” என சொல்லி நகர்ந்தாள்.

மோவாயில் கை வைத்து சின்ன கேலி சிரிப்புடன் அவளை பார்த்தான்.

“டயர்டுன்னு சொல்றீங்க? முகமெல்லாம் பள பளன்னு இருக்கு. என்ன விஷயம்?” என விசாரித்தாள்.

“ரசிக்கிறியா என்னை?”

“ஹ்ஹ்ஹா என்ன? அப்படிலாம் இல்லை. நீங்களா ஏதாவது நினைக்காதீங்க. வாங்க நடக்கலாம்” என்றவள் அவன் கையை பிடித்திழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

ஷிவானியின் கல்லூரியில் ஏதோ விழா, அவள் அவளது தோழிகளுடன் நடனம் ஆட போகிறாள், ஷிவானியின் வீட்டில் தான் பயிற்சி நடக்கிறது, நானும் அங்குதான் இருந்தேன், நான் சொல்லிக் கொடுத்த நடன அசைவுகளை கூட ஆடுகிறார்கள் என கணவனுக்கு கதை சொல்லிக் கொண்டே நடந்தாள்.

“டான்ஸ் தேறுமா?” என கிண்டல் செய்தான் யுகி.

சுற்றிலும் பார்த்தவள் தான் கற்றுக் கொடுத்த நடன அசைவை அவனுக்கு ஆடிக் காட்ட, சட்டென அவளை பிடித்து நிறுத்தி விட்டான்.

“ரோட்ல ஆடுவியா அஞ்சலி?”

“இந்த டைம்ல யார் இருக்கா இங்க? நீங்க பயப்படற மாதிரி எந்த வீட்டு ஜன்னல் வழியா கூட நம்மள பார்க்க ஆள் இல்லை”

“அதெப்படி உனக்கு தெரியும், ஒழுங்கா நடக்க மட்டும் செய்” என சொல்லி அவளை விட்டான்.

அவனை விட்டு தள்ளி சென்றவள், “ரூல்ஸ் போட்டா கேட்க மாட்டேன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன். ஆட போறேன்” என சொல்லி அவனை கொஞ்சம் பதட்ட படுத்தினாள்.  வேண்டாம் என சொல்லிக் கொண்டே அவன் அவளை  பிடிக்க போக, அவனது கைக்கு அகப் படாமல் ஓடிச் சென்றாள்.

அவளை பிடித்து விட்டவன், “வாங்கிங் சொல்லிட்டு ரன்னிங் அழைச்சிட்டு போறியா என்னை?” எனக் கேட்டான்.

மூச்சு வாங்கிக் கொண்டே, “இப்போ யாரும் பார்க்க மாட்டாங்களா நம்மள?” எனக் கேட்டாள்.

பின்னாலிருந்து அவளது வயிற்றை சுற்றி வளைத்து பிடித்திருந்தான் யுகி. அப்போதுதான் உணர்ந்தவன் அவளை விட மனமில்லாமல் விட்டான். விலகி நின்றவள் பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து ஆசுவாசம் அடைந்தாள்.

உறக்கத்தின் பாதியில் எழுந்து விட்ட அலமேலு ஹாலில் விடி விளக்கு எரிவதை கண்டு விட்டு ஹால் வந்தார்.  கதவும் திறந்திருக்க வீட்டிற்கு வெளியில் வந்து விட்டார்.

சற்று தொலைவில் நின்றிருந்த மகனையும் மருமகளையும் பார்த்து கையசைத்து அழைத்தார். அவர்கள் பக்கத்தில் வரவும், “இந்நேரம் இங்க என்ன பண்றீங்க?” என அதட்டினார்.

“உங்க பையன்தான் அத்தை, சொல்ல சொல்ல கேட்காம நடக்கலாம்னு அழைச்சிட்டு வந்திட்டார்” என நல்ல பிள்ளையாக மாமியாருக்கு பதில் சொன்னாள் அஞ்சலி.

“இன்னிக்கெல்லாம் இருமிட்டே இருந்தாடா இவ, பனியில எதுக்கு இப்படி அலும்பு பண்றியோ, உள்ள வாங்க” என கடிந்து கொண்டு உள்ளே சென்று விட்டார் அலமேலு.

யுகி மனைவியை முறைக்க, வேண்டுமென்றே இரண்டு முறை இருமிக் காட்டியவள், கழுத்தில் கை வைத்து பார்த்து, “ ஜுரம் கூட அடிக்குது, ஏங்க இப்படி பண்றீங்க?”  எனக் கேட்டாள்.

அவன் அவளது காதை பிடித்து திருகினான்.  அவனது கையை தட்டி விட்டு மீண்டும் தெருவில் ஓடப் பார்த்தாள் அவள்.

“போதும் நாளைக்கு நடக்கலாம்” என சொல்லி அவளை பிடித்திழுத்தான். அவள் வேண்டுமென்றே வம்பு செய்ய, சட்டென அவளை தூக்கி விட்டான். திகைத்தவள் அவனையே பார்த்திருக்க, சின்ன சிரிப்பை சுமந்த படி கேட்’டுக்கு உள்ளே வந்துதான் நின்றான்.

அவள் அவனிடமிருந்து இறங்க முனைந்தாள். “உன்னை சமாளிக்க இன்னும் கொஞ்சம் சேர்த்து சாப்பிடணும் போல நான்” என சொல்லி அவனே அவளை தரையில் விட்டான்.

வணக்கம் வைப்பது போல கைகளை குவித்திருந்தவள் விரல்களை விரல்களால் மோதிக் கொண்டு, புருவங்களை உயர்த்தி, குழப்பம், பரவசம் என இரு வித உணர்வுகளோடு அவனை பார்த்திருந்தாள்.

அவளை அளவெடுப்பது போல பார்த்தவன், “உள்ள போ” என்றான். ஓடியே சென்று விட்டாள் அஞ்சலி.

அடுத்த நாள் கடைக்கு சென்ற யுகி மதிய உணவுக்கு கூட வீட்டுக்கு வரவில்லை. கடையில் ஆட்களும் இருக்க இவனுக்கு அப்படி என்னதான் வேலையோ என சலித்துக் கொண்டார் அலமேலு.