உலகெங்கிலும் ஆங்காங்கே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பூமியில் உதித்துத் தங்களது இறைவனின் புகழையும் பக்தி நெறியையும் மக்களுக்குப் பரப்பிய காலமது.
சைவர்களும் வைணவர்களும் நட்புறவாய் உறவாடி ஒன்றாக ஒரே வீதியில் வசித்திருந்த காலமது.
சிவவைகுண்டபுரம்!
குறிஞ்சி தேசத்தினுள் மேற்கு மலைத்தொடரையொட்டி இருக்கும் வளமான நாடு.
அந்நாட்டில் தோரணகிரி மலையடிவாரத்தில் கோதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகான சிற்றூர் ஆத்மநல்லூர்.
குறிஞ்சி தேசத்தினை இளஞ்சித்திரன் என்ற சிற்றரசன் தனது இல்லாளான மகாராணி உமையம்மையுடன் ஆண்டு வருகிறான். சிறந்த சிவபக்தனான அவனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாய் சுதந்திரமாக அவரவரின் விருப்பமான தொழிலைச் செய்தும் இறைவனை வணங்கியும் வாழ்ந்து வருகின்றனர்.
விடியற்காலை வேளையில் ஆத்மநல்லூர் ஊரின் மத்தியில் இருந்த அழகிய மாதவப்பெருமாள் கோவிலில் மணியடிக்க, மாடவீதியில் ஆங்காங்கே மக்கள் தலையில் பானைகளைச் சுமந்து கொண்டும், பசுவைக் கன்றுடன் இழுத்துச் சென்று கொண்டும், ஆற்றை நோக்கி நடந்து கொண்டும், இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் தங்களது காலைப்பணிகளைச் செய்த வண்ணம் கடந்திருந்தனர்.
ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்த அழகிய மாதவப் பெருமாள் கோவிலில்,
கரங்களைக் கூப்பியவளாய் கண்களை மூடியவாறு ஆழ்ந்த பக்தியுடன் தேன் குரலில் மூல ஸ்தானத்தில் இருந்த பெருமாளைத் துதி செய்துக் கொண்டிருந்தாள் அவள்.
அழகிய மாதவப் பெருமாள்!
பெயருக்கேற்றார் போன்று பேரழகனாய் காட்சியளித்த பெருமாளைக் கண்குளிர கண்டவளின் மனம் இன்புற்றிருந்தது.
அனுதினமும் நறுமண மலர்களால் தனது கையால் கோர்த்த மாலையினை மாதவனின் மார்பில் சாற்றிக் கண்ணாற கண்டு களிப்பவள் அவள்.
அவளின் பெயர் முத்தரசி!
கருத்த நிறத்தில் அழகு முகம், நீண்டு பின்னலிடப்பட்டக் கார்குழல், வில்லெனப் புருவம், நெற்றியில் நீண்ட நாமம், மையிட்ட கண்கள், தீட்சண்யமான பார்வை, செதுக்கி வைத்த நாசியில் பளபளக்கும் மூன்றுக்கல் மூக்குத்தி, வரைந்தார் போன்ற செவ்விதழ், இளம்பிராயத்தினளான அவளின் மேனியை உறவாடியிருந்த பட்டு வஸ்திரம் அவளின் அழகிற்கு மேலும் அழகூட்ட பேரழகியாய் இருந்தாள் அவள்.
தீபாராதனையைக் கண்டு களித்து கண்களில் ஒற்றி எடுத்தவள் பூக்கூடையைக் கையில் வாங்கியவளாய் நகர்ந்தாள்.
“முத்தரசி” என அழைத்தவாறு அவளின் முன்னே வந்து நின்றாள் ஒருவள்.
அவளைக் கண்டதும் முத்தரசியின் கண்கள் பளபளக்க, மூக்கில் இருந்த மூன்று கல் மூக்குத்தி ஜொலிஜொலித்தது.
“என்னடி மதி இன்று சூரியன் சுட்டுவிட்டதோ! வியர்வையில் குளிர்த்திருக்கிறாயே” நகைப்புடன் நிறைமதியைக் கேட்டாள் முத்தரசி.
நிறைமதி முத்தரசியின் பால்ய சிநேகிதி! இருவரின் இல்லமும் அருகருகே வீற்றிருக்க, பிறந்த பொழுதில் இருந்து ஒன்றாக உறவாடி உற்ற தோழிகளாகியிருந்தனர் இருவரும்.
“உன்னை தேடி ஓடி வந்ததனால் உண்டான வியர்வையடி இது! என்னை விட்டு வந்து விட்டாயே பெருமாளைத் தரிசிக்க?” புகார் பாடினாள் நிறைமதி.
“பின்னே கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே வந்தால் தான் எழுந்திருப்பேன் என்று நீ அடம்பிடித்து உறங்கினால் நான் என்ன செய்வது? அன்றாடம் பூரண அலங்காரத்துடன் இந்த பூரணனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாம், அவரிடம் அலட்சியமாய் இருக்கலாமா கூறு?” கண்டனத்துடன் கேட்டாள்.
“தவறு தானடி! இனி நானும் விரைவாய் உறங்கி எழ முயல்கிறேன்” என்றாள் நிறைமதி.
“நீயும் இவ்வாறு தான் அனுதினமும் கூறுகிறாயடி” நிறைமதியின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் முத்தரசி.
நிறைமதியும் முத்தரசியும் உரையாடியவாறே பிரகாரத்தைச் சுற்றி கொண்டிருக்க,
“ஓம் நம சிவாய சிவாய நம ஓம்”
திடீரென்று கேட்ட அந்தக் கணீர் குரலில் உடலில் புல்லரிக்க, “யாரடி அது! நாராயணர் சன்னதியில் ஈசனைப் பூஜிப்பது?” எனக் கேட்டவாறு குரலின் ஓசை வந்த திசை நோக்கி நடையிட்டாள்.
“நம் பெருமாள் கோவிலில் சிவன் சன்னதி உண்டல்லவா! அங்கு தான் யாரோ ஈசனை பூஜிக்கிறார்கள் போலும்” என்றாள் நிறைமதி.
பெரிய சிவலிங்கத் திருமேனியின் முன்பு கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தான் அவன்.
ஈசனின் நேசனான சிவநேசன்!
நற்றவா உனை நான் மறக்கினும், சொல்லும் நா நமசிவாயவே எனும் சுந்தரரின் வாக்கிற்கு ஏற்ப, அன்றாடம் இத்திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்காது அவனின் பொழுது புலராது. ஈசனிடம் அத்தகைய பக்தியினைக் கொண்டவன் அவன்.
வெந்நிற வேட்டியினை இடைக்கச்சையோடு உடுத்தியிருந்தவன், அக்கச்சையினூடே உடைவாள் வைத்திருந்தவனாய், கழுத்தினில் ருத்ராட்சம் அணிந்து தோளைச் சுற்றி அங்க வஸ்திரம் போன்று வெந்நிற துணியைச் சுற்றியிருந்தவனின் உடல் முழுவதும் ஆங்காங்கே மூன்று பட்டையான திருநீறு தரித்திருந்தான்.
தோள் வரை புரளும் சுருள் சுருளான கேசம், வலிமையான தோள்கள், அடர்ந்து நீண்ட புருவங்கள், நெற்றியில் மூன்று பட்டையான திருநீறும் மத்தியில் குங்குமுமென திலகங்கள், அடர்ந்த முறுக்கிய மீசை, அழுத்தமான இறுக்கமான உதடுகள் என தெய்வீகக் களை பொருந்தியவனாய் நிறைந்த பக்தியுடன் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் சிவாய மந்திரத்தை உச்சரித்தவாறு அமர்ந்திருந்தவனின் கம்பீரமான தோற்றம் கண்டு புல்லரித்தது முத்தரசிக்கு.
முத்தரசியும் நிறைமதியும் சிவலிங்கத்தின் முன் வந்து நின்றதுமே அவனின் குரலில் கட்டுண்டவர்களாய் அப்படியே நின்று விட்டனர்.
முத்தரசியின் கண்கள் அவனின் முகத்தைத் தாண்டி நகரவில்லை. அவனின் கம்பீரமான குரலும் தோற்றமும் அவளைக் கவர்ந்திழுக்க, பார்வையை நகர்த்தாது இமை சிமிட்டாமல் அவனைப் பார்த்திருந்தாள் முத்தரசி.
முத்தரசியின் பார்வையில் தெரிந்த மையலில் தோழியின் தோளைத் தொட்ட நிறைமதி, “ஈசனின் அடியவர் ஈர்த்து விட்டாரே எங்களின் முத்தரசியை” என்று காதோடு கேலியாக உரைத்தாள்.
அன்றாடம் பெருமாளின் அலங்காரத்தை ரசிக்கும் இந்தக் கண்கள் இன்று ஈசனின் அடியவரை ரசித்து விட்டதே! குற்றவுணர்வு கோபத்தை விளைவிக்க, சட்டென முகத்தைத் திருப்பி தோழியைத் தீப்பார்வை பார்த்து வைத்த முத்தரசி,
“பெருமாளின் அழகிற்கு எம்பெருமான் ஈசன் கூட நிகராகார் மதி! எவ்விதம் ஈசனின் அடியவரின் அழகிற்கு மயங்கி நிற்பேன் நான்” என்றவளாய் நிறைமதியின் கைப்பிடித்து அங்கிருந்து நகர்ந்து செல்ல, இதனை கேட்டு கண் விழித்த சிவநேசன் முத்தரசியை கோபக்கனலுடன் பார்த்தான்.
‘என்னே திமிர் பேச்சு இப்பெண்ணிற்கு!’ அவளிடம் சண்டையிட துடித்தது அவன் உள்ளம். ஆயினும் வேண்டாம் என புத்தி தடுத்தது.
அவளின் தோற்றமும் முக உணர்வுகளும் வினயமாக இதனை அவள் கூறவில்லை என்று அவனின் புத்தி எடுத்துரைக்க,
‘ஓம் நமசிவாய’
மந்திரத்தை உச்சரித்து அக்கோபத்தை அடக்கியவனாய் தனது தியானத்தைத் தொடர்ந்தான்.
கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தவனின் மனக்கண்ணில் அவளின் மூக்குத்தி மின்னி மறைய சட்டெனத் தலையை உலுக்கிக் கண்களைத் திறந்தவன், ‘இன்றைய என் தியானத்தைக் கெடுக்கவெனவே வந்திருப்பாள் போலும்’ கோபத்துடன் எண்ணிக் கொண்டவனாய் சிவலிங்கத்தினை அணைத்து ஆவுடையார் மீது தலை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்தினான்.
கோபம் மேலோங்க ஈசனைக் குறித்து கூறியவளின் மனசாட்சி, அவ்வார்த்தையை உதிர்த்த மறுநொடியே, அவள் கூறியது தவறென மண்டையில் குட்டி எடுத்துரைக்க, மேலும் அங்கு நிற்க இயலாமல் தான் உடனே நகர்ந்தாள் முத்தரசி.
‘மன்னிக்கனும் மாதவா’ மனதோடு மன்னிப்பு வேண்டியவளாய் பிரகாரத்தைச் சுற்றி வந்தவளின் அருகில் வந்து கொண்டிருந்த அவளின் தோழி நிறைமதி, “என்னவாயிற்று என் தோழிக்கு? முகத்தினில் ஏனிந்த கலக்கம்?’ எனக் கேட்டாள்.
“நான்.. எப்படி?” எனக் கலங்கிய கண்களுடன் முத்தரசி தடுமாற,
தோழியின் கலங்கிய முகத்தை காணச் சகிக்காதவளாய், “என்னால் தானே நீ அப்படிப் பேசினாய்! என் கேலிப் பேச்சு தானே உன்னை அவ்வாறு பேச தூண்டியது! நானே உனக்காக அவரிடம் பேசுகிறேன்.. வா” என முத்தரசியின் கைப்பிடித்து சிவன் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றாள் நிறைமதி.
தூரத்தில் நடந்தவாறு வந்தவர்களுக்கு அவன் சிவலிங்கத்தினை அணைத்திருக்கும் காட்சி கண்களுக்குப் புலப்பட, “இத்தனை தீவிர பக்தரின் மனம் நோகும் வகையில் பேசி விட்டேனே! அந்நேரம் என் நாவில் சனீஸ்வரர் தான் அமர்ந்திருந்தார் போலும்” மனத்தாங்கலுடன் உரைத்தாள் முத்தரசி.
சிவலிங்கத்தின் முன் விழுந்து வணங்கி எழுந்தவனாய் அங்கிருந்த வாயிலின் வழியாக வெளியே சென்றவனைப் பார்த்து அச்சன்னதி நோக்கி ஓடாத குறையாக இருவரும் செல்ல, ஐயனே என்ற இவளின் அழைப்பு அவனை எட்டாது போனது.
“என்னடி இப்படி ஆகி விட்டது! சென்றே விட்டாரடி” என்று முத்தரசி கவலையுடன் கூற,
“நம்மூருக்கு புதிதாய் வந்திருக்கிறார் போலும்! இதற்கு முன் இவரை எங்கும் கண்டதாய் நினைவில்லையே அரசி! யாரென்று தெரிந்தால் அவரின் இடத்திற்கு நேரிலேயே சென்று பேசி விடலாம்” என்றாள் நிறைமதி.
“முன்பே கண்டிருந்தால் நான் ஏன் இன்று அவரை வெறித்துப் பார்த்திருக்கப் போகிறேன்” தன்னையும் மீறி கூறியப்பின் நாவைக் கடித்துக் கொண்டவளாய், “நாராயணா!” எனக் கன்னத்தில போட்டுக் கொண்ட முத்தரசி,
“இன்று எனக்கு என்னவாயிற்று” என்று தலையில் கை வைத்தவளாய் சிவலிங்கத்தின் முன் அமர்ந்து விட்டாள்.
தோழியின் கூற்றை ஆமோதித்து கைக் கூப்பி கண் மூடி வணங்கி நின்ற முத்தரசி, “இது நாள் வரை தங்களை வணங்காத நான், இன்று தங்களின் அடியவரின் மனத்தை வருத்தியதற்காக மன்னிப்பு வேண்டி வணங்கி நிற்கிறேன் ஈசனே! அவருக்கு மன அமைதி அளித்து எம் குற்றயுணர்வையும் களைவீராக எம்பெருமானே” என்று விழுந்து வணங்க,
அவளின் இச்செய்கையை அச்சன்னதியின் வாயிலில் இருந்து பார்த்தவனாய் கடந்து சென்றான் சிவநேசன்.
முத்தரசி விழுந்து வணங்குகையில் மனக்கண்ணில் தோன்றிய சிவநேசனின் மதிமுகத்தையும் நெற்றியின் திருநீறையும் கண்டு தலையை உலுக்கியவளாய் சட்டெனக் கண்களைத் திறந்தாள்.
******
“பிரம்மனின் அகந்தை அழிக்க, சிவபெருமான் அவரின் தலையைக் கொய்ததினால் உண்டான தோஷத்தினை நிவர்த்திச் செய்ய, ஈசன் இத்தலத்தின் பெருமாளை வணங்கியதாக எம் மன்னர் இளஞ்சித்திரனின் பாட்டனார் கனவில் காட்சியளித்த சிவபெருமானார் எடுத்தியம்பினார். அவ்விடத்தில் சிவனுக்கான சன்னதியை உருவாக்கிய அம்மன்னர், உம்மை வணங்கும் அடியவருக்கு இருக்கும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமென ஈசனிடம் வேண்டுதல் வைத்தாராம். அதன் பொருட்டே இப்பெருமாள் கோவிலில் எம்பெருமான் ஈசன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்”
ஓலை கூரையுடன் மரச்சட்டங்களாலான அவ்வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் இக்கதையினை தன் முன் நின்றிருந்த இளைஞனிடம் உரைத்திருந்தார்.
அரசாங்க முத்திரை பதித்த பட்டு வஸ்திரம் அணிந்து அமர்ந்திருந்த அப்பெரியவர், கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் அரசாங்க சோதிடர் மதுரகவிராயர் ஆவார்.
“இந்தத் தேசத்தின் மன்னர் பரம்பரை முழுவதும் சிவனை வழிபடுபவர்கள் தானே! எவ்வாறு அவர்கள் இங்கு பெருமாள் கோவிலை கட்டினார்கள்?” எனக் கேட்டான் செழியன்.
“எம்மன்னர் பரம்பரை சிவனடியவர்கள் ஆயினும் அவர்களின் சம்மந்திகளாய் ஆனவர்கள் அனைவரும் பெருமாள் அடியவர்களின் பரம்பரை செழியா! அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை வாழ்வியலாய் கொண்ட தேசமிது செழியா” பெருமிதத்துடன் கூறினார் மதுரகவிராயர்.
வீட்டின் வாயிலில், “மாலை சந்திக்கலாம் மதி” என்றவாறு தோழியிடம் கூறிவிட்டு உள்ளே நுழைந்த முத்தரசி தந்தையின் உடுப்பை கண்ணுற்றவளாய், “அரண்மனைக்கு செல்கிறீர்களா தந்தையே?” எனக் கேட்டாள்.
செழியனின் பார்வை ரசனையாய் முத்தரசியின் மீது படிந்திருந்தது.
“ஆம் மகளே! அவசர ஆலோசனைக் கூட்டம் திட்டமிடப்பட்டிருப்பதை அரசாங்கக் காவலர் வந்து கூறி விட்டு சென்றார்” என்றவர் சொன்னதும் அவள் வீட்டினுள் செல்ல எத்தனிக்க,
“என்னம்மா விருந்தாளியை உபசரிக்காமல் செல்கிறாயே? தாயில்லா பெண் என்று செல்லம் கொடுத்து மரியாதை தெரியாது வளர்த்து விட்டேன் என ஊரார் தூற்றமளவு நடந்து கொள்ள கூடாது மகளே” மகளுக்கு அறிவுறுத்தியவராய் அவளை பார்க்க,
செழியனின் மையல் பார்வையைப் பிடிக்காதவளாய் கண்டும் காணாது சென்றவள் தந்தையின் வாய் மொழியில், “மன்னியுங்கள் தந்தையே” என்று விட்டு, செழியனை வரவேற்று உணவளித்து உபசரித்தாள்.
அவளின் உபசரணையை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான் செழியன்.
“நானும் செழியனும் அரண்மனைக்கு சென்று வருகிறோம்மா” என்றவராய் லாயத்திலிருந்த குதிரையில் ஏறி அமர, தனது குதிரையில் ஏறி அமர்ந்தான் செழியன்.
அவர்கள் அரண்மனை நோக்கிச் செல்ல, தனது அன்றாட பணியில் மூழ்கிப் போனாள் இவள்.
மாலை வேளையில் முத்தரசியும் நிறைமதியும் ஆற்றங்கரையை நோக்கி சென்று கொண்டிருக்க, வழியினில் சிவநேசன் உடைவாளைக் கையினில் பிடித்தவாறு ஒருவனை நோக்கி கோபாவேசமாக ஓடிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு அதிர்ந்து விழித்தனர் தோழிகள் இருவரும்.