சூரியன் 16

“என்னடா நடந்தது?” இனியவனிடம் கேட்டார் அவன் தாய்..

அவன் ஏதும் கூறாமல் அறைக்கு செல்ல, விஷ்ணுவும் பின்னே சென்றான்.

“மாப்பிள்ள, புள்ளைய பார்த்துக்கோங்க. நான் இப்ப வந்துடுறேன்” கூறி குழலி நகர, ரதியும் சஞ்சயும் அறையில் அமர்ந்தனர்.

“எல்லாரும் இவளை அநாதைன்னு சொல்றாங்களே!” வேதனையில் பிரியசகியை பார்த்தவாறே அமர்ந்திருந்தான் சஞ்சய். ரதி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மருத்துவமனை சென்ற ரதி ரக்சனாவை சந்திக்க அவளறைக்கு சென்றாள்.

“கண்டிப்பா செய்யணுமா?” ரக்சனா வருத்தமுடன் கேட்டாள்.

“ம்ம்! ரக்சி மேம்கு இன்னும் இரு நாட்களில் நிச்சயம். தயாரா இருக்கீங்களா?” ரக்சனா கழுத்தை கட்டிக் கொண்டு ரதி கேட்டாள்.

“ம்ச்ச்…அதான் கவலையா இருக்கு ரதி” ஓரக்கண்ணால் அவளை பார்த்தாள் ரக்சனா.

ரக்சி உனக்கு மாப்பிள்ளையை புடிக்கலையா?

பிடிச்சிருக்கு. நல்லா தான் பேசுறாரு.

“மேம்” செவிலியர் சத்தமிட, “எஸ் கம் இன்” நகர்ந்தாள்.

“மேம் நான் கிளம்புகிறேன்” ரதி கூற, அவளது காதில் எதையோ ஓதி ரக்சனா கட்டை விரலை உயர்த்தினாள்.

இனியவன் இந்துஜாவிடம் பேச வரும் போதெல்லாம் அவனை விட்டு விலகி சென்று கொண்டிருந்தாள் அவள்.

அவன் அவளை சாதாரணமாக பேசவில்லையே! அவளை பேச வைக்க போராடி தோற்றுக் கொண்டிருந்தான். குழலியிடம் கூட பேசி விட்டாள். அவர்கள் சஞ்சய் வீட்டிலிருந்து கிளம்பும் போது கூட இந்துஜா மனமிறங்கவில்லை. பதிலாக வேண்டுமென்றே ராக்கியின் தந்தையிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தாள். வருத்தமுடன் இனியவன் நகர்ந்தான்.

கமலா யார் கைக்கும் சிக்காமல் மறைவில் இருந்தாள். அவளை கண்டறிய போலீஸ் டீம் ஏற்பாடு செய்து ஏதும் நடக்கவில்லை..

    (இரு மாதங்களுக்கு பின்)

பிரியசகியின் உடல்நிலை ஓரளவிற்கு நன்றாக இருந்தது. பிரசாத் சென்னைக்கு மாற்றலாகி தன் பாரஸ்ட் ஆபிஸில் பணியாற்றிக் கொண்டிருந்தான். நவீனும் சென்னையிலே தனியார் நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். சஞ்சயின் கட்டாயத்தில் யாரும் அவ்வீட்டை விட்டு செல்லவில்லை. சுவர்ணலதாவும் மாறிய பாடில்லை.

பிரியசகி உடல் நிலை தேறவும் அவளே அடுக்கலையில் அவர்களுக்கான உணவை தயாரித்தாள். சஞ்சய் தான் செலவுகளை பார்த்துக் கொள்கிறான்..

ரக்சனாவின் திருமணபத்திரிக்கை வைக்க, சந்திரசேகரும் ரக்சனும் வந்திருந்தனர்.

பிரியசகி தோழின்னு சொல்லி இத்தனை வருடம் கஷ்டப்பட விட்டிருக்கீங்க? என ரக்சன் மேலும் வார்த்தைகளால் இந்துஜாவை காயப்படுத்த, சந்திரசேகர் அவனை அதட்டி அழைத்து சென்றார்.

ரக்சன் பேசும் போது மாறி இருந்த இந்துஜா முகம் அவர்கள் செல்லவும் கண்ணீருடன் வெளியே ஓடினாள்.

“ம்ச்ச்…இந்து போகாத…” சஞ்சய் அழைக்க, அவள் சென்று விட்டாள்.

இவள…

“தேடலாம் வாங்கடா. பார்த்துட்டா கால் பண்ணுங்க” சஞ்சய் கூற, இந்துஜாவை தேடி ஆளுக்கோர் திசையாக சென்றனர்.

அடுத்த வீதியில் இருக்கும் ஹோட்டலுக்கு அழுது கொண்டே நுழைந்தாள் இந்துஜா. கூட்டம் அதிகமில்லை ஒரு மேசையில் மட்டுமே ஆட்கள் இருந்தனர்.

இந்துஜா ஓர் மேசையில் அமர்ந்து தலையை மேசையில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள். இனியவன் அங்கு தான் தன் கல்லூரியில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்தான்.

திகைத்து இந்துஜாவை கண்டு அவன் எழ, கடை உரிமையாளர் “மேம்” அழைத்தார்..

“டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ்” மேலும் அழுதாள்.

அவன் அருகே செல்ல, கதவை திறந்து பிரசாத்தும் நவீனும் வந்தனர். அவர்களை பார்க்கவும் இனியவன் நடை நின்றது.

“இந்து, என்ன பண்ற?” பிரசாத் பல்லை கடித்தான்.

எல்லாரையும் பார்த்தவாறு நவீன், அவளருகே நாற்காலியை இழுத்து அமர்ந்தான்.

அவளது முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து, “யார் என்ன சொன்னால் என்ன? இதெல்லாமா பெருசா எடுத்துப்ப?” புரிய வைக்க முயன்றான்.

“இனி நான் அங்க வர மாட்டேன்” இந்துஜா கூறினாள்.

“சஞ்சய் மாமாவுக்கு தெரிந்தால் கோபப்படுவார். நீ இருப்பதால் தான் பிரியாவும் அவர் வீட்ல இருக்கா..” சினமுடன் பிரசாத் அவளை முறைத்தான். இந்துஜா வெறித்தவாறு அவனிடம் ஒரு காகிதத்தை கொடுத்தாள்.

“என்ன இந்து?” எட்டிப் பார்த்த நவீன் அதிர, மேலும் அவளை முறைத்தான் பிரசாத். இவர்களை கண்டு உள்ளே வந்த சஞ்சய் தன் தங்கையை பார்த்தவாறு காகிதத்தை பிடுங்கினான்.

அக்காகிதத்தில் இருந்ததை கண்டு, “என்ன இந்து இது?” சத்தமிட்டான் சஞ்சய்.

மெதுவாக எழுந்தாள் இந்துஜா.

இந்துஜா சஞ்சய் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவர்களுக்காக அவன் செலவு செய்ததை எழுதி இருந்தாள்.

சொல்லு…??? கத்தினான்.

“சார், உங்க பிரச்சனையை வெளியே போய் வச்சுக்கோங்க. கஸ்டமர் வர மாட்டாங்க” ஓனர் கூற, சஞ்சயை பார்த்து “இதுக்கான பணத்தை நான் தந்திடுவேன்” என கூறி வேக நடையிட்டு வெளியே சென்றாள்.

கோபமான சஞ்சய் வெளியேற, பிரசாத் நவீனும் அவனை பின் தொடர்ந்தனர்.

இனியவன் தன்னுடன் வந்தவர்களிடம் கூறி அவனும் வெளியே அவர்களை தேடி சென்றான்.

மரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த அழகாக அச்சாலையில் கண்ணீருடன் நடந்து கொண்டிருந்தாள்.

இந்து, நீ என்ன செஞ்சுட்டு இருக்க?

“நான் என்னோட ராகவன் மாமாவை தான் திருமணம் செஞ்சுக்க போறேன்” அவள் கூறவும் சஞ்சயும் அதிர்ந்து அவளை பார்த்தான்.

“ஜா, உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா? என்ன சொல்ற?” நவீன் சினமாக,

ஆமா நவீன் நான் மாமாவை தான் திருமணம் செய்யலாம்னு இருக்கேன். ராக்கியையும் பார்த்துக்கலாம்ல?

“உனக்கு மாமாவின் பழக்கவழக்கமெல்லாம் பிடிக்காது இந்து. புரிஞ்சுக்கோ” சஞ்சய் கூறினான்.

“இல்லை” தலையசைத்து, “எல்லாமே நமக்கு பிடிக்கிறது தான் நடக்குமா அண்ணா? அப்படின்னா நீ ஏன் பிரியாவிடம் உன் காதலை கூறவில்லை. எனக்கு கூட தெரியாது..” இந்து கேட்க, இனியவன் பின்னே ராக்கியுடன் வந்த பிரியசகி அதிர்ந்து சஞ்சயை பார்த்தாள்.

“சொல்லு அண்ணா? நீ எப்பொழுதிலிருந்து பிரியாவை காதலிக்கிற?” சஞ்சயை நெருங்கினாள் இந்துஜா.

நானும் பிரியாவும் காதலிக்கும் முன்னிருந்தே சஞ்சய் மாமா பிரியாவை காதலிக்கிறார் ஜா என்றான் பிரசாத்.

“அண்ணா இன்னும் தான அவளை காதலிக்கிற? சொல்லு?” அவனது காக்கி உடையில் கை வைத்தாள். அவளது கரம் பிடித்து விலக்கிய சஞ்சய்,

“இதில் கை வைக்காத” இந்துஜா கரத்தை எடுத்து விட்டான்.

சரி சொல்லு?

ம்ம்! என்னுடைய பதினாறாம் வயதிலிருந்து சகியை காதலிக்கிறேன். இப்பொழுதும் காதலிக்கிறேன். அதுக்கென்ன?

அதனால தான் எந்த பொண்ணு பார்த்தாலும் வேண்டாம்னு தள்ளி போட்டுட்டு இருக்கியா?

ஆமா…

“பதினாறு வயதிலா? என்னை இவர் காதலிக்கிறாரா? அதனால தான் இவ்வளவு செய்கிறாரா?” அதிர்ச்சி மாறாமல் ராக்கியை பிடித்தவாறு நின்றாள் பிரியசகி.

“பெரியம்மா, பெரியப்பாவுக்கு எப்பொழுது தெரியும்?” இந்துஜா கேட்க, இதை கேட்டு மேலும் திகைத்தாள் பிரியசகி.

சகியோட திருமணத்தன்று..

“முன்னாடியே சொல்லி இருந்தேனா? அவ வாழ்க்கை இப்படி பாழாகி இருக்காதேடா” கோபமாக தன் அண்ணனை தன்னால் முடிந்தவரை அழுது கொண்டே அடித்தாள்.

சகி திருமணம் என்று தெரியாமல் தான் பயிற்சியிலிருந்து நம் ஊருக்கு வந்திருந்தேன். என் காதலை கூறி திருமணத்தை நிறுத்த எண்ணிய போது தான் அவளும் அவ பாட்டியும் சந்தோசமா இருந்தாங்க இந்து. சரணின் நல்ல மனதை எண்ணி விலகிக் கொண்டேன்..

“பிரசாத்திடம் காதலை கூறப் போவதாக பிரியா என்னிடம் கூறும் போது அருகே தான இருந்த? அப்பவாது சொல்லி இருக்கலாமே!”

அவள் விருப்பத்தை என்னால தடுக்க முடியல..

“மாமா, நீங்க தப்பு பண்ணீட்டீங்க. அவ நீங்க செய்ததை நான் செய்ததாக எண்ணி தான் காதலித்து இருக்கிறாள்” பிரசாத் கூறினான்.

சஞ்சய் புரியாமல் பிரசாத்தை பார்த்தான்.

“சித்து…” ராக்கியின் குரலில் அனைவரும் அதிர்ந்து கண்ணீருடன் நின்ற பிரியசகியை பார்த்தனர். சஞ்சய்கு மனம் படபடவென அடித்தது.

ராக்கி பிரியசகியை விட்டு சாலையை கடந்து வர, உணர்வு வந்து அவனை பிடிக்க வந்தாள் பிரியசகி. அப்பொழுது ஜீப் ஒன்று விரைந்து வந்து அவர்களை இடிக்க வந்தது.

பயத்தில் ராக்கியை அணைத்து அவனை திருப்பி பிரியசகி ஜூப்பின் முன் நிற்க, இனியவன் விரைந்து இருவரையும் இழுத்தான்.

அனைவரும் திகைத்திருக்க, சஞ்சய் பழக்கதோசத்தில் கல்லை எடுத்து ஜீப்பில் செல்பவனை விட்டெறிந்தான்.

இவன் செய்கையில் கீழே விழுந்திருந்த பிரியசகி எழ தோன்றாமல் அதிர்ந்து சஞ்சயை பார்த்தாள்.

பிரசாத் புன்னகையுடன் அவளருகே வந்து கரம் நீட்டினான்.

பிர..பிரசாத் அ…அது….நீயில்லையா? கேட்டாள்.

இல்லை, நீ எங்க என்னை பேச விட்ட? இது மட்டுமல்ல பன்னீரின் தோழன் உன்னை கேலி செய்த போது அடித்ததும் சஞ்சய் மாமா தான். தாமரைக்குளத்துல்ல நீ தத்தளித்த போது உன்னை காப்பாற்றியதும் அவர் தான். உனக்கு காய்ச்சலாக இருக்குன்னு  மருந்து வாங்கி கொடுத்துட்டு போனார். எல்லா இடத்திலும் நான் அவரருகே இருந்தேன். உனக்கு அது தவறாக பட்டுவிட்டது..

“அடுத்தாவது சொல்லி இருக்கலாமே!” இந்துஜா பிரசாத்தை வெறித்தாள்.

இதெல்லாம் நாங்கள் காதலிக்கும் போது தான் கூறினாள். எனக்கு அன்று புரிந்தாலும் எனக்கு உதவியாக நிறைய இடத்தில் அவளும் இருந்திருக்காள். என்னால அவளை விட முடியவில்லை. எங்களது காதல் முறிவான அன்று சஞ்சய் மாமா தான்னு சொல்ல வந்தேன். ஆனால் அதற்குள் பிரியா என்னை தவறாக பேசவும் கோபத்தில் அவளிடம் பேசுவதையே நிறுத்திட்டேன். அதன் பின் நாங்கள் பேசிக் கொண்டதேயில்லை.

“முதல்ல எழுந்திரு” இனியவன் பிரியசகியை தூக்கி விட்டான்.

அவள் சஞ்சயை பார்த்துக் கொண்டே ராக்கியை தூக்கி வீட்டிற்கு கிளம்பினாள்.

அண்ணா..போ, பேசு.

“என்ன பேசணும்?” சஞ்சய் கேட்க,

“பேச ஒன்றுமில்லையா?” சினமுடன் கேட்டாள் இந்துஜா.

“நீ முதல்ல இந்த மாதிரி லிஸ்ட் போடுறத நிறுத்து. இது நம்ம வீடு. வீட்டை விட்டு போறேன்னு..ஓடாம இருப்பேன்னு சொல்லு” பிடிவாதமாக சஞ்சய் கேட்க,

சரி..வா..

“யாரும் பிரியசகியிடம் என் காதலை பற்றி பேச வேண்டாம்” என கூறி அனைவருடன் வீட்டிற்கு வந்தான் சஞ்சய்.

அன்றிலிருந்து சஞ்சய் வீட்டிற்கு அதிகம் வருவதை தவிர்த்து வந்தான். காலை உணவை முடித்து கிளம்பி இரவு தான் வருவான். பிரியசகி உறங்கிய பின் தான் வருவான். அவள் உறங்கும் நேரம் அவளை கண்ணில் நிரப்பி சென்று விடுவான்.

இனியவனோ எதையோ இழந்தது போல வீட்டில் அமைதிக்கும் அமைதியாக இருந்தான். என்ன விசயம்? என்று கேட்க முடியாமல் குழம்பி போனார்கள் விஷ்ணுவும் குழலியும்..

கமலா இன்னும் பிடிபடாமல் இருக்கவே பிரியசகியினுள் ஓர் தவிப்பு. எங்கே யாரையும் பயன்படுத்தி இந்துவிடம் வந்து விடுவாளோ என்று சிந்தனையுடன் விழிகளை மூடி இருந்தாள்.

பணி முடிந்து வந்த சஞ்சய், பிரியசகி உறங்கி விட்டாலென எண்ணி அவளருகே நாற்காலியை போட்டு பிரியசகி மீது கை போட்டு உறங்கும் தன் தங்கையை பார்த்தான். இந்துஜா அருகே சென்று அவளது கரம் பற்றி அவளை சிலமணி நேரம் பார்த்து விட்டு நாற்காலியில் பிரியசகியை பார்த்தவாறு அமர்ந்தான்.

யாரோ வந்திருக்கிறார்கள் என எண்ணியவள் சஞ்சய் தான் எனவும் அறிந்து கொண்டாள். விழிகளை மட்டும் திறக்கவில்லை. அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். என்றைக்கும் இல்லாமல் அவளது இமைகள் லேசாக அசைய..விழித்திருக்கிறாள் என்று கண்டுகொண்டான்.

எழுந்து சன்னல் பக்கம் நின்றான். இமை பிரித்து அவனை கண்டாள் பிரியசகி. சஞ்சய் அலைபேசி ஒளிர, “சஞ்சய் சார்” அழைத்து கைபேசியை காட்டினாள்.

அவன் அதனை எடுத்து குறுஞ்செய்தியை பார்த்து, அவனும் அனுப்பினான்.

“நீ தூங்கலையா?” விழிகள் அலைபேசியில் இருந்தாலும் கேள்வி பிரியசகியிடம்..

உறக்கம் வரவில்லை..

“ஏன்?” அலைபேசியை அணைத்து அவளை பார்த்தான்.

தயக்கமுடன், “அவங்கள கண்டுபிடிச்சிட்டீங்களா?” கேட்டாள்.

உன்னோட அத்தையை கேக்குறீயா?

அவனை முறைத்து, “கமலாவை தான் கேட்கிறேன்” என்றாள்.

குறுஞ்சிரிப்பு அவன் உதட்டில் தோன்ற, “ உனக்கு ஏதாவது தெரியுமா? நீ உடல்நலமில்லாமல் இருந்ததால் தான் கேட்கவில்லை”..

தெரியல. நான் வீட்டை விட்டு வெளியே வந்ததில்லை. சரண் தான் அழைச்சிட்டு போவான். அதுவும் எப்பவாது..

வீட்ல என்ன செய்வ?

தேனு அக்காவுக்கு வீட்டு வேலை செய்ய உதவினேன். பின் என் உடல்நிலை ஒப்பவில்லை..

தொலைக்காட்சி பார்ப்பாயா?

கமலா, சரண் வீட்ல இல்லாத நேரம் தான் பார்ப்பேன்..

ஓ!

நீங்க தினமும் வீட்டிற்கு வர இவ்வளவு நேரமாகுமா?

மிகவும் முக்கிய அவசர கேசாக இருந்தால் வீட்டிற்கு வர முடியாமல் கூட போகும். ஆனால் அப்பாவிற்கு மெசேஜ் போட்ருவேன்…

இவர்கள் பேசவும் விழித்த இந்துஜா மறுபக்கம் திரும்பி படுத்து இவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

குட் நைட்…தூங்கு…

சாப்பாடு…???? எழுந்து அமர்ந்தாள்.

புன்னகைத்த சஞ்சய், வெளிய சாப்பிட்டேன்..

“எதுக்கு சிரிக்கிறார்?” அவள் மனதினுள் எண்ண, சஞ்சய் புன்னகையுடன் செல்வதை இந்துஜா கவனித்தாள்.

இத்தனை நாள் இல்லாமல் இன்று மட்டும் கேட்கிறாள் எண்ணத்துடன் அவனறைக்கு சென்றான். மனதினுள் சஞ்சய்கு ஓர் நிறைவு. பிரியசகி அவளாகவே பேசி விட்டாள் என்று….

அடுத்த நாளும் இரவு உறங்க முடியாமல் இருந்த பிரியசகிக்கு ஏதோ அரவம் கேட்டது. சஞ்சய் அவளது அறையை கடந்து சென்று கொண்டிருந்தான். இவளும் அவன் பின்னே செல்ல, நின்றவன் வெளிச்சன்னலை திறந்தான். அவன் விழிகளின் அலைப்புறுதலை கண்டு புரியாமல் அவனை பார்த்தாள்.

விரைந்து சன்னலை அடைத்து கதவை திறந்து வெளியே சென்றான். பிரியசகியும் வெளியே சென்றாள்.

வீட்டின் வெளியே நீர் நிறைந்த தொட்டியிலிருந்து ஒருவன் வீச்சரிவாளுடன் தலையை தூக்கி வெளியே வந்து குதித்து சஞ்சயை பார்க்க, அவ்வப்போது மறைந்திருந்த ரௌடி கும்பல் சஞ்சய் வீட்டில் அவனை சுற்றி வளைத்தனர்.

திகைத்து பார்த்த பிரியசகிக்கு சஞ்சய் கைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. அவள் அவனையும் வீட்டினுள் அவன் வைத்து சென்ற கைபேசியையும் பார்த்தாள்.

ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தாள்.

இந்துஜாவின் அக்கா கணவன் ராகவன் அழைத்திருந்தார்.

“மாப்பிள்ள, எங்க இருக்க? ஒரு பிரச்சனை” அவர் கூற,

“அண்ணா வீட்டுக்கு வெளிய சஞ்சய் சாரை சுற்றி ஆட்கள் அரிவாள் கத்தியுடன் நிக்கிறாங்க. பயமா இருக்கு..” பதட்டமுடன் பிரியசகி கூறினாள்.

பிரியாவா?

ஆமா அண்ணா..

அங்க தான் வந்துட்டு இருக்கேன். பயப்படாத. அவங்க வீட்டுக்குள்ள வராத வரை பிரச்சனையில்லை. எத்தனை பேர் இருப்பார்கள்?

அஞ்சு பேர்…

உஃப் காற்றை ஊதி தள்ளி, பைவ் தான சஞ்சய் சமாளித்து விடுவான். நான் வந்துட்டு இருக்கேன். நீ கதவை பூட்டிக்கோ சொல்லி அவர் துண்டித்து விட்டார்..

“கதவை பூட்டணுமா?” இவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்று சஞ்சயை பார்த்தாள். அவன் சாதாரணமாகவே அவர்களை தடுத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இவளுக்கு தான் பயமாக இருந்தது. பிரசாத் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள். நவீன் கதவை திறந்து வெளியே வந்தான்.

“வெளிய அவரு….” பதட்டமாக நவீன் கரம் பற்றி வெளியே இழுத்து சென்றாள்.

“எவரு?” என்று வெளியே பார்த்தவன் அதிர்ந்து,

“மாமா…” சத்தமிட்டு சஞ்சயை பின்னிருந்த தாக்க வந்தவனை பிடித்து இழுத்தான் நவீன். கத்தியை நவீன் பக்கம் அவன் திருப்ப, பூச்சாடியை எடுத்து அவன் மீது வீசினாள் பிரியசகி. அது நவீனை தாக்க வந்தவன் மீது பட்டு நவீனையும் பதம் பார்த்தது.

“ஷ்ஷ்…சாரி சாரி சாரிடா…” பிரியசகி வெளியே வந்தாள். சஞ்சய் கவனம் இருவராலும் சிதறியது.

“நீ அவனுக்கு குறி வைத்தாயா? எனக்கு வைத்தாயா? சரியா என் மேலும் பட்டிருக்கு…பாரு.. கை வலிக்குது” கையை பிடித்து நவீன் எழுந்தான்.

அவனை தான்டா வச்சேன். நீ தான் குறுக்க வந்துட்ட..

நானா? ம்ம்! சரிதான்..

ஏய்ய்ய்…பிரியசகி குரல் எழுப்ப, அவள் கரம் உயர்த்திய திசையை பார்த்த சஞ்சய் நொடிக்குள் விலகி நவீன் மீது படவிருந்த அரிவாளை தட்டி விட்டு கொல்ல வந்தவனுடன் சண்டையிட, கீழே விழுந்திருந்த மூவரும் எழுந்தனர்.

“நவீன், சகி உள்ள போங்க..” சஞ்சய் சத்தமிட, தன் மகனின் குரலில் விழித்த பெற்றோர்கள் வெளியே வந்தனர்.

அய்யோ சஞ்சய்…சத்தமிட வந்த தன் மனைவி வாயில் கை வைத்து அவரை அடக்கி, ஷ்…நவீன் பிரியசகியை காட்டினார் நாகேந்திரன்.

சஞ்சய் கூறுவதை கேட்காமல் நவீன் ஒருவனை அவன் பக்கம் திசை திருப்ப, பிரியசகி அவன் மீது தண்ணீரை ஊற்ற, இடையில் வந்தது நவீன்..

கையிலிருந்ததை கீழே போட்டு பிரியசகி நவீனை பாவமாக பார்க்க, நவீன் அவளை முறைத்து அவனை சமாளிக்க. இருவரையும் வீழ்த்திய சஞ்சய் நவீன் பக்கம் திரும்பினான்.

நவீனும் பிரியசகியும் சேர்ந்து அவனை கட்டிப் போட்டிருந்தனர். சஞ்சய் முகம் கடுகடுவென இருந்தது.

கத்தியை அவன் கழுத்தில் வைத்து, “வெளிய வாங்க” சத்தமிட்டான்..

எவ்வித பதிலும் இல்லை எனவும் அவன் கைபேசியை தேடினான் சஞ்சய். முகம் சுருக்கி தரையை பார்த்தவாறு கைபேசியை அவனிடம் நீட்டினாள் பிரியசகி.

“யாரும் கால் பண்ணாங்களா?” சரியாக யூகித்தான்.

“ராகவன் அண்ணா…” அவள் சொல்லிக் கொண்டே எதிர்வீட்டை கண்டு அதிர்ந்தாள்.

 காமாட்சி வீட்டு மதில்சுவற்றிலிருந்து ஒருவன் குதிக்க, சஞ்சய் காணும் போது யாருமில்லை..

என்ன?

பிரியசகி கரம் நீட்டினாள். மீண்டும் ஆட்கள் அவர்களிடம் வந்தனர்.

சஞ்சய் பிடித்திருந்தவன் வயிற்றில் ஓங்கி குத்த, அவன் சுருண்டு கீழே விழுந்தான். அவனது ஆக்ரோசமான அடியில் வந்தவர்களுக்கு மிரட்சி தோன்றினாலும் அவனை நோக்கி வந்தனர்.

“ஏம் மாமா, இவனுக பகலிலெல்லாம் வரமாட்டானுகளா? அமுதசுரபியா வந்துட்டே இருக்கானுக..” என்றான் நவீன்.

“நவீன் வீட்டுக்குள்ள யாரும் வந்துருக்காங்களான்னு பாரு” என்று பிரியசகியை பார்த்து, “உன்னோட அறையை பூட்டிட்டு உள்ள இரு…” என்றான் சினமுடன்.

ஏதும் கூறாமல் அவள் நகர, “அந்தோ பரிதாபம்! சுவர்ணலதா, நாகேந்திரனை ஒருவன் பிடித்து வைத்திருந்தான்”.

நாற்காலியில் அவர்களை கட்டிப் போட்டு லதா கழுத்தில் கத்தி வைத்திருந்தான்.