தலையை முன்னுக்கு நீட்டி என்ன என வியப்பாக பார்த்தான். இடது கையால் கிண்ணத்தை பிடுங்கிக் கொண்டவள் ஒரு வாய் அதே ஸ்பூனில் சாப்பிட்டு விட்டு அவனை பார்த்து சிரித்தாள்.
“என்ன… இப்ப கஞ்சி செம டேஸ்ட்டா இருக்குமே?” என கிண்டலாக கேட்டான் அவன்.
வலது கையில் நரம்பு ஊசி இருந்த காரணத்தால் அவளுக்கு சாப்பிட சிரமமாக இருந்தது. அவனிடமே கிண்ணத்தை நீட்டியவள், “கை வலிக்குதுங்க” என்றாள்.
படுக்கையில் அமர்ந்து கொண்டு அவனே அவளுக்கு ஊட்டினான்.
“ஒரு நாள்ல ஓஞ்சு போயிட்ட அஞ்சலி, பார்க்கிற கடையெல்லாம் நிறுத்த சொல்லி வயித்த அடைச்சா இப்படித்தான் ஆகும்” என சொல்லிக் கொண்டே ஊட்டினான்.
“கடைலலாம் பிரச்சனை இல்லை. நேத்து மார்னிங் உங்க ஒன்னு விட்ட சித்தப்பா வீட்ல கொடுத்த காபிலதான் ஏதோ பிரச்சனை” என்றாள்.
“அதே காபியதான் நானும் குடிச்சேன். புருஷன் வீட்டு ரிலேட்டிவ்ஸ் குறை சொல்றதுன்னா பொண்ணுங்களுக்கு வெல்லக்கட்டி”
“வேணும்னா அந்த காபிய டெஸ்ட் பண்ண லேப்க்கு கொடுங்க, நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கே தெரியும்” என அவள் சொல்லவும் அவளை நன்றாக முறைத்தான்.
“ஏன் ப்ரூவ் ஆகிடுமேன்னு பயமா இருக்கா?”
“வீட்ல போய் அம்மாகிட்ட சொல்லி வைக்காத”
“திட்டுவாங்களா என்னை?”
“அம்மாக்கும் அவங்க ஹஸ்பண்ட் பக்க ரிலேட்டிவ்ஸ் பத்தி குறை பேசுறதுன்னா ரொம்ப இஷ்டம், அப்பா பாவம்ல?” என்றான்.
சிரித்ததில் அவளுக்கு புரையேறிக் கொண்டது. தலையில் தட்டி, பருக தண்ணீர் கொடுத்தவன் அவளின் வாயை இயல்பாக துடைத்து விட்டு பின் எப்படி எடுத்துக் கொள்வாளோ என தயக்கமாக அவளை பார்த்தான்.
அவனது எண்ணம் அவளுக்கும் புரிந்தது.
“நம்ம ரிலேஷன்ஷிப் என்னன்னு ஒரே நாள்ல புரிய வச்சிட்டீங்க. நீங்க…” என்றவள் வார்த்தை தேடி, “எனக்கு சொல்ல தெரியலை. நீங்க எனக்கு ரொம்ப முக்கியமானவர்” என்றாள்.
“ஏய் குழப்பாத!” என சற்று அதட்டல் போல சொன்னான்.
“நல்ல ஹஸ்பண்ட் நீங்க!” என சொல்லி இரண்டு கண்களையும் சிமிட்டினாள்.
“நிஜமா சொல்றேன், ஃபைனல் இயர்ல அரியர்ஸ் எல்லாம் கிளியர் பண்ணினப்போ கூட இவ்ளோ சந்தோச படல நான்” என கிண்டலாக சொன்னான்.
நினைவு வந்தவளாக “ஹையோ நேத்து கிளாஸ் மிஸ் பண்ணிட்டேன்” என்றாள்.
“சேர்த்து வச்சு படிச்சுக்கலாம், ஒழுங்கா ரெஸ்ட் எடு” என கட்டளையாக சொல்லி விட்டான்.
அடுத்த நாள் காலையிலேயே அவள் டிஸ்சார்ஜ் செய்யப்பட, மீண்டும் ஓட்டல் அறைக்கு வந்து விட்டனர். அன்றைய தினம் முழுதும் அவளுக்கு ஓய்வுதான். அவள் இல்லாமல் தனியாக யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்க முடியாது, குறையாகி விடும், ஆகவே அவனும் அவளுடன்தான் இருந்தான்.
இரண்டு நாட்கள் விட்டுப் போன வகுப்புகளை அஞ்சலி பார்க்க, அவனும் தொழில் சம்பந்தமாக பேச வேண்டிய அழைப்புகள், அனுப்ப வேண்டிய மெயில்கள், ஆர்டர்கள் என நேரத்தை உபயோகித்துக் கொண்டான். எந்த வகையிலும் அவளை தொந்தரவு செய்யாமல் அதே நேரம் அவளை கவனிப்பதிலும் குறையில்லாமல் பார்த்துக் கொண்டான்.
எதற்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைப்பவள்தான் அஞ்சலி. ஒன்றரை வருடமாக வீட்டினரின் அன்புத் தொல்லையால் பாதிக்கப் பட்டிருந்தவள். ஆனால் இப்போது யுகியின் கவனிப்பும் அக்கறையும் அவளுக்கு பிடித்திருந்தது.
அதட்டிக் கொண்டே தான் சொல்வதை அவளை கேட்க வைத்து விடுபவனிடம் வேண்டுமென்றே இன்னும் அடம் செய்ய ஆசை கொண்டது அவளின் உள்ளம்.
அவளுக்கு இன்னும் முழுதாக சரியாகவில்லை. அடுத்த நாளும் அழைப்பிதழ் கொடுக்க அவள் இல்லாமல் செல்ல முடியாது, வேலையை முடித்து நாளை இரவுக்கு ஊருக்கு கிளம்பினால்தான் அவனுக்கு வசதிபடும்.
இப்போதே அவளிடம் இது பற்றி பேச வேண்டாம் என முடிவெடுத்து அன்றைய தினத்தை அமைதியாகவே கடந்தான் யுகி.
அடுத்த நாள் விடியலில் அவளே அவனை எழுப்பி விட்டு, “ரெடியாகிட்டு என்னை எழுப்பி விடுங்க” என்றாள்.
நன்றியாக அவளின் தலையை அழுத்திக் கொடுத்து விட்டு தயாராக சென்றான். சோர்வாக இருந்தாலும் குறைகள் ஏதும் சொல்லாமல் அவன் அழைத்த இடத்திற்கெல்லாம் சென்றாள்.
யார் வீட்டிலும் அவள் ஏதும் சாப்பிடவில்லை, அவள் விரதம் என சொல்லி சமாளித்து விட்டான் யுகி. வெளியில் தரமான உணவகங்களாக பார்த்து எளிதில் செரிப்பது போன்ற இலகுவான உணவாக மட்டுமே வாங்கிக் கொடுத்தான்.
“இதெல்லாம் ஓவர், எனக்கு சரியாகிடுச்சு” என அவள் வம்பு செய்தாலும் அவன் மசிவதாக இல்லை. அப்போதெல்லாம் கொஞ்சம் மிரட்டும் தொனிதான் அவனிடம் இருக்கும்.
அவளுக்காக அவனும் அவள் சாப்பிடுவதையே சாப்பிட்டான். அவளுக்கு என்னவோ போலாகி விட, “வேற வாங்கிக்கோங்க, நான் பிரச்சனை பண்ணாம இத சாப்பிட்டுக்கிறேன்” என்றாள்.
“எல்லாம் என் ஸேஃப்டிகுதான், உங்க கண்ணு பட்டு போற வழில எனக்கு ஏதும் ஆனா அவ்ளோதான்”
“அப்படியே ஆனாலும் உங்க வேலை எல்லாம் நடந்திட்டுதானே இருக்கு?”
“வேலை நடக்கும், என்னை யார் பார்த்துப்பா?” என அவன் கேட்கவுமே சட்டென வாடியது அவளின் முகம்.
“என்ன அஞ்சலி?”
“ஏன் நான் பார்த்துக்க மாட்டேனா? நீங்க மட்டும்தான் நல்லவரா, நான் மட்டும் கெட்டவ கொடுமைகாரி இல்லை?”
“நான் சும்மா சொன்னேன். ஆனா… நிஜமா எனக்கு ஒன்னுன்னா நீ பார்ப்பியா என்ன?” என அவன் சந்தேகமாக கேட்கவும் அவள் கோபித்துக் கொண்டாள்.
என்ன சொல்லியும் அவனால் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை. அஞ்சலி அவனிடம் பேசாமல் தவிர்க்கவெல்லாம் இல்லை. ஆனால் கோவமாக இருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது.
விடியற்காலை வீடு வந்து சேரும் வரை அப்படியேதான் இருந்தாள். அவளை அப்படி விட அவனுக்கு பிடிக்கவில்லை.
“சரியாகிடேன் அஞ்சலி ப்ளீஸ்” என கெஞ்சலாக கேட்டான்.
“என்னை பத்தி மோசமா நினைக்குறீங்க, கஷ்டமா இருக்கு எனக்கு” என அவளும் வெளிப்படையாக சொன்னாள்.
“கல்யாணம் ஆன நாள்லேருந்து உன்னை என் வைஃபாதான் பார்க்கிறேன் அஞ்சலி. பார்க்க நல்லா அழகா இருக்க, புத்திசாலி பொண்ணு வேற, உன்னை எனக்கு பிடிக்கும். பிடிக்கும்னா… உனக்கு புரியுதா?” எனக் கேட்டான்.
தலை குனிந்த வண்ணம் நின்றிருந்தாள். வெளிப்படையாக இலகுவாக விருப்பத்தை சொல்லி விட்டான் யுகி. அவன் அப்படி சொன்னது அவளுக்கு பிடித்திருக்கிறது, ஆனால் அவனை எதிர்கொள்ள முடியவில்லை.
“ஆனா உனக்கு நான் அப்படி இல்லைதானே?” என அவன் கேட்கவும் விலுக் என நிமிர்ந்து முறைத்தாள் அவள்.
“என்ன… உனக்கும் நான் அப்படிதான்னு சொல்ல போறியா? சொன்னா பொய், எனக்கு உன்னை தெரியும்” என அழுத்தமாக சொன்னான் அவன். அவளால் மறுக்க முடியவில்லை. அதே சமயம் அவன் சொல்வதை அப்படித்தான் என ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை.
“அதனால அப்படி பேசிட்டேன், நான் உன்னை அப்படி பார்த்துகிட்டேன்னா எம்மனசுல அந்த இடத்துல நீ இருக்க. இன்னிக்கு நிலவர படி உன்னால எனக்கு அப்படிலாம் செய்ய முடியாது, இதுல நீ தப்பா நினைக்கவோ எடுத்துக்கவோ எதுவும் இல்லை. நான் பேசினத சரியா புரிஞ்சுக்கிட்டு நார்மல் ஆகு” என்றான்.
அவள் தலையாட்டிக் கொண்டாள். அவன் படுக்க தரையில் பாய் விரிக்க போக, “இனிமே அதுக்கு அவசியம் இல்லைதானே?” எனக் கேட்டாள்.
“எனக்கும் தோணிச்சு, நீயே சொல்லணும்னு எதிர்பார்த்தேன்” என்றவன் பாயை ஓரமாக வைத்து விட்டு படுக்கையிலேயே படுத்தான்.
படுக்காமல் அமர்ந்தவள் அவனையே பார்த்தாள்.
“இப்படி பார்த்தா நான் எப்படி கண்ண மூடுறது?” எனக் கேட்டான்.
“நீங்க சொன்னது எல்லாம் வாஸ்தவம்தான். ஆனா இப்படியே இருந்திட மாட்டேன். எனக்கும் உங்களை பிடிக்கும்” என சொல்லி அவனது முகத்தை மலர விட்டவள், உடனடியாக, “ஹையோ நான் பிடிக்கும்னு சொன்னது உங்களுக்கு என்னை பிடிச்ச மாதிரி இல்லை” என்றாள்.
“இதுக்கு நீ எதுவும் பேசாமலேயே தூங்கிருக்கலாம்” என்றான்.
“ஆனா சீக்கிரமே அப்படி ஆகும்” என்றாள்.
“எப்படி?”
“நீங்க நல்ல ஹஸ்பண்ட் ஆனது மாதிரி நானும் உங்களுக்கு நல்ல வைஃப் ஆவேன், அப்படி” என்றாள்.
“அம்மாடி ராசாத்தி! அந்த நம்பிக்கைலதான் ஓட்டிட்டு இருக்கேன், வாய தொறந்து சொன்னதுல சந்தோஷம். நீ சொன்ன சீக்கிரம் கொஞ்சம் சீக்கிரமா வந்து சேரட்டும்” என கிண்டல் தொனியிலேயே சொல்லி கண்களை மூடிக் கொண்டான்.
அவனது அடைத்த இமைகளுக்குள் அடைந்து கொண்டாள் அஞ்சலி.