உதடுகளை மடித்து சிரிப்பை அடக்கினான். இப்போது அவள் மியூசிக் பிளேயர் போட்டு விட்டாள்.
‘கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா’ என வனிதாமணி பாடல் ஒலிக்க சத்தமெடுத்து சிரித்தான் யுகி. சங்கடமும் வெட்கமுமாக தன் சிகையை கலைத்துக் கொண்டு சிரித்த அஞ்சலி, “சிரிக்காதீங்க” என அவனை அதட்டினாள்.
சிரிப்பை அடக்க முயன்று பாடலின் வரிகளில் இன்னுமின்னும் சிரித்தான் யுகி. அவள் பாடலை நிறுத்த போக, அவன் விடவில்லை.
“நீ நார்மலா இரு, வெறும் பாட்டுதானே? இந்த பீட்ஸ் செம எனர்ஜி தருது, விடு ஓடட்டும்” என அவன் சொல்லவும் சரியென விட்டு விட்டாள்.
இரவு எட்டு மணிக்கு ஓட்டல் வந்து விட்டனர். கடை, வீடு என அவன் பேசி விட்டு வருவதற்குள் அவள் வேறு ஆடைக்கு மாறியிருந்தாள். உணவுக்கு சொல்லி விட்டு அவனும் ஆடை மாற்றிக் கொண்டான்.
சாப்பிட்ட பின் இணைய வழி வகுப்பு பார்க்க ஆரம்பித்து விட்டாள். நோட்ஸ் எடுக்க முடியாது என்பதால் பயணத்தின் போது வகுப்பை புறக்கணித்திருந்தாள்.
அவனுக்கு உடல் அலுப்பு என்பதால் படுத்து விட்டான்.
“லைட் ஆஃப் பண்ணிடவா?” என அவள் கேட்டதற்கு வேண்டாம் என்றவன் படுத்த உடன் உறங்கியும் விட்டான். பதினோரு மணிக்கு மேல்தான் உறங்க வந்தாள் அஞ்சலி.
படுக்கையின் நடுவில் கை கால்களை நீட்டிக் கொண்டு அசந்து உறங்கிக் கொண்டிருந்தான் யுகி. எந்தப் பக்கம் படுத்தாலும் அவளுக்கு போதுமான இடமிருக்காது. அதாவது அவனை விட்டு விலகி படுக்குமளவுக்கு இடம் போதாது.
விடியற்காலையில் எழ வேண்டும், மீண்டும் அவன்தான் கார் ஓட்ட வேண்டும். ஆகவே அவனை எழுப்பவும் அவளுக்கு மனம் வரவில்லை.
இருந்த இடத்தில் அவனை உரசாமல் ஓரமாக ஒண்டிக் கொண்டு படுத்து விட்டாள். விடியலில் தன் கை அணைப்புக்குள் கிடந்தவளை உணர்ந்து கனவோ என நினைத்து விட்டான் யுகி.
போக போகத்தான் உண்மை என அவனுக்கு புரிந்தது. இது எப்படி நடந்தது என்ற ஆராய்ச்சிக்கே அவன் செல்லவில்லை. அந்த நெருக்கம் அவனுக்கு முற்றிலும் புதிதல்லவா? நன்றாக அனுபவித்துக் கொண்டான். அவளது சிகையை மெல்ல வருடிக் கொடுத்தான்.
மனதில் மனைவிக்கான ஏக்கம் சூழ, முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவளும் விழித்துக் கொண்டாள். அறிந்து கொண்டவன் கண்களை மூடி உறங்குபவன் போல பாசாங்கு செய்தான். அவள் பதறி விலகுவதை உணர்ந்தவனின் மனம் சொல்லொனா வேதனை கொண்டது. அலாரம் ஒலிக்கவும் வேறு வழியின்றி அவனும் விழித்தான்.
“நீங்க ரெடி ஆகுற வரை நான் கொஞ்சம் தூங்கிக்கிறேன்” என சாதாரணமாக சொல்லி படுத்து விட்டாள் அவள்.
முழுதாக தயாராகிய பின் அவளை எழுப்பி விட்டு அறையை விட்டு வெளியேறி சென்றான் அவன். தான் தயாராகி முடித்த பின் அவனை வரச் சொல்லி அழைத்தாள்.
கண்களுக்கு குளிர்ச்சியாக நிற்கும் அஞ்சலியை வஞ்சம் வைக்காமல் ரசித்துக் கொண்டான்.
காபி மட்டும் பருகி விட்டு கிளம்பி விட்டார்கள். ஒரு மணி நேர பயணத்தில் கோயில் வந்தது. அங்கே வழிபாடு முடித்து விட்டு நேராக யுகியின் பெரியப்பா வீட்டுக்கு சென்றார்கள். அங்கேதான் காலை உணவு.
உப்பு காராம் எல்லாம் குறைவாக சப் என சுவை இருக்கவும் அஞ்சலி சரியாக சாப்பிடவில்லை. அங்கிருந்து கிளம்பிய பின், “ரொம்ப டேஸ்ட் பார்க்கிற நீ” என அவளை கடிந்து கொண்டான்.
“நான் ஏதும் கம்ப்ளைண்ட் பண்ணலையே, அப்புறம் என்ன?” என்றாள்.
“அரை வயித்துக்கு கூட சாப்பிடல நீ, மயக்கம் போட்டா வந்த வேலை எப்படி முடியும்?”
“அவ்ளோ பயம் இருந்தா நல்ல ஓட்டலா பார்த்து நிப்பாட்டுங்க” என அவள் சொல்லவும் சிரித்து விட்டான். தெரிந்த நண்பனுக்கு அழைத்து எங்கு உணவு நன்றாக இருக்கும் என விசாரித்து அங்கேயே அழைத்து சென்று சாப்பிட வைத்தான்.
மதிய உணவு கூட வெளியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என அவள் கெஞ்சலாக சொல்ல, முறைத்தாலும் சரி என சொல்லி விட்டான்.
உங்கள் நண்பரிடம் கேட்க வேண்டாம், கூட்டம் அதிகமாக இருக்கும் உணவகத்திற்கு செல்லலாம் அங்குதான் சுவையாக இருக்கும் என அவனிடம் சொன்னவள் அப்படியொரு கடைக்குத்தான் சென்றாள்.
தூத்துக்குடியில் உள்ள உறவினர்களை மாலைக்குள் அழைத்து முடித்தாகி விட்டது. சிறு ஓய்வுக்கு பின் கிளம்பி விட்டனர்.
நடு இரவில் திருநெல்வேலி வந்து விட்டனர். பயணத்தில் தூங்கியிருந்தவள் வகுப்பு பார்க்க போவதாக சொல்லி ஆயத்தமானாள்.
“பெட்லயே படுத்துக்கவா அஞ்சலி, வேணாம்னா இன்னொரு மேட்ரஸ் கேட்டு வாங்கி கீழ போட்டுப்பேன்” என்றான் யுகி.
ஐந்து நொடி யோசனைக்கு பின், “வேணாம், இதுலேயே படுங்க” என்றாள்.
“நிஜமாவா?” எனக் கேட்டான்.
“படுங்க பாஸ்” என சிறு புன்னகையுடன் அவள் சொல்லவும் அவனுக்கு சற்றே நிம்மதி.
அடுத்த நாளும் திட்டமிட்டது போலவே உறவினர் வீடுகளுக்கு சென்றனர். சாப்பாடு வெளியில்தான். இடையில் அவள் நிறுத்த சொல்லும் இடமெல்லாம் நிறுத்தினான். ஏதாவது வாங்கி சாப்பிட்ட வண்ணம் இருந்தாள்.
இரவில் அஞ்சலிக்கு முடியாமல் போய் விட்டது. சாப்பிட்டது எதுவோ அவளுக்கு சேரவில்லை. ஃபுட் பாய்சன் என சொல்லி மருத்துவமனையில் அனுமதித்து விட்டனர்.
வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை யுகி. போக்குவரத்து நெரிசல் காரணமாக நினைத்த இடங்களுக்கு செல்ல முடியவில்லை, கோவை வந்து சேர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் போல என அம்மாவிடம் சொல்லி விட்டான்.
உடல்நிலை பாதிக்க பட்டு அஞ்சலி இத்தனை நலிவடைந்து துவண்டு போனது இதுதான் முதல் முறை. தனிச்சையாக எது செய்யவும் அவளிடம் பலமில்லை. கணவன் தன்னை குழந்தை போல கவனித்து பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் அத்தனை சங்கட பட்டு போனாள்.
யுகியிடம் ஒரு முகச்சுளிப்பு இல்லை, அருவருப்பு இல்லை, அலுப்பும் இல்லை. சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக அழுதாள்.
“அஞ்சலி!” என அதட்டல் போட்டு அவளை நிலைப் படுத்துவான்.
அடுத்த நாள் காலையில் குளிக்க வைக்கும் போது கூட அவள் கூச்ச பட்டு விடாதபடி நாசூக்காக உதவினான். அவனது கைபிடித்து நடந்து படுக்கைக்கு வந்தவள், “தேங்க்ஸ்!” என்றாள்.
“ரொம்ப போராட வைக்காம கஞ்சிய குடிச்சிடு, நான் சொல்றேன் உனக்கு தேங்க்ஸ்” என்றான்.
நேற்று மருத்துவமனை வந்ததிலிருந்து சலைன்தான், ஆகாரமே இல்லை. அவன் ஊட்டியதை ஆவலாக சாப்பிட்டவள் முகம் சுளித்தாள். வேண்டாம் என அடமாக சொல்லி படுத்து விட்டாள்.
வலுக்கட்டாயமாக அவளை அமர வைத்து, மிரட்டி பாதி கஞ்சியை சாப்பிட வைத்துதான் அவளை படுக்க விட்டான்.
பாதி உறக்கத்தில் கண் விழித்தவள் கணவனைதான் தேடினாள். ஓய்வறையிலிருந்து அவன் வெளி வரவும், “இங்கேயே இருக்கணும்” என மெல்லிய குரலில் சொல்லி விட்டு உறக்கத்தை தொடர்ந்தாள்.
தான் கேட்டுக் கொண்டும் திருமணத்தை நிறுத்தாமல் என்னை மணந்து கொண்டான் என்ற கோவம் அவளது அடி மனதில் அமிழ்ந்து கிடந்ததுதான். அதையெல்லாம் அவளிடமிருந்து கரைந்து போக செய்து விட்டது இந்த மருத்துவமனை வாசம்.
வைத்தியத்தின் பலனாக இரவில் தெளிச்சி நிலை அடைந்து விட்ட அஞ்சலி படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
இரவு உணவாகவும் கஞ்சிதான் வந்திருந்தது. சாப்பாடே வேண்டாம் என அடம் செய்தவளிடம், “வர்றியா ரோட்டு கடைல பரோட்டோவும் சால்னாவும் வாங்கி தர்றேன்” என்றான் யுகி.
அவள் பாவமாக பார்க்க, “கண்டதையும் வளைச்சி வளைச்சி சாப்பிட்டுட்டு இப்ப சேட்டை வேறயா? மருந்து மாதிரி நினைச்சி ஒழுங்கா குடி” என்றான்.