சூரியன் 14
பிரியசகி அறைக்கு சஞ்சய் வர, நவீன் கரம் பற்றி கண்ணீர் உதிர்த்துக் கொண்டிருந்தாள். பிரசாத் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
நாகேந்திரன் தயங்கியவாறு வெளியே நிற்க, சுவர்ணலதா அமர்ந்திருந்தார்.
“பிரியா…” இந்துஜா பிரியசகி கரம் பற்ற, “ஜா..எ..எதுக்காக என..க்காக பேசுன? இ..இதுக்கு தான் நான் செத்துடுறேன்னு…” அவள் முடிக்கும் முன் சத்தமிட்டான் சஞ்சய்.
சாகணும்னா நீ என்னிக்கோ செத்துருக்கணும். சகி நீ மட்டுமல்ல இங்கிருக்கும் அனைவரும் நல்லா கேட்டுக்கோங்க…
எல்லாரும் நம்ம வீட்ல தான் இருக்கணும். உங்களுக்கான எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன். என்னோட தந்தை எந்த செலவையும் பார்க்க மாட்டார். என் அம்மா யாரையும் கவனிக்க மாட்டார். சகியை பார்த்துக் கொள்ள பெரியவங்க யாரையாவது ஏற்பாடு பண்றேன். பிரசாத், நவீன் இருவரும் கேரளாவிலிருந்து இங்கே செட்டில் ஆகும் வேலையை பாருங்க…சகி இனி சாகப் போறேன்னு உன் வாயிலிருந்தோ இல்லை இந்து உன்னிடமிருந்தோ வரக் கூடாது. எனக்குன்னு இருக்கிற ஒரே தங்கை நீ தான் இந்து. தேவையில்லாம பேசாத..அழுத்தமுடனும் அதே நேரம் சீற்றமுடனும் கூறினான்
“நானா பேசினேன்? என்னை பேச வச்சிட்டாங்க..” இந்து முகத்தை திருப்ப,
“யார் என்ன பேசினாலும் இனி யாரும் நெகடிவ் ரியாக்ட் பண்ணக் கூடாது. நான் இருக்கிறேன்” என்ற சஞ்சய் பிரியசகியை நெருங்கி அவள் கரம் பற்றினான். அவனது தீண்டலும் அவன் கொடுத்த நம்பிக்கையிலும் மனம் லேசானது பிரியசகிக்கு.
“ஐந்தே நாள் தான் வீட்டுக்கு போயிறலாம்” என்றான் பிரியசகியை பார்த்து…
“போதும் போதும்…எனக்கு இது போதும். உனக்கும் போதும்..” இந்துஜா பிரியசகி சஞ்சய் கரத்தை பிரித்து விட்டு, பிரியசகி கரம் பற்றினாள்.
நவீன் இந்துஜாவை நெருங்கி, “உனக்கு என்ன பிரச்சனை? மாமா புடிச்சா பிடிச்சிருக்கட்டுமே!” அவள் காதில் கடிக்க,
“அதெல்லாம் நடக்காது…” அவளும் அவன் காதில் கடித்தாள்.
“ரெண்டு பேரும் நகருங்க இல்ல மறுபடியும் உங்களது போர் முடிவில்லாமல் போயிடும். எனக்கு காதுல இரத்தம் வரும்” என்ற பிரசாத் இருவருக்கும் இடையில் நின்றான்.
“மாமா, ஒரு வாரம் தான் விடுப்பு கொடுத்திருக்காங்க. பிரியா டிஸ்சார்ஜூன் இரு நாள் பின்னே கிளம்பிடுவேன்….” பிரியசகியை பார்த்தவாறு சஞ்சயிடம் கூறினான் பிரசாத்.
ம்ம்! பரவாயில்லை. எல்லா பிரஸ்யூஜரையும் க்ளியரா முடிச்சிட்டு வா. இப்பொழுதைக்கு உணவு வெளிய வாங்கிக்கலாம் என்ற சஞ்சய் தன் தந்தையை பார்த்து, “அப்பா அம்மாவை அழைச்சிட்டு வீட்டுக்கு போங்க. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான்.
சஞ்சய் அவ…
வேண்டாம்பா. அம்மா எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வாரம் நானும் இங்கேயே தங்கிக்கிறேன். நான் மட்டும் சாப்பிட வீட்டுக்கு வாரேன் முடித்து விட்டான்.
“இந்தும்மா….” அவர் அழைக்க,
“இதுவரை எங்களுக்கு செய்த உதவிக்கு நன்றி பெரியப்பா” இந்துஜா கூற, சோர்வுடன் நாகேந்திரன் வெளியே வர, சுவர்ணலதா கண்ணீருடன் அவரை பார்த்தார்.
“வீட்டுக்கு கிளம்பு” பல்லை கடித்து கூற, கிளம்பினார்கள்..
சஞ்சய்கு அழைப்பு வர, அனைவரிடமும் தலையசைத்து பிரியசகியை பார்த்து சென்றான்
(ஒரு வாரம் கழிந்தது)
பிரியசகியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். காரிலிருந்து இறங்கிய அவளை கைத்தாங்கலாக இந்துஜாவும் நவீனும் பிடித்துக் கொண்டனர்.
தெருவினர் அனைவரும் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிரசாத் வீட்டினுள் போட பட்டிருந்த வெள்ளைநிறக் கோட்டை பார்த்து புரியாமல் நின்றான்.
பிரியசகியை அழைத்து வந்தவர்களும் அவளும் சஞ்சயை பார்த்தனர்.
“உள்ள வாங்க” அவனது அறைக்கு கீழிருக்கும் அறையை காட்டினான்.
“அண்ணா…” இந்துஜா அழைக்க,
“ராக்கி அம்மாவுடன் இருக்கான். அவனே உன்னிடம் வருவான். அவங்க இந்த கோட்டை தாண்டி வர மாட்டாங்க. நீங்களும் போகக் கூடாது. உங்களுக்காக தான் இது” பிரியசகியை பார்த்தான். அவள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். அவளால் நிற்கவும் முடியவில்லை.
“இந்து அவளை உள்ளே அழைச்சிட்டு போ. அவளால நிற்க முடியல” என அவர்களை அனுப்பி விட்டு, “பிரசாத் பார்த்துக்கோ நான் உணவு வாங்கி வருகிறேன்” என நகர்ந்தான்.
நால்வரும் சஞ்சய் தயார் செய்து வைத்திருந்த அறைக்கு முன் நின்றனர்.
சிறுவயதில் கனவாக பிரியசகி தனக்கென அறை இருந்தால் எப்படி இருக்க வேண்டும் என இந்துவிடம் பேசியதை அப்படியே தயார் செய்திருந்தான் சஞ்சய். ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து தயார் செய்திருக்கிறான் என மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“ஜா..” பிரியசகி இந்துஜாவை பார்த்தாள்.
“நான் தான் அண்ணாவிடம் தயார் செய்ய சொன்னேன்” இந்துஜா மற்றவர்களை பார்த்து கண்ணசைக்க பெருமூச்சுடன் பிரசாத் உள்ளே சென்று பிரியசகி படுக்க உதவி செய்தான்.
இதுவரை இந்துஜா சஞ்சயின் காதலை பெரிதும் மதிக்காமல் தான் இருந்தாள். தற்பொழுதைய அவனின் ஏற்பாட்டில் அவளுக்கோ நிம்மதி பெருமூச்சு. எங்கே இவன் காதல் நிறைவேறப் போகிறது? என்ற தன் அண்ணனுக்கான ஏக்கப் பெருமூச்சும் வந்தது.
உணவை வாங்கி வந்த சஞ்சய் பிரியசகி அறைக்கு வந்தான்.
“எல்லாமே ஓ.கே தான?” அவன் கேட்க, பிரியசகி புரியாமல் அவனை பார்த்தாள்.
“ஓ.கே தான் அண்ணா…” இந்துஜா கூற, பிரியசகி சாய்ந்து கொண்டாள்.
உணவை சஞ்சய் அவனாகவே நால்வருக்கும் பிரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்று… “சொல்லுங்க” மேசை மீது வைத்தான்.
சார், அந்த கமலா பொம்பள எங்க போச்சுன்னே தெரியல. நம்ம இந்தியாவிலே எங்கும் இருப்பது போல இல்லை.
பதறி உணவை அங்கேயே வைத்து அலைபேசியை எடுத்து காதில் வைத்து வெளியேறினான்.
“ஜா, கமலா…சரண் அம்மாவா? அவங்கள இன்னும் பிடிக்கலையா?” பதறினாள் பிரியசகி.
“இல்லை பிரியா..” பிரசாத் சமாளிக்க பார்த்தான்.
பொய் சொல்லாத. சஞ்சய் சார் மறைக்கிறார். நீங்களும் என்னை ஏமாத்துறீங்களா?
“நீ ஓய்வெடுத்து குணமாகு. இதை பற்றி யோசிக்காத…” சஞ்சய் பிரியசகியை பார்த்துக் கூறினான்.
“இல்ல, அவங்கள சீக்கிரம் பிடிங்க இல்லை இனியவன் சாரையும் உங்களையும் அவங்க என்ன வேண்டுமானாலும் செஞ்சிருவாங்க…” .
“தெரியும். நான் பார்த்துக்கிறேன். நீ எதை பற்றியும் சிந்திக்காமல் ஓய்வெடு..” அமர்ந்தான்.
மாமா, நான் நாளையே கிளம்பணும்…
ம்ம்!!!
“சஞ்சய் உணவை முடித்துட்டு எங்கும் போப்பா…” நாகேந்திரன் அவனை அழைத்தார்.
“நீங்க சாப்பிடுங்கப்பா. நான் சிறிது நேரத்தில் வாரேன்” மூவரையும் பார்த்தான்.
பிரசாத்தும் நவீனும் உணவுண்ண, இந்துஜா பிரியசகிக்கு உணவை ஊட்டினாள். பிரியசகி சஞ்சயை அடிக்கடி பார்த்தாள்.
அவனுக்கு தோன்றினாலும் அவன் எவ்வித உணர்வையும் காட்டாமல் அவன் அலைபேசியில் முழுகவனத்தையும் செலுத்தி இருந்தான். இந்துஜாவும் மற்றவர்களும் பிரியசகியையும் சஞ்சயையும் பார்த்தனர்.
சஞ்சய்கு அழைப்பு வர, எடுத்தான்..
சார்…
சஞ்சய் எங்க இருக்கீங்க? கமிஷ்னர் சந்திரசேகர் கேட்டார்.
வீட்ல சார்….
அந்த பொண்ணை கத்தியால குத்திட்டான் ஒருவன்..
வாட்? எழுந்தான்.
சார் சான்சே இல்ல, என்னோட பிரைவேட் பிளைஸ் யாருக்கும் தெரியாது..
ம்ம்! அந்த பொண்ணு தான் அவளது கணவனை பார்க்க குருஜி ஆசிரமம் போயிருந்திருக்கா..
சார், நம்ம ஆளுங்கள அங்க விட்டு தான வந்தேன்..
பெருமூச்சுடன் அந்த பொண்ணு அங்க இல்லைன்னு அவங்களுக்கு தெரியல…. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க.
“ம்ச்ச்….சாரி சார். நான் இன்னும் கவனமா இருந்திருக்கணும்..” வருத்தமுடன் கூறினான்.
“அந்த பொண்ணு எப்படி இருக்கா சஞ்சய்?” அவர் கேட்க,
இப்பொழுது தான் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கோம் சார். நான் இப்பவே வாரேன்..
நான் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன். நீங்க அவங்கள பார்த்து செட்டில் பண்ணி விட்டுட்டு வாங்க..
“இங்க எல்லாரும் ஓ.கே சார். நான் வாரேன்” அலைபேசியை அணைத்து, இந்து சகிக்கு கொடுத்துட்டு நீயும் சாப்பிடு…
“டேய் சாப்பிட்டு போ…” சுவர்ணலதா கூற,
“இப்பவே நான் போகணும்மா” என்று அவன் நகர, படாரென உணவுத்தட்டை கீழே போட்டார் சுவர்ணலதா.
அம்மா……
“நீ சாப்பிடலைன்னா நானும் சாப்பிடலை” சினமுடன் அறைக்கு சென்றார்.
“ம்ச்ச்…அப்பா நீங்களாவது சொல்லுங்க. அர்ஜன்ட் வொர்க். இப்ப நான் போயாகணும். அம்மா ஏன் இப்படி பிடிவாதம் பண்றாங்க” சத்தமிட்டான்.
“நீ சாப்பிட்டு எங்கேயும் போயிட்டு வாப்பா…” அவர் வருத்தமுடன் பிரியசகி அறையை பார்த்துக் கொண்டே கூறினார்.
“அம்மா, வெளிய வாங்க சாப்பிடுறேன்” சஞ்சய் கூறவும் விரைந்து ஓடி வந்த சுவர்ணலதா தன் மகனுக்கு உணவுத்தட்டை எடுத்து வைக்க,
“அம்மா நீங்க சாப்பிடுங்க” என்று பூரியை கையில் எடுத்து கிழங்கை அதன் மீது தடவி வேகவேகமாக உண்டான்.
“உட்கார்ந்து தான் சாப்பிடேன்” அவர் கூற,
“எனக்கு நேரமில்லை” சொல்லிக் கொண்டே மூன்று பூரியை மட்டும் திணித்து அவன் நகர, அவன் பின்னாலே ஓடி வந்த நாகேந்திரன் பழச்சாற்றை அவனுக்கு கொடுக்க, “அப்பா…” அவரை முறைத்தான்.
மதியம் நேரமாக்கிட்டேன்னா..அதான்…. ஒழுங்கா உட்கார்ந்து கூட சாப்பிடலை கண்டித்தார்.
“வந்துருவேன்” பிரியசகி அறையை பார்த்துக் கொண்டே தம்ளரை தந்தையிடம் கொடுத்து விரைந்து காரை செலுத்தினான்.
“பாரு, மாமா எவ்ளோ பிஸிலயும் நம்ள பார்த்துக்கிறார் கிரேட்ல” நவீன் இந்துஜாவை பார்ப்பது போல பிரியசகியை பார்த்தான். அவளது விழிகளும் அவன் சென்ற இடத்திலே நிலைத்திருந்தது.
மதிய உணவு வாங்கி வந்த சஞ்சய் உணவை பிரசாத்திடம் கொடுத்து விட்டு எதிர்வீட்டிற்கு சென்றான்.
“சஞ்சய் எங்க போற?” சுவர்ணலதா கேட்க, “வந்துருவேன்மா” அவன் சென்று விட்டான். அவன் பின்னாலேயே பிரசாத்தும் இந்துஜாவும் சென்றனர். நவீனும் ராக்கியும் பிரியசகியுடன் இருந்தனர்.
எதிர்வீட்டு காமாட்சி ஆன்ட்டியிடம் பிரியசகி உணவுக்காக உதவி கேட்டான்.
அவர் கணவனின் எண்ணத்தில்……
“சாரி சஞ்சய். என்னோட புருசன் பத்தி உனக்கு தெரியாதா? சந்தேகப்பேர்வழி…தப்பா பேசுவாரு” வருந்தினார்.
வருத்தமுடன் மூவரும் வெளியே வந்தனர். ஆட்டோவிலிருந்து இறங்கினார் நெடுங்குழலி.
“அத்தை வாங்க” சஞ்சய் அழைக்க, இந்துஜா முகத்தை திருப்பி உள்ளே சென்றாள்.
பிரியசகியை பார்த்துட்டு இந்துவிடம் பேச வந்தேன்.
“பேச மாட்டாளா? இன்னும் கோபமா இருக்காளா?” அவர் கேட்க,
“அவ அப்படி தான் ஆன்ட்டி. நீங்க வாங்க” பிரசாத் அவரை உள்ளே அழைத்தான்.
சஞ்சய் பின் வந்தவர், இவர்கள் பேசியதை கேட்டார் போலும். உங்க அம்மா ஒத்துக்கிட்டா நான் செய்து தாறேன் என்றார்.
வேண்டாம் ஆன்ட்டி..
“என்ன விசயம்பா?” நெடுங்குழலி கேட்க, “அம்மா உதவ முன் வரலை” என்று சுருக்கமாக கூறினான் சஞ்சய்.
“அதுனால என்னப்பா? நான் புள்ளைய பார்த்துக்கிறேன். ஆனால் நான் இங்கிருந்தால் இந்து கோபப்படுவாளே! உன் பெற்றோரும் என்ன சொல்கிறார்களோ?” நெடுங்குழலி கூற, சஞ்சய் ஆஷ்வாசமடைந்தான்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி, இந்துவை நாங்க பார்த்துக்கிறோம்”. பிரசாத்தும் நவீனும் நாளை கேரளா கிளம்புறாங்க.
இந்துவிற்கு சமைக்க தெரியாது. நீங்க சமையலை மட்டும் பார்த்துக்கோங்க. சகியை இந்து பார்த்துப்பா..
காலையிலே நான் இங்கே வந்துடுறேன். என்னோட பசங்க இங்கே உணவுண்ணலாமா? கேட்டார்.
“ஆன்ட்டி, ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீங்களே!” சஞ்சய் கேட்க,
என்னப்பா?
“சகிக்கு குணமாகும் வரை இங்கேயே தங்குறீங்களா?” இனியவா, விச்சுவும் இங்கே இருக்கட்டும். உறங்க மட்டும் உங்க வீட்டுக்கு செல்லட்டும் என்றான்.
யவா, என்ன சொல்றானோ?
“அவனிடம் நான் பேசுறேன் ஆன்ட்டி” சஞ்சய் கெஞ்சுதலாக பார்க்க, அவர் ஒத்துக் கொள்ளவும் தான் நிம்மதியானது.
மதியம் உணவு வாங்கி கொடுத்துட்டேன். உங்களை டாக்டர் ரக்சனாவிற்கு அறிமுகப்படுத்துகிறேன். உணவு பதார்த்தங்களை அவரிடம் கேட்டு, சகிக்கு உணவு தயார் செய்து தர்றீங்களா? ப்ளீஸ்…
“எதுக்குப்பா ப்ளீஸ்? அந்த புள்ளைக்காக பண்றேன்பா. எவ்வளவு கஷ்டத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தனியே போராடி இருக்கு. எனக்கு போராட்டத்தின் வலி தெரியும்பா…” அவர் வீட்டினுள் நுழைந்து வெள்ளைக் கோட்டை பார்த்து நின்று விட்டார்.
“சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் கோடு போட்டது போல போட்டு வச்சிடுக்கீங்க? குழலி கேட்க,
“எனக்கு வேற வழி தெரியல ஆன்ட்டி” பிரியசகி இருக்கும் அறையை காட்டினான்.
நாகேந்திரனையும் சுவர்ணலதாவையும் பார்த்து குழலி புன்னகைக்க, அவர்கள் மகனை பார்த்தனர்.
ஆன்ட்டி, கிச்சனுக்கு இந்த அறையை பயன்படுத்திக்கோங்க. நான் எல்லாமே தயார் செய்து தாறேன். பொருட்களை மட்டும் லிஸ்ட் போடுங்க. வாங்கிடலாம்..நீங்க பக்கத்து அறையை எடுத்துக்கோங்க. இந்துவும் பசங்களும் மேல் அறையில் தங்கிப்பாங்க. எதுவும்னா இது இந்துவோட எண். அவளுக்கு அழையுங்க என தன் பெற்றோர் முன்னிலையிலே அவனாக முடிவெடுத்தான்.
“அம்மா, அப்பாகிட்ட கேட்டுக்கோங்கப்பா…” அவர் கேட்க,
நான் கேட்கலை ஆன்ட்டி, இப்ப சாப்பிட போவேன். சொல்லிக்கிறேன் என்று அவரை பிரியசகி அறைக்கு அழைத்து சென்றான்.
நெடுங்குழலி பிரியசகி அறைக்கு வரவும் அவள் எழ முயன்றாள்.
படுத்துக்கோம்மா…
“வாங்க ஆன்ட்டி” நவீன் எழுந்தான்.
புன்னகைத்து அவர் இந்துஜாவை பார்க்க, அவள் அமைதியாக அவரை கவனிக்காதது போல அமர்ந்திருந்தாள்.
“ஜா, ஆன்ட்டி வந்துருக்காங்க” நவீன் கூற, பிரசாத்தும் சஞ்சயும் உள்ளே வந்தனர்.
“இருக்கட்டும்பா. நானும் அவசரப்பட்டுட்டேன். நான் கேசவண்ணாவை தப்பா பேசிட்டேன். அவரு பற்றி தெரிந்தும் ஊரார் பேசியதை நம்பீட்டேன். யவா முன்னாடி சொல்லாமல் இருந்துட்டான். அவனுக்கு அண்ணா நல்ல பழக்கம். அவன் நம்பிக்கை என்னிடம் கொஞ்சமும் இல்லாமல் போனது” வருத்தமுடன் இந்துஜாவை பார்த்து,
மன்னிச்சிரு இந்து. நான் அறிந்து எதுவும் பேசவில்லை. விசாரிக்காமல் பேசியது தவறு தான்…
யவா நேற்று தான் உன் நிலையை சொன்னான்மா. அவன் என்னிடம் பேசவேயில்லை. நேற்று தான் பேசினான். அவனுக்கு யார் செய்தாலும் தவறு தவறுதான். லேசுக்குள் யாரையும் மன்னிக்க மாட்டான்…என்றார்.
எல்லாரும் இந்துஜாவை பார்த்தனர். அவள் முகம் வாடியது.
ரொம்ப பெயினா இருக்காம்மா? முதல்லவே என்னிடம் உதவி கேட்டிருந்தால் இப்படி நடந்துருக்காதுல்ல?
பிரியசகி சிறுபுன்னகை உதிர்த்தாள்.
“பெயின் இருக்கு ஆன்ட்டி. மனசுல பாதி பாரம் இறங்கி இருக்கு” விழிகளை மூடி திறந்தாள்.
எவ்ளோ பெரிய விசயம் பண்ணி இருக்கம்மா?
ஆன்ட்டி…எச்சிலை விழுங்கி வயிற்றை பிடித்தாள்.
“என்னாச்சும்மா?” அவர் பதற, அனைவரும் அவளருகே வந்தனர்.
“ஒன்றுமில்லை” அனைவரையும் பார்த்து, “ஜா கொஞ்சம் பிடிவாதம் பண்ணுவா. அதுவும் அங்கிள் விசயத்துல. அவளுக்கு நேரம் கொடுங்க. அவளே பேசுவா..” இந்துஜாவை பார்த்தாள் பிரியசகி..
இந்து அண்ணாவோட செல்லப் பொண்ணுன்னு தெரியும்மா. அவரும் அவளை பார்த்தார்.
இந்நேரம் அதிகம் பேசாத. அமைதியா இரு. சில நாட்கள் நானும் இங்கே இருந்து உன்னை பார்த்துக்கிறேன். உன்னோட வாழ்க்கையை நீ புதுசா தொடங்கணும்மா…
“ஆன்ட்டி..” பிரியசகி விழிகள் கலங்கியது.
இந்துஜா அவளருகே அமர்ந்தாள்.
இந்து, ஆன்ட்டியோட பேசு. வீம்பு பண்ணாத. உன்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டாங்க. உனக்கு உன் அப்பா போல தான அவங்களுக்கு அவங்க கணவனும்…என்றாள்.
“ம்ம்! முயற்சிக்கிறேன்” இந்துஜா வெறுமையுடன் கூற, அவளது பதிலில் நெடுங்குழலி உள்ளம் குளிர்ந்தது.
சஞ்சய் இனியவனை காண கல்லூரி கிளம்ப, நவீனும் அவனுடன் சென்றான். இருவரும் அவனிடம் பேச,
அம்மா விருப்பத்துடன் தான செய்றேன்னு சொன்னாங்க? வினவினான்.
உதவி கேட்டேன். செய்றேன்னு சொன்னாங்க.
சரி மாமா, நான் அங்கு தங்க மாட்டேன். விச்சு அம்மாவுடன் தங்கிக்கட்டும். அவங்களுக்கு விச்சு இல்லாமல் வேலையே ஓடாது…
நீ தனியா இருக்கணும்னு அவங்க பயப்படுவது போல இருக்கு இனியவா?
நான் பார்த்துக்கிறேன் மாமா…
“அண்ணா, இந்து மேல கோபமா இருக்கீங்களா? அவ இப்படி தான் யோசிக்காம செய்துடுவா. பிறகு வருத்தப்படுவா. உங்க தம்பியை எண்ணி அவளும் வருந்தினாள்” என்றான் நவீன்.
“வருத்தம் மனசுக்குள்ள இருந்தால் எப்படி பிரச்சனை சரியாகும்?” இனியவன் கேட்க,
புரிஞ்சிடுச்சு மாமா. அதான் விச்சு வீட்டுக்கு தான வருவான். நாங்க பார்த்துக்கிறோம் என்றான்.
யாரு நீயா? இங்க நீ பார்த்தா உன் வேலையை யாரு பார்ப்பா? சஞ்சய் வினவ, மாமா அது,…தயங்கினான் நவீன்.
நாளைக்கு சென்று உங்களது வேலையை இருவரும் மொத்தமாக முடித்து இங்கே செட்டில் ஆகணும். சும்மா நான் சொல்லவில்லை. உனக்கு புரியுதா? கண்டிப்புடன் சஞ்சய் கேட்க,
சரி மாமா என்றான்.
இனியவன் இருவரையும் கண்டு புன்னகைத்தான்.
இனியவனை காண வரும் முன் சஞ்சய் தன் பெற்றோரை சந்தித்து இனியவன் தாய் இவர்களுடன் தான் இருக்கப் போவதாக கூறி விட்டு,
அம்மா உன்னோட கோபத்தை அவங்ககிட்ட காட்டிறாதீங்க. நம்ம இந்து அவங்க வீட்ல தான் வாழணும். நினைவில் வச்சி நடந்துக்கோங்க…என்றான்.
“இந்துவா?” நாகேந்திரன் மகனை பார்க்க,
ஆமாப்பா இனியவனுக்கும் இந்துவிற்கும் ஒருவரை ஒருவர் பிடிச்சிருக்கு. ஆனால் அவர்கள் கூறிக் கொள்ளவும் இல்லை காட்டிக் கொண்டது போலும் தெரியவில்லை. அதற்குள் பிரச்சனையாகிடுச்சு. ஆன்ட்டி அவங்க தவறை புரிந்து இந்துவிடம் மன்னிப்பு கேட்டுட்டாங்க. இனி அவள் தான் முடிவெடுக்கணும். தலையிடாதீங்க” சொல்லி தான் நவீனை அழைத்து சென்றான்.
மாலை மங்கும் நேரம் இனியவனும் விஷ்ணுவும் சஞ்சய் வீட்டிற்கு வந்தனர். சஞ்சய் வீட்டில் இல்லை. திறந்திருந்த கதவை தட்டியவாறு வாயிலில் நின்றனர்.
“வாங்க…” நாகேந்திரன் இனியவனை உள்ளே அழைக்க, அவனும் விஷ்ணுவும் போடப்பட்டிருந்த வெள்ளைக்கோட்டை பார்த்தவாறு அவருடன் சென்றனர்.
“அண்ணா…” பிரசாத் அழைக்க, வா..இனியவன் கையசைக்க, “வர மாட்டேன்” தலையசைத்தான் அவன்.
இனியவன் நாகேந்திரனை கேள்வியுடன் பார்த்தான்.
உங்க அத்த பிரியா கஷ்டப்படுற மாதிரி பேசிட்டா. இந்துவும் எங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு நின்னா அதான் சஞ்சய் இப்படியொரு ஏற்பாட்டை செய்து விட்டான் என்றார் வருத்தமுடன்..
பிரச்சனை என்னவென்று எல்லாம் இனியவனும் விஷ்ணுவும் கேட்கவில்லை. விஷ்ணுவின் விழிகள் இந்துவை தான் தேடியது.
“லதா, மாப்பிள்ளைகளுக்கு டீ போட்டு எடுத்து வா” சத்தமிட்டார் நாகேந்திரன். அவர் சத்தத்தில் நெடுங்குழலி வெளியே வந்தார்.