சூரியன் 13

சிகிச்சை முடியவும் வெளியே வந்த ரக்சன் சர்ஜரி நன்றாக முடிந்தது அங்கிள்.

பிரியசகி ஒரு மாதம் முழுவதும் நன்றாக ஓய்வெடுக்கட்டும். பின் அவங்க வெளியே வரலாம். ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருக்கட்டும்.. என்று சஞ்சயை பார்த்தாள் ரக்சனா..

அவன் இவர்கள் பேசுவதை கேட்டாலும் அவன் விழிகள் பிரியசகி இருக்கும் அறையில் தான் இருந்தது. விரக்தியுடன் ரக்சனா சஞ்சயை பார்த்தாள்.

மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆஷ்வாசப்படுத்தி அறைக்கு வெளியே வந்த ரதி,

“அண்ணா வருத்தப்படாதீங்க. பிரியசகி சீக்கிரம் சரியாகிடுவாங்க. கருப்பை இருந்தும் குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் தத்தெடுத்து வளர்க்கிறாங்க” என்று அவனுக்கு ஆறுதலாக பேசி நகர்ந்தாள்.

“இதெதுக்கு எங்கிட்ட சொல்றா?” சிந்தனையுடன் ரக்சனை பார்க்க வந்தான்.

“சஞ்சய், எனக்கு முக்கிய வேலை ஒன்று இருக்கு. நாம நாளை பேசலாம்” வெளியே ஓடினான் ரக்சன்.

“என்னாச்சு இவனுக்கு?” புருவம் உயர்த்தி ரக்சன் செல்வதை கண்டு கொண்டே ரக்சனாவை பார்க்க சென்றான் சஞ்சய். உள்ளே கமிஷ்னர் சந்திரசேகர் இருந்தார்.

“சார்…” சஞ்சய் தயங்க,

“உட்காருங்க சஞ்சய்” அவனை அமர வைத்து, “ரக்சனாவுக்கு மாப்பிள்ளை பார்க்க போறோம்” என்று அவன் முகம் பார்த்தார்.

“நல்லது சார்..” வராத புன்னகையை இழுத்தான்.

“பிரியசகி நிலை பற்றி பசங்க சொன்னாங்க” சந்திரசேகர் சஞ்சய் முகம் காண, அவன் எழுந்தான்.

அவன் கரம் பற்றி, சஞ்சய் எந்த நிலையிலும் மனம் தளரவே கூடாது. குழந்தையில்லாமல் அந்த பொண்ணு கஷ்டப்படும். நீங்க அனைவரும் ஆதாரவா இருங்க. கவனம்…சஞ்சயிடம் எச்சரிக்கை பார்வை செலுத்தினார். அவன் மனம் கலங்கினாலும் ஓ.கே சார் என்றான்.

ரக்சனாவை கண்டு லேசான புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” கரம் நீட்டினான்.

மனம் தாளாது அவன் கரம் பற்றிய அவளால் அவனது கரத்தை விட மனமில்லை.

“ரக்சி…” தந்தையின் அழைப்பில் சஞ்சய் கரத்தை விடுத்து “சாரி சஞ்சய்” என்றாள்.

அவளை அறிந்த சஞ்சயும், “அப்பாகிட்ட பேசுங்க ரக்சனா” நழுவிக் கொண்டான்.

வீட்டிற்கு சென்று மகளை படுக்க வைத்து சந்திரசேகர் அவறைக்குள் நுழைந்து கொண்டார்.

தந்தை சென்றதும் இமைகளை பிரித்த ரக்சனாவிற்கு உறக்கம் வரவில்லை. சஞ்சயின் புகைப்படத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தங்கையை காண வந்த ரக்சன் உள்ளே செல்லலாம் என எண்ணும் போது, லைட்டரை கையில் எடுத்து சஞ்சயின் புகைப்படத்தை எறித்தாள். ரக்சன் அவனறைக்கே சென்று விட்டான்.

சஞ்சய், பிரசாத், இந்துஜா, நவீன் மட்டும் மருத்துவமனையில் இரவு முழுவதும் இருந்தனர்.

விடியலின் பின்னும் பிரியசகி எழவில்லை. இனியவன் கல்லூரிக்கு தயாராகி மருத்துவமனைக்கு பிரியசகியை பார்க்க வந்தான்.

பிரசாத்தை கண்டு அவனை நோக்கி செல்ல, சேரில் அமர்ந்து நவீன் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் இந்துஜா அவன் கண்ணிற்கு தெரியவும் அவன் இதழ்கள் மட்டுமல்ல விழிகளும் பிரகாசம் பெற்றது.

சஞ்சய் அவனிடம் வந்தான்.

“மாமா.. பிரியசகி” என கேட்க,

சஞ்சய் முகம் சரியில்லாமல் இருக்க பிரசாத்தை பார்த்தான். அவன் விசயத்தை சொல்ல, பெருமூச்சுடன் வெளியிலிருந்து அவளை பார்த்தான்.

“பார்த்துக்கோங்க மாமா. வாரேன்” இந்துஜாவை பார்த்துக் கொண்டே செல்வதை மூவரும் பார்த்தனர்.

“ஹாய் மாமா, இந்து தூங்கிட்டு இருக்காங்களா?” விஷ்ணு நேராக நவீன் தோளில் சாய்ந்து தூக்கத்தில் இருந்த இந்துஜாவை எழுப்ப, அவள் அவனை கண்டு அதிர்ந்து பின் சினமுடன் அவனை பார்த்தாள்.

“ஹாய்….நான் உங்களை காண தான் வந்தேன்” அவன் கூற, சஞ்சயிடம் குளிர்பானத்தை நீட்டினாள் ரதி.

ட்ரேயில் இருந்த குளிர்பானத்தை எடுத்த இந்துஜா விஷ்ணுவின் முகத்திலே ஊற்றி விட்டாள். அவன் அதனை வழித்து, “நர்ஸ் அக்கா குளிர்பானத்தில் சுகர் அதிகமா இருக்கு. குறைச்சுக்கோங்க. இல்ல இவங்க எல்லாரும் உங்க ஹாஸ்பிட்டல் பேசண்ட் ஆகிடுவாங்க” அவன் கூற, ரதி வியந்து அவனை பார்த்தாள்.

“விச்சு கெட் அவுட்” இந்துஜா சத்தமிட, அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

“அண்ணீ, இது உங்க வீடில்லை. மருத்துவமனை. நான் இங்கே அமருவேன். இங்கே நிற்பேன் இல்லை என்னோட அண்ணா தோளில் இப்படி கை போட்டுப்பேன்” பிரசாத் தோளில் கையை போட்டான். அவன் இவனை முறைத்தான்.

ரதி சிரிப்புடன் அவனை பார்த்தாள்.

“நர்ஸ் அக்கா நீங்க கேக்கலாம். ஏன்னா நீங்க இங்க வொர்க் பண்றீங்க. உங்க ஓனர் கேட்கலாம்” அவன் பேசிக் கொண்டிருக்க, கையை கட்டிக் கொண்டு விஷ்ணுவை பார்த்துக் கொண்டிருந்தான் ரக்சன்.

அம்மருத்துவமனையின் செக்யூரிட்டி விஷ்ணுவை பிடித்து இழுக்க, ரதியின் முகம் மாறியது.

விஷ்ணு வராந்தாவின் சுவற்றை பிடித்துக் கொண்டு, “அம்மா பேசியதற்கு நான் என்ன செய்வேன் இந்து? என்னிடமும் கோபப்படுற. நீ பேசும் வரை கல்லூரிக்கு கூட செல்லமாட்டேன்” அவன் சொல்ல, செக்யூரிட்டி வேகமாக இழுத்ததில் கீழே விழுந்தான் விஷ்ணு.

ரதியும் சஞ்சயும் பதறி ஓடிச் சென்று பார்த்தனர். கண்கலங்க எழுந்து கொண்டிருந்தான் விஷ்ணு.

ரதியும் சஞ்சயும் ஒருவாறு அவனிடம் கையை நீட்டினார்கள். இனியவன் ரக்சனாவுடன் பேசியவாறு அங்கு வந்தான். இவர்களை சேர்த்து பார்க்கவும் இந்துஜா அதிர்ந்து பார்த்தாள்.

விஷ்ணு இருவர் கையையும் பிடித்து எழுந்து அவனது ஆடையில் பட்ட தூசியை தட்டிக் கொண்டிருந்தான். எல்லார் பார்வையையும் பார்த்து விஷ்ணுவை கண்டு இனியவன் அவனிடம் செல்ல, அவன் பின்னாலேயே சென்றாள் ரக்சனா.

“சாரி விச்சு, அவ கோபமா இருக்கா. தப்பா எடுத்துக்காத..” சஞ்சய் கூறிக் கொண்டே அவனது சட்டையிலிருந்த மணலை தட்டிக் கொண்டிருக்க,

“விச்சு, இங்க எதுக்கு வந்த? என்னாச்சு?” இனியவன் அனைவரையும் பார்த்து சீற்றமான பார்வையை இந்துஜா மீது திணிக்க, அவளுக்கு கண்கள் கலங்கியது. அவன் முறைப்பில் அல்ல. ரக்சனாவுடன் இவன் என்ன செய்கிறான் என்று?

ஒன்றுமில்லை அண்ணா. நீ கல்லூரி வரலையா?

“கிளம்பீட்டேன் வா” விஷ்ணுவின் கரம் பிடித்து இனியவன் அழைக்க,

“இனியவா கோபப்படாத. அவ சட்டுன்னு கோபத்தை இறக்க மாட்டாள். ஆன்ட்டி பேசியது அவளது தந்தை பற்றி…” சஞ்சய் எடுத்துரைக்க….

அம்மா பேசுனாங்க தான். விச்சு என்ன செய்தான்? அவனுக்கு எதுவும் தெரியாது. எங்களை விட விச்சுவுடன் தான நன்றாக பேசினாள். இப்ப அவனை…சினமுடன் திரும்பி இந்துஜாவை முறைத்து அவன் நகர….

அண்ணா, நில்லு. நீயும் கோபப்படாத. நான் பேசிட்டு வாரேன்.

“இதுக்கு மேல என்ன பேசணும்? அதான் பதிலுக்கு உன்னை அனைவர் முன்னும் அவமானப்படுத்தி விட்டாளே! போதாதா?” சத்தமிட்டு விஷ்ணுவை இழுத்து சென்றான் இனியவன்.

விஷ்ணு இந்துஜாவை பார்த்துக் கொண்டே தன் அண்ணனுடன் சென்றான்.

“பிரியா விழித்து விட்டாள்” நவீன் கூற, அனைவரும் உள்ளே செல்ல ரக்சனாவும் பிரியசகியை காணச் சென்றாள்.

விழித்த பிரியசகியால் கால்களை அசைக்க முடியாமல் கண்ணீருடன் எல்லாரையும் பார்த்தாள்.

“பெயின் அதிகமா தான் இருக்கும். கொடுக்கும் உணவை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்” ரக்சனா கூற, “டாக்டர்…” அவளது கரத்தை வயிற்றில் பதித்தாள்.

உங்களால குழந்தை பெத்துக்க முடியாது பிரியசகி. கருப்பையை அகற்றி விட்டோம். உங்களிடம் ஏற்கனவே கூறியது தான். உங்களுக்கு தெரியுமே! மனதை திடப்படுத்தி சாதாரணமாக பேசி சஞ்சயை பார்த்தாள்.  அவளின் ஒவ்வொரு முகச்சுருக்கம், மனம் மற்றும் உடல் வலியும் அவன் கண்ணில் தெரிந்தது ரக்சனாவிற்கு

அழ கூட முடியவில்லை. அவ்வளவு வலி வேதனையில் இருந்தாள் பிரியசகி.. கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

“அழாதீங்க பிரியசகி. ஹெல்த்தை பார்த்துக்கோங்க” அவள் கரம் பிடித்து ஆறுதலாக தடவி விட்டு, “பேசாம அமைதியா இவங்கள பார்த்துட்டு போங்க” இந்துஜா கரம் பற்றி தனியே அழைத்து சென்றாள் ரக்சனா.

இந்து நீங்க பிரியசகிக்கு அருகே இருந்தால் தான் அவங்களுக்கு கம்பர்ட்டா இருக்கும். அதனால பக்கத்திலிருந்து அவங்க அழாமல் நல்ல நினைவுகள் இருந்தால் அவங்களை தேற்ற முயலுங்கள்.

என்னோட நேம் இந்துஜா என்றாள் பட்டென.

ஓ.கே இந்துஜா. அப்புறம் இனியவன் அம்மாவுக்கும் உங்களுக்கும் ஏதும் பிரச்சனைன்னா அவனிடமும் அவன் சகோதரனிடமும் கோபப்படணும்னு அவசியமில்லை.

“டாக்டர் அது எங்களோட பர்சனல்” முறைத்தாள் இந்துஜா.

பர்சனலா? அப்புறம் எதுக்கு அடுத்தவங்க முன் உங்க பர்சனல் ஆட்களை அவமானப்படுத்துறீங்க?

“விச்சுவே கோபப்படலை. நீங்க உங்க வேலைய பாருங்க. அப்புறம் என்னோட பிரியாவை பார்த்துக்க எனக்கு தெரியும்” முகத்தை திருப்பி அவள் செல்ல,

மனதில் புன்னகைத்த ரக்சனா, “இனியவா சரியான ஆள தான் புடிச்சிருக்க? என்ன திமிறா பண்றா?” என்று எண்ணியவாறு அங்கிருந்து அகன்றாள்.

ரதி ரக்சனாவை அமர வைத்து, நமக்கு வேலை இருக்கு. போகலாமா?

ரக்சனா தலைகவிழ, அவளது தாடையை பிடித்து நிமிர்த்தி புருவம் உயர்த்தி, “என்ன?” கேட்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்த ரக்சனா ரதியை கட்டிக் கொண்டு கண்ணீருடன், நேற்று நீ சொன்னது போல சஞ்சயை மனதிலிருந்து எடுத்தேன். இன்று அவரை பார்க்கவும் மறக்க முடியல ரதி…அழுதாள்.

“ஷ்ஷ்…யாரும் வந்துறாம ரக்சி” அவளது கண்ணை துடைத்து, நீ ஒரே ஒரு நிமிடம் உன்னோட தந்தையை மட்டும் நினைத்து பாறேன். அவர் தாயில்லாமல் உங்கள் இருவரையும் வளர்த்து அவர் கரியரையும் போகஸ் செய்து எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பார்? அவருக்கு உங்களது சந்தோசத்தை விட்டால் ஏதுமில்லை ரக்சி.

நீ எப்பொழுதெல்லாம் சஞ்சயை பார்க்கிறாயோ அப்பொழுதெல்லாம் உன் தந்தையின் போதாத அந்நிலையை எண்ணிப் பார். காதலெல்லாம் சாதாரணமாக தெரியும்…

வாழ்க்கைப் போராட்டத்தில் காதலை விட பெரிய விசயமெல்லாம் இருக்கு ரக்சி. உனக்கு அண்ணா இருக்கார். அவரால் பாதுகாப்பாக இவ்விடத்தில் இருக்கிறாய்…

எல்லாரும் உன் போல வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க மாட்டாங்க ரக்சி.

ஓ.கே செல்லலாமா?

ம்ம்!

இருவரும் ரக்சனா அறைக்கு சென்றனர்.

*******

பிரியசகியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சஞ்சய். கையில் புத்தகம் ஒன்றை வைத்திருந்தான். மற்றவர்கள் வெளியே இருக்க இந்துஜாவும் அவனும் மட்டும் தான் இருந்தனர்.

பிரியசகி அமைதியாக விழி மூடுவதும், விழி திறந்து சஞ்சய், இந்துஜாவை பார்ப்பதுமாக இருந்தாள். சஞ்சயின் விழிகள் அவளையே கவனிப்பதை பார்த்து இந்துஜா பிரியசகியை பார்க்கும் நேரம் கவனித்து கண்ணசைத்து அவளிடம் காட்டினாள்.

அண்ணா, நீ வெளிய இரு…

நான் இங்கே தான் இருப்பேன்..

உனக்கு வேலை இருக்கும்ல?

இல்லை. நான் சும்மா தான் இருக்கேன்..

ம்ச்…அண்ணா, வெளியவாது இரு.

முடியாது.

“என்னாச்சு உனக்கு?” அவனது நெற்றி, கழுத்தை இந்துஜா தொட்டு பார்த்தாள்.

பாதுகாப்பிற்காக நான் இருக்கேன்.

பிரசாத், நவீன் இருக்காங்க…

பரவாயில்லை. நானும் இருக்கேன்..

“வெளிய போ” அவனை இழுத்துக் கொண்டிருந்தாள் இந்துஜா. அவன் அசையாமல் மீண்டும் பிரியசகியை பார்த்துக் கொண்டிருந்தான்.

சுவர்ணலதாவும் நாகேந்திரனும் ராக்கியுடன் வந்தனர்.

“என்னடி பண்ற?”

பெரியம்மா, அண்ணா வெளிய போக மாட்டேன்னு அடம் பண்றான்.

“உன்னை விட நான் பண்ணலை” சஞ்சய் இந்துஜாவை முறைத்தான்.

நான் என்ன செய்தேன்?

விச்சுவை எதுவுமே செய்யலையா?

இந்துஜா அமைதியாகி விட்டாள்.

“கவலைப்படாதம்மா. நாங்க இருக்கோம்” நாகேந்திரன் கூறி மனைவியை காண அவர் பிரியசகி அருகே வர கூட இல்லை. பிரியசகியும் இந்துஜாவும் புரியாமல் அவரை பார்க்க, சஞ்சய்கு அவரின் எண்ணம் புரிந்து போனது.

“அம்மா நீங்க வெளிய இருங்க” என்றான் பட்டென.

“சஞ்சய்…” நாகேந்திரன் அழைக்க, சொல்றேன்லப்பா சத்தமிட்டான்.

ஏதும் பேசாமல் சுவர்ணலதா வெளியே சென்று அமர்ந்து கொண்டார். பிரசாத்தும் நவீனும் வந்தனர்.

என்னாச்சு? ஆன்ட்டி வெளிய வந்துட்டாங்க.

சஞ்சய் ஏதும் பேசாமல் எழுந்து வெளியே சென்று தன் தாயருகே சென்று,

“நல்லதும்மா…நடிக்காமல் உண்மை முகத்தை காட்ட ஆரம்பிச்சுட்டீங்க” சொல்லி மருத்துவமனையை விட்டு வெளியே சென்று அமர்ந்து கொண்டான்.

“நடிப்பா? என்ன சொல்றான் இவன்?” சினமுடன் அவரும் வெளியே வந்தார்.

சகியை பார்த்தவுடன் அவள் நிலைக்காக வருந்தியா வீட்டிற்கு அழைத்து வந்தீங்க? அவளை சரி செய்து எனக்கு திருமணம் செய்ய நினைச்சீங்க. இப்ப அவளோட கருப்பையை எடுக்கவும் அவளருகே நான் செல்லக் கூடாதுன்னு தான வேண்டுமென்றே அவளை அவாய்டு பண்றீங்க?

“மனதில் உள்ளதை கண்டறிந்து விட்டானே!” விழித்தார் சுவர்ணலதா.

ஆமாடா, அம்மாவா நான் வேறென்ன எண்ணுவேன்? உனக்கு பிரியாவை பிடிக்கும். திருமணம் செய்ய எண்ணி தான் அழைத்து வந்தேன். ஆனால் இப்பொழுது நம்ம குலம் விருத்தியாகாதுன்னு தெரிந்தும் உன்னை அவளுக்கு திருமணம் செய்ய எனக்கு என்ன பைத்தியமா?

சிரித்தான் சஞ்சய்…

“சோ…என்னோட மகிழ்ச்சி உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு தேவை பேர் சொல்ல வாரிசு” விரக்தியுடன் அன்னையை பார்த்து, “இனி அவளருகே தான் நான் இருப்பேன். என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க” எழுந்து மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றான்.

  பிரசாத் சுவர்ணலதா முன் வந்து, ஆன்ட்டி உங்க மேல எங்களுக்கு பெரிய மரியாதை இருந்தது. அதை நீங்க கெடுத்துக்கிட்டீங்க.

நீயெல்லாம் என்னை பேசுறியா?

விரக்தியுடன் அவரை பார்த்து, பிரியாவின் நிலை கண்டு அவளுக்கு நான் இருக்கேன்னு பெரும் நம்பிக்கை தந்தது நீங்களும் அங்கிளும் தான். ஆனால் இப்பொழுது இப்படி பேசுறீங்க? அவள் இருக்கும் நிலையில் உங்கள் மகனை திருமணம் செய்ய ஒத்துப்பான்னு நினைக்கிறீங்களா? அவளுக்கு மாமாவின் காதல் தெரியாது. அதை விட மாமாவிடம் அதிகம் பேசியது கூட இல்லை. பேச முடியாமல் படுக்கையில் துவண்டிருக்கும் அவளோட மனதுக்கும் குழந்தை இனி அவளுக்கு இல்லைன்னு நன்றாக தெரியும். மனதிலும் உடலிலும் வலியை சுமக்கும் அவளை பற்றி நீங்களே இப்படி பேசுறீங்க என்று நிறுத்தி…விழிகளை துடைத்தான்.

அண்ணனை பின் தொடர்ந்து வந்த நவீன் அனைத்தையும் கேட்டு, “அண்ணா இவங்க உதவி இனி நமக்கு தேவையில்லை. ஆன்ட்டி இனி நீங்க எங்க பிரியாவை பார்க்கவும் வர வேண்டாம். அவளுக்காக எதுவும் செய்ய வேண்டாம். அவளை நாங்க பார்த்துக்கிறோம்…வா அண்ணா” பிரசாத் கரம் பிடித்து நவீன் திரும்பினான்.

கண்ணீருடன் நாகேந்திரன் அவர்களையும் வீம்புடன் முகத்தை உர்ரென வைத்திருக்கும் மனைவியையும் பார்த்தார்.

“லதா பசங்க என்ன பேசுறாங்க? நீ அமைதியா இருக்க?” மனைவி அருகே வந்தார்.

சஞ்சய் தடுத்தும் கேட்காமல் வெளியே வந்த இந்துஜா அவர்களிடம் வர, சஞ்சயும் அவள் பின்னே வந்தான்.

“நான் பேசி என்ன செய்றது? அதான் புத்திரபாக்கியம் இனி அவளுக்கு இருக்காதுல்ல. அவள வச்சிட்டு என்ன செய்றதாம்? அந்த அநாத கழுத இருந்தா என்ன? செத்தா எனக்கென்ன?” துடுக்குடன் வார்த்தைகளை கொட்டி விட்டார்.

நாகேந்திரன் கரத்தை ஓங்கவும் “பெரியம்மா” இந்துஜா கத்தவும் சரியாக இருந்தது. சஞ்சய் கண்ணில் அனல் தெறிக்க சீற்றம் இருந்தது.

இந்துஜா லதா அருகே வந்து அவரை முறைத்து நிற்க, ஓங்கிய கரத்தை இறக்கினார் நாகேந்திரன்.

“என்ன பெரியம்மா சொன்னீங்க? அநாத… கழுதையா? அவ செத்தா என்னன்னு கேட்குறீங்க? நீங்க எங்க ஊருக்கு வரும் முன் எப்பவாது தான் எங்க வீட்டுக்கு வருவீங்க. ஆனால் பிரியா எனக்கு கே.ஜியிலிருந்து பழக்கம். அவ அநாதைன்னா நான் இப்ப யாரு பெரியம்மா? அம்மா, அப்பா, அக்கா யாருமில்லாமல் நானும் அநாதையா தான நிக்கிறேன்.

இவளை அந்த சரண் வீட்டில் பார்த்த போது கூட அவள் இவ்வளவு மோசமாக இல்லை. நான் அவள் வீட்டிற்கு சென்ற பின் தான் அவள் உயிருக்கே ஆபத்தாகும் நிலையாகிடுச்சு. இப்படி நடக்கும்னு தெரிந்து என்னை காப்பாற்ற அவள் அவளை அவனிடம் பழி கொடுத்து எல்லாத்தையும் இழந்து நிக்கிறா….” சினத்தில் தொடங்கி அழுகையில் முடித்தாள்.

என்னடி பேசுற? நீயும் அவளும் ஒன்றா? நீ என்னோட தங்கச்சி புள்ளடி..

“அம்மா…” சஞ்சய் சத்தமிட,

“இந்து அமைதியா வா…” பிரசாத் அவள் கரம் பற்றினான்.

பிரசாத் கரத்தை எடுத்து விட்ட இந்துஜா சுவர்ணலதா அருகே வந்தாள்.

நேற்று தான் பிரியாவுக்கு நம்பிக்கை கொடுத்து பேசுனீங்க? நான் உங்க தங்கச்சி பொண்ணு தான். உங்க பொண்ணு இல்லை. இதே போல நீங்க என்னையும் பேச ரொம்ப ஆகாது பெரியம்மா. இனி எங்க யாரையும் நீங்க பார்த்துக்கணும்னு அவசியமில்லை. நாங்க இருந்தாலும் செத்தாலும் நீங்க பார்க்க வர வேண்டாம் பிரசாத், நவீன் கரம் பற்றி அவர்களை இந்துஜா உள்ளே இழுத்து செல்ல, சீற்றமுடன் அவர்களை பின் தொடர்ந்தான் சஞ்சய்.

இந்துஜா கரம் பற்றி, “இந்து…”அழைத்தான் சஞ்சய்.

அவ்விடத்திற்கு செவிலியர் ரதி வந்தாள்.

சஞ்சயை கண்கலங்க பார்த்து, “அண்ணா, என்னை மன்னிச்சிருங்க” ரதி தலைகவிழ்ந்தாள்.

மன்னிப்பா?

ஆமா அண்ணா, பிரியசகி இப்பவே கீழ என்ன நடக்குதுன்னு பார்க்க சொன்னாங்க. நான் சொல்லவில்லை என்றால் படுக்கையிலிருந்து இறங்கி கீழே போவேன்னு மிரட்டினாங்க…

வீடியோ எடுக்க சொன்னாங்க. நானும் எடுத்துட்டேன்…சாரி…

“என்ன வீடியோ? புரியும் படி கூறு” இந்துஜா சொல்ல, மேம் உங்க பெரியம்மா பேசியதை கேட்டு ரொம்ப அழுதாங்க.

எதுக்கு அவகிட்ட…? உஃப் காற்றை ஊதித் தள்ளி சஞ்சயும் இந்துஜாவும் பிரியசகியை கவனிக்க சென்றனர்.

பிரியசகி கண்ட வீடியோவில் சஞ்சயின் காதலை பற்றி பேசியதன் பின்னே வீடியோ எடுத்திருந்தாள் ரதி.