அத்தியாயம் 20

இறைவனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வண்டியில் ஏறியதும், “சக்தி நாம முக்கியமான ஒரு இடத்துக்கு இப்ப போகப் போறோம்” என்றவள் ஓட்டுனரிடம் தான் கூறும் பாதையில் வண்டியைச் செலுத்துமாறு உரைத்தாள்.

“எதுவும் சர்ப்ரைஸ்ஸா பொண்டாட்டி?” என்று வழமைப் போல் கேட்டவனை, ‘அய்யோ எங்க போறோம்னு தெரிஞ்சா திட்டுவாரோ’ என்ற பாவனையுடன் பார்த்தவள், “அதெல்லாம் ஒன்னுமில்லை. இதுவும் நம்ம டிரிப்ல ஒரு பிளான் அவ்ளோ தான்” என்று விட்டாள்.

வண்டி அவள் கூறிய வழியில் சென்று கொண்டிருக்க, “இந்த இடம் எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்று சக்தி யோசனையாகக் கூறவும்,

‘அய்யோ இவர் சின்ன‌ வயசுல இந்த ஊருக்கு வந்ததா சொல்லிருக்காரே! அந்த ஞாபகத்துல சொல்றாரோ? எங்க போறோம்னு கண்டுபிடிச்சிடுவாரோ? தெரிஞ்சா அங்க போக வேண்டாம்னு சொல்வாரோ’ என எண்ணிப் பதறியவளாய் அவனைத் திசை திருப்பும் பொருட்டு,

“உங்களுக்கு எப்படி சக்தி இவ்வளோ கடவுள் பக்தி வந்துச்சு? காலேஜ் படிக்கிற வரைக்கும் கூட நீங்க இப்படி இல்லைனு அத்தை சொன்னாங்க! எப்படி இந்தத் திடீர் மேஜிக் நடந்துச்சு?” நெடுநாட்களாகக் கேட்க வேண்டுமென நினைத்திருந்த கேள்வியைக் கேட்டிருந்தாள்.

“இதெல்லாம் நாம நினைச்சு வரதில்ல வஞ்சி! அவனருளாலே அவன் தாள் வணங்கினு சிவபுராணம்ல மாணிக்கவாசகர் சொல்லிருக்க மாதிரி அவர் நினைச்சா தான் அவரையே நாம வணங்க முடியும். எல்லா பிறவிலயும் அவரோட அடியவனா இருந்திருப்பேனோனு அவரைக் கும்பிட ஆரம்பிச்ச பிறகு நிறைய நாள் நினைச்சிருக்கேன். ஏன்னா சுந்தரரோட கல்யாணத்தை நிறுத்தி அவரைக் கூட்டிட்டு போய் பித்தானு பாட வச்சாரே அந்த மாதிரி எனக்கு ஒரு நாள் ஞானத்தைக் கொடுத்தார்”

“அப்படியா? இன்ட்ரஸ்டிங்! அப்படி என்ன ஆச்சு?” என்று ஆர்வமாகக் கேட்டாள் இளவஞ்சி.

ஓட்டுனரின் முகத்திலும் கதை கேட்கும் ஆர்வம் ஒட்டிக் கொண்டது.

“காலேஜ் முடிச்சிட்டு பல வருஷம் வேலை இல்லாம நொந்து திரிஞ்சிட்டு இருந்த காலம் அது. எங்கே போனாலும் முதல் ரவுண்ட்லயே ரிஜக்டட் ரிஜக்டட்னு நிறைய ரிஜெக்ஷன் பேஸ் செஞ்சி இருந்த நேரத்துல ஒரு நாள் இன்டர்வியூக்கு போனேன். அன்னிக்கு காலைல முதல் ரவுண்ட்ல செலக்ட் ஆகி அப்படியே இரண்டு மூனு ரவுண்ட்லயும் செலக்ட் ஆகி எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்னு பெரிய எதிர்பார்ப்போட ஹெச் ஆர் ரவுண்ட்ல போய் பேசிட்டு வந்து உட்கார்ந்தா, நாட் செலக்டட்னு சொல்லிட்டாங்க. செம்ம கோபம். ஹெச் ஆர் சட்டை பிடிச்சி சண்டை போட்டுட்டு செம்ம கோவத்தோட அன்னிக்கு நைட் பைக் ஓட்டிட்டு வந்தேன். என் வாழ்க்கைல ரொம்ப எதிர்பார்த்து பெரிய ஏமாற்றமா மாறின நிகழ்வு அந்த இன்டர்வியூ தான். மனசொடஞ்சி போச்சு. சிவன் கோவில் வழியா தான் வீட்டுக்குப் போகனும்”

கடலென்ற புவிமீதில்
அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்
உடலென்ற கும்பிக்கு
உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டு உண்டு உறங்குவதைக்
கண்டதே யல்லாது
ஒருபயனும் அடைந்திலேனை

சத்தமாய் இந்த வரிகளைப் பாடியவன் நிறுத்த,

“ப்பாஆஆஆ என்ன குரல் சார்! கேட்குறவங்க உள்ளமுருகிப் போய்டும் சார்” மனம் நெகிழ்ந்தவராய் உரைத்தார் ஓட்டுனர்.

மென்மையாகச் சிரித்தவன் தொடர்ந்தான்.

“செம்ம கோபத்துல வண்டியை ஓட்டிட்டு வந்தவன் காதுல இந்தப் பாட்டு விழவும், எனையும் மீறி கண்ணுல இருந்து தண்ணீர் கொட்டுது! என் கை தானா வண்டியை சிவன் கோவில் வாசல்ல நிறுத்துச்சு! கண்ணைத் துடைச்சிட்டே சிவன் கோவிலுக்குள்ளே போய் பார்த்தேன். நடராஜர் பத்துப் பாடலை அந்த கோவில் ஓதுவார் கண்களை மூடிக்கிட்டு ஆழ்ந்த பக்தியோட பாடிட்டு இருந்தார்‌. அதை கேட்டுக் கண்ணுல கண்ணீர் நிக்காம கரைப் புரண்டு ஓடுச்சு எனக்கு!”

நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!

“அவர் தொடர்ந்து பாடிட்டே இருக்க, இந்த வரிலாம் அப்படியே எனக்காக அவர் சிவன்கிட்ட கேட்டுச் சண்டைப் போடுற ஃபீல்! மனசுல இருந்த கோபமெல்லாம் கண்ணீராய் கரைஞ்சி போய் முகத்தை மூடிட்டு தேம்பி தேம்பி அழுதேன். எதுக்கு அழுதேன் ஏன் அழுதேன்னு கேட்டா எனக்கும் காரணம் தெரியலை. அத்தனை நாளாக இருந்த மன அழுத்தம் அப்படி அழ வச்சிதோ என்னமோ! அவர் பாட்டைக் கேட்டு நான் அழுததைப் பார்த்துட்டு என் மேல் அவருக்கு ஒரு மாதிரி அனுதாபம் பிரியம்னு கூட சொல்லலாம்” என்றவன் கூறிய நொடி,

“அப்ப இந்த ஓதுவார் கிட்ட தான் நீங்க சிவன்‌ பாடல்கள்லாம் பாட கத்துக்கிட்டதா?” என்று கேட்டாள் இளவஞ்சி.

“ஆமா அவர் பாடுவதைக் கேட்கிறதுக்காகவும் சிவனைப் பார்க்கவும் தினமும் நைட் கோவிலுக்குப் போய்டுவேன்”

“ஓ அந்த பழக்கத்துல தான் இப்பவும் நைட் ஆபிஸ்லருந்து நேரா கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்கு வர்றீங்களா?” எனக் கேட்டாள்.

ஆமெனத் தலையசைத்தவன், “உன்னை ஒரு நாள் அந்த ஓதுவார் கிட்ட கூட்டிட்டு போறேன். எனக்கும் சிவனுக்குமான ஆத்மார்த்த பக்திக்குப் பாலமாய் இருந்தது அவர் தான். நம்ம கல்யாணம் நடந்தப்ப அவர் சென்னைல இல்லை‌” என்றான்‌.

“மேடம் இங்கிருந்து எப்படிப் போகனும்?” என்று ஓட்டுனர் கேட்க, தனது கைபேசியில் கவனம் செலுத்தியவளாய் பாதையைக் கூறலானாள்.

அந்த நிகழ்வை உரைத்ததில் சக்தீஸ்வரனின் உள்ளம் அன்றைய நாளுக்கே பயணித்து நெகிழ்ந்து கிடந்தது.

அவர்களின் வண்டி ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஆற்றுப் படுக்கையைத் தாண்டி ஊருக்குள்ளே செல்ல, அவளின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அந்த ஊரிலுள்ள சிவன் கோவிலைத் தாண்டி வண்டிச் செல்லவும்,

‘இந்த கோவில் நான் கனவுல பார்த்த கோவில் மாதிரியே இருக்கே’ என்று நினைத்தவளாய், “டிரைவர் வண்டியை நிறுத்துங்க!” என்று சத்தமாக உரைத்தாள்.

“ஏன் நிறுத்த சொன்ன வஞ்சி” என்றவனாய் வெளியே சுற்றும் முற்றும் பார்க்க,

“இந்த கோவிலுக்குப் போய்ட்டுப் போகலாம் சக்தி” என்றவளாய் வண்டியிலிருந்து இறங்கினாள்.

அவனும் இறங்கி அவளுடன் இணைந்து நடந்தவாறு ஆலய வாசலில் நின்றான்‌.

அங்கிருந்த பூக்கடையில் அர்ச்சனைப் பொருட்களை வாங்கியவர்களிடம், “என்னம்மா புருஷனோட ஆயுசுக்காக வேண்டிக்க வந்தீங்களா?” எனக் கேட்டார் அந்த பூக்காரம்மா.

ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்திய இளவஞ்சி, “ஏன் அப்படிக் கேட்குறீங்க?” எனக் கேட்டாள்.

“இந்த கோவில் அதுக்கு தான்மா ஃபேமஸ்ஸூ. இது தெரியாம தான் இங்கே வந்தீங்களா! பரவாயில்லை தெரியாம வந்தாலும் புருஷனோட ஆயுளுக்காக வேண்டி விளக்கேத்துங்க” என்று அதற்காக அகல் விளக்கையும் எண்ணெய்யும் கொடுத்தார் அவர்.

சாதாரண நேரமாக இருந்தால், ‘நாங்களே பூக்கடை தான் வச்சிருக்கோம் அக்கா. உங்க வியாபாரத் தந்திரத்தை எங்ககிட்டயே காண்பிக்கிறீங்களானு’ கேட்டிருப்பாள். ஆனால் ஏற்கனவே சக்தியின் ஆயுள் குறித்து வந்த கனவில் தானே இந்த ஊருக்குச் செல்லுமாறு கூறியிருந்தார் எம்பெருமான் ஈசன். ஆக சக்தியின் ஆயுள் கண்டம் நீங்க சிவபெருமான் இவர்களை இங்கு அனுப்பி வைத்ததாய் எண்ணிக் கொண்டவளாய், அந்த பூக்காரம்மா அளித்த பொருட்களை மறுபேச்சு பேசாது வாங்கிக் கொண்டாள்.

இருவரும் ஒன்றாக வாயிலைத் தாண்டி கால்களை உள்ளே வைக்க, மனத்தில் இனம்புரியாத வலியை உணர்ந்தனர் இருவரும். அவர்களின் ஆன்மா எதையோ நினைத்து வேதனைக் கொள்வதாக புரிந்தது இருவருக்கும்.

சட்டென அருகிலிருந்த சக்தீஸ்வரனின் கையைப் பற்றிய இளவஞ்சி கலக்கத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்திலும் கலவையான உணர்வுகள்.

“சக்தி” என்று அவள் ஏதோ கூற வரும் பொழுதே,

உள்ளம் பொங்கி அடங்க, “என்னப்பன் இங்க இருக்காரு வஞ்சி” என்றான் சக்தீஸ்வரன்.

“என் மனசு சொல்லுது வஞ்சி! இது என்னப்பன் வாழும் இடம்! எம்பெருமான் ஈசன் வாழும் இடம்” என்றவன் நெகிழ்வுடன் கூற,

“என்ன சார்! பெருமாள் கோயில் வந்துட்டு சிவபெருமான் இங்க இருக்கிறதா சொல்லிட்டு இருக்கீங்க?” என்றவாறு அவர்களின் எதிரில் வந்து நின்றார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க குருமூர்த்தி.

இருவரும் அவரை யாரெனக் கேள்வியுடன் பார்க்க, “சார் நான் இந்தக் கோவில் ஆபிஸ்ல வேலை செய்றவன். இரண்டு பேரையும் பார்க்க வெளியூர்லருந்து வந்திருக்க மாதிரி இருக்கு! எதுவும் ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்றார்.

இவ்வாறு வெளியூரிலிருந்து வருபவர்களுக்குக் கோவில் உள்ளே கருவறை அருகே சென்று சாமியைத் தரிசிக்க பிரத்யேக அனுமதி வாங்கிக் கொடுப்பது, கோவிலைச் சுற்றிக் காண்பிப்பது போன்ற வேலைகளைச் செய்து பணம் பார்ப்பவர் குருமூர்த்தி. ஆகையால் தான் இவர்களிடம் இவ்வாறு கேட்டிருந்தார்‌.

குருமூர்த்தியின் பேச்சினிலேயே இதனை புரிந்துக் கொண்ட சக்தீஸ்வரன், “இல்லங்க எங்களுக்கு உதவி தேவைனா கேட்கிறோம். தேங்க்ஸ்” என்று நகர முற்பட்டான்.

“இந்த கோவில் ரொம்பப் பழமையானது! கலைப் பொக்கிஷமா பாதுகாக்கப்படுறது. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். உள்ளே போய் சுத்திப் பாருங்க!” என்றவாறு அங்கிருந்த அலுவலக அறைக்குள் சென்று விட்டார் குருமூர்த்தி.

“பெருமாள் கோவிலா இது! ஆனா ஏன் எனக்கு அப்படித் தோணுது வஞ்சி” எனக் கேட்டவாறு கொடிமரம் தாண்டி அவளுடன் இணைந்து நடந்தான் சக்தீஸ்வரன்.

மூலஸ்தானத்தின் நுழைவாயிலில் அழகிய மாதவப் பெருமாள் என்ற பெயர்ப் பலகையைக் கண்டதும் கண்ணீர் பெருகியது இளவஞ்சிக்கு‌.

சுவாசமும் சுவாமியே என நாராயண மந்திரத்தை விடாது உச்சரித்து அவரின் தரிசனத்தைக் கண்ட அதே கோவில் இது என அறிந்ததும் உடல் புல்லரித்துக் கைகள் நடுங்க உள்ளம் தடதடவென அடித்துக் கொண்டது‌.

‘எம் நாராயணனைக் காணப் போகிறேன்! எம் மாதவனைக் காணப் போகிறேன்’ அவளையும் மீறி அவளின் ஆன்மா அதீத பக்தியுடன் பரவசமாய் இருக்க, இருவரும் மூலஸ்தானத்திற்குள் சென்று நின்றனர்.

நின்ற கோலத்தில் அழகனாகக் காட்சியளித்த பெருமாளைக் கண்டு கண்ணீர் வடித்தாள் இளவஞ்சி‌.

‘உன்னைக் காண்பதே எனது பாக்கியம் என எத்தனை நாட்கள் உனைத் தேடி ஓடி வந்திருப்பேன் இங்கே! என்னைக் கை விட்டு விட்டாயே மாதவா! உன் பிரியத்திற்குரிய பக்தை இல்லையா நான்?’ மனதினுள் இக்கேள்வி எழும் பொழுதே நெஞ்சம் விம்ம தேம்பி அழுதாள் இளவஞ்சி.

அவளின் தேம்பல் ஒலியில் தான் அவளின் அழுகையைக் கண்டவன், “என்னாச்சு வஞ்சி? என்னை மாதிரியே உன் மனசும் எதையோ நினைச்சு இனம்புரியாம பதறுதா?” எனக் கேட்டான் சக்தீஸ்வரன்.

அவனின் கேள்வியில் நெற்றிச் சுருங்க, “இல்லங்க இவர்! இந்தச் சாமியை நான் கனவுல பார்த்திருக்கேன்” என்றாள் இளவஞ்சி.

அந்நேரம் ஐயர் தீபாராதனை காண்பித்து இவர்களிடம் வந்து பிரசாதத்தை வழங்கி விட்டுச் சென்றார்.

இருவரும் அங்கிருந்து நகர்ந்தவாறு பிரகாரத்தைச் சுற்றி நடக்க, “என்ன சொல்ற வஞ்சி?” என ஆச்சரியமாய் சக்தி கேட்க,

“ஆமா தினமும் பெருமாளைத் தரிசிக்காமல் என்னோட நாட்கள் கடந்ததே இல்லைன்ற அளவுக்கு பெருமாள் பக்தையா இருந்திருக்கேன் சக்தி” என்றாள்.

“நம்மளைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியலை வஞ்சி” என்றவாறு நடந்தவன் அவளின் கைப்பற்றி தனது நெஞ்சில் வைத்தவனாய், “எப்படி படபடனு துடிக்குது பாரு! என்னமோ சரியில்லனு தோணுது வஞ்சி” என்றான்.

இருவரும் பைரவரின் சன்னதி அருகில் வரவும், கனவில் தான் முதன் முதலாக சக்தியைக் கண்டது இந்த இடத்தில் தானே என்று அடையாளம் கண்டு இளவஞ்சி சிந்தித்திருக்க,

“அப்பனே! எம்பெருமானே! ஈஸ்வரா” எனக் கதறியவாறு பைரவரின் எதிரில் சில அடி தூரத்தில் இருந்த தரையில் மடிந்து அமர்ந்து அழுதிருந்தான் சக்தீஸ்வரன்.

திடீரென ஏன் இவன் இப்படி அழுகிறான் என்று ஒன்றும் புரியாமல் விழித்தவள், “என்னங்க என்னாச்சு?” என்று அவனது தோளைத் தொட, இரு கைகளையும் விரித்துக் காற்றை அணைப்பது போல் கண்ணீருடன் செய்கை செய்தவன், “என் ஈசனோட லிங்கத் திருமேனி இருந்த இடம் இது வஞ்சி! நான் அவரை ஆர தழுவி வணங்கிய இடம் இது வஞ்சி! என் ஈசனைக் காணோமே! என் எம்பெருமான் சிவனைக் காணோமே” என்று உடைந்த குரலில் உரைத்துக் கதறி அழுதான் சக்தீஸ்வரன்.

சிமெண்ட் தரையாகப் பூசப்பட்டு இருந்த அந்தத் தரையைக் கண்டவள்,

‘ஆமா கனவுல இங்கே சிவ லிங்கம் பார்த்தோமே! அது இப்ப இல்லையே! இவர் வணங்கின சிவலிங்கமாச்சே அது! இப்ப எங்கே போச்சு? தரையோடு எப்படிச் சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முடியும்?’ என்று மனதோடு நினைத்தவளாய் திடுக்கிட்டு நின்றிருந்தாள்.