“நான் பொய் சொல்றேன்னு நீங்க சொல்றீங்க. நந்தினிக்கு பிரச்சனை வந்திட கூடாதுன்னுதான் உங்கம்மா அவளை பத்தி தப்பா ஏதும் உங்ககிட்ட சொல்றது இல்லை. அவ ஸ்கூட்டிய பிடிச்சு தள்ளினாளா இல்லையான்னு உங்கம்மாகிட்டேயே கேளுங்க. இல்லைனு பொய் சொன்னாலும் சொல்வாங்க, உங்க மேல சத்தியம் பண்ண சொல்லுங்க, அப்புறம் என்கிட்ட பேசுங்க” என ஆவேசமாக பேசி கைப்பேசியை வைத்து விட்டாள் ஸ்ரீஜா.
தங்கு தடங்கல் இன்றி உண்மை போலவே வெகு சிறப்பாக பேசி விட்டாள்தான். ஆனாலும் கணவன் தான் சொன்னதை நம்ப வேண்டுமே என உள்ளுக்குள் உதைப்பு.
வாசுவும் அம்மாவிடம் கேட்க, உன் மனைவி அப்படி ஏதோ பேசப் போய்தான் அஞ்சலியும் அப்படி செய்து விட்டாள் என்றார் அலமேலு.
“என்ன வேணா பேசட்டுமே ம்மா, அதுக்காக அஞ்சலி செஞ்சது சரிங்கிறியா? நானும் ஸ்ரீஜா கூட இல்லை. எதுக்கு வாழனும்னு எல்லாம் கேட்டு அழறா அவ. என் வைஃப்மா அவ, அதை மறந்திடாத. உங்களை எல்லாம் நம்பித்தான் அங்க விட்ருக்கேன். ரெண்டு மருமகளையும் ஒரே மாதிரி பார்த்து நடத்துமா” என அம்மாவுக்கு அறிவுரை சொன்னான் வாசு.
நடந்ததை அப்படியே திருப்பிப் போட்டு விடும் ஸ்ரீஜாவின் சாமர்த்தியத்தை அறியாதவர் அல்ல அலமேலு, இப்போது தான்தான் பாரபட்சம் காட்டுகிறேன் என என் மகனையே நம்ப வைத்து விட்டாளே என திகைத்து விட்டார்.
“அவ சொல்றான்னு நீயும் நம்புறியா?” என வாசுவிடம் கேட்டார் அவர்.
“ஸ்கூட்டி தள்ளி விட்டது நிஜம்தானே?” என சற்று அழுத்தமாக கேட்டான் வாசு.
“ஆமாம் டா, ஆனா அஞ்சலி தப்பானவ இல்லை. அவளுக்கு சூது வினையெல்லாம் தெரியாது. ஸ்ரீஜா என்னவோ சொல்ல போயி…”
“இவ்ளோ சொல்றேன் அப்பவும் ஸ்ரீஜாவையே குறை சொல்லுவியா மா? என்னம்மா ஆச்சு உனக்கு?” என வருத்தப்பட்டான் வாசு.
மேலும் வாதிட விரும்பாத அலமேலு, மகனிடம் சமாதானமாகவே பேசி வைத்து விட்டார். இரவு வீட்டுக்கு வந்த சின்ன மகனிடம் ‘எதற்காக அஞ்சலி அன்று அத்தனை கோவப்பட்டாள், ஸ்ரீஜா என்ன பேசினாள் என எனக்கு தெரிந்தே ஆக வேண்டும்’ என கண்டிப்போடு கேட்டார்.
பழைய விஷயங்கள் பற்றி அஞ்சலியிடம் பேசவே கூடாது என மருத்துவர் சொல்லியிருக்க, இப்போது அண்ணி சொன்னதை பகிர்ந்தால் அது பேசு பொருள் ஆகும் என யுகிக்கு தெரியும். ஆதலால் அதை பற்றி அம்மாவிடம் சொல்லவில்லை அவன்.
“அதை அத்தோட விடும்மா. அண்ணாகிட்டேயும் நீ சொல்லியிருக்க தேவையில்லை” என்றான் யுகி.
மகன் தன்னிடம் எதையோ மறைக்கிறான் என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார் அலமேலு. அம்மா தானாக சரியாகி விடுவார் என யுகியும் அப்படியே விட்டு விட்டான்.
இரண்டு நாட்களில் யுகியும் அஞ்சலியும் திருநெல்வேலி பக்கத்தில் இருக்கும் குல தெய்வ கோயிலுக்கு புறப்பட வேண்டும், கார் பயணம். அப்படியே அந்த பகுதிகளில் இருக்கும் சொந்தங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விடவும் திட்டம்.
“அங்க உன் மாமனாரோட பங்காளிங்க மச்சான் வீட்டார் எல்லாம் கிராமத்து ஆளுங்க. சாதாரணமா போகல நீ, உன் வீட்டு கல்யாணத்துக்கு கூப்பிட போற, புடவை கட்டிகிட்டு போகணும், இன்னும் புதுப் பொண்ணுதான் நீ, ஏனோ தானோன்னு இல்லாம பார்க்க பாந்தமா இருக்கிற மாதிரி புடவைங்க எடுத்து வச்சுக்க” என சொல்லியிருந்தார் அலமேலு.
கணவன் அறைக்கு வரவுமே அதை சொன்னாள் அஞ்சலி.
“உனக்கு வசதி படாதுன்னா விட்ரு, அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றான் அவன்.
“அதில்ல, என்கிட்ட இருக்கிற சாரீஸ் ஹெவியா இருக்கும். அதையெல்லாம் கட்டிக்கிட்டு நாள் முழுக்க அலைய முடியாது. அர்ஜன்ட்டா லைட் வெயிட் சாரீஸ் பர்ச்சேஸ் பண்ணனும். நாளைக்கு டவுன் ஹால் வரேன், நீங்களும் வரணும், டூ ஹவர்ஸ்ல உங்களை உங்க கடைல விட்ருவேன்”
“நான் வந்து என்ன பண்ண போறேன் அஞ்சலி? எனக்கு செலக்ட் பண்ண கூட தெரியாது. பைரவி அக்காட்ட சொல்றேன், லீவ் எடுக்க முடியுமான்னு கேட்கிறேன் இரு” என சொல்லி கைப்பேசியை எடுத்தான்.
“உங்களால முடியாதுன்னா விட்ருங்க. அண்ணிகிட்ட கேட்கிறதுன்னா நானே கேட்டுப்பேன்” என்றவள் லேப்டாப்பை திறந்து வைத்துக் கொண்டாள்.
“உடனே கோவமா? நாளைக்கு எனக்கு வெளில போற வேலை இருக்கு அஞ்சலி. அப்புறம் நாம ஊருக்கு போயிடுவோம், ரொம்ப தள்ளி போயிடும் அந்த வேலை. அதனாலதான் சொன்னேன், உனக்கு நானேதான் வரணுமா?”
லேப்டாப்பை மூடி வைத்தவள் ஆம் என தலையாட்டினாள். அவனும் சரியென சொல்லி விட்டான்.
மறுநாள் மதிய உணவுக்கு வந்த யுகி, சாப்பிட்டு கடைக்கு புறப்பட்ட போது அவனுடனே கிளம்பி விட்டாள் அஞ்சலி.
அவனுடைய கடைக்குத்தான் முதலில் அழைத்து சென்றான். அவளோடு அலுவலக அறைக்கு வந்தவன் முக்கியமாக பேச வேண்டிய கைப்பேசி அழைப்புகளை முடித்து விட்டு வருவதாக சொல்லி அவளை காத்திருக்க வைத்தான்.
அதற்குள் அவனது மேசையை ஒழுங்கு படுத்தினாள் அவள். பேசிக் கொண்டே அவள் கையை பிடித்து வேண்டாம் என்றான். அவன் கையில் கொட்டியவள் தான் பார்த்திருந்த வேலையை தொடர்ந்தாள்.
பேசி முடித்தவன், “நாளைக்கு திரும்ப கலைஞ்சு போகும், எதக்கு சிரம படுற?” எனக் கேட்டான்.
“தினம் காலைல வந்த உடனே அரேஞ் பண்ணுங்க. ஒழுங்கா இருந்தாதானே வேலை செய்ய பிளசன்ட்டா இருக்கும்?” எனக் கேட்டாள்.
“ட்ரை பண்றேன் ஓனரம்மா”
“ஹ்ஹ்ஹா! நான் ஒன்னும் ஓனர் இல்லை, மாமாதானே ஓனர்?”
“கடைக்கு சொல்லலை, எனக்கு சொன்னேன்” என அடக்க பட்ட சிரிப்புடன் சொன்னான்.
“சும்மா வார்த்தைக்கு சொல்ல கூடாது, நான் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாம கேட்கணும்”
“உன்கிட்ட பதில் பேச நானே முழிக்க வேண்டியதா இருக்கு. கிளம்பு” என சொல்லி அவளுடன் வெளியேறினான்.
அருகிலிருந்த பிரபல ஜவுளிக்கடைக்கு அழைத்து சென்றான். புடவைகளும் அதற்கேற்ற ரெடிமேட் பிளவுஸ்களும் வாங்கியவள் டிரையல் ரூம் சென்று அணிந்து பார்த்து சரியாக இருப்பதை வாங்கிக் கொண்டாள்.
வாங்கியவற்றுக்கு அவளே பணம் செலுத்த போக, அவன் அனுமதிக்கவில்லை.
“இருக்கட்டும், உங்க மாமனார் நமக்கு ட்ரெஸ் எடுத்துக்க கொடுத்த பணத்திலேருந்துதான் கொடுக்கிறேன்” என்றாள்.
“ஏன் அவங்க கொடுத்ததுக்கு ட்ரெஸ் எடுக்கனும்தானே?”
“அவ்ளோவுக்கும் ஒரே ட்ரெஸ் எடுக்கிறது வேஸ்ட். பேலன்ஸ் அமௌன்ட் இருக்கு, அதுல வாங்கிக்கலாம். நான் ரொம்ப பட்ஜட் ஃப்ரெண்ட்லி!” என்றாள்.
“ஆமாமாம் ரொம்ப!”
“இல்லையா?” என கண்களை உருட்டிக் கொண்டு கேட்டாள்.
கைகளை கட்டிக் கொண்டு “அப்படி பார்க்காத பயந்து வருது” என பொய்யாக நடுங்கினான் யுகி.
“நான் சிக்கனமா இருக்கேன்னு ஒத்துக்கோங்க”
“ம்ம்ம்… இப்ப ஓகே. போக போகத்தான் தெரியும். சீக்கிரம் போலாம், உன்னை வீட்ல விட்டுட்டு வேலை இருக்கு எனக்கு” என அவசர படுத்தினான்.
“இங்க வந்து நான் என்ன பண்ணினேன்? நீயே எல்லாம் செலக்ட் பண்ணிக்கிட்ட, நீயே பே பண்ணிக்கிட்ட. இதுல நான் வரணும்னு அடம் வேற. நல்ல ஆளு நீ” என்றான்.
“ரெடிமேட் பிளவுஸ் ட்ரை பண்ணி பார்த்துதான் வாங்க முடியும், டிரையல் ரூம்ல யாரும் கேமரா வச்சிருப்பாங்களோன்னு எல்லாம் யோசனையா இருந்தது. யோசனை கூட இல்லை… ஹ்ம்ம்… மூளைக்குள்ள பூச்சி ஊருற மாதிரி இருந்தது. கேமரா இருக்கா இல்லையான்னு செக் பண்ணிக்க எனக்கு தெரியும். ஆனாலும் கூட நீங்க இருந்தா ஸேஃபா ஃபீல் பண்ணுவேன், ரிலாக்ஸா இருப்பேன். அதனாலதான் உங்களை வர சொன்னேன்” என்றாள்.
யுகிக்கு என்னவோ போலாகி விட்டது. “அந்த மாதிரி பயத்தையெல்லாம் சீக்கிரம் விட்டொழிக்கணும் நீ” என்றான்.
“எஸ் எஸ், நானும் அதுக்குத்தான் ட்ரை பண்றேன். ஆனா நீங்க கூட இருந்தா அப்படி பயம் வர்றதில்லை” என இயல்பாக சொன்னவள் ஆட்டோ புக் செய்யத் தொடங்கினாள்.
உன்னிடம் பாதுகாப்பாக உணர்கிறேன் என அவள் வெளிப்படுத்திய விஷயத்தில் அவனது மனம் நிறைந்து விட்டது.