அஞ்சலிக்கும் யுகிக்கும் இடையில் எந்த பிணக்குகளும் இன்றி சுமூகமாக நகர்ந்தன நாட்கள்.
புகழேந்தியும் சித்ராவும் பெண் வீட்டில் அழைப்பிதழ் கொடுக்கவென கோவை வந்திருந்தனர். யுகியும் கடைக்கு செல்லாமல் வீட்டில்தான் இருந்தான். ஸ்ரீஜாவையும் வர சொல்லியிருந்தார் அலமேலு.
காலை உணவு தயாரான போதே இரண்டு மருமகள்களும் பேசிக் கொள்வதில்லை என்பதை கவனித்த அலமேலுக்கு வருத்தமாகி விட்டது.
ஹாலில் அமர்ந்து அஞ்சலியின் பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தனர் யுகியும் அவனது அப்பாவும். என்னவோ கேட்க அஞ்சலியை யுகி அழைக்க அவளும் அங்கே சென்றாள்.
“எல்லாத்தையும் டைனிங் டேபிள் ல எடுத்து வை, நீயே பரிமாறிடு” என பெரிய மருமகளிடம் சொன்னார் அலமேலு.
“அவ அப்பாம்மாவுக்கு நான் ஏன் செய்யணும் அத்தை? இந்த வீட்டோட மூத்த மருமக நான், அவளுக்கு முன்னால என்னை குறைவா நடத்தாதீங்க” என்றாள் ஸ்ரீஜா.
“அவங்க நந்தினிக்கு மாமனார் மாமியார் ஆக போறவங்க. அவளுக்கு முறையா பரிமாற வராதுன்னு உன்கிட்ட சொன்னா என்ன பேச்சு பேசுற நீ? ஒன்னு வாசு கூட இருந்து அவனை பார்த்துக்கணும், இங்கதான் இருப்பேன்னா இங்க உள்ள வேலையாவது சரியா செய்யணும், ரெண்டும் இல்லாம சோம்பேறியாவே காலத்தை ஓட்டுவேன்னு நின்னா உனக்குத்தான் கஷ்டம்” என சின்ன குரலில் கடு கடுத்தார் அலமேலு.
“என்னை குறை சொல்றதுன்னா உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரிதான் அத்தை, எப்படி பேசிட்டீங்க?” கண்களில் நீர் வைத்தாள் ஸ்ரீஜா.
“எம்பொண்ணுக்கு நல்லது நடக்கையில அழுது ஆர்ப்பாட்டம் பண்றியா நீ? ஏற்கனவே தடை பாட்டு போய் நடக்கப் போற கல்யாணம். நான் சொல்றத செய்றதா இருந்தா இங்க நில்லு, இல்லைனா நீ மேலேயே போயிடு” என கண்டிப்போடு அலமேலு சொல்லவும் இன்னும் கண்ணீர் வடித்தாள் அவள்.
“அழுதுகிட்டே நீ எதுவும் செய்ய வேணாம், ஓரமா நில்லு” என எறிந்து விழுந்த அலமேலு ஹால் சென்று விட்டார்.
அழைப்பிதழ் கொடுக்க தாம்பாளத்தில் எல்லாம் சித்ரா எடுத்து வைக்க, அஞ்சலியை விட்டே பூஜையறையில் விளக்கேற்ற வைத்தார் அலமேலு.
தன் உரிமை போகிறதோ என பதறினாள் ஸ்ரீஜா. எப்படியும் அழைப்பிதழ் வைத்துக் கொடுக்கும் போது தன்னை அழைத்துதான் ஆக வேண்டும், யாரும் கூப்பிடாமல் செல்லக் கூடாது என சமையலறையிலேயே நின்று கொண்டாள்.
‘இவ என்ன வேற வீட்டு ஆளா, நாத்தனார் கல்யாணத்துக்கு எல்லாம் எடுத்து கட்டி செய்யாம என்னென்ன மாய்மாலம் காட்டுறா?’ என மனதிற்குள் அதிருப்தி கொண்ட அலமேலு பெரிய மருமகளை அழைக்கவே இல்லை.
தாம்பாளத்தை வாங்கிக் கொள்கையில் வெங்கட்தான் ஸ்ரீஜாவை அழைத்தார்.
“சாப்பாடெல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்து வச்சிட்டு இருந்தேன்” என பரபரப்பாக சொல்லி, என்னவோ எல்லா வேலைகளும் தான்தான் செய்தேன் என காட்டிக் கொண்டு வந்து நின்றாள் ஸ்ரீஜா.
வாங்கிக் கொண்ட தாம்பாளத்தையும் அஞ்சலியின் கையிலேயே கொடுத்து பூஜை அறையில் வைக்க சொன்னார் அலமேலு. ஸ்ரீஜாவின் முகம் சிறுத்து போக, தன் மனைவியை முகம் சுருக்கி பார்த்தார் வெங்கட்.
வெங்கட் முன்னரே சாப்பிட்டிருந்தார், பிசியோதெரபிஸ்ட் வந்து விடவும் அவர் அறைக்கு சென்று விட்டார். அஞ்சலியின் பெற்றோர் சாப்பிட அமர, யுகியும் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான்.
அஞ்சலியை விட்டே பரிமாற சொல்லி விட்டார் அலமேலு. மாமியாரை முறைத்த ஸ்ரீஜா மாடிக்கு சென்று விட்டாள்.
அஞ்சலி இட்லி எடுத்து வைக்க போக, “முதல்ல ஸ்வீட் வை, அப்புறம் வடை சட்னியெல்லாம் வச்சிட்டு, பொங்கல் வை, கடைசியா இட்லி வச்சு சாம்பார் போடு” என்றார் அலமேலு.
“அத்தைகிட்ட எல்லாம் கத்துக்க அஞ்சலி” என்றார் சித்ரா.
மாமியார் தள்ளி நிற்க, “ஏன் மாத்தி வச்சா டேஸ்ட் மாறி போயிடுமா?” என அம்மாவிடம் வில்லங்கமாக கேட்டாள் அஞ்சலி.
மாப்பிள்ளையின் முன் எப்படி பேசுகிறாள் என பற்களை கடித்தார் சித்ரா. அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஏதேனும் சண்டை வந்து விட போகிறது என நினைத்த யுகி, அவனே இனிப்பு எடுத்து பரிமாறினான்.
“ஹையோ மாப்ள, நீங்க இருங்க அஞ்சலி செய்வா” என பதறினார் புகழ்.
“இருக்கட்டும் மாமா, சாப்பிடுங்க” என்றவன், “நீ வடைய வை அஞ்சலி” என மனைவியிடம் சொல்லி அவளையும் வார்த்தையாட விடாமல் பார்த்துக் கொண்டான்.
சூடாக பூரி போட்டு எடுத்துக் கொண்டிருந்த அலமேலு எட்டிப் பார்த்து விட்டு, “அவளை விடேன் டா, எப்பதான் கத்துக்குவா?”எனக் கேட்டார்.
தங்கள் பெண்ணுக்கு இதெல்லாம் தெரியவில்லை என சாடையாக சொல்கிறாரோ என நினைத்த அஞ்சலியின் பெற்றோர் சங்கடமாக யுகியை பார்த்தனர்.
“நீங்க சொன்ன ஆர்டர் மனப்பாடம் பண்ணிட்டேன் அத்தை, நீங்க சாப்பிட வர்றப்போ ஆர்டர் மாறாம பரிமாறி காட்டுறேன், சரியா செஞ்சிட்டா ஒரு மாசத்துக்கு நூக்கோல் செய்ய கூடாது, ஓகேவா?” எனக் கேட்டுக் கொண்டே பூரி இருந்த பாத்திரத்தை கையில் எடுத்தாள் அஞ்சலி.
“ஒரு மாசம் முடிஞ்சதும் தொடர்ந்து ஏழு நாள் நூக்கோல் செஞ்சிடுவேன் பரவாயில்லையா?” எனக் கேட்டார் அலமேலு.
“மாமாக்கு கூட நூக்கோல் பிடிக்காதாம்? அப்படி என்ன அந்த காய் மேல உங்களுக்கு லவ்? இவ்ளோ கொடுமைகார மாமியாரை இந்த உலகம் பார்த்திருக்காது” என அஞ்சலி சொல்ல, அலமேலு பொய்யாக முறைத்து வைத்தார்.
பிசியோதெரபிஸ்ட் அழைக்க, அஞ்சலி அங்கு சென்று விட்டாள். அலமேலுவே சாப்பிடுமிடம் வந்து நின்று பார்த்து கவனித்துக் கொண்டார்.
“அவ கொஞ்சம் துடுக்குதான் அண்ணி, படிப்பு படிப்புன்னே இருந்திட்டா. ஸ்கூல் முடியவுமே இங்க ஹாஸ்டல்ல போட்டுட்டார் அவ அப்பா. அதான் சமையல் எல்லாம் சொல்லி தர முடியலை. கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடியே அனுப்பி வச்சீங்கனா எல்லாம் சொல்லி கொடுத்திடுறேன்” என்றார் சித்ரா.
அம்மா ஏதும் அனுமதி கொடுத்து விடுவாரோ என பயந்தான் யுகி. அஞ்சலிக்கு கவுன்சிலிங் தடை பட்டு விடுமே. “இங்கேயும் கல்யாண வேலை இருக்குமே அத்தை, அதோட அவ இல்லைனா அம்மாக்கு கையும் ஓடாது காலும் ஓடாது, இல்லம்மா?” என்றான்.
உங்கள் மகள் மீது என் மகனுக்கு அளவு கடந்த பிரியம், ஸ்கூட்டர் வாங்கி கொடுத்திருக்கிறான், அவள் அருகில் இல்லாமல் சாப்பிட மாட்டான், என்னை கண்டு கொள்வதே இல்லை, இப்போது எல்லாமே அவனுக்கு அஞ்சலிதான் என கலந்து கட்டி அடித்து விட்டார் அலமேலு.
அம்மாவின் பேச்சில் யுகி நெளிய, அஞ்சலி வந்து விட்டாள்.
“மாப்ள அஞ்சலிய பார்த்துக்கிறது மாதிரி ரெண்டு மடங்கு அதிகமா கார்த்திக்கும் நந்தினிய பார்த்துப்பான்” என்றார் சித்ரா.
அஞ்சலி கண் சாடையால் யுகியிடம் என்னவென கேட்க, பின் சொல்வதாக அவனும் சாடையிலேயே சொன்னான்.
பிசியோ முடிந்து வந்த வெங்கட், பெரிய மருமகள் எங்கே என கேட்டு ஸ்ரீஜாவை மீண்டும் கீழே அழைத்து விட்டார்.