அத்தியாயம் 19

விடியற்காலை மூன்று மணியளவில் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த பலகையில் இருந்த பெயரைப் பார்த்தவன், “சோலைவனம்” எனப் படித்தவாறு நெற்றியைச் சுருக்கினான்.

குளிர் உடலுக்குள் ஊடுருவி கை கால்களை நடுங்கச் செய்தது. உறக்கத்தில் மலை மீதான பயணத்தைக் கவனியாது வந்தவன், இறங்கியதும் தான் தாங்கள் பல அடி தூர உயரமான மலை கிராமத்தில் இருப்பதை உணர்ந்தான்.

மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலா தளமாக இருக்கும் இடம். ஆயினும் வன அதிகாரிகளின் உத்தரவின்றி செல்ல முடியாத இடம்.

தனக்கு தெரிந்த சக கல்லூரி பணியாளர்கள் மூலம் அவர்களுக்குத் தெரிந்தவர்களை வைத்து இந்த இடத்திற்கு அனுமதி வாங்கி இங்கு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தாள் இளவஞ்சி.

‘சோலைவனம்’ உச்சரிக்கும் போதே உள்ளுக்குள் ஒரு பரவசம் வந்து போனது அவனுக்கு. ‘எங்கேயோ கேள்விப்பட்ட பெயரா இருக்கே’ என்று நினைத்துக் கொண்டவனாய், “ஹில் ஸ்டேஷனா இது தங்கப்பொண்ணு” எனக் கேட்டான்.

“ஆமா ஆனா ஃபாரஸ்ட் ஆபிசர்ஸ் அனுமதி இல்லாம இங்க தங்க முடியாது. ரொம்பவே குறைவான ஆளுங்களுக்கு தான் அனுமதி தருவாங்க” என்றவள் எவ்வாறு இந்த இடத்திற்கான ஏற்பாட்டினைச் செய்தாள் என்பதை அவனிடம் உரைத்தவாறு நடக்க ஆரம்பித்தாள்.

ஆங்காங்கே ஒன்றிரண்டு ஆட்டோக்கள் இருந்தன. சில நிமிட‌ ஆட்டோ பயணத்திலேயே அவள் பதிவு செய்திருந்த தங்கும் விடுதி வந்துவிட, அங்கு பேசிவிட்டு சாவி வாங்கிக் கொண்டு அறையினுள் புகுந்தனர் இருவரும்.

இவள் குளித்து விட்டு வருவதாக ஓய்வறைக்குள் சென்று விட, படுத்து உறங்கி விட்டான் சக்தி.

குளித்து விட்டு வந்தவள் தானும் அவனருகில் படுத்து விட்டாள்.

பேருந்து இந்த மலையில் ஏறிய பொழுதே இளவஞ்சியின் மனம் இனம்புரியா பரவசத்தை உணர்ந்தது.

‘எனக்கு ரொம்ப பரிச்சயமான இடமா இது தோணுதே! இதுக்கு முன்னாடி இங்க வந்த மாதிரி வேற தோணுதே! இப்ப மலைக்குக் கீழே நாற்பது கிலோமீட்டர் தாண்டி இருக்க ஆத்மநல்லூருக்கு இவரை மட்டும் என்னனு சொல்லி அனுப்பி வைக்கிறது? இல்ல மூனு நாள் கழிச்சி நாமளே இவரை கூட்டிட்டுப் போய்டுவோமா?’ மனதோடு யோசித்தவளாய் படுத்திருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

கனவினில் காட்சிகள் விரிந்தன.

மரச்சட்டங்களினால் கட்டப்பட்டு தென்னங்கீற்றால் வெய்யப்பட்ட வீடு அது.

“அரசி! முத்தரசி! எங்கிருக்கிறாயடி?” என்றவாறே அந்த வீட்டினுள் நுழைந்தாள் நிறைமதி.

“பின்னறைக்கு வா மதி” என்றாள் முத்தரசி.

“ஓ ஒதுங்கி அமரும் நாளோ!” என்றவாறு அறையின் வாயினில் சென்று நின்றாள் நிறைமதி.

“ம்ம்ம்ம்” சோகமாக முத்தரசி கூற,

“எந்த வேலையும் செய்யாமல் இது நாம் மகிழ்வாய் இருக்க வேண்டிய காலமல்லவா! ஏன் இந்தச் சோக ராகம்?” என்று கேட்டாள் நிறைமதி.

“அனுதினமும் பெருமாளைத் தரிசிக்காது மனம் மகிழ்வு கொள்வதில்லையே மதி! எதையோ பறிகொடுத்த உணர்வில் மனம் வேதனைக் கொள்கிறதடி” என்றாள் முத்தரசி.

“ஓஹோ நான் ஒரு உபாயம் உரைக்கவா? நாராயணா நாராயணா என நித்தமும் நில்லாது அவரின் பெயரை உச்சரித்திரு!” என்று நிறைமதி உரைத்ததும், கண்கள் மின்ன,

“அவ்வாறு உச்சரித்தால் அம் மாயவன் எம் கனவில் காட்சியளிப்பாரா மதி?” ஆசையுடன் முத்தரசி கேட்டிருக்க,

“இல்லையடி! இந்த மூன்று நாட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடும் என்று கூற வந்தேன்” என்று நிறைமதி கேலியாய் சிரிக்க, அவளை முறைத்தாள் முத்தரசி.

நிறைமதியை அடிக்கவென முத்தரசி எழுந்து வர, “அடுத்த மூன்று நாட்களுக்கு காலை உன் தொந்தரவில்லாமல் நிம்மதியாகத் தூங்குவேனடி” என்று கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவாறு முத்தரசியைப் பார்த்துக் கூறிச் சிரித்த நிறைமதி, அவள் அடிக்க கை ஓங்கியதில் தாவி ஓடியிருந்தாள்.

நிறைமதி விளையாட்டுக்காய் கூறினாலும் ஏன் தாம் அவ்வாறு நாராயண நாமத்தை உச்சரித்த வண்ணம் பொழுதைக் கழிக்கக் கூடாது என்று எண்ணியவளாய் தொடர்ந்து மனதோடு மாயவனைத் துதித்தாள் முத்தரசி.

மூன்றாம் நாளன்று இரவில் அவளின் கனவில் அவளே கோவிலுக்குச் சென்று பெருமாளின் தரிசனத்தைக் காண்பது போலவே பெருமாளைத் தரிசித்திருந்தாள்‌.

உள்ளமும் உடலும் பூரித்த நிலையில் எழுந்தமர்ந்தாள் இளவஞ்சி‌.

அரி ஓம் நமோ நாராயணா” அவளையும் மீறி அவளின் உள்ளமும் உதடும் இம்மந்திரத்தை உச்சரித்திருந்தன.

கனவில் கண்ட பெருமாளின் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்க, கண் மூடி மீண்டும் அக்காட்சியினை உறுப்போட்டாள் இளவஞ்சி‌. கண்களில் நீர் சொரிந்தது. அரி ஓம் நமோ நாராயணா என்று உள்ளம் உருக ஆத்மா மொழிந்த வண்ணம் இருந்தது.

‘இந்தளவுக்கா பெருமாளை நான் கும்பிட்டுட்டு இருந்தேன். அந்த காலத்துலயும் இப்படி ஒதுக்கி வச்சிருந்தாங்களா என்ன? ஆனாலும் இறைவனை வணங்க மனசிருந்தா போதும்னு எவ்ளோ அழகா கனவில் காட்சி கொடுத்தார். அந்த ஜென்மத்துல நான் யாரை கல்யாணம் செஞ்சிருப்பேன்? சிவனடியாரா இருந்த இவரை கல்யாணம் செஞ்சிருக்க எப்படி சாத்தியம்? வைணவர்கள் சைவரை மணம் செய்வாங்களா அந்த காலத்துல?’ பலவிதமான எண்ணங்கள் சூழ அமர்ந்திருந்தவளின் அடி வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியத்தில் நிகழ்வுக்கு வந்தவளாய் ஓய்வறைக்கு சென்றாள்.

வெளியே வந்தவள் நேரத்தைப் பார்த்தாள். காலை எட்டு மணியெனக் காண்பிக்க, சக்தியை எழுப்பி விட்டு குளிக்க அனுப்பினாள்.

வெளியே வந்தவன், “இன்னிக்கு என்ன பிளான்?” கேட்டவாறே பெட்டியிலிருந்து உடையை எடுக்க, “இங்கே பக்கத்துல சுத்தி பார்த்துட்டு வரலாம்” என்றாள் இளவஞ்சி.

“உனக்கு வயிறு வலிலாம் இல்லையா?” என்று கேட்டவாறு உடை அணிந்தான்.

“இல்ல இப்ப வலிலாம் இல்லை. வெளில போன பிறகு அப்படி எதுவும் இருந்துச்சுனா வந்துடலாம்” என்றவள் குளிக்கச் சென்றாள்.

காலை உணவை அந்த விடுதியிலேயே உண்டு விட்டு அருகிலிருந்த சுற்றுலா இடங்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த விடுதி மேனேஜரிடம் பேசி இவர்கள் கிளம்பும் வரை உபயோகிப்பதற்காக ஒரு ஜீப்பை ஏற்பாடு செய்து கொண்டனர்.

அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவினில் இருந்த சாம்பல் எனும் அருவிக்கு சென்றவர்கள் அதனருகே இருந்த நீரோடையில் கால்களை வைத்தவாறு அமர்ந்திருந்தனர். யாருமில்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம்.

அப்பொழுது ஓர் இளம் தம்பதியர் நெற்றியில் திருநீறு குங்குமம் இட்டவர்களாக வந்தவர்கள் அந்த நீரோடையில் சற்றுத் தள்ளிச் சென்று அமர்ந்தனர்.

இதே போன்று தானும் இளவஞ்சியும் நெற்றியில் திலகங்களை வைத்து கொண்டு இங்கு அமர்ந்து கால்களை நனைத்தவாறு முன்பு என்றோ அமர்ந்திருந்தது போன்ற உணர்வு தோன்றியது அவனுக்கு.

“வஞ்சி இதே மாதிரி நாம முன்னாடி இங்கே உட்கார்ந்திருந்த மாதிரியே தோணுது எனக்கு” என்றான் சக்தி.

“அப்படியா?” ஆச்சரியமாகக் கேட்டவள்,

“எனக்கும் அப்படித் தான் தோணுச்சு சக்தி. இந்த அருவில நாம சேர்ந்து குளிச்ச மாதிரி, இதுலாம் ரொம்ப பழக்கப்பட்ட இடம் மாதிரி தோணுது சக்தி” என்றாள்.

“சர்ப்ரைசிங்! ஒரு வேளை முன் ஜென்மத்துல இங்கே வந்திருப்போமோ? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு வந்த கனவுல இந்த இடத்தைப் பார்த்திருக்கியா வஞ்சி?” எனக் கேட்டான்.

“இல்ல சக்தி! ஆனா நமக்கும் இந்த இடத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு மனசு சொல்லுது” என்றாள்.‌

“ஹ்ம்ம் அப்படியும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எது எப்படியோ மனசுக்கு ஒரு விதமா இதமா ஃபீல் ஆகுது. இங்கேயே இருந்துடலாம் போல தோணுது” என்ற சக்தி,

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஜோடிகளைப் பார்த்தவாறு, “பக்கத்துல எதுவும் கோவில் இருக்கா என்ன? இல்லனா இப்படி திருநீறு குங்குமம்லாம் வைக்க வாய்ப்பில்லையே” எனக் கேட்டான்.

“ஆமா இந்த இடத்துல ஏதோ பிரபலமான சிவன் கோயில் இருக்கிறதா பார்த்தேன்” என்றவாறு தனது கைபேசியை எடுத்து கூகுளில் தேட, மலை மீது இருந்ததால் கைப்பேசியில் இணைய சமிக்ஞை மிக மோசமாக இருந்தது.

“ம்ப்ச் நெட் கனெக்ட் ஆக மாட்டேங்குது. ஆனா இங்கே ரூம் புக் செய்யும் போதே ஒரு சிவன் கோவில் இருக்கிறதா படிச்சேன்” என்றாள்.

சிவன் கோவில் என்றதும் ஆசை மேலோங்க, “ஓ சூப்பர்! அப்ப அங்கே போகலாமா?” என்று கேட்டான்.

அவளின்‌ முகம் சுருங்க, “நான் வர‌ முடியாதே! நீங்க போய்ட்டு வாங்க. நான் வெளில வெயிட் செய்றேன்” என்றாள்.

“ஓ அதை மறந்தே போய்ட்டேன்” என்றவன்,

“உனக்கு சரியான பிறகு இரண்டு பேரும் சேர்ந்தே போகலாம்” என்றான்.

“நீ இதை பத்தி என்ன நினைக்கிற வஞ்சி? இந்த மாதிரி நேரங்கள்ல பெண்கள் கோவிலுக்கு போகலாமா கூடாதா? உன்னோட அபிப்ராயம் என்ன?” என்று கேட்டான்.

“இதுல நான் என்னங்க நினைக்கிறது. நவநாகரீக உலகத்துல எல்லாமே அவங்கவங்க விருப்பம் தானே! கல்யாணத்துக்குப் பிறகு குடும்பமாக எங்கயாவது பிளான் செஞ்ச பிறகு இந்தப் பொண்ணுங்களுக்கு பீரியட்ஸ் ஆகிட்டுனு போக முடியாத சூழ்நிலை வந்துட்டா அந்தப் பொண்ணுங்க வாங்குற திட்டு இருக்கே! என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட் வீட்டுல இதனால பெரிய சண்டைலாம் வந்திருக்கு. காலம் காலமாக இப்படி இதனால பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளான பொண்ணுங்க இப்ப அதெல்லாம் கண்டுக்க வேண்டாம். எப்படினாலும் இருக்கலாம்ன்ற முற்போக்குத்தனங்கள் வந்த பிறகு மாறிட்டாங்க” என்றாள்.

“அப்புறம் ஏன் நீ கோவிலுக்கு வர மறுக்கிற?” என்று கேட்டான்.

“நான் இந்த முற்போக்குத்தனத்தை ஏத்துக்கலை சக்தி! இந்த நேரத்தில் ஏன் பெண்கள் கோவிலுக்குப் போகக் கூடாதுனு ஆளாளுக்கு அறிவியல்பூர்வமாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஒவ்வொரு காரணம் சொல்லுவாங்க. ஆனா இதுக்கு மனிதாபிமான முறைல ஒரு காரணம் இருக்கு தெரியுமா?” என்று இளவஞ்சி கேட்க,

“நிஜமாவா? அப்படி என்ன காரணம்?” என்று கேட்டான் சக்தி.

“சிலருக்கு காய்கறில கத்திரிக்காய் சாப்பிட்டா ஆகாது. உடம்புல அலர்ஜி ஆகிடும்‌. சிலருக்கு சில வகையான ஸ்மெல் பிடிக்காது. அந்த வாசத்தை சுவாசிச்சாலே வாமிட் ஆகிடும். இப்படி மனுஷங்களுக்கே ஒத்துக்காத விஷயங்கள்னு இருக்கும் போது, கடவுளுக்கு இருக்காதா? இந்த மாதிரி நேரத்துல பொண்ணோட உடம்புல வெளியாகும் அதிகப்படியான சூடும், உதிரமும் இறைவனுக்கு உடலில் அலர்ஜியை உண்டாக்கும்‌. பெண் தெய்வத்துக்கு ஒத்துக்கொள்ளும் இந்த விஷயம் ஆண் தெய்வத்துக்கும் சில பெண் தெய்வத்துக்கும் அலர்ஜியை உண்டாக்கிடும். அந்த இறைவனை குளிப்பாட்டி, உடை மாற்றி, அபிஷேகம் செய்து பூஜை செய்றவங்களால தான் அந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும் சக்தி.

தன்னால தன்னோட செய்கையால சக மனுஷனை கூட வருத்திட கூடாதுனு பார்த்து பார்த்து நடந்துக்கும் யாராலையும் தன்னோட செய்கைனால இறைவனுக்கு ஒவ்வாமையும் உடல் நோவும் உண்டாகும்னு தெரிஞ்ச பிறகு அப்படிச் செய்ய முடியாது தானே.

அதிலும் இறைவனைத் தன்னோட உயிரா உறவா நினைச்சு வாழுறவங்களால எப்படி அவருக்கு ஒவ்வாததை செய்ய முடியும். நான் வயசுக்கு வந்த புதுசுல அப்பா சொன்ன காரணம் இது சக்தி. அவங்களோட சொந்த ஊருல மூலஸ்தானத்தில் கடவுளுக்கு பூஜை செய்யும் பூசாரி சொல்லி கேட்ட விஷயம்னு என்கிட்ட சொன்னாங்க” என்றாள் இளவஞ்சி.

“ஹ்ம்ம் நீ சொல்ற விஷயம் ரொம்ப வித்தியாசமா தான் இருக்கு. ஆனா கடவுள்னு ஒருத்தர் இருக்கிறதையே ஒத்துக்காத நாங்க ஏன் இதெல்லாம் யோசிக்கனும்னு தான் மத்தவங்க நினைப்பாங்க. அவங்களுக்கு எந்த கோயிலானாலும் அது கலை பொக்கிஷம். சுற்றுலா தலம். அவ்ளோ தான்” என்று சிரித்தான் சக்தீஸ்வரன்.

“அதான் நானும் சொல்றேன். அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம். இதுல சரி தப்புன்னு கருத்து சொல்ல நாம யாரு சக்தி! நமக்கு சரினு தெரிஞ்சதை நமக்கு பிடிச்சதை நாம செஞ்சிட்டுப் போவோம்” என்றவாறு எழுந்தவள், “கொஞ்சம் தூரம் அப்படியே நடக்கலாம் வாங்க” என்றாள்.

அந்த குளிர் காற்றும் அருவியின் ஓசையும் அவனுடன் மலை பாதையில் நடப்பதே அவளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது‌.

அவனின் கைப்பற்றியவாறு நடந்தவளிடம், “நீ எப்ப வயசுக்கு வந்த வஞ்சி?” எனக் கேட்டான் சக்தி.

“ஹான்! என்ன கேட்டீங்க?” என அதிர்ச்சியுடன் அவனை அவள் பார்க்க,

“எதுக்கு இந்த ஷாக்கிங் லுக்? நீ எப்ப வயசுக்கு வந்தனு கேட்டேன். பொண்டாட்டியைப் பத்தி புருஷன் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தானே இது. அப்படியே நாள் வருஷம்லாம் சொல்லு. என் பொண்டாட்டி வயசுக்கு வந்து இருபத்தஞ்சு வருஷம் ஆச்சுன்னு பின்னாடி கொண்டாடிலாம்” என்று அவன் சிரிக்க,

அவன்‌ புஜத்தில் குத்தியவளாய், “ஓவர் நக்கலாகிப் போச்சு உங்களுக்கு” என்றாள்.

“ஆனா நீங்க சொன்ன பிறகு தான் வயசுக்கு வந்து எவ்ளோ வருஷம் ஆகுதுனு யோசிக்கத் தோணுது” என்றவள் விரல்களை விட்டு எண்ணிக் கொண்டவளாய், “ஓ மை ஈஸ்வரா! பதினேழு வருஷம் ஆகுது சக்தி” என்று கண்களை விரித்தாள்.

அவளின் பாவனையில் சிரித்தவனாய், “அப்ப இருபத்தஞ்சாவது வருஷத்தை கொண்டாடும் போது நம்ம பிள்ளைங்களுக்கு அஞ்சாறு வயசு ஆகிருக்கும்” கண் சிமிட்டி அவன் கூற,

“ஆஹா அதுக்குள்ள குழந்தை பிறந்துடும்னு என்ன ஒரு நம்பிக்கை?” என்று உதட்டைச் சுழித்தாள்.

“ஃபர்ஸ்ட் அடெம்ப்ட்ல கொஞ்சம் மிஸ் ஆகிட்டு‌! அதுக்காக இப்படிலாம் சந்தேகப்பட கூடாது தங்கப்பொண்ணு! நம்பிக்கை அதானே எல்லாம்” என்று சிரித்தான் அவன்.

“ஈஸ்வரா!” எனக் காதைப் பொத்திக் கொண்டவள், “எங்க வந்து என்ன பேசுறீங்க?” என்று அவனது தோளில் அடித்தாள்.

“ஹனிமூனுக்கு வந்துட்டு இது கூட பேசலைனா எப்படி?” அவன் புருவத்தை உயர்த்த, தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

அவர்கள் சரியாக அந்த சிவன் கோவிலைத் தாண்டி நடந்து கொண்டிருந்தனர்.

“சரியான இடத்துல தான் சொல்லிருக்கேன் தங்கப்பொண்ணு. நம்ம நம்பிக்கையை பார்த்து சீக்கிரம் குழந்தை வரம் அருள்வார் எம்பெருமான்” என்றான்.

“ஹ்ம்ம் நம்புவோம்! நம்பிக்கை அதானே எல்லாம்” அவனைப் போலவே கூறிச் சிரித்தாள் இளவஞ்சி.

அடுத்த மூன்று நாட்களும் இருவரும் அவரவரின் பள்ளி வாழ்க்கை தொடங்கி கல்லூரி காலம் கடந்து வாழ்வில் கிடைத்த அனுபவ பாடங்கள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். அங்கிருக்கும் சுற்றுலா இடங்கள் அனைத்திற்கும் சென்று வந்தனர்.

இளவஞ்சியின் உடல்நிலை இயல்பாக மாறியதும் அன்றைய நாள் அந்த சாம்பல் அருவியின் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றனர்.

மூலஸ்தானத்தில் தனியாளாய் நெடுஉயரமாய் அமர்ந்திருந்த எம்பெருமானைத் தரிசித்து நெஞ்சம் நெகிழ்ந்தது இருவருக்கும். எங்குமே காணக்கிடைக்காத காட்சி அது. அந்த ஒரு தலத்தில் மட்டுமே எம்பெருமான் ஈசன் அவ்வாறு தரிசனம் அளிப்பதாக அக்கோவிலின் தல வரலாறு தெரிவித்தது.

எம்பெருமானைத் தாண்டி பார்வை எங்கும் செல்லவில்லை இருவருக்கும். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமெனத் தோன்றியது.

சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே

தன்னையும் மீறி இவ்வரிகளை ஆழ்ந்த பக்தியுடன் அவன் பாட, கேட்டு நெஞ்சுருகிப் போனது அவளுக்கு. வழமைப் போல் அவனது குரலின் இனிமையிலும் பக்திப் பாவனையிலும் பூரித்து நெகிழ்ந்தாள் இளவஞ்சி.

அன்றைய நாளில் அவர்கள் அடையப் போகும் அதிர்ச்சியை எண்ணி அமைதியாய் சிரித்தவாறு கேட்டிருந்தார் எம்பெருமான் ஈசன்.