“அதில்லங்க, இதும் என்னோட ஃபேவரைட் ஒன்னு ரெண்டெல்லாம் எனக்கு போதாது. அத்தோட கலாக்காய் ஒன்னு பிளாக் பெர்ரி அடுத்துனு மாத்தி மாத்தி சாப்பிட்டா அதோட டேஸ்ட்டே வேற. இத எனக்கே கொடுத்திட்டு நீங்க வேற வாங்கிக்கோங்களேன்” என்றாள்.
சரி வைத்துக்கொள் என நீட்டினான். அவளின் ஒரு கையில் கலாக்காய் இருந்த பேப்பர் கப், இன்னொரு கையிலிருந்த கப்’பில் சாப்பிட்டு முடித்த கலாக் காய் விதைகளை போட்டுக் கொண்டிருந்தாள். அவன் கொடுப்பதை எப்படி வாங்குவது என அவள் பார்க்க, விதைகள் இருந்த கப்பை அவனே வாங்கிக் கொண்டான்.
“ஹையோ வேணாம் கொடுங்க” என்றாள்.
“பரவாயில்லை” என்றான்.
“எனக்கு ஒரு மாதிரி இருக்குங்க. இது ஹுமானிட்டி இல்லை” என்றாள்.
“அவ்ளோ தூரம்லாம் யோசிக்காத அஞ்சலி. நமக்குள்ள அப்படிலாம் பார்த்துக்க தேவையில்லை” என அவன் சொல்லியும் அவளிடம் தயக்கம்தான்.
“வா வா… நாளை பின்ன இதெல்லாம் உங்கம்மாக்கு செஞ்சேன்னு நம்ம பசங்களுக்கு கதை சொல்லலாம்ல?” என சொல்லிக் கொண்டே நடந்தான்.
“முன்னாடி நடந்து போனா எனக்கு வசதியா இருக்காது, பக்கத்துல வாங்க” என அழைத்தவள் கப்பில் விதையை போட்டாள்.
என்னவெல்லாம் அளந்து விட்டு இப்போது என்ன செய்கிறாய் என அவன் அவளை ஒரு மாதிரி பார்த்தான்.
“நீங்கதானே உங்க பசங்களுக்கு கதை சொல்லணும்னு ஆசை படுறீங்க? வேணும்னா நான் ஓவரா பண்ணினேன், நீங்க அப்பாவியா எல்லாத்தையும் பொறுத்து போனீங்கன்னு கூட்டி குறைச்சு சொல்லிக்கோங்க” என்றாள்.
“நிஜமாவே அப்படித்தான் நடக்குது அஞ்சலி” என அவன் சொல்ல, அவள் மறுக்க என செல்லமாக தர்க்கம் செய்து கொண்டே நடந்தார்கள்.
மழையும் இல்லாத வெயிலும் இல்லாத இதமான காலநிலை. வழியில் நின்றிந்த ஆட்டுக்கு வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிட கொடுத்தாள். யுகியையும் கொடுக்க சொன்னாள்.
“நமக்கு செட் ஆகாது, நீயே கொடும்மா” என ஒதுங்கினான் அவன்.
அவளா விடுவாள், கொடுத்துதான் ஆக வேண்டும் என அவன் கையை பிடித்து கொடுக்க வைத்தாள்.
தன் கையில் ஆட்டின் வாய் பட்டு விடக்கூடாது என அவன் வளைந்து நெளிந்த விதத்தில் சிரித்தாள் அவள்.
“உனக்கு எந்த அனிமல் பார்த்து பயம் அஞ்சலி?” என விசாரித்தான்.
அவள் யானை என சொல்லவும், “அப்படியா? ஒரு நாள் உன்னை யானைக்கு சாப்பாடு கொடுக்க வைக்கல… பாரு” என சவால் விட்டான்.
“பயம்னுதான் சொன்னேன், பயந்திட்டே இருப்பேன்னு சொல்லலை. நான் ரெடிதான்” என சொல்லி இரண்டிரண்டு படிகளாக தாவிக் குதித்து இறங்கினாள்.
“இடற போகுது!” என அவன் கண்டிக்கவும், “ஐ ஹேட் ரூல்ஸ்” என சொல்லி இன்னும் சில படிகள் குதித்து இறங்கி அவனை டென்ஷன் செய்து விட்டுத்தான் ஓய்ந்தாள்.
வீடு வந்து சேர்ந்த போது அஞ்சலிக்கு மனம் இலகுவாக இருப்பது போலிருந்தது. யுகி கடைக்கு புறப்பட, “வந்த உடனே ஓடணுமா? அதான் உளவுத்துறை கையிலேயே இருக்கே, வாங்க டீ சாப்பிட்டிட்டு போலாம்” என்றாள்.
“நீயே போட்டு தரப் போறியா?” என கேட்டுக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான் அவன்.
அவனை நெருங்கியவள், “அந்த ரிஸ்க் எல்லாம் வேணாம். உங்கம்மா போடுற செம்பருத்தி டீக்கு ஈடு இணை எதுவுமே இல்லை, எனக்கு போட்டுத் தாங்கன்னு எப்படி கேட்க முடியும்?” எனக் கேட்டாள்.
“அதனால?” என அவன் கேட்க, “அத்தை… உங்க ஸ்பெஷல் செம்பருத்தி பூ டீ வேணுமாம் உங்க மகனுக்கு, போட முடியுமான்னு கேட்கிறார்” என சொல்லிக் கொண்டே உள்ளே ஓடிச் சென்றாள் அஞ்சலி.
‘பாசத்துல கூப்பிடுறான்னு பார்த்தா இப்படி ஒரு உள்குத்தா? நல்லா வரும்மா’ என மனைவியை செல்லமாக மனதிற்குள் திட்டிக் கொண்டே அவனும் உள்ளே செல்ல நடந்தான்.
அதற்குள் ஸ்ரீஜா வந்து விட்டாள்.
டிவியில் ஏதோ கோளாறாம், சரி செய்ய ஆள் அனுப்பி விடு எனக் கேட்டாள்.
அவளது முகத்தை ஏறிடாமல் வீட்டின் வெளிப்பக்க சுவரை கோவமாக பார்த்தவன், “அஞ்சலிய தப்பா பேசுற யார் கூடவும் பேச்சு வச்சுக்க போறதில்ல நான். உங்களுக்கு என்ன வேணும்னாலும் அம்மாகிட்டயோ, அண்ணாகிட்டயோ சொல்லி என்கிட்ட சொல்ல சொல்லுங்க” என கடினமான தொனியில் சொன்னான்.
இத்தனை நாட்களாக ஸ்ரீஜாவை சந்தித்திருக்கவில்லை யுகி. அந்த விஷயத்தை அஞ்சலி வெளிப்படுத்தவே இல்லை, அது அப்படியே அமுங்கி விட்டது என நினைத்திருந்த ஸ்ரீஜாவின் நெஞ்சில் திகில் பரவியது. ஆம் என ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்பவளா அவள்?
“அவ உன்கிட்ட ஏதோ தப்பா சொல்லி கொடுத்திருக்கா, நீயும் அதை நம்புறியா?” என பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் ஸ்ரீஜா.
“உங்ககிட்ட என்ன பேச்சு எனக்கு?” எனக் கேட்டு ஒரு அடி எடுத்து வைத்தவன், சட்டென நின்றான்.
“யுகி!” என பாவமாக அழைத்தாள் ஸ்ரீஜா.
“இனியொரு தடவ அஞ்சலிய ஏதாவது தப்பா பேசினீங்கன்னா…” என்றவன், “நான் உங்ககிட்ட எதுக்காகவும் கோவ பட்டதில்லை, என்னோட கோவத்தை ஃபேஸ் பண்ண ஆசை படாதீங்க” என எச்சரிக்கை போல சொல்லி சென்று விட்டான்.
எந்த விஷயம் இவள் கேட்டாலும் செய்து கொடுத்து விடுவான் யுகி. அனுபமாவுக்கு இவனை மணமுடிக்க நினைத்தது பிடிக்காமல் அவள் சம்பந்தமாக ஏதாவது சொன்னால் மட்டும்தான் முடியாது என்ற வார்த்தை அவனிடமிருந்து வரும். இப்படி இவன் அண்ணியிடம் பேசியதே இல்லை.
எங்கே கணவனின் காதுக்கும் இந்த செய்தி போய் விடுமோ என நினைத்த ஸ்ரீஜாவின் முதுகு தண்டில் குளிர் பரவியது.
வெங்கட், ரோஹித் இருவரும் பின்பக்கம் இருந்தனர். யுகியும் அங்கு சென்றான். மாமியார் போட்டுக் கொடுத்த தேநீரோடு வந்தாள் அஞ்சலி.
“செம்பருத்தி டீ பிடிக்கும்னு ஒரு நாளும் என்கிட்ட சொன்னதே இல்லையேடா நீ?” என மகனிடம் கேட்டுக் கொண்டே பேரனுக்கு பூஸ்ட் கொடுத்தார் அலமேலு.
“இந்த ஆம்பளைங்களே அப்படித்தான் அத்தை, நல்லா சாப்பிடுவாங்க, வாய தொறந்து மட்டும் பாராட்ட மாட்டாங்க” என சொல்லிக் கொண்டே கணவனை பார்த்து இரு கண்களையும் சிமிட்டி சத்தமில்லாமல் சிரித்தாள் அஞ்சலி.
“நல்லா சொன்ன” என அலமேலுவும் சொல்ல, மனைவியை பொய்யாக முறைத்தான் யுகி.
அஞ்சலி அவனை கண்டு கொள்ளாமல் போகவும், “அம்மாகிட்ட உண்மையை சொல்லிடவா?” என ரகசியமாக மிரட்டினான்.
“உங்க பையனுக்கு நைட்டுக்கு கிழங்கு அடை வேணுமாம் அத்தை” என்ற அஞ்சலி, “இப்படியா கஷ்டமான டிஷ் எல்லாம் கேட்பீங்க, அத்தை பாவம்ல?” என கணவனிடம் சொன்னாள்.
“எப்பவுமா கேட்கிறான் விடு, அது ஒன்னும் பெரிய வேலை இல்லை, நீ லேப்டாப் தொறந்து வச்சுக்காம ஹெல்ப் பண்ணு, செஞ்சிடலாம்” என்றார் அலமேலு.
நல்ல பிள்ளையாக தலையாட்டிக் கொண்டாள் அஞ்சலி.
யுகி புறப்படும் போது வாசல் வரை வந்த அஞ்சலியிடம், “வாய் ரொம்பவே நீளம்தான் உனக்கு” என்றான்.
“அளந்து பார்த்த மாதிரி சொல்றத பாரு” என அவளும் பதிலுக்கு சொன்னாள்.
தன் பேச்சில் ஏதோ போல பார்த்தவனிடம் என்னவென பார்வையால் கேட்டாள்.
“அளந்து பார்க்க நீ எங்க விட்ட? என்னை குறை சொல்ற” என்றான்.
புரியாமல் அவள் விழிக்க, புரிந்தால் என்ன சொல்வாளோ என நினைத்து கிளம்பி விட்டான்.
அஞ்சலிக்கு புரிய வரவும் முஷ்டியை மடக்கி குத்து விடுவது போன்ற ஸ்மைலியை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
கடைக்கு வந்த பின் பார்த்தவன் GIF ஒன்று பதிலுக்கு அனுப்பி வைத்தான். அடி பட்டு கட்டுக்களோடு படுக்கையில் படுத்திருக்கும் பொம்மை பையன் நெஞ்சை திறந்து இதயத்தை எடுத்து நீட்டிக் கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே இதயத்தை குப்பையில் போடும் பெண் ஒருத்தியை அனுப்பி வைத்தாள்.
அவன் அழும் ஸ்மைலியை போட, இவள் நடனம் ஆடும் ஸ்மைலி போட்டாள்.
“இப்படியே ஆடிட்டு இரு, இப்போ பிஸி நான்” என செய்தி அனுப்பி அந்த விளையாட்டை முடித்து வைத்த யுகியின் முகம் ஆனந்தத்தில் விகசித்துப் போயிருந்தது.