பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -9

 

அத்தியாயம் -9

 

இரண்டு நாட்களாக யுகியிடம் பாராமுகம் காட்டி வருகிறாள் அஞ்சலி. அவள் பேச வராமல் அறைக்கு உறங்க வர மாட்டேன்  என அவளிடம் சொல்லி விட்டவன் அதை தீவிரமாக கடை பிடித்தான்.

 

அவளை பேச வைக்க அவனுக்கும்  வேறு வழி தெரிந்திருக்கவில்லை. மூன்று நாட்களாக ஹாலில்தான் படுத்துக் கொள்கிறான் யுகி. உள்ளே வந்து படுங்கள் என அஞ்சலியும் அவனிடம் சொல்லவில்லை.

 

அம்மாவுக்கு தெரிய வராது என அவன் நினைத்திருக்க, நேற்று நள்ளிரவில் எழுந்து ஓய்வறைக்கு சென்ற அலமேலு தண்ணீர் எடுக்க வெளியில் வந்து இவனை பார்த்து விட்டார்.

 

மனைவியை மலை இறக்குகிறேன் என அம்மாவை மலை ஏற்றி வைத்து விட்டான்.

 

மருமகள்தான் மகனிடம் ஏதோ சண்டித் தனம் செய்கிறாள் என அஞ்சலியிடம் முகம் காட்டினார் அலமேலு. ‘இவருக்கு என்னாச்சு?’ என நினைத்து குழம்பினாள் அவள்.

 

புதிய ஸ்கூட்டி வாங்கப்பட்டிருப்பது தெரிந்து ஸ்ரீஜாவுக்கு மிளகாயை அரைத்து உடம்பில் பூசிக் கொண்டது போலிருந்தது. ரோஹித் வேறு அப்பாவுடன் பேசும் போது அம்மா அப்பம்மாவுடன் சண்டை, அம்மாவின் ஸ்கூட்டியை சித்தி எடுத்ததால் அம்மா அழுதாள் என சரிவர தெரியாமல் எதையோ சொல்லி வைத்திருந்தான்.

 

என்ன ஏதென மனைவியிடம் விசாரணை செய்தான் வாசு. ஒன்றும் புரியாமல் பேசுகிறான், இங்கு எந்த சண்டையும் இல்லை என சொல்லியிருந்தாள் ஸ்ரீஜா.

 

 எப்படியும் மாமியாரோ யுகியோ தன் கணவனிடம் விஷயத்தை சொல்லி விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை. அதை விட தான் பேசியதை வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்து அஞ்சலியும் யாரிடமும் சொல்லவில்லை என வேறு நினைத்துக்கொண்டாள்.

 

எப்படியோ தன்னிடம் யாரும் ஏதும் கேட்காத போது இப்போதைக்கு கொஞ்சம் அமைதியாக இருப்போம் என இருந்து கொண்டாள் ஸ்ரீஜா.

 

காலையில் கடைக்கு போக தயாராகி வெளியில் வந்தான் யுகி. ஸ்கூட்டியில் போடப்பட்டு காய்ந்து போயிருந்த பூமாலையை கழட்டிப் போட்ட அலமேலு மகனை முறைத்தார்.

 

“என்னம்மா?” என சாதாரணமாக கேட்டான் யுகி.

 

“இத தொட்டு கூட பார்க்கல போல உன் பொண்டாட்டி?” என நொடிப்பாக கேட்டார் அலமேலு.

 

“என்கிட்ட என்னம்மா காலையிலேயே வம்பு? தொடாம எங்க போக போறா?” எனக் கேட்டான்.

 

“என்னதான்டா அவளுக்கு பிரச்சனையாம், நான் பார்த்துட்டுத்தான் இருக்கேன் உன்னை கண்டாலே ஓடி ஒளியுறா? நீ ஹால்ல படுத்துக்கிற, இதெல்லாம் சரியில்லை” என அவர் சொல்லவும் திகைத்து விட்டான்.

 

ஆனாலும் சுதாரித்தவனாக, “அவ கிளாஸ் பகல்ல அட்டெண்ட் பண்ணாம மிஸ் பண்ணிட்டா மா, நைட்ல ரெகார்டட் கிளாஸ் பார்த்தா, லைட் ஏறியறது எனக்கு தொல்லையா இருக்குன்னு ஹால்ல படுத்தேன் மா” என சமாளித்தான்.

 

“பொய் சொல்லாதடா”

 

“இதுல போய் பொய் சொல்லி எனக்கு என்ன கிடைக்க போகுது?”

 

“அப்ப உங்களுக்குள்ள சண்டை சச்சரவு ஏதும் இல்லை?”

 

“பெருசா ஏதுமில்லம்மா, நான் பார்த்துக்கிறேன்”

 

“என்னத்த பார்ப்ப நீ? நாங்கல்லாம் கூட இருக்கையிலேயே இப்படி அடிச்சுகிட்டு ஆளுக்கொரு பக்கம் நிக்கிறீங்க,  வாசு கூட இருக்காம இங்க வந்து கெடக்குறா ஸ்ரீஜா, ஏதோ கட்டாயத்துல கல்யாணம் பண்ணி அவ கூட மல்லுகட்டிக்கிட்டு நிக்கிற நீ, அவனுக்காவது புடிப்புக்கு ஒரு புள்ள இருக்கான். உன் வாழ்க்கை நினைச்சி பயமா இருக்குடா.

 

அவர்கிட்டேயும் எதுவும் சொல்லிக்க முடியலை.   அஞ்சலி உங்கிட்ட இப்படி நடக்க, அவளுக்கும் ஸ்ரீஜாக்கும் நடந்த சண்டைதான் காரணமா? இல்லை தனியா போகணும்னு ஏதும் கேட்கிறாளா? அப்படி போறதா இருந்தாலும் எனக்கு சம்மதம்தான், அப்பாகிட்ட வேற காரணம் சொல்லி சமாளிச்சுக்கலாம், வாழ வேண்டிய வயசுடா உனக்கு” என கண்கள் கலங்க சொன்னார் அலமேலு.

 

“அம்மா அம்மா… அஞ்சு நிமிஷத்துல எவ்ளோ பெரிய படம் ஓட்டிட்ட? சாதாரண பிரச்சனைதான் எங்களுக்குள்ள, எம்மேலதான் தப்பு. கோவம் குறைய டைம் வேணாமா அவளுக்கு? நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லம்மா அவ. கண்டதையும் யோசிக்காம ரிலாக்ஸா இரு. வீணா டென்ஷன் ஆகி உடம்புக்கு ஏதாவது இழுத்து வச்சுக்காத” என சொல்லி புறப்பட்டு விட்டான் யுகி.

 

அறையிலிருந்த அஞ்சலிக்கு எல்லாம் காதில் விழுந்தது. மாமியாரின் எண்ணத்தில் தவறேதும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. யுகியின் அன்னையாக அவரின் கவலை நியாயம்தானே?

 

வயதானவருக்கு தன்னால் மன வேதனை என்ற குற்ற உணர்வு ஒரு புறம், கணவன் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாத  பாரம் இன்னொரு புறம் என மன்றாடினாள்.

 

 யுகி கூட அன்றைய தினம் வேலையும் தானும் கொடுத்த அழுத்தத்தில் பேசி விட்டான் என புரிந்தே இருந்தது.

 

விரும்பத் தகாத நிகழ்வொன்று அவளது வாழ்வில் நடந்த பிறகு என்னை குறித்து யார்தான் என்னென்ன பேசவில்லை, இப்போது யுகியின் ஒற்றை வரியில் எதற்கு இவ்வளவு கோவம் என தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

 

கணவன் பற்றிய சிந்தனையோடுதான் அன்றைய நாள் நகர்ந்தது.

 

திருமணம் ஆன நாளிலிருந்து இவனுடன் கழியும் பொழுதுகளை எண்ணிப் பார்த்தாள். சேட்டையான பேச்சுக்கள் இருந்த போதும் அவளுக்கு பிடிக்காத வகையில் அவன் எதுவும் நடந்து கொண்டதாக அவளுக்கு நினைவில்லை.

 

அன்றைய அவனது பேச்சு அவளை காயப்படுத்தியது உண்மை என்ற போதும் அவனிருந்த சூழலை அலசிப் பார்த்தவளுக்கு நடந்ததை தான் அவனிடம் தெளிவாக சொல்லியிருக்கலாம் என தோன்றியது.

 

இரவு கவிந்தது. வீட்டுக்கு வந்த யுகி,  அமைதியாக இருந்த மனைவியை ஆயாசத்தோடு பார்த்துக் கொண்டே குளிக்க சென்றான்.

 

 சண்டை நடந்த அன்று இரவு அவனுக்கு பரிமாறியவள் அதற்கு பின் அவனை தவிர்க்கத்தான் செய்திருந்தாள்.

 

இன்று அதிசயமாக அவனுக்கு உணவு பரிமாற வந்தவள் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.

 

“இன்னும் சாப்பிடல நீ?” என வியப்பாக கேட்டான்.

 

“இப்பதான் பசிச்சுது” என அவள் சொல்லவும் சமாதான பக்கமாக இறங்குகிறாளா என அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.

 

“இது ச்சீஸ் பராட்டா, வீடியோ பார்த்து செஞ்சேன், ட்ரை பண்றீங்களா?” எனக் கேட்டு பரிமாறினாள்.

 

“நீ செஞ்சியா?” என அதிசயமாக கேட்டான்.

 

“போர் அடிச்சுது, ஃபிரிட்ஜ்ல ச்சீஸ் இருக்கவும் செஞ்சேன்” என்றாள்.

 

அத்தனை மோசமில்லை, சாப்பிடும் ரகம்தான், “நல்லாருக்கு அஞ்சலி” என பாராட்டினான்.

 

“சுமாராதான் இருக்கு” என்றாள் அவள்.

 

“அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்கணும்? உனக்கு சுமாரா இருக்கிறது எனக்கு நல்லாருக்க கூடாதா? இன்னும் இருக்கா?”

 

“அண்ணி வந்திருந்தாங்க, அவங்கள்ட்ட கொடுத்திட்டேன். உங்களுக்கு பிடிக்காதுன்னு நினைச்சு நான் சாப்பிட ஆரம்பிச்சிட்டேன், இதான் லாஸ்ட்” என தன் தட்டில் இருந்ததை காட்டினாள்.

 

அப்படியே அவளின் தட்டை தன்னிடம் இழுத்துக் கொண்டவன், “உனக்கு சுமார்தானே இது? நான் சாப்பிட்டுக்கிறேன்” என சொல்லி சாப்பிட்டான்.

 

அவள் கண்டனமாக பார்க்க, “என் தட்டுல ஒன்னும் உன்னை சாப்பிட சொல்லலை, வேற தட்டு எடுத்துக்க” என்றான்.