அத்தியாயம் 18

பேருந்தில் பயணித்திருந்தனர் இருவரும்.

இளவஞ்சியின் வலது முன்னங்கையை தனது இரு கரங்களினாலும் இறுக்கமாய் பற்றி அவளின் தோளில் தலையைச் சாய்த்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சக்தீஸ்வரன்.

கண்களை மூடியவாறு இருக்கையில் தலை சாய்த்திருந்தவளின் மூளை பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது.

அன்று ஆத்மநல்லூருக்கு தேனிலவு செல்லும் எண்ணம் உருவானதும், அதனை செயல்படுத்தும் திட்டத்தை உருவாக்கினாள் இளவஞ்சி.

அன்றிரவே அவனிடம், “ஏங்க ஹனிமூன் பிளான் எதுவும் வச்சிருக்கீங்களா?” எனக் கேட்ட மனைவியை வியப்புடன் பார்த்தான் சக்தீஸ்வரன்.

“ஏம்மா ஒரு முத்தத்துக்குக் கூட உன்கிட்ட கெஞ்ச வேண்டியதா இருக்கு. நீயா ஹனிமூன் பத்தி கேட்குற?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட கணவனை முறைத்தாள் இவள்‌.

“அப்ப இதுவரைக்கும் நீங்க எதுவும் பிளான் பண்ணலைல! ரொம்ப சந்தோஷம். நான் ஒரு பிளான் வச்சிருக்கேன். என்ன பிளான் என்ன ஏதுனுலாம் கேட்க கூடாது. நான் கூட்டிட்டு போற இடத்துக்கு வரனும். இரண்டு நாள்ல கிளம்புறோம். டிக்கெட்ஸ்லருந்து ரூம் அரேஞ்மெண்ட் வரைக்கும் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

கண்களில் ஆச்சரியமும் மகிழ்வும் போட்டிப்போட, “சர்ப்ரைஸ்ஸா பொண்டாட்டி” அவளின் நெற்றியில் முட்டினான். சிரித்தவாறே ஆமெனத் தலையசைத்தாள் அவள்.

உடனே தனது கைபேசியை எடுத்து அவளின் வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பியவன், “உன்கிட்ட எவ்ளோ இருக்கும்னு தெரியலை. எல்லாத்தையும் பிளான் செய்யனும்னா நிறைய செலவாகும்ல. அதான் அனுப்பினேன்” என்றான்.

அவளின் கண்களில் நீர் கோர்த்து விட்டது‌.

திட்டத்தைத் தொடங்கும் போதே இவள் தானே பணம் போட வேண்டுமென்று கல்லூரியில் வரும் மாத சம்பளத்தை முன் பணமாக அளிக்க வேண்டுமென்று விண்ணப்பத்தை போட்டு விட்டு தான் வந்திருந்தாள். தானே சுயமாய் சம்பாதித்து தனக்கான செலவுகளை தானே செய்து வாழ்ந்து வந்தவளுக்கு இவனிடம் உடனே பணமெல்லாம் கேட்கவே முடியவில்லை‌. திருமணமான இந்த ஒரு மாத காலகட்டத்திற்குள் அவளுக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் அவளின் நிலை அறிந்து அவள் கேட்பதற்கு முன்பே அவளுக்கு அனுப்பி விடுவான்.

தற்பொழுதும் அவன் உடனே அவளின் நிலை அறிந்து அவ்வாறே செய்ய, நெகிழ்ந்து போன இளவஞ்சி, தானே முன் வந்து அவனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, அவளின் திடீர் செய்கையில் இன்பமாய் அதிர்ந்தாலும் உடனே தனது கன்னத்தை திருப்பி அந்த முத்தத்தினைத் தனது இதழுக்காகியிருந்தான் சக்தீஸ்வரன்.

அடுத்த இரண்டு நாட்களில் எங்கு தேனிலவு செல்கிறார்களென எவரிடமும் கூறாமலேயே கிளம்பினார்கள் இருவரும். சக்தியும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

அன்றைய நினைவில் பயணித்திருந்தவளின் கன்னம் சிவக்க, ‘என் மேல் அவ்ளோ நம்பிக்கையா சக்தி! இப்ப வரைக்கும் எங்கே போறோம்னு ஒரு வார்த்தை கேட்கலையே’ மனதிற்குள்ளாகவே நினைத்து கொண்டவள் தோளில் தலை வைத்திருந்தவனைச் சுற்றிக் கைகளைப் போட்டு தட்டிக் கொடுத்தாள்.

‘ஆனா அங்க போன பிறகு உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குமோ’ நினைக்கும் போதே இதழ் விரிய சிரித்திருந்தாள்.

அடுத்த அரை மணி நேர பயணத்தில் சற்றாய் உறங்கியிருந்த இளவஞ்சியின் முகத்தில் அசௌகரிய பாவனை தென்பட்டது.

உறக்கத்தைக் கலைக்கவும் முடியாமல் ஆயினும் அந்த அசௌகரிய உணர்வைத் தவிர்க்கவும் முடியாமல் மெல்ல கண் விழித்தவள் எழுந்து நிமிர்ந்து அமர்ந்தாள்‌. அவளின் அசைவில் கலைந்தவன் அவளின் தோளில் இருந்த தலையை தனது இருக்கையில் சாய்த்து மீணடுமாய் உறக்கத்திற்குள் சென்றான்.

‘நான் தான் இவரை கவனிச்சிக்கிற மாதிரி இருக்கு. எதுக்கு அசைஞ்சேன்னு கூட கேட்காம அவர் பாட்டுக்கு தூங்குறாரு’ எண்ணியவாறே அவனைப் பார்த்தவளுக்கு இந்த அசௌகரியத்திற்கான காரணம் பிடிபடவும் நாட்களைக் கணக்கிட்டாள்.

‘எப்படி மறந்து போனோம்’ தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

‘பஸ்ஸை எப்ப நிறுத்துவாங்கனு தெரியலையே. இதை இவர்கிட்ட எப்படி சொல்ல? ஒரு வாரமும் வேஸ்ட்டா போகப் போகுதுனு கோபப்படுவாரோ?’

‘அவர் சண்டைப் போடுவது போடாததுலாம் பின்னாடி வர்ற பிரச்சனை! இப்ப இந்த சூழ்நிலைல என்ன செய்ய போற நீ?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க, பதட்டமடைந்தது அவளின் மனது.

‘என்னனு சொல்லி பஸ்ஸை நிறுத்த சொல்றது. முதல்ல இவர்கிட்ட சொல்லனுமே’ இப்படியே தவிப்புடனும் பதட்டத்துடனும் மேலும் அரை மணி நேரம் கடந்திருக்க, வேறு வழியே இல்லை என்னும் நிலை வர, “சக்தி! சக்தி” என்று அவனை உலுக்கினாள்.

“என்ன? என்னாச்சு வஞ்சி?” என்றவாறு எழுந்தமர்ந்தான் சக்தீஸ்வரன்.

“எனக்கு இப்ப அவசரமா ரெஸ்ட் ரூம் போயே ஆகனும்” என்று உள்ளே போன குரலில் அவள் கூற, “என்ன நீ சின்னப்பிள்ளை மாதிரி நட்ட நடு காட்டுக்குள்ள பஸ் போய்ட்டு இருக்கும் போது இப்படி சொல்ற” என்றவன் வெளியே எட்டிப் பார்த்தான்.

“நாம கேட்காம அவங்களா பஸ்ஸை நிறுத்த மாட்டாங்க போலயே” என்றவன், அவளைப் பார்த்தவாறு, “ரொம்ப அவசரமா?” எனக் கேட்டான்.

அவனிடம் கூற அத்தனை சங்கடமாக இருந்தது அவளுக்கு.

தலையை தாழ்த்தியவாறு அமர்ந்திருந்தவளின் கைகள் துப்பட்டாவின் முந்தியை தடுமாற்றத்தோடு திருகியவாறு இருக்க, அந்த அசௌகரிய சூழலும் சங்கட உணர்வும் அவளின் கண்களில் நீரை கட்டியது‌.

இருட்டில் அவளை தெளிவாக பார்க்க முடியாவிட்டாலும், அவளின் செய்கையை உணர முடிந்தது.

“என்கிட்ட ஏன் இவ்வளோ தயங்குற தங்கப்பொண்ணு” என்றவன் கேட்ட நொடி கண்களில் இருந்து கண்ணீர் வடிய அவள் விசும்பி விடவும், “ஹே என்னடா என்னாச்சு? அவசரமா போகனுமா?” எனக் கேட்டான்.

அவனின் கையைப் பிடித்தவள், இல்லை என தலையசைத்து, “நம்மளோட திடீர் கல்யாணம், வாழ்க்கை, உறவு, புது வீடுனு இதுல நான் ஒரு விஷயத்தை சுத்தமா மறந்தே போய்ட்டேன்” என்றவள் அவன் காதோடு நெருங்கி, “எனக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு‌. இப்ப கண்டிப்பா நான் ரெஸ்ட் ரூம் போயாகனும்” மெல்லிய குரலில் உரைத்தாள்.

அவள் கூறியதைக் கேட்டதும் வெகு இயல்பாய் அவளின் தோளோடு கையிட்டவனாய், “அவ்ளோ தானே! அதுக்கு ஏன் இந்த அழுகை? நான் டிரைவர்கிட்ட பேசி அடுத்து வர்ற ஹோட்டல்ல எங்கேயாவது நிறுத்த சொல்றேன்” என்றவாறு எழுந்தான்.

முன்னே கதவை திறந்து நடத்துனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து மெதுவாக பேச்சு கொடுத்தவன் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் வண்டியை நிறுத்தச் செய்திருந்தான்.

வண்டி நின்றதும் தனது மனைவியிடம் வந்தவன், “வா போகலாம்! ஏதாவது எடுக்கனுமா? லக்கேஜ் மேலே இருந்து கீழே இறக்கவா?” என்று கேட்டான்.

“இல்ல நான் காலேஜுக்கு எடுத்துட்டு போற ஹேண்ட் பேக்கை எடுத்துட்டு வந்தனால தப்பிச்சேன்” என்றவாறு கீழே வைத்திருந்த தனது கைப்பையை எடுத்து தோளில் மாட்டியவாறு எழுந்தவள் சங்கடமாய் பின்னாடி தனது உடுப்பைப் பார்க்க,

“தங்கப்பொண்ணே நீ போட்டிருக்க டிரஸ் டார்க் கலர். அப்படியே வெளியே தெரிஞ்சாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று அவளின் காதில் உரைத்தவன், “ரொம்ப யோசிக்காம வர்றியா?” என்று அவளின் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

இருக்கையில் ஆங்காங்கே ஓரிருவர் முழித்து பார்த்து விட்டு மீண்டுமாய் உறக்கத்திற்குச் சென்றனர்.

அவளை பெண்கள் கழிவறை அருகே விட்டு தள்ளி நின்று கொண்டான். சில நிமிடங்கள் கழித்து அவள் அவனருகே வரவும், “இப்ப ஓகேவா” என்று கேட்டான்.

“ஹ்ம்ம் தேங்க்யூ சோ மச் சக்தி” என்றாள்.

அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினான்.

இருக்கையில் அமரவும் பேருந்து நகர, “சாரி சக்தி” என்றாள்.

“எதுக்கு சாரி?” புரியாது அவன் கேட்க, “இப்படி இந்த மாதிரி நேரத்துல ஹனிமூன்! உங்களுக்கு ரொம்ப டிஸ்அப்பாய்ட்டா இருக்கும்ல! சாரி! நான் டேட் கவனிச்சிருக்கனும்” கவலையுடன் உரைத்தாள்‌.

“ம்ப்ச் இதுக்கு எதுக்கு சாரி! அப்படி பார்த்தா என்னை விட உனக்கு தானே அதிகமாக டிஸ்அப்பாய்ண்ட்டா இருக்கும். எங்கே போறோம்னு கூட எனக்கு தெரியாதே! எவ்ளோ ஆசை ஆசையா பிளான் செஞ்சிருப்ப!” என்று அவளின் தலையைக் கோதியவன், “இந்த நேரத்துல உனக்கு ரொம்ப வயிறு வலிக்குமா?” எனக் கேட்டான்.

எவ்வித ஏமாற்றமும் இல்லாமல் தனது உடல் நிலையையும் வலியையும் முன்னிருத்தி அவன் இவ்வாறு கேட்டதில் மனம் நெகிழ்ந்து போக,

“ஹ்ம்ம் ஒரு நாள் தான் வலிக்கும். ஆனாலும் பரவாயில்லை. உங்க கூட ஒரு வாரம் இருக்கிற வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பலை‌‌. நாம அங்கேயே இருக்கலாம்” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் தலை மீது தனது தலையை சாய்த்தவனாய் கண்களை மூடிக் கொண்டான்.

‘அவரோட குல தெய்வ கோவிலுக்கு போக முடியாதே! இது என்ன இப்படி தடங்கல் மாதிரி ஆகிப் போச்சு’ அவளின் மனது கூற, மூளையோ, ‘வரவேண்டிய தேதில தானே வந்திருக்கு! அதை கவனிக்காம நீ கிளம்பிட்டு தடங்கலுனு நினைக்கிறது முட்டாள்தனம்’ என அவளைச் சாடியது.

‘ஆமா அதுவும் சரி தான். ஆனா உடனே போக சொன்னதால நானும் இதை கவனிக்காமல் பிளான் செஞ்சிட்டேன். ஆத்மநல்லூருக்கு எதுக்கு இவரை கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க? இவரோட குல தெய்வக் கோவிலுக்கு போனா விடை கிடைக்கும்னு நம்பி நான் கூட்டிட்டு போனா இப்ப இப்படி ஆகிப் போச்சே! எப்படியாவது இவரை மட்டுமாவது கோவிலுக்கு அனுப்பி வைக்கனும்’ என்று மனதிற்குள் நினைத்தவாறே கண் மூடியவள் உறங்கிப் போனாள்‌.