அத்தியாயம் 17

கத்தியை எடுத்த பள்ளி மாணவன் தன்னுடன் சண்டையிட்டிருந்த மாணவனைக் குத்துவதற்காக நீட்ட, இடைபுகுந்த சக்தியின் வயிற்றுப் பக்கமிருந்த சட்டைத்துணியை லேசாய் உரசிக் கிழித்திருந்தது அந்தக் கத்தி.

அந்த மாணவனின் கையைப் பிடித்து பின்னோக்கித் திருகி கத்தியை கீழே போட வைத்த சக்தி, அவனின் கையை பின்னாலே முறுக்கிப் பிடித்து தோளில் ஒரு கராத்தே அடியும் முதுகில் ஒரு அடியும் அடித்திருந்தான். வலி தாங்க முடியாது அந்த மாணவன் அப்படியே மடங்கி அமர்ந்து விழ, அதற்குள் அவர்களை சுற்றிக் கூட்டம் சேர்ந்திருந்தது.

“சக்தி உங்களுக்கு ஒன்னும் ஆகலையே” என்று பதறியவாறு வந்த இளவஞ்சி அவனின் கிழிந்தச் சட்டையினுள் கைவிட்டு வயிற்றுப் பகுதியை தடவிப் பார்த்தாள். எங்கும் காயங்கள் இல்லை என்றதும் தான் ஆசுவாசமானாள்.

மடங்கி அமர்ந்தவனையும் அவனுடன் சண்டையிட்டவனையும் இரண்டு கைகளிலும் பிடித்திருந்த சக்தி, “நீ போ வஞ்சி. நான் இவங்களை போலீஸ் ஸ்டேஷன்ல சேர்த்துட்டு வரேன்” என்றான்.

“போலீஸா?” என்று வஞ்சி வாயைப் பிளக்க, “பின்னே இந்த வயசுலயே கத்தியைத் தூக்குறவனை வேற என்ன செய்ய சொல்ற? இவன் லவ் பண்ண பொண்ணை அவன் பிக்கப் பண்ணிட்டான்னு கத்தியைத் தூக்குற அளவுக்கு வந்திருக்கான் பாரு. இவனைலாம் இப்பவே திருத்தலைனா அவன் வாழ்க்கையே நாசமா போய்டும்” என்றவன் ஆட்டோ பிடித்து அந்த இரு மாணவர்களுடன் காவல் நிலையத்திற்கு விரைந்தான்.

“அண்ணா அப்படி தான் வஞ்சி! ஒரு காலத்துல ரௌடியா சுத்தினவங்க தெரியுமா?” என்று மேனகா உரைக்க,

“என்னது ரௌடியா?” என்று இவள் அதிர்ச்சியுடன் பார்க்க, “ம்ப்ச் ஏய் சும்மா இரு! எந்த நேரத்துல என்ன பேசுற?” என்று அதட்டி அமைதியாக்கினார் மகேஸ்வரி.

“நீ நினைக்கிற அளவுக்கு பெரிய ரௌடிலாம் இல்லைமா. காலேஜ்ல ரௌடி மாதிரி சுத்திட்டு இருந்தான். அப்ப தான் பாடி பில்டிங் கராத்தேனு கத்துக்கிட்டான்” என்றார் மகேஸ்வரி.

‘காலேஜ்ல ரௌடியா இருந்தாரா’ கண்களை அகல விரித்தாள் இளவஞ்சி‌.

மேனகாவின் கணவர் பிரகாஷ் வண்டியை ஓட்ட, அவர் அருகே தனது பேரனுடன் அமர்ந்தார் நல்லசிவம். மூன்று பெண்களும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். பெருத்த யோசனையுடன் பயணித்திருந்தாள் இளவஞ்சி.

இரவு வேளையில் அனைவரும் மேனகாவின் இல்லத்தில் உண்டுவிட்டு தங்களது இல்லத்திற்குச் செல்ல கிளம்பி நிற்க, அப்பொழுது தான் வந்து சேர்ந்தான் சக்தீஸ்வரன்.

“சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று அனைவரின் முன்பும் பொதுவாக உரைத்தவாறு மனைவியைப் பார்க்க, கோபமாய் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

“போலீஸ் ஸ்டேஷன்ல பசங்களோட அப்பா அம்மா வந்த பிறகு போங்கனு சொல்லி அவங்களை வர வச்சிட்டாங்க. பசங்களை இனி நாங்க எந்த பிரச்சனைக்கும் போகாம பார்த்துக்கிறோம். கேஸ் வேண்டாம்னு கால்ல விழாத குறையா கெஞ்சினாங்க அவங்க பேரண்ட்ஸ். இன்ஸ்பெக்டர் இரண்டு பசங்களுக்கும் வார்னிங் கொடுத்து லெட்டர் எழுதி வாங்கிட்டு தான் விட்டார்‌. அதெல்லாம் பேசி முடிச்சிட்டு வர இவ்வளோ நேரமாகிடுச்சு” என்று பொதுவாக உரைத்தவாறு தங்கை பரிமாறிய இரவுணவை உண்டுக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்.

இளவஞ்சியின் முகத்தில் இருந்த பாவனையில் எந்த மாறுதலும் இல்லை.

‘அய்யோ இவ ஏன் கோபமா இருக்கானு தெரியலையே! எப்படி இவளை சமாதானப்படுத்துறது’ என்று சிந்தித்தவாறே தங்கையிடம் விடைப்பெற்றவனாய் அனைவரையும் தங்களது காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

சமையலறையில் சக்திக்கும் தனக்குமாக இளவஞ்சி பால் கலக்கி கொண்டிருக்க, சமையலறை மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி, “ஒரு காலத்துல முரடனா தான்மா சுத்திட்டு இருந்தான். எங்க யார் பேச்சையும் கேட்க மாட்டேன். காலேஜ்ல எல்லா பொண்ணுக்கும் இவன் தான் காவலன் மாதிரி பொண்ணுங்களை கிண்டல் கேலி செய்ற ரௌடி கும்பல் கூட இவன் போய் சண்டை போட்டு ரத்தம் வர அளவுக்கு அடிச்சி வச்சிட்டான்‌. அதுலருந்து இவனும் இவனோட ஃப்ரண்ட்ஸ்ஸூம் ஒரு ரௌடி கும்பலா ஃபார்ம் ஆகிட்டாங்க. காலேஜ் முடியுற வரைக்கும் இவன் கூட ஒரே அக்கப்போர் தான். காலேஜ் முடிச்ச பிறகு இவனோட அந்த கேங்க் பிரிஞ்சி அப்படியே கல்யாணம் வேலைனு செட்டில் ஆக, இவனுக்கு வேலையும் கிடைக்கல. கல்யாணமும் நடக்கலை. அதனால யாரும் இவனை மதிக்கலை. அப்ப இந்த கார்மெண்ட்ஸ்லாம் கிடையாதுமா. சக்தி அப்பா டெய்லர் கடை வச்சிருந்தாரு. காலேஜ் முடிச்சி கிட்டதட்ட அஞ்சு வருஷம் எந்த வேலையும் கிடைக்காம ரொம்பவே அவமானப்பட்டுட்டான்மா. அவமானப்படுத்தினது யாருனு நினைக்கிற, எல்லாரும் எனக்கு கூட பிறந்தவங்களும், சக்தி அப்பாக்கு கூட பிறந்தவங்களும் தான். எங்க பையனை அவமானப்படுத்துற உறவு எங்களுக்கு வேண்டாம்னு நாங்க யார்கிட்டேயும் இப்ப பேசுறது இல்லை.

ரௌடியா இருந்தா கூட என் பையன் நல்லது செஞ்சி தான் அந்த பேரு வாங்கினான். அப்படிப்பட்டவன் ஏன் கூனி குறுகி வீட்டுல இருக்கனும்னு சக்தி அப்பா தான் அவனுக்கு கார்மெண்ட்ஸ் ஐடியா சொன்னாரு. அவனுக்கு பக்கபலமாக அவர் இருக்கிறதா சொல்லி பிஸ்னஸ் செய்ய லோன் வாங்கி அவன் பேருலயே இதை ஸ்டார்ட் செஞ்சாரு‌. அதுக்கு பிறகு ஏறுமுகம் தான்மா.

ஆனா அவனுக்கு எங்கிருந்து இப்படி ஒரு ஞானமும் பக்தியும் வந்துச்சுனு எங்களுக்கே தெரியாதுமா. கார்மெண்ட்ஸ் ஆரம்பிச்ச பிறகு கம்பெனி லாஸ் ஆகிட கூடாதுனு மாசாமாசம் திருவண்ணாமலை கிரிவலம் போய்ட்டு வருவான். அப்புறம் நாங்க தங்கியிருந்த ஏரியா பக்கம் இருந்த சிவன் கோவிலுக்கு தினமும் போவான். அவன் சிவனைத் தொடர்ந்து கும்பிட ஆரம்பிச்ச பிறகு அந்த முரட்டுத்தனம்லாம் சுத்தமா இல்லாம போய்டுச்சு‌. ஆனா எங்க எந்த பிரச்சனை நடந்தாலும் போய் நிக்கிற குணம் மட்டும் மாறவே இல்லை.

பல வருஷம் கழிச்சி சக்தி இன்னிக்கு அந்த பசங்களை அடிக்கிறதை பார்த்ததும் பழசுலாம் ஞாபகம் வந்துடுச்சு‌. இதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்மா. சரி நேரமாச்சு. நீ போ மா” என்றவாறு சென்றார்.

தனது அத்தையின் மூலம் கேட்ட சக்தியின் வாழ்வைப் பற்றி சிந்தித்தவாறே அறையினுள் சென்றாள் இளவஞ்சி‌.

மேஜை மீது அவள் பால் கோப்பையை வைத்ததும், அவளின் தொடையோடு கையிட்டு கையினில் ஏந்தியவன், அவளின் அலறலை எல்லாம் கருத்தில் கொள்ளாது கட்டிலில் தொப்பென்று போட்டான்.

நிமிடத்தில் எகிறி குதித்து துடித்தடங்கிய இதயத்தை நீவியவளாய் அவனை அவள் முறைக்க, “பொண்டாட்டி இன்னும் புருஷன் மேல கோபமா தான் இருக்கீங்களா?” என்று அவளின் இரு புறமும் கைகளை அணைக்கட்டி வைத்தவனாய் அவளின் நெற்றியில் முட்டியவாறு கேட்டான்.

“முரடனா நீங்க?” தனது அத்தை கூறியதை நினைத்தவாறே வந்தவள் தன்னையும் மீறி அவனின் முகத்தை பார்த்து சட்டெனக் கேட்டு விட, “ஓ நான் உன்னை தூக்கினதே முரட்டுத்தனமா தெரியுதா? அப்ப…” என்று கண் சிமிட்டி சிரித்தவன், அவளை நோக்கிக் குனிந்து இதழோடு உரசினான். அவளின் உடல் சிலிர்த்தடங்க, புல்லரிக்கும் அவளின் மேனியைக் கண்டு ரசித்தவனாய் அவளின் இதழில் புதைந்தான்.

முதல் முறையாக உணரும் இதழ் முத்தம் இருவரையும் பித்தாகச் செய்ய, அவன் அழைத்துச் செல்லும் உலகிற்கு தன்னை மறந்து சென்றிருந்தாள் இளவஞ்சி.

“தங்கப்பொண்ணு” என்று அவளின் வாய்க்குள் கூறியவனின் வார்த்தைகள் அவளுள்ளேயே கரைந்து கொண்டிருந்தது.

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே

அறையில் மெல்லிய ஓசையுடன் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,

இதழில் தொடங்கிய முத்தத்தைத் தொடர்கதையாக்கி அவள் உடலில் பயணித்தவன் அவளின் பெண்மையை மலர செய்ய, அவன் இதழ் செய்யும் மாயத்தைக் கண் மூடி ரசித்தவளாய் உணர்வுப்பிழம்பாகியிருந்தாள்.

சக்தீஈஈஈ என்று அவளைப் பிதற்றி பித்தாகச் செய்தவன் ஈருடல் ஓருயிராய் கலந்து நெற்றியில் முத்தமிட்டவனாய் அவளருகில் படுத்தான்.

அவன் தோளில் முகம் புதைத்தவளின் கன்னங்கள் செந்தாமரையாய் சிவந்திருக்க,

“இப்ப சொல்லு முரடனா நானு?” கைவளைக்குள் வைத்து நெற்றியை முட்டியவாறு சிரிப்புடன் அவன் கேட்க, வெட்கப்பட்டு அவன் மார்போடு ஒண்டிக் கொண்டவளைச் சிரிப்புடன் அணைத்துக் கொண்டான் சக்தீஸ்வரன்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் இருவரும்.

எங்கும் வெண் பனிப்புகை சூழ்ந்திருக்க, பெரிய சிவலிங்கத்தின் முன் கண் மூடி மனமுருக வேண்டியவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி.

“உன் கணவனின் உயிரைக் காக்க உடனே ஆத்மநல்லூருக்குச் செல் ” கருவறையில் இருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.

சட்டெனப் பதறி எழுந்து அமர்ந்தாள் இளவஞ்சி.

அவனை அணைத்தவாறு அவனது மார்பினில் முகத்தை வைத்து அவனது கைவளைவில் உறங்கி இருந்தவள், பட்டென எழுந்ததும், அவளின் அசைவில் அவனும் எழுந்தமர்ந்தான்.

நெற்றியைப் பிடித்தவாறு அவள் அமர்ந்திருக்க, அவளின் தோளில் கை வைத்தவனாய், “என்னடா தங்கப்பொண்ணு என்னாச்சு?” எனக் கேட்டான்.

கனவின் தாக்கத்தில் தன்னையும் மீறி அவளின் வாய், “ஆத்மநல்லூர்” என்றுரைக்க, “என்னது ஆத்மநல்லூரா? அது எங்க குலதெய்வம் இருக்க ஊராச்சே! அதெப்படி உனக்குத் தெரியும்? அம்மா சொன்னாங்களா?” என இயல்பாய் கேட்டிருந்தான் சக்தீஸ்வரன்.

அவனின் பேச்சில் சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள் இளவஞ்சி.

“என்னது உங்க குலதெய்வம் இருக்க ஊரா?” ஆச்சரியமாக அவள் கேட்க,

“ஆமா அதுக்கு ஏன் நீ இவ்ளோ ஷாக் ஆகுற? எதுவும் கனவு வந்துச்சா? உனக்கு எப்படி இந்த ஊரை பத்தி தெரியும்?” எனக் கொட்டாவி விட்டவாறே கேட்டான். கண்கள் உறக்கத்திற்குக் கெஞ்சியது அவனுக்கு.

“நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க. உங்க குலதெய்வம் எது? கடைசியா உங்க குலதெய்வக் கோவிலுக்கு எப்ப போனீங்க?” எனக் கேட்டாள்.

“கருப்பண்ணசாமி தான் குலதெய்வம். நான் மூனாவது படிக்கும் போது போய்ருப்போம்னு நினைக்கிறேன்” என்றவனுக்கு உறக்கம் கண்களை இழுக்க கொட்டாவி விட்டவனாய், “இந்த நேரத்துல எதுக்கு இந்தக் கேள்விலாம்” என்றவாறு கண்களைத் தேய்த்தவன் அவளின் முதுகில் தனது முகத்தை சாய்த்தான்.

அவளின் முதுகில் சாய்ந்த மறுநிமிடம் உறங்கியும் இருந்தான். முதுகில் அவனது மீசை தாடியின் உராய்வு அவளுக்குக் கூச்சமளிக்க, அவனைத் தள்ளி படுக்கையில் படுக்க வைத்தவள், தானும் அவனருகில் படுத்துக் கொண்டாள்.

“இவரோட குலதெய்வத்துக்குப் பிரச்சனையா? இல்ல இவருக்குத் தான் பிரச்சனையா? எதுக்காக அங்க போகச் சொல்றாங்க? ஒன்னுமே புரியலையே ஈஸ்வரா! இவ்வளோ வருஷமா போகாதவங்க நான் சொன்னா போவாங்களா?” பலவிதமான சிந்தனைக்குள் ஆட்பட்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்‌.