“கொஞ்ச நேரத்துல நானே வர்றேன் அத்தை, என்னை தனியா விடுங்க ப்ளீஸ்” என்றாள் அஞ்சலி.

“அவதான் அப்படின்னா நீயும் மரியாதையா நடக்க மாட்டியா அஞ்சலி? கதவை தொறன்னு சொல்றேன்ல?” என இவளிடமும் அதட்டினார் அலமேலு.

அஞ்சலிக்கு உடல் உதறிக் கொண்டிருந்தது. இப்படியே மாமியாரிடம் போய் நிற்க அவளுக்கு விருப்பமில்லை. மூளை ஒருவித ஸ்தம்பிப்பில் இருக்க மேற்கொண்டு அவரிடம் அவளுக்கு பேசவும் வரவில்லை.

அவளின் அமைதி அவரை பதட்டப் படுத்தியது.

மேலும் மேலும் கதவை தட்டி சத்தம் செய்து, கணவருக்கு தெரிந்து விட்டால் அவரின் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக ஏறி விடுமே என நினைத்து கதவை தட்டுவதை நிறுத்தி விட்டார். அறையிலேயே இருக்கும் இவளை நினைத்தும் பயம். உடனே மகனுக்கு அழைத்து சொல்லி விட்டார்.

கடை பிஸியாக இருக்கும் நேரம். அதை விட வேறு சில முக்கிய வேலைகளும் யுகிக்கு இருந்தன. அம்மாவை சமாதானம் செய்தவன் அஞ்சலிக்கு அழைத்து பேசினான்.

“என்னாச்சு அஞ்சலி, அம்மா பயப்படுறாங்க, முதல்ல கதவை தொற, நைட் நான் வந்து அண்ணிகிட்ட பேசுறேன்”  என பொறுமையாக சொன்னான்.

“அத்தைய பயப்பட வேணாம்னு சொல்லுங்க, நான் ஓகே ஆனதும் வெளில போறேன். நீங்களும் கால் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்” என்றவளின் குரலே சரியில்லை.

“அஞ்சலி…” என ஏதோ அவன் சொல்ல வருவதற்குள், “அப்புறம் பேசுறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள்.

பற்களை கடித்த யுகி உச்சந்தலையில் கை வைத்து உலுக்கிக் கொண்டான். அம்மாவுக்கு அழைத்து, “அவளுக்கு ஒன்னுமில்ல மா, பயப்படாத” என்றான்.

“ரூமை சாதிக்கிட்டு இருக்கான்னு சொல்றேன், நீ என்னடா கதை சொல்ற, இவளுங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு உங்கப்பா மாதிரியே என்னையும் படுக்க வைக்காம ஓய மாட்டாளுங்க போல. அவ ரூம் கதவை திறக்கணும், இல்லைனா நீ வா, நேர்ல வந்து என்னன்னு பாரு. பயமா இருக்குடா” என்றார் அலமேலு.

“வர்றேன் வைம்மா” என்றவனுக்கு வலியில்லாத அவஸ்தையான தலைக்குத்தல் உண்டாகியிருந்தது.

தன் வேலையை அப்படியே விட்டு விட்டு கடைப் பொறுப்பினை இளவரசனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு ஓடினான்.

யுகி வந்து கதவை தட்டிய நேரம் அஞ்சலி இயல்புக்கு மீண்டிருந்தாள். தான் சொன்ன போது கதவை திறக்காமல் புருஷன் வந்ததும் திறக்கிறாள் என மருமகள் மீது அலமேலுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அறைக்குள் வந்து கதவை தாழிட்ட யுகி, “இப்படியா அம்மாவை பயமுறுத்துவ அஞ்சலி, அம்மாக்கும் பிபி பார்டர்ல இருக்கு, கடைல போட்டது போட்ட படி நான் ஓடி வர்றேன், கொஞ்சம் பொறுப்போட நடந்துக்க” என்றான்.

“உங்க அண்ணி…”

“அவங்க என்ன சொன்னாலும் பதிலுக்கு பேசு, அதை விட்டுட்டு வண்டியை தள்ளி விடுவியா? இப்ப அவங்க மேல என்ன தப்புன்னாலும் அது மறைஞ்சு போயிடும், நீ வண்டியை தள்ளிட்டன்னு அதையே பேசுவாங்க. அப்படியென்ன கண்ட்ரோல்ல இல்லாம கோவம் வருது உனக்கு?”

தன்னிடம் விளக்கமே கேளாமல் தன் பாட்டுக்கு பேசும் கணவனை நினைத்து அவளுக்கு ஆதங்கமாக இருந்தது.

வாடிக்கையாளர் கேட்ட ஏதோ பொருள் எங்கு இருக்கிறது என தெரியாமல் இவனுக்கு அழைப்பு வந்தது. அவன் அடையாளம் சொல்லியும் யாராலேயும் எடுக்க முடியவில்லை. காணொளி அழைப்பு செய்து பொருளை காண்பித்து கொடுத்தான்.

தன் செயலால் யுகிக்கு தேவையில்லாத அலைச்சல், மாமியார் பயந்திருக்கிறார் என அவளுக்கு குற்ற உணர்வாகி விட்டது.  இவனிடம் ஏதும் சொல்ல இது சமயமல்ல, இரவு வரட்டும் என யோசித்துக் கொண்டு  படுக்கையில் அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

“சரி ரூம்லேயே இருக்காத, அம்மாட்ட போ, அண்ணி பிரச்சனை பத்தி நைட் பேசிக்கலாம், எனக்கு கடைக்கு போகணும்” என்றான் யுகி.

“உங்கம்மா ஏதாவது கேட்டா அவங்கள சமாளிக்க  இப்போ எனக்கு கஷ்டம், நான் இங்கேயே இருக்கேன், ரூம் சாத்திக்கல” என்றாள்.

“ரூமை விட்டு போன்னு நான் சொல்றேன், அதென்ன பிடிவாதம் உனக்கு?” என அவன் அதட்ட, அவனை கோவமாக பார்த்தவள் பதில் பேசவில்லை.

அவனும் கோவம் கொண்டவன்,  “உன்னை என்னால ஹேண்டில் பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியும் அஞ்சலி. அதனாலதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு உன் முட்டாள் அண்ணன்கிட்ட சொன்னேன். அவன் வசமா சிக்க வச்சிட்டான் என்னை” என்றான்.

‘நானும்தானே கல்யாணம் வேண்டாம் என இவனிடம் சொன்னேன்?’ என நினைத்த அஞ்சலிக்கு மலுக் என கண்ணீர் வந்து விட்டது.

 யுகி நெற்றியை பிடித்துக்கொள்ள, கடையிலிருந்து அவனுக்கு அடுத்த அழைப்பு.

“என்னடா ஆச்சு இன்னிக்கு உனக்கு? வேற யாரும்னா கூட பரவாயில்லை, உனக்கும் அங்க ஏதும் தெரியாதா?  நொய் நொய்னு கால் பண்ற?” எடுத்த எடுப்பில் இளவரசனிடம் சத்தம் போட்டான் யுகி.

டீலர் ஒருவர் வந்திருப்பதை சொன்ன இளவரசன், “நீங்கதானே அண்ணா அவரை பார்க்கணும், வெயிட் பண்ண சொல்லவா இல்லை நாளைக்கு வர சொல்லட்டுமான்னு கேட்க கால் பண்ணினேன் அண்ணா” என்றான்.

“வந்திடுவேன், வெயிட் பண்ண சொல்லு” என சொல்லி விட்டு மனைவியை பார்த்தான்.

யுகியின் அவசர நிலையை புரிந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து கொண்டாள்.

பெரிதாக மூச்சு விட்டவன், “கொஞ்சம் புரிஞ்சுக்கோ அஞ்சலி, சின்ன குழந்தையாட்டம் நடக்காத…” என சொல்லிக் கொண்டிருக்க இடையிட்டாள் அவள்.

“நானா உங்களை இங்க கூப்பிட்டேன்? இப்பவும் இங்கேயே இருங்கன்னு சொல்லிட்டு இருக்கேனா? நீங்க கடைக்கு போங்க, நான் வெளில போறேன்” என சொல்லி வாயிலை நோக்கி நடந்தாள்.

அவளின் கையை பிடித்துக் கொண்டவன், அவளை பார்த்தான்.

அவளின் அழுது கலங்கிய முகத்தில் நன்றாக சிவப்பேறியிருந்தது.

 “நீ இரு இங்கேயே, கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாட்ட போ. அவங்க எதுவும் கேட்டுக்க மாட்டாங்க. இப்ப படுத்துக்க” என்றான்.

“இல்லை நான் போறேன்” என்றாள்.

“படுத்தாத டி, இங்கேயே இருன்னா இரு. அழக் கூடாது, அது நான் என்னமோ… ம்ம்ம்… நைட் வந்து பேசுறேனே, இப்ப பொறுமையும் இல்லை, டைமும் இல்லை” என்றான்.

அவள் உம் என நிற்க, அதற்கு மேல் அவளிடம் பேசிக் கொண்டிருக்க அவகாசம் இல்லாமல் அறையை விட்டு அம்மாவிடம் சென்றான்.

அறையிலிருந்து அவளாக வருவாள், அதுவரை அவளை அழைக்காதே, அவள் வந்தாலும் அந்த சண்டை குறித்தோ அறைக் கதவை மூடியது குறித்தோ எதுவும் அவளிடம் கேட்காதே என அம்மாவிடம் சொன்னான்.

“நல்லாருக்குடா நீ பேசுறது, நான் ஒன்னும் அவளை கடிச்சி தின்னிட மாட்டேன், நீ கிளம்பு” என்றார் அலமேலு.

“அப்பாக்கு ஏதும் தெரிய வேணாம் மா”

“என் புருஷனை பார்த்துக்க எனக்கு தெரியும், நீ பொறக்கிறதுக்கு முன்ன நாங்கதான் எங்களுக்கு”

“சம்பந்தம் இல்லாம பேசாத ம்மா. நைட் சீக்கிரம் வர பார்க்கிறேன்” என சொல்லி,  அறையில் மனைவி படுத்திருப்பதை எட்டிப் பார்த்து விட்டே  வெளியே சென்றான்.

ஸ்கூட்டர் இன்னும் விழுந்த நிலையிலேயே கிடக்க, அதை நிமிர்த்தி வைத்துக் கொண்டிருந்தான் யுகி. அதற்குள் ஸ்ரீஜா வந்து விட்டாள்.

மாமியாரிடம் பேசி அழுதது போலவே இவனிடமும் அழுதாள் ஸ்ரீஜா. யுகிக்கு ஆயாசமாக இருந்தது.

“என் தம்பி இருக்கான் எதுக்கும் பயப்படாம இருன்னு உன் அண்ணன் சொல்லிட்டே இருப்பாரு யுகி, நீயாவது நியாயமா நடந்துக்க. அவளை இப்பவே கண்டிச்சு வை, உன் அண்ணிக்கு உண்டான மரியாதைய நீதான் வாங்கி தரணும்” என்றாள்.

“சரி அண்ணி, நைட் வர்றேன் பேசிக்கலாம்” என யுகி சொல்ல, அவள் காதில் வாங்குவதாக காணோம்.

யுகியின் படுக்கையறையின் வெளிப்பக்கம்தான் இவர்கள் நின்றிருந்தது. ஜன்னல் திறந்திருக்க, அஞ்சலியால் இந்த பேச்சை கேட்க முடிந்தது.

விசாரித்து பேச வேண்டும் என்றால் யுகி நேரம் செலவிட வேண்டும். அதனால் இப்போதைக்கு இதை விசாரிக்கவே விரும்பவில்லை அவன். ஸ்ரீஜாவோ விசாரணை வருவதற்கு முன் தன் பக்கம் சிம்பதி உண்டாக்கிக் கொள்ள பார்த்தாள்.

வெளியில் வந்த அஞ்சலி, “கடைல ஏதோ அர்ஜென்ட் வேலையாம், உடனே உங்களை வர சொல்லி எனக்கு கால் வந்துச்சு” என்றாள்.

அஞ்சலியின் எண் கடையில் யாரிடமும் இல்லை, பொய் சொல்கிறாள் என யுகிக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் மனைவி ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி புறப்பட்டு விட்டான் யுகி.

ஸ்ரீஜா அஞ்சலியை முறைத்துப் பார்க்க, நீயெல்லாம் எனக்கு ஆளா என்பது போல பதிலுக்கு முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் அஞ்சலி.