தெரியாதது போல “வண்டி சாவி எங்கத்தை காணோம்?” என மாமியாரிடம் கேட்டாள்.

அவர் விவரம் சொல்ல, “அது என் ஸ்கூட்டி அத்தை, என்கிட்ட கேட்கணும்னு அவளுக்கு தெரியாதா? இதென்ன கெட்ட பழக்கம்? இவனுக்கு பிராஜக்ட் பண்ண சொல்லிருக்காங்க, திங்ஸ் வாங்க  கடைக்கு போகணும் நான். எப்படி போவேன்?” என சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.

“நீ இந்த டைம் வெளில போவேன்னு எனக்கு தெரியாது. நாந்தான் அவளை வண்டி எடுத்துக்க சொன்னேன், நீ  ஆட்டோல போனா ஆச்சு, அப்படி இல்லைனாலும் இந்தா முக்கத்துல இருக்கு ஸ்டேஷனரி  கடை, நடந்தா நாலு நிமிஷம்தான். அதுக்கு எப்படி பேசுற நீ? அவளும் இந்த வீட்டு பொண்ணுதான். வண்டியும் உன் அப்பா வீட்டு சீதனம் இல்லையே” என சொல்லி விட்டார் அலமேலு.

அஞ்சலியின் அண்ணனை நந்தினி மணந்து கொள்ள போவதால்தான்  அவளை தூக்கி வைத்து பேசுகிறீர்கள், எனக்கு என்ன என் வீட்டில் குறைவாக சீர் செய்து விட்டார்கள் என இப்போது குறை பேசுகிறீர்கள் என அலமேலு பேசியது  தவறு என்பது போல மாற்றி விட்டாள்.

திகைத்துப் போன அலமேலு  மலங்க மலங்க நின்ற பேரனை பார்த்துவிட்டு இவளிடம் வாய் கொடுத்தால் இன்றைய பொழுது அவ்வளவுதான் என நினைத்து அமைதி காத்தார்.

“பசிக்குது அப்பம்மா” என்றான் ரோஹித்.

 ‘ஸ்கூல் முடிச்சு வந்த புள்ளை வயித்த கவனிக்க துப்பில்ல, வந்திட்டா உரிமை சண்டை போட’ என மனதிற்குள்ளாக மட்டும் சொல்லி, பேரனை உள்ளே அழைத்து சென்று விட்டார் அலமேலு.

அஞ்சலியின் வருகைக்காக காத்திருந்தாள் ஸ்ரீஜா.

ஒரு மணி நேரம் காத்திருந்தால் நீங்கள் கேட்ட ஃபிரேம் போட்டு கையோடு வாங்கி செல்லலாம் என  அஞ்சலியிடம் சொன்னான் கடைக்காரன். அவளும் காத்திருந்து வாங்கிக் கொண்டுதான் கிளம்பினாள்.

அஞ்சலி வீட்டிற்குள் நுழையக் கூட நேரம் தரவில்லை ஸ்ரீஜா.

“ஒருத்தவங்க பொருளை  பெர்மிசன் கேட்டுத்தான் வாங்கிட்டு போகணுங்கிற பேஸிக் மேனர்ஸ் கூட கிடையாதா உன்கிட்ட?” எடுத்த உடன் கடு கடுத்தாள் ஸ்ரீஜா.

அவளின் பேச்சில் அதிர்வுற்றாலும், “என்னாச்சுக்கா?” என விசாரிக்கவே செய்தாள் அஞ்சலி.

அதற்குள் வண்டியின் முன் பக்கம் கீறல் விழுந்திருக்கிறது, பின்பக்க டயரில் காற்று குறைவாக உள்ளது போல் உள்ளதே, பஞ்சர் ஆனதோ என்னவோ என ஸ்ரீஜா செய்த அலப்பறையில் அஞ்சலிக்கு எரிச்சலாகி விட்டது.

“போக அஞ்சு நிமிஷம் வர அஞ்சு நிமிஷம்னு பத்து நிமிஷம் மட்டும்தான் வண்டியை யூஸ் பண்ணிருக்கேன். நீங்க அபாண்டாமா பேசாதீங்க” என்றாள் அஞ்சலி.

“பொய் சொல்லாத, நீ கிளம்பி போய் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல ஆகுது. ஊர் சுத்திட்டு வந்து பத்து நிமிஷம்தான் யூஸ் பண்ணினேன்னு பச்சையா பொய் சொல்லாத”

“உங்ககிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆக போகுது? ஊர் சுத்தினேன்னு எத வச்சு சொல்றீங்க, அப்படியே நான் சுத்தினாலும் உங்களுக்கு அது அனாவசியம்”

“இந்த வீட்டுக்கு வந்து முழுசா ஒரு மாசம் ஆகல, அதுக்குள்ள இப்படி பேசுறியே, உன்னை விட மூத்தவ நான், அந்த மரியாதை வேணாம் உனக்கு?”

“நானும் அதான் கேட்கிறேன், நான் இங்க வந்து ஒரு மாசம் கூட ஆகல, புதுசா வந்திருக்கவகிட்ட மூத்தவங்களா இருந்து நல்லது கெட்டது கைட் பண்ணினா அது அழகு, அத விட்டுட்டு ஒன்னுமில்லாத விஷயத்துக்கு வாசல்ல வச்சே மல்லு கட்டிட்டு நிக்கிறீங்க” எனக் கேட்டாள் அஞ்சலி.

தன் பேச்சில் அஞ்சலி துணுக்குற்று எதற்காக இந்த வண்டியில் போக சொன்னீர்கள் என யுகியிடம் சண்டை பிடிப்பாள், அல்லது புது வண்டி வேண்டுமென்று அடம் செய்வாள், அதை வைத்து தான் ஏதாவது விளையாடலாம் என்பதுதான் ஸ்ரீஜாவின் நினைப்பு.

ஆனால் தன்னிடமே துணிந்து தன் பேச்சுக்கு பதிலுக்கு பதில் பேசும் அவளின் செய்கையை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.

என்ன செய்தாவது அவளின் முகத்தை கறுக்க வைக்க வேண்டும் என கறுவிக் கொண்ட ஸ்ரீஜா, “நீ அதிக பிரசங்கின்னு இங்க எல்லாரும் பேசிக்குவாங்க, அது உண்மைதான் போல” என்றாள்.

‘அடுத்து இது என்ன?’ என்பது போல கண்களை சுருக்கினாள் அஞ்சலி.

“அதிக பிரசங்கியா இருக்க போயிதான் ஆம்பள பையன்கிட்ட அடக்கம் இல்லாம வாலாட்டின,  அவன் சும்மா இருப்பானா அதான்  உன் ஃபோட்டோவை போட்டு ஊர் சிரிக்க வச்சிட்டான்” என்றாள் ஸ்ரீஜா.

அஞ்சலி கோவமாக பார்த்தாள்.

“இத நான் சொல்லலை மா, உன் மாமியார் நாத்தனாருங்க இவங்க சொன்னதுதான் இது. இத அவங்க சொன்னப்போ உன் வீட்டுக்காரர் கூட கேட்டுக்கிட்டுதான் நின்னாரு. நந்தினி கல்யாண பிரச்சனை மட்டும் இல்லைனா யுகி உன்னை கட்டியிருக்கும்னு நினைக்கிறியா?” என அவளின் கோவத்தை திசை திருப்பி விட பார்த்தாள் ஸ்ரீஜா.

“இப்ப என்ன செய்யணும் நான்? வீட்ல உள்ளவங்ககிட்டலாம் போய் எப்படி அப்படி சொன்னீங்கன்னு சண்டை போடணுமா? உங்க எதிர்பார்ப்பு அதுதானே?  உங்களை மாதிரி ஆளுங்க என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவேன்னு எத வச்சு நினைச்சீங்க? நீங்க சொல்றது உண்மையாவே இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை” என கோவமாக சொன்னாள் அஞ்சலி.

“அப்ப அதிகப்படிங்கிறது உண்மைதான்,அந்த ஃபோட்டோஸ் கூட மார்ஃபிங் செஞ்சதுதானா இல்லை அது நீயேதானா? சேச்ச இப்ப நினைச்சு பார்த்தாலும்…” என சொல்லி முகம் சுளித்தாள்  ஸ்ரீஜா.

 அஞ்சலியின் காதோரம் ஜிவ் என்றானது. அவளின் நினைவுகளிலும் அந்த புகைப்படங்கள் உலா வர, அவளுக்குள் பெரிய மனப் போராட்டம்.

அஞ்சலியை பார்த்து மனதுக்குள் குதூகலித்தஸ்ரீஜா, “நீதானா அது? உனக்கெல்லாம் என்கிட்ட பேச என்ன தகுதி இருக்கு? ச்சீ நீ தொட்ட என் ஸ்கூட்டியை எத ஊத்தி கழுவுறுதுன்னு தெரியலையே” என்றாள்.

வேகமாக ஸ்கூட்டரை பிடித்து தள்ளி விட்ட அஞ்சலி, அதை விட வேகமாக அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டாள்.

“எவ்வளவு திமிர்டி உனக்கு?” என கோவப்பட்ட ஸ்ரீஜா, உள்ளே சென்று மாமியாரின் கை பிடித்து வெளியில் அழைத்து வந்தாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோஹித்தும் அவர்களோடு வந்து விட்டான்.

“என் ஸ்கூட்டர் ஏன் எடுத்திட்டு போனேன்னு கேட்டதுக்கு நல்லா சண்டை போட்டுட்டு வண்டியை வேற கீழ புடிச்சு தள்ளிட்டு போயிட்டா உங்க செல்ல மருமக. நான் மட்டும் தள்ளி நிக்கலைனா என் கால்ல விழுந்திருக்கும், அவளை மட்டும் ஏதும் கேட்றாதீங்க, ஏன்னா அவ வண்டி வண்டியா சீரோட வந்தவ, உங்க மகளோட நாத்தனார் வேற…” கண்களில் தண்ணீர் வைத்துக்கொண்டு சொன்னாள் ஸ்ரீஜா.

“அவ அப்படிலாம் செய்றவ இல்லை, முதல்ல அவளை நீ என்ன பேசினன்னு சொல்லு?” கடுப்பாக கேட்டார் அலமேலு.

“நான் என்ன பேசினேன்? அவதான் மரியாதை இல்லாம பேசினா”

“அப்படி என்ன பேசினா? நீயும் வாயை மூடிக்கிட்டு வாங்கிகிட்ட, சொல்லு தெரிஞ்சுகிறேன்”

“அத அவகிட்டேயே கேளுங்க” என சீறியவள்,  “இவங்கள்லாம் என்னை நல்லா பார்த்துப்பாங்கன்னு நம்பி விட்டுடு போன உன் அப்பாவை சொல்லணும் டா”  என மகனிடம் சொல்லி, அவன் கையிலிருந்த சாப்பாட்டு கிண்ணத்தை மாமியாரின் கையில் திணித்து விட்டு மாடிக்கு செல்ல நடந்தாள்.

“ஏய்! புள்ள சாப்பிட்டுட்டு இருக்கான் டி, உன் ஆங்காரத்தை அவன்கிட்ட காட்டுவியா? அவனை விடு இங்க” என அதட்டினார் அலமேலு.

“போதும் போதும் பேர புள்ள மேல இருக்க பாசம் வேஷமெல்லாம் போதும், இவனை பெத்தவ மேல இல்லாத அக்கறை இவனுக்கும் வேணாம்” என சொல்லி மாடிக்கே சென்று விட்டாள்.

பெரிய மருமகளை மனதிற்குள் தாளித்துக் கொண்டே உள்ளே சென்றவர் அஞ்சலியின் அறைக் கதவை தட்டினார்.