மறுநாள் காலை இளவஞ்சி தனது அத்தை மகேஸ்வரியுடன் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் வந்த மங்கை, “சாரிடா நேத்தே வந்து பார்க்கனும்னு நினைச்சேன். ஆனா வர முடியலை. கல்யாணம்லாம் எப்படி நடந்துச்சு?” எனக் கேட்டாள்.
தங்கைக்கான அன்பும் மகிழ்வும் கூடவே உடன் இருக்க முடியாமல் போன குற்றவுணர்வும் என கலவையான உணர்வுகளுடன் தங்கையை அணைத்திருந்தாள் மங்கை.
மங்கைக்கு காபி கொடுத்தவாறு அருகில் அமர்ந்த இளவஞ்சி, “உன் நிலைமை புரியுதுக்கா. நீ கில்டியா ஃபீல் செய்யாத” என்றவளாய் நேற்றைய நிகழ்வுகளை மகிழ்வுடன் உரைத்தாள்.
“உனக்கு கல்யாணமாகாம எனக்கு முன்னாடி செய்ற மாதிரி ஆகிடுச்சேன்ற ஒரே ஒரு கவலை தான்க்கா எனக்கு” என்றாள்.
அந்நேரம் மாடியிலிருந்து கைத்தடியுடன் மெதுவாக சக்தீஸ்வரன் இறங்கி வருவதை பார்த்த இளவஞ்சி, அவசரமாக அவனருகே சென்று தோளோடு கையிட்டு பொறுமையாக இறங்கி வர உதவினாள்.
“அடிக்கடி மாடி ஏறி இறங்கினா கால் வலிக்குமே. எதுக்கு மாடில இருக்கீங்கண்ணா. கீழேயே இருக்கலாமே?” எனக் கேட்டாள் மங்கை.
“அது அந்த ரூம் எனக்குனு ரொம்ப ஆசை ஆசையா கட்டின ரூம் மங்கை” என்று சிரித்தான்.
கணவனை ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு காபி எடுத்து வந்து கொடுக்க, “நீ குடிச்சிட்டியா?” எனக் கேட்டான்.
இல்லை என்றதும், “நீயும் எடுத்துட்டு வா” என்று அவளைக் கட்டாயப்படுத்தி எடுத்த வரச்செய்து அவளுடன் இணைந்து அமர்ந்து சில மணி நேரங்கள் மங்கையிடம் இருவருமாக பேசியவாறு காபியை அருந்தி முடித்திருந்தனர்.
“சரிண்ணா எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு கிளம்புறேன்” என்று எழுந்து நின்ற மங்கையிடம், “இருமா. சாப்பிட்டு போ! டிபன் ரெடி” என்றவாறு சமையலறையில் இருந்து வந்தார் மகேஸ்வரி.
“இல்ல ஆன்டி டைமாகிடுச்சு” என்ற மங்கை தனது கைப்பையினுள் கை விட்டவளாய் இவர்களின் அருகே வந்தவள், “இதே மாதிரி ஹேப்பியா இருக்கனும் நீங்க இரண்டு பேரும். விஷ் யூ ஹேப்பி மேரீட் லைஃப்” என்றவளாய் பரிசுப் பொருளை வழங்கினாள்.
ஆசை ஆசையாய் அதை பிரித்துப் பார்த்தாள் இளவஞ்சி. இருவருக்குமாக ஜோடி கைக்கடிகாரங்கள் இருந்தன.
அதனை பிரித்து உடனே சக்தியின் கரத்தினில் கட்டியவள், தனது கரத்தினிலும் கட்டியவளாய் மங்கையிடம் காண்பித்தாள்.
“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா” என்று சந்தோஷமாக உரைத்தவள்,
“அம்மாவும் தம்பியும் எதுவும் சொன்னாங்களாக்கா! அம்மா வருத்தப்படுறாங்களா?” எனக் கேட்டாள்.
“சந்தோஷமா இருக்கும் போது அவங்களை பத்தி எதுக்கு நினைக்கிற! இனி இவங்க தான் உன் குடும்பம். இவங்களை நினைச்சிட்டு ஹேப்பியா இரு” என்று மங்கை கூற,
“அது சுயநலம்க்கா. அப்படி என்னால இருக்க முடியாது” என்று மங்கையிடம் வஞ்சி கூறியதும்,
“உங்க அம்மாவுக்கும் தம்பிக்கும் எப்ப எந்த உதவினாலும் தயங்காம இந்த வீட்டுக்கு வந்து கேட்கலாம்னு அவங்ககிட்ட சொல்லுங்க மங்கை” என்றான் சக்தீஸ்வரன்.
அதே சமயம், “ஆமாம்மா நாங்க அவங்களுக்கு சம்பந்தி தானே! அவங்க மனசு எப்ப மாறினாலும் இங்கே வரலாம். அவங்களுக்காக நாங்க காத்திருக்கோம்னு சொல்லும்மா” என்றவாறு வந்தமர்ந்தார் சக்தீஸ்வரனின் தந்தை நல்லசிவம்.
“சரிங்க அங்கிள். கண்டிப்பாக சொல்றேன். ஆபிஸ்க்கு டைம் ஆச்சு கிளம்புறேன்” என்று விடைப்பெற்றாள் மங்கை.
அன்று இளவஞ்சியை தங்களது ஆடையக அலுவலகத்திற்கு (garments) அழைத்துச் சென்றான் சக்தீஸ்வரன். அவனுக்கான வேலைகள் நிறைய நிலுவையில் இருந்தன. முந்தைய ஒரு வாரமாகக் கணக்கு வழக்குகளை மட்டும் மடிகணிணியில் மேற்பார்வை பார்த்திருந்தவன், இப்போது கடையினில் பார்க்க வேண்டிய வேலைகளில் மும்முரமாகிப் போனான்.
கால் சரியாகிய பிறகு தேனிலவு போகலாம் என முடிவு செய்து தற்போது இளவஞ்சி எடுத்திருந்த விடுப்பை ரத்து செய்து விட்டு அவளைக் கல்லூரிக்குச் செல்ல வைத்திருந்தான் சக்தீஸ்வரன்.
அவர்களின் நாட்கள் இயல்பாக அவரவரின் அலுவல் வேலையில் ஓய்வில்லாது சென்றது.
அடுத்த இரு வாரங்களில் சக்தீஸ்வரனின் கால் கட்டு முற்றிலுமாக நீக்கப்பட ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு வந்திருந்தான் சக்தீஸ்வரன். வாரயிறுதி நாட்களில் தங்கையின் வீட்டிற்கும் ஜானகியின் வீட்டிற்கும் மறுவீட்டு விருந்திற்காக சென்று விட்டு வந்தார்கள்.
இந்த இரு வாரங்களும் அவளுக்கு கனவுகள் எதுவும் வரவேயில்லை. பல நாள் தேடலுக்குப்பின் கிடைத்த இளைப்பாறுதலாய் இந்த இரவுகள் யாவும் அத்தனை நிம்மதியாக உறங்கியிருந்தாள் இளவஞ்சி.
தங்களை இணைப்பதற்காக மட்டுமே அந்த கனவுகள் வந்ததாக முடிவு செய்து கொண்டவளாய் வருங்காலத்தின் கனவுகளில் மிதந்திருந்தாள்.
*****
அன்றைய இரவு அவர்களின் அறையில் மறுநாள் கல்லூரியில் எடுக்க வேண்டிய பாடத்தினைப் படித்துக் குறிப்பு எடுத்தவளாய் மேஜையில் அவள் அமர்ந்திருக்க, கட்டிலில் தனது மடிகணினியில் அலுவலக வேலையை பார்த்திருந்தவன் அதனை மூடி வைத்தவனாய் மனைவியைப் பார்த்தான்.
“தங்கப்பொண்ணு வேலை முடிஞ்சிதா?” எனக் கேட்டவாறு மடிகணிணியைப் பையினுள் வைத்து எடுத்து வைத்தான்.
புத்தகத்தின் மீதே கண்கள் பதித்தவளாய், “இல்ல சக்தி! இன்னும் நேரமாகும். நீங்க தூங்குங்க” என்றாள் இளவஞ்சி.
ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டவனாய் படுத்தவன் உருண்டு பிரண்டு படுத்தும் உறக்கம் வராமல் தவித்தவனாய், “இன்னும் முடியலையா?” எனக் கேட்டான்.
அப்பொழுது தான் அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் கண்களில் தெரிந்த சோர்வைக் கண்டு புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவனருகில் வந்து அமர்ந்தாள்.
“என்னாச்சு? தூங்க வேண்டியது தானே” அவனது கன்னத்தை வருடியவாறு அவள் கேட்க, “நீ இல்லாம தூக்கம் வர மாட்டேங்குது தங்கப்பொண்ணு” என்றவனாய் அவள் தோளில் சாய்ந்தான்.
அன்று முதல் நாள் இரவில் அவள் மார்பில் உறங்கியவன் அதனை அன்றாட பழக்கமாக்கி இருந்தான். அவள் நெஞ்சாங்கூட்டில் மார்பின் துடிப்பை கேட்டவாறு உறங்குபவன் சிறிது நேரத்திலேயே அவளைப் பிரிந்து வேறு திசையில் படுத்துக் கொள்வான். ஆனால் அந்த உறக்கத்தின் துவக்கத்தினை அவளுள் இருந்து பழக்கப்பட்டவனுக்கு இன்று சோர்விருந்தும் உறக்கம் கண்களை எட்டாது சடுகுடு ஆடியது.
கணவனின் பேச்சில் சிரித்தவளாய், அவனருகில் சென்று படுத்துக் கைகளை விரிக்க, சந்தோஷமாக அவளின் மார்பினில் தலையைச் சாய்த்து அவளை அணைத்துக் கொண்ட மறுநிமிடம் உறங்கியும் போனான்.
பலவிதமான சிந்தனையில் உழன்றவாறு படுத்திருந்தவள் அவன் உறக்கத்தில் புரண்டதும் திரும்பிப் படுத்தவளாய் உறங்கிப் போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் தெளிவாய் தெரிந்தன காட்சிகள்.
மையிருட்டில் நின்று கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்.
இப்பொழுது அவனிருக்கும் அதே பருவ வயதினனாய் அதே உருவத்துடன் இருந்தான்.
இளவஞ்சி அவனருகில் செல்ல செல்ல அந்த இருள் விலகி மெல்ல மெல்ல அவனைச் சுற்றி வெளிச்சம் பரவுகிறது.
அவன் எதிரே நின்று பரவசமாய் அவன் விழிகளை நோக்கியவாறு அவள் நிற்க, அவனை மீண்டுமாய் நெருங்க வந்த இருளைத் தனது கைக்கொண்டு ஆக்ரோஷமாய் தள்ளி விட்டவள் அவனை இறுக அணைத்திருந்தாள்.
இவள் அணைத்த மறுநொடி சுற்றிலும் வெளிச்சம் பரவ, சூரியனின் ஒளி அணைத்து நின்ற இவர்கள் மீது பிரத்யேகமாக விழுந்து ஆசிர்வதித்திருக்க, “ஆத்மநல்லூருக்குச் செல்லுங்கள்” என்றொரு அசரீரி குரல் கேட்ட நொடி சட்டென எழுந்து அமர்ந்தாள் இளவஞ்சி.
அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சக்தீஸ்வரன். கனவிற்கான பொருள் விளங்கவில்லை ஆயினும் சக்திக்கு ஏதேனும் கெடுதல் நடக்குமோ என்று மனம் பதைபதைத்தது அவளுக்கு.
‘இப்ப தானே கால் சரியாகி நல்லா இருக்காரு! திரும்ப எதுவும் ஆகுமோ? ஏன் இந்தக் கனவு வந்துச்சு? அப்ப எங்களை இணைக்கிறதுக்கு மட்டுமே இந்தக் கனவுகள்லாம் வரலையா? இதுக்கு வேற ஏதோ காரணம் இருக்குனு தானே அர்த்தம். கடைசியா காதுல ஏதோ ஊர் பேரு கேட்டுச்சே’ என மண்டையை தட்டியவள், ‘ஹான் ஆத்மநல்லூர். இந்த மாதிரி ஊரு இருக்கா என்ன? எங்களை ஏன் அங்கே போகச் சொல்றாங்க’ மண்டையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தவள் தண்ணீரைப் பருகிவிட்டு சக்தியின் தலையைக் கோதியவளாய் அவனருகில் அமர்ந்தாள்.
அவளின் தொடுகையில் உறக்கம் கலைந்தவனாய் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவாறு மீண்டுமாய் உறங்கிப் போனான். அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் அவனது உடல் கதகதப்பில் மற்றதை மறந்து அந்நொடியை ரசித்தவளாய் உறங்கிப் போனாள்.
****
அவனின் கால் குணமானதும் குடும்பமாக திருவேற்காடு சிவன் கோவிலுக்கு செல்லலாம் என்று முன்பே பேசி வைத்திருந்ததை இன்று செய்யலாம் என்று அனைவரிடமும் பேசி அன்று மாலை விரைவாக கல்லூரியில் இருந்து வந்தவள் சக்தீஸ்வரனின் தாய் தந்தை, தங்கையின் குடும்பத்தினருடம் திருவேற்காடு சிவன் கோவிலுக்கு சென்றாள் இளவஞ்சி.
வாசலைத் தாண்டி கால் வைத்ததுமே ஓம் நமசிவாய என்ற தன்னவனின் கணீர் குரலில் உடல் சிலிர்க்க அவனைத் திரும்பி பார்த்தாள் இளவஞ்சி.
மண்ணாதி பூதமொடு
விண்ணாதி அண்டம் நீ,
மறைநான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ,
புனலும் நீ, அனலும் நீ,
மண்டலமிரண்டேழு நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ,
பிறவும் நீ, யொருவ நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ,
பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ,
இருளும் நீ, ஒளியும் நீ,
போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள்
ஒன்பதும் நீ,
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளை
ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்..?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்த இப்பாடலை ஊனுருக உயிருருகப் பாடியிருந்த கணவனை நெஞ்சுருகப் பார்த்து நின்றாள் இளவஞ்சி.
அவனுடன் இணைந்து நின்று ஈசனைப் பூஜித்து வணங்கியவளுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
இது தானே அவள் கண்ட கனவு! திருவெம்பாவை வாசித்து இறைவனிடம் அவள் ஆசையாகக் கேட்டிருந்த வரம் இதுவல்லவா!
அதன் பிறகு எம்பெருமானை அவள் மறந்தே போயிருந்த பொழுதிலும் தன்னை வணங்கியதற்கான பலனை எத்தனை அழகாய் தனக்களித்திருக்கிறார் என்றெண்ணி நெஞ்சுருகிப் போனவளாய் ஈசனுக்கு நன்றி உரைத்திருந்தாள் இளவஞ்சி.
மூலஸ்தானத்தில் எம்பெருமான் முன்பு குடும்ப சகிதமாய் நின்றிருந்த இருவரும் இறைவனைக் கண் குளிர பார்த்து விட்டு கண்களை மூடிப் பிரார்த்தித்தனர்.
‘நான் கேட்ட வாழ்க்கையையே எனக்கு வரமாக அளித்த ஈஸ்வரா, என் சக்திக்கு எந்த கெடுதலும் நடக்காம நீங்க தான் பாதுகாக்கனும். நாங்க இரண்டு பேரும் பூரண ஆயுளோட தம்பதிகளாக வாழனும்னு எங்களை ஆசிர்வதிக்கனும் எம்பெருமானே’ என்று மனதோடு வேண்டிக் கொண்டவளாய் விழுந்து வணங்கினாள் இளவஞ்சி.
அனைவரும் இறைவனை வணங்கிவிட்டு வெளியே வர, அந்த கோவிலை விட்டு சற்றுத் தள்ளியிருந்த மரத்தின் கீழே இரு பள்ளி மாணவர்கள் மிதிவண்டியில் இருந்து இறங்கி சட்டையைப் பிடித்த வண்ணம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த சக்தி, “வஞ்சி இதோ வரேன் இரு” என்றவாறு அவர்களை நோக்கிச் சென்றான்.
அவள் புரியாது விழிக்க, “அவன் இப்படி தான்மா! அவன் கண்ணு முன்னாடி எங்கே பிரச்சனை நடந்தாலும் எனக்கென்னனு ஒதுங்காம தடுக்குறேன்னு போய் நிப்பான். நான் சொல்லி சொல்லி பார்த்துட்டேன். இனி நீ தான் திருத்தனுமா” என்றார் மகேஸ்வரி.
சக்தி அந்த இரு மாணவர்களின் சட்டையையும் பிடித்து, தள்ளி நிறுத்தி அவர்கள் முன்னேறாமல் தடுத்து பேசியதைப் பார்த்தவாறு நின்ற வஞ்சி, ஒரு மாணவன் தனது இடையினில் வைத்திருந்த சிறிய கத்தியை வெளியே எடுக்கவும், “சக்தி” என்று கத்தியவாறு அவனை நோக்கிச் சென்றாள்.