பாவை சேர்ந்தாள் மன்னன் மார்பில் -6

அத்தியாயம் -6

திருமணத்துக்கு அடுத்த நாள்  யுகியும் அஞ்சலியும்  முதல் நாள் போல பேசிக் கொள்ளாமல் இல்லாமல் சற்றே இயல்பாக இருப்பது போலவே பைரவிக்கு பட்டது. 

யுகி மனைவியிடம் ஏதவாது கேட்க அவளும் பதில் சொல்ல எனதான் இருந்தாள். அப்பாடா தம்பி சமாளித்துக் கொள்வான் என நிம்மதி அடைந்தாள் பைரவி. 

மதிய விருந்துக்கு பின் கோவை செல்கிறார்கள். வாரக் கடைசியில் பொள்ளாச்சியில் அசைவ விருந்து நடக்க இருக்கிறது. 

மண மக்கள் புறப்படும் போது அஞ்சலி அழவெல்லாம் இல்லை. அவளது அம்மாதான் கலங்கிப் போயிருந்தார். தங்களிடமிருந்து விலகி நிற்கிறாளே என கார்த்திக்கிற்கும் வருத்தம். 

தங்கையை பார்த்துக் கொள்ளுங்கள் என யுகியின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சலாக கேட்டான் கார்த்திக். 

“அப்படியே நான் பாவப்பட்ட பையன் சாந்தமா இருன்னு அஞ்சலிகிட்டேயும் சொல்லுங்க கார்த்தி” என கிண்டலாக சொன்னான் யுகி. இருவரையும் முறைத்து பார்த்த அஞ்சலி தள்ளிப் போய் நின்று கொண்டாள். 

“ஹார்ஷா ஏதும் பேசிடாதீங்க யுகி, செல்லமா வளர்ந்த பொண்ணு அவ” என்றான் கார்த்திக். 

“உங்க செல்லம்தானே… ஹ்ம்ம்… அவ்ளோ செல்லமா பார்த்துக்க முடியாட்டாலும் ஏதோ பார்த்துக்கிறேன் கார்த்தி”  என அதற்கும் கிண்டலாகத்தான் பதில் சொன்னான் யுகி. 

அஞ்சலியின் உடைமைகளை காரில் கொண்டு போய் வைத்த கார்த்திக், தங்கையை பார்த்தான். அவள் முகத்தை திருப்பிக் கொள்ளவும் வருத்தத்தோடு சென்று விட்டான். 

“நீ பேசாம கோவமா இருக்கிறது உன் இஷ்டம், போய்ட்டு வர்றேன்னு சொல்லிக்க அஞ்சலி” என மனைவியிடம் ரகசியமாக சொன்னான் யுகி. மறுத்து சண்டை போடுவாள் எனதான் நினைத்திருந்தான். ஆனால் நல்ல பிள்ளையாக அனைவருக்கும் பொதுவாக சொல்லிக் கொண்டு வந்தே கார் ஏறினாள். 

ஒன்றரை வருடங்களாக இங்கு அவள் பட்ட மனத் துயரம் அவளை ‘ஏதோ ஒரு வகையிலிருந்து இங்கிருந்து போகிறேனே, அதுவே போதும்’ என்ற மனநிலையில் தற்காலிகமாக வைத்திருந்தது. 

தம்பியின் மனைவியிடம் பேச்சு கொடுத்தாள் பைரவி. அஞ்சலியும் அவளுடன் இயல்பாகவே பழகினாள். யுகிக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது.

மதியம் ஒழுங்காக சாப்பிட்டிருக்காத அஞ்சலிக்கு சீக்கிரமாகவே பசி எடுத்து விட்டது. வழியிலேயே தேநீர் நேரம் வந்து விட, சேகரும் காரை நிறுத்த சொன்னான்.  

வீட்டில் சிற்றுண்டி தயாராக உள்ளது, இங்கேயே வந்து விடுங்கள் என அலமேலு கைப்பேசியில் சொன்னதால் நேராக வீட்டிற்கு செல்லலாம் என கூறி விட்டான் யுகி. 

 கணவன் ஊரில் இருப்பதால் ஸ்ரீஜாவால் அதிகம் வீட்டு வேலைகளில் இருந்து நழுவிச் செல்ல முடியவில்லை. கேசரி, பஜ்ஜி என அவளேதான் செய்தாள். அவளுக்கு சமையல் வராது என்றில்லை,  என் தங்கை இருக்க வேண்டிய இடத்தில் எவளோ இருக்கிறாள் அவளுக்கு நான் செய்ய வேண்டுமா என எண்ணிக் கொண்டே கவனமே இல்லாமல் ஏனோ தானோ என செய்திருந்தாள்.

 திருமணத்திற்கு வராதவர்கள் சிலர் விஷேஷத்தை விசாரிக்க என வந்து கொண்டிருக்க, அவர்களை கவனிக்க, கணவனை பார்க்க என இருந்த அலமேலு மருமகளின் கை வண்ணத்தை சுவைத்து பார்த்திருக்கவில்லை. 

மண மக்கள் வந்ததும், மனைவியை அழைத்து அவர்களை கவனிக்க சொன்னான் வாசு. தேநீரும் போட்டு உபசரித்தாள் ஸ்ரீஜா. 

நல்ல பசியிலிருந்த அஞ்சலி கேசரியை ஒரு வாய் சாப்பிட்டு விட்டு யுகியை பார்த்தாள். அவளை குழப்பமாக பார்த்துக் கொண்டே அவனும் சாப்பிட்டவன் அவளை பாவமாக பார்த்தான். பஜ்ஜியை கடித்தவள் உப்பு கரித்ததில்அதையும் வைத்து விட்டாள். 

பரவாயில்லை ரகமாக இருந்த தேநீரை மட்டும் பருகியவள் அறைக்கு சென்று விட்டாள். அப்போது ஐந்து மணிதான் ஆனது. இரவு உணவுக்கு குறைந்தது ஏழாவது ஆகும். 

மற்றவர்கள் எல்லாம் ஸ்ரீஜா செய்ததை சாப்பிட்டிருக்கவே இல்லை, ஆகவே அவர்களுக்கு இது பற்றி தெரியாது. அதற்குள் தானே சாப்பிட்டு பார்த்த ஸ்ரீஜா வேகமாக தான் செய்ததை எல்லாம் அப்புற படுத்தி விட்டாள். 

விருந்தினர் வரவு ஓய்ந்திருக்க பைரவி அவளது குடும்பத்தோடு வீட்டுக்கு சென்று விட்டாள். இன்னும் இங்கு இருந்த சில நெருங்கிய சொந்தங்களில் சிலரும் இரவு உணவுக்கு வருவதாக சொல்லி பைரவியோடு சென்று விட்டனர். யுகியின் பெற்றோரை தவிர மற்ற வீட்டினரும் மிஞ்சிய உறவுகளும் மாடிக்கு சென்று விட்டனர். 

அஞ்சலிக்கு அதற்கு மேல் பசி பொறுக்க முடியவில்லை. யுகி அறைக்குள் வந்ததுமே, “சாப்பாடு வேணும்” என்றாள். அவளை அழைத்துக் கொண்டு சமையலறை சென்றான்.

 திருமண வீட்டில் பலகாரங்கள் நிறைந்து கிடக்க, அதையெல்லாம் பார்த்தாலே உமட்டிக் கொண்டு வருவதாக சொன்னாள் அவள். 

வீட்டுப் பெண்களை சிரம படுத்த வேண்டாம் என இரவு சாப்பாட்டுக்கு வெளியில் சொல்லியிருக்கிறான் வாசு. அது வர நேரமாகும். தெரு முனையில் இருக்கும் கடைக்கு போய் பாஸ்தா வாங்கி வந்தவன், “இப்போதைக்கு இத சமைச்சு சாப்பிடு, நைட் உனக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடலாம்” என்றான். 

சலித்துக் கொண்டே வெங்காயம், தக்காளி என அஞ்சலி நறுக்க ஆரம்பிக்க, அவள் பக்கத்திலேயே நின்று கொண்டான் அவன். 

“வேடிக்கை பார்க்காம அந்த பாஸ்தாவை வேக வைக்கலாம்ல?” எனக் கேட்டாள். 

“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை அஞ்சலி” என்றாலும் தண்ணீர், உப்பு அளவெல்லாம் அவளிடம் கேட்டு வேக வைத்தான். 

பாஸ்தா தயாராகி விடவும் அறைக்கு செல்லவெல்லாம் அவளிடம் பொறுமை இல்லை. சமையல் மேடையிலேயே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள். 

“எங்க எனக்கு ஒரு வாய் கொடு” என அவன் கேட்கவும், “நீங்கள் சாப்பிட்டா திரும்ப நான் எப்டி சாப்பிடறது? தனியா எடுத்துக்கோங்களேன்” என்றாள். 

“என் எச்சில் படாமலேயே இருந்திட முடியுமா உன்னால?” என அடக்கப் பட்ட சிரிப்புடன் கேட்டான். 

“ஆறு மாசம் இப்படி எந்த பேச்சும் வராம இருந்தா உங்களுக்கு நல்லது” என்றாள். 

“அப்போ ஆறு மாசத்துக்கு அப்புறம் ஓகேவா?” என குறும்பாக கேட்டான். 

 அறைக்கு செல்ல நினைத்து கையிலிருந்த பாத்திரத்தோடு இறங்க முயன்று முடியாமல் சிரமப் பட்டாள் அவள். 

சட்டென அவளை தூக்கி தரையில் விட்டான் யுகி. அவனது நெருக்கத்தில் முகம் கன்ற நின்றிருந்தாள். வெட்கத்தால் அல்ல, கோவத்தால். 

“புருஷன் தொட்டு தூக்கினதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷனா?” எனக் கேட்டவன் இப்போது அவளை இரு கைகளாலும்  தூக்கிக் கொண்டான். சத்தம் போடா விட்டாலும் இறக்கி விட சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.

 புடவை விலகியிருந்த அவளது இடை, பிளவுஸ் மறைக்காத அவளது முதுகு என எல்லாம் அவனது ஸ்பரிசம் உணர்ந்தது. 

அறைக்கு போய்தான்  அவளை விட்டான். வலக் கையில் இருந்த பாத்திரத்தை இடக் கைக்கு மாற்றிக் கொண்டவள் சட்டென அவனது கன்னத்தில் அடித்து விட்டாள்.  என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து விட்டவளுக்கு இப்போது மூச்சு வாங்கியது. 

கன்னத்தை பிடித்துக்கொண்டு கோவமாக அவளை பார்த்திருந்தவன் அவளது கலங்கிய விழிகளை கண்டு  பயந்து விட்டான். 

இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என அவன் சமாதானமாக சொல்லிக் கொண்டிருக்க உணவை வைத்து விட்டு படுத்து விட்டாள். மீண்டும் அவளை தொடவே அவனுக்கு பயம், ஆனால் எப்படி அவளை இயல்பாக்குவது என தெரியவில்லை. 

தயக்கம் உதறி மெல்ல அவளது தோள் தொட்டவன் அவளது உடலின் நடுக்கத்தை உணர்ந்து அதிர்ந்து போனான். அவளை தன் பக்கமாக திருப்பியவன், “என்ன பண்ணுது அஞ்சலி?” என பதறினான். 

“தெரியலை, நீங்க நெருக்கமா வர்றது எனக்கு கம்ஃபர்டபிளா இல்லை” என்றாள். 

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளுக்கும் தன் உடல் ஏன் இப்படி நடுங்குகிறது என புரியவில்லை. 

தனுஷ் மூலமாக அவள் அடைந்த மன சித்ரவதையிலிருந்து வெளி வரவே விடாமல் தினம் அதே நினைவுடன் அவளது நாட்களை கடக்க விட்டிருந்தனர் அவளது வீட்டினர்.