சூரியன் 3

காவல் நிலையத்தில் காவலர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

“எப்படி முத்து இந்த சின்ன வயசுல இந்த போஸ்டிங் அவன் வாங்கினான்?” இன்ஸ்பெக்டர் சதீஸ் கேட்டார்.

கமிஷ்னருக்கு அவன் எப்போதும் ஸ்பெசல் தான்..

“சார், அவரை பத்தி தப்பா பேசாதீங்க. அவர் திறமையால் தான் இந்த பதவிக்கு வந்திருக்கார். அந்த கவர்னர் மகன் அருகே கூட நீங்க செல்ல பயந்தீங்க தான? ஆனால் அவர் கவர்னர் என்றெல்லாம் பாராது அழகாக டீல் செய்து அவன் தவறை அவன் வாயிலே கூற வைத்து அவனை கைது செய்தார். போலீஸ் பயிற்சியின் போது கூட அவர் யாரும் செய்ய முடியாத காரியம் செய்து ரெக்கார்ட்ஸ் பிரேக் செய்தவர். அவர் குடும்பத்தை கூட கணக்கில் கொள்ளாது எந்நேரமும் மக்களுக்காக பணி செய்கிறார். அவருக்கு இந்த பதவியெல்லாம் குறைவு தான்” என்றார் மூத்த கான்ஸ்டபிள்

இதோ பார்றா வந்திட்டான். அவனுக்கு சப்போர்ட்டா?

அவருக்கு பதவி கிடைத்து ஒரு வாரமாகிடுச்சு. நீங்க இன்னும் அவரை கண்டு பொறாமைப்படுறீங்க?

“யாருக்குடா பொறாமை?” ஒருவர் சீறிக் கொண்டு வந்தார்.

“அசிஸ்டென்ட் கமிஷ்னர் சஞ்சய் வர்றார்” கான்ஸ்டபில் ஓடி வந்து இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.

“மாலை போட்டு வரவேற்கணும்னு சொல்றீயா?” இன்ஸ்பெக்டர் சத்தமிட்டார்.

“தேவையில்லை இன்ஸ்பெக்டர் சதீஸ்” கம்பீரமான குரலில் அவர் அமைதியாகி விட்டார்.

ஆறடிக்கும் மேலான உயரம், எப்போதும் ஊசி முனையை காண்பது போல கூரான விழிகள், மேலுடதட்டின் மீதான மீசையை கீழாக வளைத்து போலீஸ்காரன் என காட்டும் தொனி, அவனின் படிக்கட்டு தேகம், நேர்மையான குணம். கம்பீரமான அளவான பேச்சு. அவன் பார்வையிலே எதிரே இருக்கும் குற்றவாளியை உண்மை கூற வைத்திருவான்..

அனைத்து காவலர்களும் சஞ்சய்கு சல்யூட் செய்ய, அவன் பின் சஞ்சய் உதவியாளன் வேந்தன் வந்தான்.

இவ்வளவு நேரம் வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஓடி வந்தார் சஞ்சயிடம்.

சாரி சார். நாங்க உங்களை பேசவில்லை.

வளைந்த உதட்டு சுளிப்புடன், நீங்கள் யாரை பற்றி பேசி இருந்தாலும் அது எனக்கு தேவையில்லாதது. உங்களுக்கு வந்த கம்பிளைண்டை எஃப் ஐ ஆர் போட மாட்டேன்னு இந்த பெரியவரிடம் அசிங்கமாக பேசி இருக்கீங்க? பெரியவர் ஒருவரை இன்ஸ்பெக்டர் முன் நிறுத்தினான்.

லவ் பண்றவனோட அவர் பொண்ணு போயிருக்கணும் சார்…

“நீங்க பார்த்தீங்களா சார்?” சினமுடன் கேட்டான்.

“சார்..” பேச வந்த கான்ஸ்டபிளை தடுத்து,” விசாரிக்கிறோம் சார்” என்று சாதாரணமாக கூறினார்.

ஓ! விசாரிக்கிறீங்களா? உங்க மனைவிக்கு கால் பண்ணுங்க சதீஸ்…என்றான் அமைதியாக..

சதீஸ் திகைத்து, “சார்…” அழைத்தார்.

உங்க மனைவியை காலையிலிருந்து காணோம்னு உங்க அப்பா கம்பிளைண்ட் கொடுத்திருக்கார். ஒரு வேளை உங்க மனைவியும்…

“சார்…” கத்திய சதீஸ் நிலையுணர்ந்து…

“சாரி சார்” என்று பெரியவரிடம் கம்பிளைண்ட் வாங்கி சஞ்சயை காண, அவன் புன்னகையுடன் “உங்க பொண்ணு கண்டிப்பாக நாளை காலை உங்க வீட்ல இருப்பாங்க” பெரியவரிடம் கூறி சதீஸை பார்த்தான்.

“கண்டிப்பாக நாளை காலைக்குள் அந்த பெண் அவங்க வீட்ல இருக்கணும்” என்று அதிகாரம் தெரிந்தது..

“ஓ.கே சார்”….

அவர்கள் வெளியேற, சஞ்சய் காவலர் துணை அலுவலகம் சென்றான்.

“ஆன்ட்டி, பிரியா எங்க?” பிரியசகியை தேடினாள் இந்துஜா.

“அவளுக்கு உடம்புக்கு முடியல. அறையில் ஓய்வெடுத்துட்டு இருக்கா…” சரண் கூறிக் கொண்டே இந்துஜா அருகே அமர்ந்தான்.

“என்னாச்சு? நல்லா தான இருந்தா? நான் பார்த்துட்டு வரவா?” எழுந்தாள்.

அவளை தன்னருகே அமர்த்தி அவள் தோளில் சரண் சாதாரணமாக கரம் பதிக்க, இந்துஜாவின் முகம் மாறியது.

“சித்து….மம்மூமூமூ…” ராகம் இழுத்தான் ராக்கி.

சரணை முறைத்து கமலாவையும் தேனுவையும் பார்த்தாள்.

“பால் சாப்பிடுவானாம்மா?” தேனு கேட்க, ம்ம்! என்று ராக்கியுடன் அவள் நகர்ந்தாள்.

கமலா தன் மகன் அருகே அமர்ந்து, “அவசரப்படாதடா. கொஞ்சம் பொறுமையா தான் இரேன்” முகம் சுளித்தார்.

அவள பாருங்க. எப்படி சும்மா இருக்குறது. பச்சக்கிளி போல இருக்கா…இன்றே அவள் எனக்கு வேணும்னு இருக்கு.

உம் பொண்டாட்டியை இப்பொழுதைக்கு விட்டு வைக்க வேண்டியது தான?

என்ன? உக்கிரமாக தன் தாயை பார்த்தான் சரண்.

“சரி நான் எதுவும் கேட்கவில்லை” அவர் எழுந்து சென்று விட்டார்.

பாலை கப் ஒன்றில் நிரப்பி இந்துஜா பிடித்தவாறு ராக்கிக்கு பருக கொடுத்தாள்.

அவளையே கண்களால் பருகிக் கொண்டிருந்த சரண் அவளருகே வந்தான். இந்துஜா எழுந்து ராக்கியுடன் சமையலறைக்கு செல்ல, அவனுக்கு சினம் மூண்டது.

“அக்கா, அண்ணா ஒரு மாதிரி நடந்துக்கிறாங்க” தேனுவிடம் தயக்கமுடன் கண்கலங்க அவள் கூற, அவர் கேளாதது போல நின்றார்.

சரண் இந்துஜாவை பார்த்துக் கொண்டே கடந்து செல்வதை பார்த்த மறுநிமிடம் தேனு இந்துஜாவை பார்த்து, “பாதுகாப்புக்கு ஏம்மா இங்க வந்த? நீ நினைக்கிற மாதிரி இவங்க இல்லை. இங்கிருந்து போயிருமா இல்லை பிரியாம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க” என்றார்.

“என்னக்கா சொல்றீங்க?” இந்துஜா கேட்க,

காலடி சத்தம் கேட்டு “ஷ்ஷ்ஷ்.. ஏம்மா…பிள்ளைக்கு இரவுணவு என்ன தயார் செய்யணும்?” பேச்சை மாற்றி அவர் வெளியே கவனிப்பதை கண்டு, அவர் கேட்டதற்கு பதிலளித்தாள்.

கமலா இந்துஜா அருகே அமர்ந்து, அவளுக்கு ஆறுதலாக பேச அமைதியாக இருந்தாள். பதில் கூட பேசவில்லை.

அவர் இவளை உறுத்து கவனித்தார். அவர் பார்வை அவள் மேனியில் படுவது அசௌகரியமாக, எழுந்து “நாங்க அறைக்கு போறோம் ஆன்ட்டி” என்று வந்து விட்டாள்.

“மனம் படபடவென அடித்தது. இவங்க என்ன சொல்றாங்க? அப்ப பிரியா சந்தோசமாக இல்லையா? அவள் வேலைக்கு போவது போலும் தெரியவில்லை. உடம்பு வேறு சரியில்லைன்னு சொன்னாங்களே!” பதட்டமாக இருந்தது இந்துஜாவிற்கு. ராக்கி தன் முகத்தை கவனிப்பதை பார்த்து அவனுடன் விளையாடினாள்.

“யவா…” நெடுங்குழலி தன் மகனை அழைத்தார்.

“சொல்லுங்கம்மா…” தனது ஷூவை கழற்றியவாறு கேட்டான் இனியவன்.

அந்த குட்டிப் பையன் அந்த பொண்ணோட மகனாக கண்டிப்பாக இருக்க மாட்டான்.

ம்ம்! அதான் சித்துன்னு சொன்னானே! என்றான் இனியவன்.

“அம்மா அண்ணாவிடம் வாங்கி கட்டிக்கப் போறாங்க” இருவரையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் விஷ்ணு.

ஓரக்கண்ணால் விஷ்ணுவை பார்த்தான் இனியவன்.

விஷ்ணு எழ, “எப்படி அவங்க வீட்டுக்குள்ள போன?” பொறுமையுடனே கேட்டான்.

“அண்ணா…ரஞ்சித் தான் விகான்னு என்னை இழுத்து குதிக்க வச்சுட்டான்” தலை கவிழ்ந்தான்.

“படத்துல வர்ற ஹூரோன்னு நினைப்பா உனக்கு? குதிச்சு கை கால் உடைஞ்சா எங்களுக்கா வேதனை?” கடுமையுடன் கேட்டான்.

இனி குதிக்க மாட்டேன் அண்ணா..

“அவனுக கிட்டயும் சொல்லி வை” தன் தாயை பார்த்தான்.

“யவா, அந்த பொண்ணு அழகாவும் பொறுப்பாவும் தெரியுது” தயக்கமுடன் இனியவனை பார்த்தார் நெடுங்குழலி.

“அம்மா, திருமணம் பற்றி பேசாதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல்ல. எனக்கு டீ வேணும்” அவனறைக்கு சென்று அலுப்பில் படுத்துக் கொண்டான்.

“ஹப்பாடி, எப்படியோ விட்டுட்டான்” விஷ்ணு மூச்செடுத்து தன் தாய் பின்னே சென்றான்.

அம்மா, அண்ணா இந்துவை பார்த்த பார்வையில் அவரை கவர்ந்துட்டான்னு நினைக்கிறேன்.

“அந்த பொண்ண பத்தி தெரியுமாடா?” ஆசையுடன் தாய் கேட்க, தெரியும்மா. பெயர் இந்துஜா. எங்களை போல் ஹிஸ்ட்ரி தான் படித்திருக்காள். குட்டிப்பையன் பெயர் ராக்கியாம். இப்பொழுதைக்கு இவ்வளவு தான் தெரியும்.

“அழகா இருக்காடா. நம்ம யவாவுக்கு பொறுத்தமா இருப்பா. ஆனால் இந்த பொண்ணை எங்கோ பார்த்தது போல இருக்குடா” என்றார் சிந்தனையுடன்.

கோவில்ல எங்காவது பார்த்திருப்ப?

தெரியலடா. ஏதோ தோணுது என்றார்.

தேனீரை விஷ்ணுவிற்கு கொடுத்து மற்றொன்றுடன் இனியவன் அறைக்கு சென்றார்.

இனியவன் இரவு உணவுக்காக அமர்ந்தான்.

“விச்சு, சாப்பிட வா” அழைத்தார் குழலி.

“வந்துட்டேன்மா” அவன் வந்து அமரவும் இருவருக்கும் பரிமாறினார்.

“அம்மா, எங்களுடனே சாப்பிடுங்க” அழைத்தான் இனியவன்.

யவா…சாப்பிடுங்க. எனக்கு பழகிடுச்சு..

உணவுண்டு கொண்டே அவ்வப்போது தன் அன்னையை பார்த்துக் கொண்டே இருந்தான் இனியவன்.

என்ன யவா?

அம்மா…அந்த பொண்ணு..அந்த எதிர்வீட்டுக்கு புதுசா வந்துருக்குல்ல அந்த பொண்ணை எங்கோ பார்த்தது போல இருக்கு என்றான்.

விஷ்ணுவின் கரங்கள் அந்தரத்தில் மிதக்க தன் அண்ணனை பார்த்து, “அம்மாவும் இப்படி தான் சொன்னாங்க..” என்றான்.

உங்களுக்குமா தோணுது?

ஆமா யவா, தோணுது. அதை விடு. அந்த பொண்ணுகிட்ட கேட்டு பார்க்கவா? அவர் ஆர்வமாக, இனியவன் அவரை முறைத்தான்.

“கண்டவாறு சிந்திக்காமல் சாப்பிட்டு உறங்குங்க” எழுந்து சென்று விட்டான்.

எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எப்படியாவது நம்ம யவனுக்கு அந்த பொண்ணை திருமணம் செய்து வைக்கணும்.

அம்மா..ராக்கி???? கேள்வியுடன் தன் தாயை பார்த்தான் விஷ்ணு.

குட்டிப்பையன் அவன் அம்மா வரவும் போகப் போறான்..

எனக்கு அப்படி தோன்றவில்லை. இந்துவுக்கு ஏதோ பிரச்சனை. இவங்க அவளுக்கு யாருன்னு கூட தெரியல. ஆனால் கண்டிப்பாக சொல்கிறேன். இப்பொழுது ராக்கியின் முழு பொறுப்பும் இந்து தான். சித்தியாக என்று தோன்றவில்லை என்று அன்னையை கவனித்தான்.

அம்மான்னு சொல்ல வர்றீயா? அவ சின்னப் பொண்ணா தெரியுறாடா..

“இருக்கலாம். ஆனால் இது தான் எனக்கு தோணுது” எழுந்து அவனும் நகர்ந்தான்.

இரவு தன்னறைக்கு சென்ற இனியவன் புத்தகம் ஒன்றை கையிலெடுத்து பால்கனி சென்று தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்தான்.

சிலமணி நேரம் கண்களை இறுக மூடி அவன் விழிகளை திறந்து புத்தகத்தில் கவனத்தை செலுத்தி இருந்தான்.

எதிர்பால்கனி விளக்கு ஒளிர மூச்சிறைக்க இந்துஜா ஓரமாக அமர்ந்து முகத்தை தன் கால்களால் மறைத்து அழுது கொண்டிருந்தாள். அவள் கைகளில் நடுக்கம் தெரிந்தது.

“என்னாச்சு இவளுக்கு?” இனியவன் மனதில் அவள் தோற்றம் பயத்தை உண்டு பண்ணியது. ஆனால் இவன் எவ்வாறு அவளிடம் பேசுவான்? இவனுக்கும் சரணுக்கும் தான் ஆகாதே!

வீட்டிலிருந்து வெளியே வந்த சரண் அவளது பால்கனியை கவனிக்க, இவன் தான் அவளை ஏதோ செய்து விட்டான். அதான் அழுகிறாள் என்று இனியவனுக்கு புரிந்தது.

அழுகையை நிறுத்தி மெதுவாக நிமிர்ந்த இந்துஜாவின் விழிகளில் தவறாமல் பட்டான் இனியவன்.

விழிகளை துடைத்து பால்கனி கதவை திறக்க, ராக்கியின் அழும் சத்தம் கேட்டு பதறி உள்ளே சென்று ராக்கியை தூக்கி நடந்தாள். கதவடைக்காமல் இருக்க அவளின் செய்கை, முகப்பாவனை அனைத்தும் தப்பாமல் இனியவன் கண்ணில் பட்டது.

இந்துஜா சரணால் பயந்து இருக்கிறாள் என்று நன்றாக தெரிந்தது. அவன் அவளை கவனித்து விட்டு அவள் படுக்கவும் அவனும் அறைக்குள் புகுந்து கொண்டான்.

நித்திரைக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் இந்துஜா.

இரவு உணவை முடித்த இந்துஜா தன் தோழி பிரியசகியை காண யாரும் அறியாமல் அவளறைக்கு சென்றாள். முகம் கூட காட்டாது போர்வையை இழுத்து போர்த்தியவாறு இருந்தாள் பிரியசகி.

இந்துஜா அவளருகே செல்ல, கதவு திறக்கும் ஓசையில் அலங்கார கண்ணாடியின் பின் மறைந்து கொண்டாள்.

சரண் உள்ளே வந்தான். படுக்கையில் இருந்த பிரியசகியின் போர்வையை இழுத்தான்.

பிரியசகியின் உடலில் அங்கங்கு கன்னிப்போய் இருந்தது. முகம் மட்டும் தெளிவுடன் ஒரு காயமும் இல்லாமல் இருந்தது. இதை கண்ட இந்துஜா மனம் துடித்து போனது. தானாக விழிகளில் நீர் கசிந்தது. வாயை அடைத்தும் லேசான கேவல் இந்துஜாவிடமிருந்து வெளிப்பட்டு விட்டது.

மதுபாட்டிலை எடுத்த சரண் சத்தம் வந்த பக்கம் செல்ல, அருகே இருந்த கொல் ஃப்  ஸ்டிக்கை கையில் எடுத்துக் கொண்டாள் இந்துஜா.

“இந்து…..” சரண் அவள் கையை பிடித்து இழுக்க, அந்த ஸ்ட்டிக்கை ஓங்கினாள். அவன் அதை அவளிடமிருந்து பிடுங்கி அவளை கீழே தள்ளி அவளை அடிக்க ஓங்கினான்.

“என்னோட பிரியாவை என்னடா செஞ்ச?” அவனை தள்ளினாள். அவன் பின் நகர்ந்து காலை தரையில் அழுத்தி ஊன்றி நின்றான்.

அந்த ஸ்ட்டிக்கை அவள் எடுக்க முயல. அவளது முடியை பற்றி இழுத்தான். அவனது காலை ஓங்கி மிதித்து வேகமாக அறைக்குள் வந்திருப்பாள். அழுகை தாங்க முடியாமல் பால்கனி சென்று அழுதாள்.

பொழுது புலர்ந்து வெகு நேரமான பிறகு விழித்தாள் பிரியசகி. போர்த்தியிருந்த போர்வை கூட இல்லாது தன்னை அந்நிலையில் கண்டு நொந்து எழ, தரையில் காலை ஊன்ற முடியவில்லை.

தடுமாறியவாறு குளியலறை சென்று குளித்து தயாராகி நேரத்தை பார்க்க, அது பத்து என காட்டியது.

“தன் தோழியை சரண் ஏதும் செய்திருப்பானோ?” என்ற பயம் மனதை தொற்ற அவளறை பக்கம் சென்றாள்.

தேனு அறையின் வெளியிலிருந்து இந்துவை அழைப்பதை பார்த்து, “இன்னுமாக்கா அவள் எழவில்லை” கேட்டாள்.

“ஆம்” தலையசைத்து முகம் வெளுத்திருந்த பிரியசகியை பாவமாக பார்த்தார்.

“ஜா, கதவை திற. பிரியா வந்துருக்கேன்” ஒரு குரல் தான் கொடுத்தாள். கதவு திறக்கப்பட்டது.

“ஜா உனக்கு ஒன்றுமில்லையே!” என்ற பிரியசகி இந்துஜாவின் தோற்றத்தில், “என்னாச்சு ஜா?” மேலும் பதட்டமானாள்.

“அத்த…” குதித்து குதித்து வந்தான் ராக்கி.

“பீவரா இருக்கு பிரியா” தேனுவை பார்த்தாள் இந்துஜா.

“மருத்துவரை வரச் சொல்றேன்” தேனு நகர, “அக்கா பாலும் பிரட்டும் மட்டும் கொண்டு வாங்களேன்” பிரியசகி கூற, “இப்பவே வந்துடுறேன்” அவர் சென்றார்.

இந்துஜா பிரியசகியை இழுத்து படுக்கையில் அமர வைத்தாள்.

“என்னடி இங்க நடக்குது? உன்னால எப்படி இவ்வளவையும் தாங்க முடியுது?” சினமுடன் கேட்டாள் இந்துஜா.

“ஒன்றும் இல்லையே!” மழுப்பினாள் பிரியசகி.

“நான் நேற்றிரவு உன் நிலையை பார்த்தேன். என் ஈரக்கொலையெல்லாம் நடுங்கிடுச்சிடி..எப்படி இருந்த? உன் உடலெல்லாம் காயம்” அழுதே விட்டாள் இந்துஜா.

ஷ்ஷ்…ஜா அழாத..

அப்புறம் என்ன செய்றதாம்? எங்களுக்கு தான் இத்தனை பிரச்சனை என்று எண்ணி இருந்தேன். உன்னை பிடிச்சிருக்குன்னு தானடி திருமணம் செய்தான். அப்பொழுதிலிருந்தே இப்படி தானா?

பாட்டியிடம் படிக்க வக்கிறேன். உங்க பேத்தியை பிடிச்சிருக்குன்னு திருமணம் செய்தான். நானும் இவனை நம்பி வந்துட்டேன். படிக்கும் வரை உடலளவில் மிகவும் காயப்பட்டேன். எவ்வளவு அழுதிருப்பேன் தெரியுமா? தினமும் ரொம்ப வலிக்கும். அதுவும் அந்த வயதில்…

என்னை பார்க்க வந்த பாட்டிக்கும் அவன் செயல் தெரிந்து விட்டது. அவனிடம் சண்டை போட்டு அழைத்து செல்ல எண்ணினார். ஆனால் அவன் தானே என்னை மருத்துவம் படிக்க வைத்தான். அதற்கான பணத்தை எடுத்து வைத்து விட்டு என்னை அழைத்து போக சொன்னான் இவனும் இவன் தாயும்.

பாட்டியால் முடியாதே! என்னை அணைத்து அழுது ஊருக்கு போயிட்டார். என் வாழ்க்கையை எண்ணி பயத்தில் அவர் இருந்திருப்பார் போல…விரக்தியுடன் பிரியசகி இந்துஜாவை பார்த்தாள்.

மறுநாள் பாட்டி இறந்த செய்தி தான் வந்தது. அங்கே என்னை அழைத்து வந்து உத்தமன் போல உங்க எல்லார் முன்னும் நடித்தான்.

“லதா ஆன்ட்டிகிட்ட சொல்ல நானும் முயன்றேன்டி. என்னோட மாமியார் இடையில் வந்து பேச முடியாமலே செய்துட்டார்..” மனம் வெறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் அறைவாயிலை கவனித்தனர். தேனு பா ல் பிரட், இட்லி, சாம்பார், சட்னி எடுத்து வந்திருந்தார்.

தன் சித்துவை கட்டிக் கொண்டு இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த ராக்கி உணவை பார்க்கவும், மம்மூ…வாயை திறந்தான்.

“ஜா நீ சாப்பிடு. நான் ராக்கிக்கு உணவை கொடுக்கிறேன்” தேனுவை பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ்கா” என்றாள் பிரியசகி.

“சீக்கிரம் கீழ வந்துருங்க” கண்ணால் கீழே சமிஞ்சை செய்தார். அவளும் கண்ணை மூடி திறந்தாள்.

“ராக்கிக்கு உணவை கொடுத்துட்டு வாரேன்கா” கமலாவிற்கு கேட்கும் படி உரக்க கூறி இந்துஜாவை பார்த்தாள்.

“பத்து நிமிடத்தில் டாக்டர் வந்துருவாங்க” அவர் கீழே சென்றார்.

விரைந்து உணவை முடித்து படுக்கையில் சாய்ந்தவாறு தன் தோழியை பார்த்தாள் இந்துஜா.

“பிரியா நாம இப்பவே அண்ணா வீட்டுக்கு போயிடுவோம். நீயும் வர்ற…ஐந்தாறு நாட்களில் லதா பெரியம்மா வந்துருவாங்க. அண்ணாவும் அதிகம் வீட்டில் இருக்க மாட்டான். என்னோட வந்துரு” தன் தோழி கையை இறுக பற்றினாள் இந்துஜா.

“உனக்கு எப்படி அடிபட்டது?” இந்துஜாவின் நெற்றியை பார்த்தவாறு கேட்டாள் பிரியசகி.

இந்துஜா நடந்ததை கூறினாள்.

ஜா, இனியவன் சார் குடும்பம் ரொம்ப நல்லவங்க. “என் புருசன் என்று தயங்கி உன்னை எங்கள் அறைக்கு இன்றிரவு….” பேச திராணியில்லாது நிறுத்தி இந்துஜா முகத்தை ஏறிட்டாள்.

அவள் சீற்றமுடன் முறைத்தாள்.

இல்ல ஜா, நான் உன்னை விட மாட்டேன். என் வாழ்க்கை சீரழிந்ததே போதும் என்று அறைக்கதவை தாழிட்டு, “உன்னோட அண்ணாவிடம் நீ எதையும் சொல்ல வேண்டாம். மருத்துவர் வந்து உன்னை பார்த்துட்டு போகட்டும். நீ ஓய்வெடு. அவர் இரவு பத்து மணிக்கு தான் வருவார். நீ இனியவன் சார் வீட்டில் ராக்கியுடன் பாதுகாப்பாக இருங்க. அவங்க நல்லா பார்த்துப்பாங்க. உன் அண்ணா வரவும் கிளம்பிடு…”

இனியவன் சாரா? அவரை உனக்கு எப்படி தெரியும்?

வீட்டில் யாருமில்லா சமயம் யாராவது உதவுவாங்களான்னு பார்த்தேன். உதவி வேணும்னு எழுதி கீழே போட்டேன். அவர் தான் எடுத்தார். அன்றிரவு என்னை வெளியே அழைத்து வர எங்கள் அறைக்கு பின்னே ஏறி உதவ வந்தார். ஆனால் அவர் கண்டது என்னை எம் புருசன் அடிப்பதையும் பலவந்தப்படுத்துவதையும்…

அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் மருத்துவமனை சென்று என் புருசனிடம் பேசி இருப்பார் போல. இருவருக்கும் கைகலப்பாகி விட்டது. அவர் தம்பி, அன்னைக்கு கூட இந்த விசயம் தெரியாது.