இப்போது நடக்கும் பேச்சுவார்த்தை பற்றி அவன் சொல்லும் போதே அவளுக்கு கோவம்.
“அதுக்கு நான் ஓகே சொல்லலை, ஆனா அஞ்சலிக்கும் ஏதாவது நல்லது நடக்கணும், உன் கைலதான் இருக்கு, நீ நடத்தி தருவியா?” எனக் கேட்டவன் மேற்கொண்டு பேசத் தயங்கினான்.
வெளிப்படையாக சொல்லும் படி கேட்டாள் நந்தினி. யுகேந்திரனுக்கு அஞ்சலியை மணம் செய்து வைத்து விட்டால் நம் திருமணத்துக்கு தடை இல்லை என்றான் அவன்.
அஞ்சலியை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை நந்தினி, ஆனால் அண்ணனின் விருப்பம் முதன்மையில் இல்லாமல் இதென்ன வியாபாரம் பேசுகிறான் என அவளுக்கு கோவம். அந்தக் கோவத்தை வார்த்தைகளில் காட்டினாள்.
‘நான் சொல்வதை நீ கேளா விட்டால் என் அப்பா சொல்வதைத்தான் நான் கேட்க வேண்டி வரும்’ என அவனும் தீர்மானமாக சொன்னான்.
வார்த்தைகள் தடிக்க, பிரிந்து விடலாம் என்றான் கார்த்திக். கோவத்தில் கிளம்பி விட்டாள் நந்தினி.
மகன் சம்மதம் சொல்வதற்கு முன்னரே அக்கா முன் மொழிந்ததை பற்றி மனைவி மற்றும் அம்மாவிடம் சொல்லி ஆலோசித்தார் புகழ். அவர்களுக்கும் அதுவே சரியென பட்டது. காதில் வாங்கிய அஞ்சலி ரகளை செய்து விட்டாள்.
நந்தினி அண்ணிக்கு நீங்கள் செய்யப் போவது துரோகம், என்னை முன்னிறுத்தி அண்ணனுக்கு நீங்கள் செய்வது அநீதி, அனைத்தையும் விட அந்தக் குடும்பத்தின் சகவாசமே தனக்கு ஆகாது என உறுதியாக சொன்னவள் இப்போது திருமணமே வேண்டாம் எனவும் சொன்னாள். அவளது பேச்சை அலட்சியம் செய்தனர் வீட்டினர்.
அண்ணனுக்கு அழைத்து பேசியும் பிரயோஜனப் படவில்லை.
அவள் படித்த கல்லூரியின் பெண் பேராசியர் ஒருவரிடம் உதவி கேட்டாள். அவரும் வேலைக்கு உத்தரவாதம் கொடுத்தார்.
ஒரு வாரத்துக்குள் எப்படியாவது வீட்டிலிருந்து வெளியேறி விடலாம் என அவள் நினைத்திருக்க, அன்றே அவளுக்கு சந்தர்ப்பம் கிட்டியது.
ஊரில் முக்கியப் பட்டவர் ஒருவர் திடீரென இறந்து விட்டார். புகழும் சித்ராவும் துக்கத்தில் பங்கெடுக்க சென்று விட்டனர். பேத்தி உறங்குவதாக நினைத்த பாட்டியும் இறந்தவரின் முகத்தை இறுதியாக ஒரு முறை பார்க்க நினைத்து கிளம்பி விட்டார்.
குடும்பத்தினர் மீதிருந்த அதிருப்தியையும் வேலைக்கு செல்லப் போவதையும் தான் பாதுகாப்பாக நன்றாக இருப்பேன் என்பதையும் தெளிவாக கடிதத்தில் எழுதி வைத்த அஞ்சலி கோவையில் இருக்கும் பேராசிரியரை சந்திக்கவென புறப்பட்டு விட்டாள்.
வீட்டினர் கைப்பேசி எண்கள் அனைத்தையும் பிளாக் செய்து விட்டாள். யுகியின் கடைக்கு முன் கேமரா இருக்கும், அவன் மூலமாக அண்ணனுக்கு தான் கோவையில் இருக்கும் விஷயம் தெரியப் போகிறது என அவள் நினைத்து பார்த்திருக்கவில்லை.
அஞ்சலி கோவையில் இருக்கும் விஷயத்தை அப்பாவுக்கு தெரியப்படுத்திய கார்த்திக் ஊருக்கு கிளம்பி விட்டான். புகழேந்தியும் உடனடியாக மனைவியோடு கோவைக்கு புறப்பட்டு விட்டார்.
அஞ்சலியை எங்கு போய் தேடுவது என ஏதும் புரியாமல் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் யுகி. அவள் சென்ற ஆட்டோ கண்ணில் படவும் அதை மறித்து நிறுத்தினான்.
அஞ்சலியை எங்கு இறக்கி விட்டான் என ஆட்டோக்காரனிடம் கேட்டறிந்து கொண்டு அங்கு விரைந்தான் யுகி.
வீட்டுக்கு தெரியாமல் கிளம்பி வந்து விட்ட அஞ்சலியை அவளது செயலுக்காக கடிந்து கொண்டார் பேராசியர். அவளது அப்பாவிடம் தான் பேசி புரிய வைப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்.
தன் நிலையை இன்னும் தெளிவு பட சொல்லி, வேலைக்கு மட்டும் ஏற்பாடு செய்து தரும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டாள் அஞ்சலி.
சமீபத்தில்தான் திருமணம் முடிந்த பேராசியரின் மகளும் மருமகனும் வீட்டிற்கு வரவிருக்க, உனக்கு இது தேவையில்லாத வேலை என்பது போலவே முறைத்து நின்றார் ஆசிரியரின் கணவர்.
தற்போதைக்கு அவளை வீட்டில் தங்க வைக்க முடியாத நிலையில் இருந்த ஆசிரியர் கையை பிசைந்தார். அவரின் நிலை அறிந்த அஞ்சலி தோழியின் வீட்டில் தங்கிக் கொள்வதாக சொல்லி புறப்பட்டு விட்டாள்.
ஆசிரியரின் மகளும் மருமகனும் வந்து விட, அதற்கு மேல் அவரால் அஞ்சலியிடம் பேச முடியவில்லை.
யுகி அங்கு வந்த நேரம் அஞ்சலி அங்கு இருக்கவில்லை. அஞ்சலி செல்வதாக சொன்ன தோழியின் முகவரியும் அவருக்கு தெரியவில்லை.
‘இவரை நம்பியா வந்தாள் இந்தப் பெண்?’ என மனதிற்குள் சலித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டான் யுகி.
‘அஞ்சலியை பார்த்து விட்டாயா?’ என யுகிக்கு அழைத்துக் கேட்டான் கார்த்திக். யுகி விவரம் சொல்ல அவன் பயந்து விட்டான். அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என பதறினான்.
“உங்க தங்கையை என்ன தப்பு சொல்றது? உங்க எல்லாரையும்தான் சொல்லணும், நடந்த பிரச்சனையிலிருந்து வெளில வர அந்தப் பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணாம நீங்கல்லாம் போட்டு படுத்தி வச்சிருக்கீங்க, அதனாலதான் உங்களை விட்டு கிளம்பிட்டாங்க” என திட்டினான் யுகி.
“ப்ளீஸ் யுகி, நேர்ல திட்டலாம் கொஞ்சம் அவ எங்கன்னு பாருங்க” என்றான் கார்த்திக்.
கோவையில் அஞ்சலியின் தோழி யார் இருக்கிறார் என விவரம் கேட்டான் யுகி. அவளது நெருங்கிய தோழிகள் எல்லாம் வெளியூரை சேர்ந்தவர்கள், இங்குள்ளவர்களை அவனுக்கு தெரியவில்லை.
ஏதோ யோசித்த யுகி, அஞ்சலியின் கைப்பேசி எண்ணை கேட்டான்.
“சொன்னேனே யுகி, எங்க நம்பர்ஸ் பிளாக் பண்ணி வச்சிட்டா”
“வேற நம்பர்லேருந்து கூப்பிட்டு பார்த்தீங்களா?”
“நான் ஆஃபிஸ்லேருந்து ஊருக்கு கிளம்பிட்டேன் யுகி, எனக்கு எல்லாம் பிளாங்’கா இருக்கு, எதுவுமே தோணல” என்றான் கார்த்திக்.
தன் திட்டத்தை சொன்ன யுகி இனி அஞ்சலி அழைத்தால் நீயோ உன் பெற்றோரோ அழைப்பை ஏற்க வேண்டாம் என கட்டளையாக சொல்லி கைப்பேசியை வைத்தான்.
அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என நினைத்துக்கொண்டே அஞ்சலியின் எண்ணுக்கு அழைத்தான். அதிகம் சோதிக்காமல் எடுத்துப் பேசினாள் அவள்.
தான் ஏதாவது சொல்லி கோவையிலிருந்தும் கிளம்பி விடுவாளோ என யுகிக்கு பயம். ஆகவே திட்டப்படி, “எங்க இருக்கீங்க நீங்க?” என படபடப்பாக கேட்டான்.
அவள் ஏதும் சொல்வதற்கு முன் அவளது தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக பொய் சொல்லி விட்டான்.
பயந்து போன அஞ்சலி விவரம் கேட்கவும், “உங்களை தேடிட்டுதான் உங்கப்பா இங்க வந்திருக்கார், ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு, நான் அங்கதான் இருக்கேன், உடனே ஹாஸ்பிடல் வாங்க” என்றான்.
அந்த அதிர்ச்சியிலும் தான் இங்கிருப்பது அப்பாவுக்கு எப்படி தெரிய வந்தது என விவரமாக கேட்டாள்.
“அதை ஐ ஸி யூ ல இருக்க உங்கப்பாதான் கண்ணு முழிச்சு சொல்லணும்” என்றான் யுகி.
“ரொம்ப சீரியஸா?” என பயம் நிறைந்த குரலில் கேட்டாள்.
“டாக்டர் கூப்பிடுறாங்க, நீங்க நேர்ல வந்து தெரிஞ்சுக்கோங்க” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் யுகி.
கார்த்திக்கிற்கு விவரம் சொல்லிக் கொண்டே தான் சொன்ன மருத்துவ மனைக்கு புறப்பட்டான் யுகி.
வழியிலேயே அருகில் உள்ள மருத்துவ மனை பெயரை சொல்லாமல் தூரமாக உள்ளதை சொல்லி விட்டோமே என நொந்து கொண்டான்.
அதற்கு ஏற்றது போல அவனுக்கு முன் மருத்துவமனை சென்று விசாரித்து விட்ட அஞ்சலி இவனுக்கு அழைத்தாள். அப்பா பெயரில் யாரும் அனுமதிக்க படவில்லை என சொல்வதாக சொன்னாள்.
“அதெப்படி அப்படி சொல்வாங்க, நீங்க ஒழுங்கா விசாரிச்சிங்களா? நேரா ஐ ஸி யூ போங்க, இல்லைனா வெயிட் பண்ணுங்க, நான் வந்து கூப்பிட்டுக்கிறேன் உங்களை” என்றான்.