ஒன்றரை வருடங்களுக்கு முன் கார்த்திக்கிற்கும் நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விழா முடிந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.
அஞ்சலி அவளது வயதை ஒத்த சொந்தக்கார பெண்களோடு இருந்தாள். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு அணியில் உள்ளவர்கள் எதிரணியில் உள்ள ஒருவரிடம் ரகசியமாக ஒரு பாடலை சொல்ல, அவள் நடித்துக் காட்டி அந்தப் பாடலை தன் அணியினரை கண்டுபிடிக்க வைக்க வேண்டும்.
அஞ்சலிக்கு அவளின் அத்தை மகன் தனுஷ் என்றால் ஆகாது. சின்ன வயதிலிருந்தே இருவருக்கும் முட்டி மோதிக் கொள்வார்கள். அவனும் வீட்டிற்கு அடங்காத பிள்ளையாகவே இருந்தான்.
சகிக்காத சிகை அலங்காரம், ஒற்றைக் காதில் வளையம், நடையில் தெனாவெட்டு, செயலில் திமிர் என ஆளே மார்க்கமாத்தான் இருப்பான். அஞ்சலியின் சித்தி மகள் சீமா அவனுக்கு கருவாயன் என பட்டப் பெயர் வைத்திருந்தாள். பெண்களுக்குள் பேசிக் கொள்ளும் போது அப்படித்தான் அவனை குறிப்பிட்டு பேசுவாள். அனைவருக்குமே ஏதாவது ஒரு பட்டப் பெயர் வைப்பது அவளின் பழக்கம்.
“அவனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான், அதை விட பாடி ஷேமிங்லாம் தப்பு” என ஒருமுறை அஞ்சலியும் அவளை கண்டித்திருக்கிறாள். கருத்தில் கொள்ளவே இல்லை சீமா.
‘கருவாப் பையா’ என்ற சினிமா பாடலை சீமா நடித்துக் காட்ட வேண்டும். அவளின் அசைவுகளை வைத்து அவள் அணியினரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சற்று தள்ளி நின்றிருந்த தனுஷை சுட்டிக் காட்டினாள் சீமா.
பாடலை கண்டுபிடித்து விட்ட அஞ்சலி மெல்லிய குரலில் பாடியும் காட்டினாள். வெற்றி பெற்ற உற்சாகத்தில் அனைவரும் அந்தப்பாடலை சத்தமாக பாடினார்கள். அஞ்சலிக்கு நன்றாக பாட வரும், ஆகவே அவள் பாடியது மட்டும் தனித்து தெரிந்தது.
தனுஷை சுற்றி நின்ற அவன் வயதை ஒத்த பையன்கள் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். கோவம் கொண்ட தனுஷ் பெண்களிடம் சென்று சண்டை போட்டான்.
அவனை சமாதானம் செய்ய பார்த்தாள் அஞ்சலி. அவளிடமே எகிறினான் தனுஷ். இருவருக்கும் சண்டையாகி விட்டது. பெரியவர்கள் வந்து அதட்டி திட்டித்தான் அந்த சண்டையை நிறுத்தினார்கள்.
அஞ்சலி தன்னை கேவல படுத்தி விட்டாள் என அவள் மீது துவேஷம் கொண்டான் தனுஷ்.
இரண்டு நாட்களில் ஆபாசமான பெண்ணின் புகைப்படத்தில் அஞ்சலியின் முகத்தை மட்டும் மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளி வந்தது.
அந்த நாட்கள் அஞ்சலிக்கு மிகவும் மோசமான நாட்கள். பெரியவர்களின் திட்டுக்கள், சொந்தங்களின் இளக்கார பேச்சுக்கள், ‘எப்படி இவளது புகைப்படம் வெளியானது, அடக்கமாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா?’ என இவளையே குறை சொன்ன அதிபுத்திசாலிகளால் ஏற்பட்ட மனக் காயம், சிலரின் கூச வைக்கும் பார்வை என அவள் கடந்து வந்தவை அனைத்தும் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. கார்த்திக்தான் தங்கைக்கு ஆறுதலாக நின்றான்.
போலீசுக்கு போக கூடாது என திட்டவட்டமாக சொல்லி விட்டார் அஞ்சலியின் அப்பா புகழேந்தி. அவளது அம்மா சித்ராவுக்கும் அதே எண்ணம்தான்.
அந்த புகைப்படங்களை இணையத்திலிருந்து நீக்கி விட்ட பிறகும் கண் அயரவில்லை கார்த்திக். நான்கு நாட்களில் செய்தது தனுஷ்தான் என கண்டுபிடித்து விட்டான்.
அஞ்சலியின் வீட்டினருக்கு பெரும் அதிர்ச்சி. தன் ஆத்திரம் தீரும் மட்டும் தனுஷை அடித்து துவைத்து விட்டான் கார்த்திக். யாரும் அவனை தடுத்திருக்கா விட்டால் என்ன செய்திருப்பானோ? மருத்துவமனையிலிருந்து தனுஷ் டிஸ்சார்ஜ் ஆகவே வாரங்கள் ஆனது.
தனுஷை சும்மா விடக்கூடாது என முடிவு செய்த அஞ்சலி போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்க முடிவு செய்தாள். அவளது பெற்றோர் வேண்டாம் என சொல்ல, கார்த்திக் தங்கையோடு காவல் நிலையத்துக்கு கிளம்பினான்.
தெரியாமல் செய்து விட்டான், கம்ப்ளைண்ட் கொடுத்து விடாதீர்கள் என கண்ணீரோடு வந்து நின்றனர் தனுஷின் பெற்றோர்.
அக்காவின் மகனை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல புகழேந்தியின் எண்ணம், தன் மகளின் வாழ்க்கைக்கு இடையூறாக இந்த விஷயம் இருக்க வேண்டாம் என்று மட்டும்தான் நினைத்தார்.
பெற்றோரை மீறி கார்த்திக்கால் தங்கையின் முடிவை ஆதரிக்க முடியாமல் போனது. அதில் வீட்டினர் மீதும் அண்ணன் மீதும் அவளுக்கு கோவம்.
அஞ்சலியின் புகைப்படங்கள் நீக்கப் பட்டு விட்ட போதும் உள்ளூர் மக்களுக்கும் சொந்தங்களுக்கும் விஷயம் தெரிந்தே இருந்தது. யுகேந்திரன் குடும்பத்தினருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில்தான் இரண்டு மாத காலத்தில் குறிக்கப் பட்டிருந்த கார்த்திக் நந்தினியின் திருமணம் தள்ளிப் போய் விட்டது.
எம் பி ஏ’வில் விநியோக சங்கிலி மேலாண்மை பிரிவில் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கியிருந்த அஞ்சலி கேம்பசில் தேர்வு பெற்றிருந்தாள். பிரபலமான நிறுவனத்தில் நினைத்து பார்க்க முடியாத சம்பளத்தில் வேலைக்கு செல்லவிருந்தவளை வீட்டோடு முடக்கி விட்டார் புகழேந்தி.
பொள்ளாச்சியில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து விவசாயம் செய்யும் குடும்பம் அவர்களுடையது. அஞ்சலி அத்தனை புத்திசாலி, ஆனாலும் மகளை நினைத்து எப்போதுமே புகழேந்திக்கு கவலைதான். ஏனெனில் மகளின் கனவுகள் அப்படியானதாக இருந்தன.
தங்கள் செல்ல மகள் கண் பார்வையிலேயே வாழ வேண்டும் என்பதுதான் அஞ்சலியின் பெற்றோரின் ஆசை. கல்யாணம் முடித்து கணவன் குழந்தைகள் என நிறைவாக அவள் வாழ்வதை பார்த்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தவர்கள் ஆகி விடுவோம் என்ற மனநிலையில் உள்ளவர்கள்.
தனுஷின் மூலமாக இப்படியொரு பிரச்சனை வரவும் வெளியில் எங்கேயும் அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்துக்கொண்டனர். அவசரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். நல்ல வரன்கள் ஏதும் கிடைக்கவில்லை. அந்த புகைப்பட செய்தி பரவியிருந்ததே அதற்கு காரணம்.
அப்படியே யாராவது வந்தாலும் எவ்வளவு சொத்து கிடைக்கும் என்பதை சுற்றியே பேசினார்கள். அவர்கள் குடும்பத்தில் தங்கையை தர மாட்டேன் என பிடிவாதம் செய்தான் கார்த்திக்.
அஞ்சலி ஒரு விதமான மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டாள். அண்ணன் கூட தன்னை திருமண பந்தத்தில் இணைப்பதிலேயே குறியாக இருக்கிறானே அவன் மீதும் ஆதங்கம்.
வெங்கட் பக்கவாதத்தில் விழுந்தார். அப்போதே மகளின் திருமணத்தை நடத்தி விட துடித்தார் அவர். இப்போதிருக்கும் சூழலில் திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக சொல்லி விட்டான் கார்த்திக்.
தனுஷை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் மேல் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர் அவனது பெற்றோர்.
தம்பி மகளின் வாழ்க்கையை நினைத்து புகழின் அக்காவுக்கும் கவலை. மகன் செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய நினைத்தார்கள். தனுஷின் பெரியப்பா மகன் மருத்துவராக லண்டனில் பணி புரிகிறான். தங்கள் குடும்பத்தில் பேசி அவனுக்கே அஞ்சலியை கேட்கலாம் என முடிவு செய்து புகழேந்தியிடம் சென்றனர்.
அக்காவுடன் பேசாமல் இருந்தவருக்கு அவர் கொண்டு வந்த சம்பந்தம் பிடித்திருந்தது. ஆனாலும் மகளை பற்றிய உண்மை தெரியும் என்பதால் எதிர்காலத்தில் மகளை ஏதும் சொல்லி விடுவார்களோ, மகளின் மண வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை வருமோ என பயந்தார்.
அதற்கும் யோசனை சொன்னார் அவரின் அக்கா. அதாவது கார்த்திக்கிற்கு அந்த பையனின் தங்கையை மணம் செய்து கொடுத்து விட்டால் அப்படியெல்லாம் பிரச்சனை வராது என்றார்.
புகழேந்தி யோசித்தார், ஏற்கனவே நிச்சயிக்கப் பட்ட திருமணம் நெருடலாக இருந்த போதும், மகளின் வாழ்வே பெரிதாக தெரிய சுயநலமாகவே முடிவெடுத்தார், மகனிடமும் பேசினார்.
நந்தினியை மனமாற விரும்பும் கார்த்திக்கிற்கு இதில் உடன்பாடு இல்லை. அப்பாவிடம் மறுத்து சொன்னவன் நந்தினியை சந்தித்தான்.