கோவையில் டவுன் ஹாலில் இருந்தது அலமு எலக்ட்ரிகல்ஸ் அண்ட் ஹார்ட்வேர்ஸ் கடை. எத்தகைய நுணுக்கமான பொருளும் அங்கு கிடைத்து விடும், அங்கு இல்லை என்றால் வேறெங்கும் கிடைக்க வழியில்லை எனும் வகையில் பெயர் பெற்றிருந்தது.
கடையின் நடுப் பகுதியில் ஓரமாக அலுவலக அறை சின்னதாக இருந்தது. ஏதோ லிஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த யுகேந்திரன் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்தான். கடையில் இப்போது எதெது ஸ்டாக் இருக்கிறது இல்லை என அவன் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவனது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.
மதியம் இரண்டாகியிருக்க கடைக்கார பையன் லோகேஷ் தவிர மற்ற கடை ஊழியர்கள் பின்பக்கம் இருந்த அறைக்கு உணவருந்தவென சென்றிருந்தனர். வந்திருந்த வாடிக்கையாளரிடம் என்ன வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தான் லோகேஷ்.
வாஷிங் மெஷினுக்கு ஏதோ உதிரி பாகம் வாங்க வந்திருந்தவர் கைப்பேசியில் புகைப்படம் காட்டி விவரம் சொன்னார். சில நிமிடங்கள் தேடிப் பார்த்த லோகேஷ் தேடியது கிடைக்காமல் போகவும் கடையின் கோடியில் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த யுகேந்திரனை பார்த்தான்.
யுகியின் பார்வை தன்னிடம் இல்லை என நினைத்த லோகேஷ், “இங்க இல்லை ஸார்” என வாடிக்கையாளரிடம் சொன்னான்.
“இந்த கடைதான் சின்ன சிங்கப்பூர், இங்கதான் எல்லாம் கிடைக்கும்னு சொன்னாங்களேப்பா, ஆறேழு கடை ஏறி இறங்கிட்டேன், கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா” என கேட்டார் வாடிக்கையாளர்.
நன்றாக சாப்பிட்டிருந்த லோகேஷ்க்கு உண்ட மயக்கம், மீண்டும் தேடிப் பார்க்க அலுப்பு பட்டவன், “நாளைக்கு வாங்க ஸார்” என்றான்.
“பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன் மா” என சொல்லி அழைப்பை துண்டித்த யுகேந்திரன் அங்கே வந்தான். அவனிடமும் தன் தேவையை சொன்னார் வாடிக்கையாளர்.
“அந்த மாடல் மெஷினுக்கு உள்ளது நம்ம கடைல இல்லை போலண்ணா” என்ற லோகேஷ், யுகியின் கண்டன பார்வையில் தலை குனிந்தான்.
“பையன் புதுசு, அதான் அவனுக்கு தெரியலை, நம்மகிட்ட இருக்குதுங்க ஸார். நீங்க ஏன் எல்லா கடைக்கும் தேடி அலையுறீங்க, இனிமே எது வேணும்னாலும் நேரா இங்க வந்திடுங்க, இங்க இல்லாம போனா கூட ஆர்டர் போட்டு உங்க அட்ரஸ்க்கு அனுப்பி வச்சிடுவோம்” என வாடிக்கையாளரை கவரும் விதமாக பேசினான்.
“முதல்ல இத கொடுங்க, ஆன்லைன்ல கூட எனக்கு கிடைக்காமதான் கடை கடையா அலையுறேன். வாஷிங் மெஷின் ஓடாம ஒரு வாரமா என் முதுகு உடையுது” என்றார் வாடிக்கையாளர்.
எந்த ராக்கில் இருக்கிறது என அடையாளம் சொல்லி லோகேஷை அனுப்பி வைத்த யுகி, “எத்தன வருஷம் ஆச்சுங்க ஸார் வாங்கி, பேசாம புதுசு வாங்கிடுங்களேன்” என்றான்.
“உங்க கடைல மெஷின் கூட விக்கிறீங்களா என்ன?”
“சீக்கிரம் அதுக்குன்னு தனி ஷாப் ஓபன் பண்ண போறோம், இப்போதைக்கு ஆர்டர் கொடுத்தா அவங்களுக்கு மட்டும் வாங்கி தரோம். நீங்க வேற கடைல போய் வாங்குறத விட என்கிட்ட கம்மி விலைக்கு வாங்கிக்கலாம்” என்றான் யுகி.
அதெப்படி உங்களிடம் விலை குறைவாக கிடைக்கும், அப்போது தரமில்லாத பொருளாக இருக்குமோ என சந்தேகமாக கேட்டார் வாடிக்கையாளர்.
கடைகளில் விற்கும் போது லாபம் வைக்காமலா விற்பார்கள்? ஒரு பொருளை நீங்கள் வாங்குவதற்கும் வியாபாரியான நான் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது, மொத்த வியாபாரம் செய்யும் இடத்தில் எனக்கு கிடைக்கும் சலுகைகள் உங்களுக்கு கிடைப்பதில்லை, பெரிய லாபம் இல்லா விட்டாலும் ஏதோ லாபம் எனக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொன்னவன் இறுதியாக, “எங்க கஷ்டமருக்கு ஏதோ எங்களால முடிஞ்சது” என்றான்.
சிரித்த வாடிக்கையாளர், “கஸ்டமர்ஸ் புடிக்க இது ஒரு தந்திரம்னு சொல்லுங்க” என்றார்.
யுகியும் பதிலுக்கு சிரிக்க, கைப்பேசி எண் கேட்டார் வாடிக்கையாளர். விசிட்டிங் கார்ட் எடுத்துக் கொடுத்த யுகி, “உங்களுக்குனு இல்லை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஏதும் தேவைப்பட்டா கூட தயங்காம சொல்லுங்க” என்றான்.
அவர் கேட்டிருந்த பொருளோடு லோகேஷ் வர, அவனை கொண்டே வாடிக்கையாளரிடம் கொடுத்தான் யுகேந்திரன்.
வெயிலில் அலைந்த களைப்பு கூட நீங்கி விட்டது என உற்சாகமாக சொல்லிக் கொண்டே பணத்தை செலுத்தி விட்டு புறப்பட்டார் வாடிக்கையாளர். யுகியை பாவமாக பார்த்தான் லோகேஷ்.
“வேலைக்கு சேர்ந்து ஆறு மாசமாச்சு, இன்னும் எது இருக்கு இல்லைனு தெரியல. சரியா தெரியலைனா யார்கிட்டயாவது கேட்டுகிட்டாவது சொல்லணும், அதை விட்டுட்டு கஸ்டமரை திருப்பி அனுப்புவியா?” என கோவப்பட்டான் யுகேந்திரன்.
“ஸாரி அண்ணா” என மருகினான் லோகேஷ்.
தோளில் தட்டிக் கொடுத்த யுகி, “கஷ்டர்மர்ஸ் இல்லாத நேரத்துல எது எங்க இருக்குனு பார்த்து வச்சுக்கணும், கூட உள்ளவங்கள சும்மா இருக்க விடாத, எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்க, நாளைக்கு நீயே சொந்தமா கடை போடணும்னா பணம் மட்டும் இருந்தா போதாது, நீ சேர்த்துக்கிற அறிவுதான் மூலதனம், புரிஞ்சுதா?” எனக் கேட்டான் யுகி.
வேகமாக தலையாட்டினான் லோகேஷ்.
கடையில் மொத்தம் நான்கு பேர் வேலை செய்கிறார்கள், லோகேஷ்தான் அனுபவம் குறைந்தவன். சாப்பாட்டு நேரத்தில் அனுபவம் உள்ள யாராவது முன்னரே சாப்பிட்டு விட்டு இங்கு இருந்து கொண்டு மற்றவர்களை அனுப்பி வைக்க வேண்டும் எனதான் யுகேந்திரன் சொல்லியிருக்கிறான். யாரும் கேட்பதே இல்லை.
மற்றவர்கள் உணவருந்தி வரவும் அனுபவம் உள்ள யாராவது கண்டிப்பாக கடையில் இருந்தாக வேண்டும் என்பதை கண்டிப்போடு சொல்லி விட்டே மீண்டும் அம்மாவுக்கு அழைத்தான் யுகி.
இன்னும் சாப்பிட வராமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என திட்டிய அவனது அம்மா உடனே வீட்டுக்கு வரும்படி பணித்தார். பத்தாண்டுகளுக்கும் மேலாக இங்கு பணி புரியும் இளவரசனிடம் கடைப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கிளம்பினான்.
கடையில் பொருத்தப் பட்டிருக்கும் கண் காணிப்பு கேமரா வாயிலாக எங்கே இருந்தாலும் இங்கு நடப்பதை கண்காணித்துக் கொள்வான். தான் இங்கு இல்லா விட்டாலும் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வான்.
இருபது நிமிட பைக் பயணத்தில் தன் வீட்டை வந்தடைந்தான் யுகேந்திரன். அவனது வீடு இருந்த தெரு நல்ல விசாலமாக காணப்பட்டது, வீட்டின் முன்னே கார் ஷெட் இருந்தது.
காம்பவுண்டுக்கு வெளியில் அரை நெல்லிக்காய் மரம் ஒரு பக்கமும் வேப்ப மரம் இன்னொரு பக்கமுமாக இருக்க, காம்பவுண்ட் உள்ளே ஓரமாக வித விதமான பூச்செடிகள், பின்பக்கம் துளசி மாடம், கற்பூரவல்லி, வெற்றிலை கொடி, கறிவேப்பிலை மரம், எலுமிச்சை என நன்றாக பராமரித்து வைத்திருந்தார் அவனது அம்மா அலமேலு.
அம்மாவின் கையால் பரிமாறப்பட்ட சூடான உணவை ரசித்து சாப்பிட்டவன் அப்பா சாப்பிட்டாரா நீ சாப்பிட்டாயா என கேட்டறிந்து கொண்டான்.
“எல்லாம் ஒரு மணிக்கே ஆச்சுடா, நீயும் நேரத்துக்கு சாப்பிட்டு போனா என்ன? உன்னை எவ கையிலயாவது பிடிச்சு கொடுத்தாதான் எனக்கு ரெஸ்ட்” என்றார் அலமேலு.
“உன்னை யாரும்மா வெயிட் பண்ண சொன்னா? எல்லாம் எடுத்து வச்சிட்டீனா நான் வர்றப்ப போட்டு சாப்பிட்டுக்க போறேன், போ போயி ரெஸ்ட் எடு” என நொடித்தான் அவன்.
அலமேலு ஒன்றும் சொல்லாமல் மகனுக்கு பார்த்து பரிமாற மட்டும் செய்தார்.
வெங்கட்ராகவன், அலமேலு தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். தூத்துக்குடியை பூர்வீமாக கொண்டவர்கள். வசதி வாய்ப்புள்ள குடும்பம். வெங்கட்டின் பெற்றோர் மறைந்த பிறகு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். அவரது பங்கு பணத்தோடு கோவை வந்தவர் சொந்தமாக தொழில் தொடங்கி வளர்ந்தார்.
இங்கு வந்த பிறகுதான் மூத்த பெண் பைரவி பிறந்தாள். இரண்டு தெருக்கள் தள்ளித்தான் அவளது ஜாகை.
யுகேந்திரன் மூன்றாவது மகன். அப்பாவின் தொழிலில் நாட்டம் இவனுக்குத்தான். பள்ளியில் பயிலும் போதே அப்பாவின் கடையில்தான் இருப்பான். பொறியியல் படித்தாலும் ஆர்வமெல்லாம் கடையின் மீதுதான்.
அண்ணன் படிப்பில் கோல்டு மெடல் வாங்கினால் இவன் அரியர் வைத்து தட்டி தடவி இறுதி வருடத்தில் ஒரு வழியாக பட்டம் வாங்கி விட்டான். படிப்பை முடித்த கையோடு கடையில் வந்தமர்ந்து கொண்டான்.
‘உங்கப்பாக்கு கூட பொறந்தவங்க ரெண்டு பேர், எல்லாருக்கும் சரி சமமாதான் சொத்து கிடைச்சது, ஆனாலும் உழைச்சு வீடு வாசன்னு பெருக்கி புள்ளைங்களையும் படிக்க வச்சு ஆளாக்கி நல்ல நிலையில இருக்கிறது இவரு மட்டும்தான், எல்லாத்துக்கும் என் ராசிதான் காரணம்’ என வாய் ஓயாமல் பெருமை பேசுவார் அலமேலு.
இப்போது கடந்த ஒரு வருடமாக உறக்கம் தொலைத்து நிற்கிறார். திடீரென வெங்கட்டுக்கு பக்கவாதம் வரும் என கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
இப்போது வெங்கட்டுக்கு பரவாயில்லை, வைத்தியத்தின் பலனாக நடக்க ஆரம்பித்திருக்கிறார்.
இன்னும் யுகேந்திரனுக்கும் அவனது தங்கை நந்தினிக்கும் மணமாகியிருக்கவில்லை.