தன் அம்மா பேசியதை கேட்ட தினகரனுக்கு கோபம் வந்தாலும் அதை காட்டத் தெரியவில்லை. தன் அம்மா செய்யும் தவறுகளை எல்லாம் தட்டிக் கேட்க வேண்டும் என்று கனவு கண்டவனுக்கு அது கனவாகத்தான் போகும்போல என்ன செய்வது?. எப்படி மாணிக்கத்திற்கு திருமணம் செய்யலாம் என்று யோசித்தவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. பெண்ணின் வீட்டிலும் அம்மா இல்லாமல் பேச முடியாது என்று யோசித்துக் களைத்துப் போனவன் நேராக சென்றது என்னமோ அந்த ரயில் நிலையத்திற்குத்தான். லட்சுமி நினைவு வரும்போதெல்லாம் அவளுடன் அன்று கடைசியாக அமர்ந்து பேசிய இடத்திற்கு வந்துவிடுவான். இங்கு வந்து நிறைய நேரம் அமர்ந்து விட்டு செல்பவன் இன்றும் அங்கேயே அமர்ந்து அந்த ரயில் பெட்டிகளை வெறித்துக்கொண்டிருந்தான்.
படிப்பில் புத்திசாலியாக இருப்பவன் வாழ்க்கையில் முட்டாளாகத்தான் இருக்கிறான். தன் அன்னையை தாண்டி எதுவும் செய்ய முடியாமல் இருந்தவனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்யவும் விருப்பமில்லை. ஆனால் மாணிக்கம், தன் அன்னையை இப்படியே விட்டிருந்தால் மாணிக்கத்தை வேலை செய்யும் இயந்திரமாக மாற்றி விடுவார் என்று தெரிந்தவுடன் அந்த ரயில் பெட்டிகளை வெறித்துப் பார்த்து விட்டு எழுந்து சென்றான். அங்கிருந்து நேராக வீட்டுக்குச் சென்றவன் தன் அம்மா முன் நின்று, “என் மனசு மாறுறதற்குள்ள பெண்ணு பாருங்க, கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சிடுங்க ” என்று சொல்லிவிட்டுச் சென்றவன் அடுத்த நாளே கிளம்பி மும்பைக்கு சென்றுவிட்டான்.
கடைசியாக ஒரு முறை அந்த மும்பை முழுக்கத் தேடி அலைந்து விட்டு வீடு வந்தபோது தன் அம்மா கல்யாணத்தையே பேசி முடித்திருந்தார். ஒரு பேச்சிக்கு கூட அந்த பெண்ணின் படத்தைக் காட்டி பிடித்திருக்கிறதா என்று கேட்கவில்லை. “எப்போ சரி சொல்வான்னு இருந்திருப்பாங்க போல.”
என்று எண்ணியவனாக அவன் அறைக்குள் சென்றான். அவனும் யார் பெண் என்று கேட்கவில்லை. அவன் வந்து ஒரு மாதத்தில் திருமணத்தையே நடத்தி காட்டியிருந்தார் அவன் அம்மா. தினகரன் திருமணம் முடிந்த கையோடு அவன் அம்மாவிடம், மாணிக்கத்தின் திருமணத்தை பற்றி பேச அதை கேட்டு முகத்தை முறைத்தபடி வைத்துக்கொண்டு, “ இன்னும் மூனு நாள்ல போய் பேசுறேன்” என்று சொல்லி சென்றுவிட்டார்.
அன்று இரவு பல கனவுகளுடன் உள்ளே வந்த சின்னப்பொண்ணுவை தயக்கத்துடன் பார்த்த தினகரன், “ இன்னைக்கு எதுவும் வேணாம் எனக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது சோ கொஞ்சம் பழகிட்டு அப்பறமா பார்த்துக்கலாம் ” என்று சொல்லிவிட்டான்.
அதற்கு சின்னபொண்ணுவும் எதுவும் மறுத்து சொல்லாமல் சரி என்று சொல்லி படுத்துக்கொண்டாள். அது தினகரனை இன்னும் மனதளவில் தாக்கியது. அன்று இரவு முழுக்க தினகரன் தூங்கவே இல்லை. ஏதோ தவறு செய்துவிட்டது போலத் தோன்ற அவன் திரும்பித் திரும்பி படுத்துக்கொண்டு இருந்தான். பின்பு மாணிக்கத்தின் திருமணம் நல்லபடியாக முடிய திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே சென்னை சென்றுவிட்டான். அதை ஏற்பாடு செய்ததும் தினகரன் தான். மாணிக்கம் வேலைபார்க்கும் கடைமுதலாளியை வைத்து அவனுக்கென்று வங்கியில் போட்டுவிட்ட பணத்தையும் கொடுத்து அனுப்பிவைத்தான்.
இது தெரிந்து தினகரனின் அம்மா ஒருவாரம் மாணிக்கத்தை திட்டியபடியும் அவனுக்கு சாபம்கொடுத்தபடியும் தான் இருந்தார். இப்படி மாணிக்கத்திற்கு ஒரு நல்ல வழியை காட்டிய சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாமல் சின்னப்பொண்ணு தொண்டையில் சிக்கிய முள்ளாக இருந்தாள். வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போனது தினகரனுக்கு. சின்னப்பெண்ணைக் காணும்போது எல்லாம் பெருகும் குற்றவுணர்வை தாங்கவே முடியவில்லை. அவள் வேறு இவனைப் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்ள, என்றும் அவன் வீடுவர தாமதமானால் உடனே கால் செய்து அவன் நலத்தை விசாரித்து என்று இருக்க, தினகரன் நொந்து தான் போனான். அப்போதுதான் அவனுக்கும் ஒரு வேலைவிஷயமாக வெளியூர்செல்லும் வாய்ப்பு வர உடனே சென்றுவிட்டான்.
அங்கு சென்றவன் மனம் இது தவறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை நீ அழிக்கிறாய் என்று எடுத்துரைக்க சின்னப் பெண்ணை அவன் மனைவியாக ஏற்றுக்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொண்டு இருந்தான். ஒன்றரை மாதம் வெளியூரில் இருந்து வீடு வந்தவன் சின்னப் பெண்ணுடனும் வாழ தொடங்கினான்.
இது வரை அனைத்தும் நன்றாக தான் சென்றது வீட்டில் இருக்கும் அனைவரையும் கவனித்தால் என்பதை விட தாங்கினாள் என்று தான் சொல்ல வேண்டும் அப்படி பார்த்து கொண்டு இருந்தவள். எப்போது தினகரனின் குழந்தையைச் சுமக்கிறாள் என்று தெரியவந்ததோ அப்போது லிருந்து அனைத்தும் மாறத் தொடங்கியது.
முதலில் வீட்டில் வேலை செய்வதை நிறுத்தி தினகரனின் அம்மாவை வேலை வாங்க தொடங்கினாள். பின் தினகரன் சம்பளம் முழுவதையும் இவள் கையில் தரவேண்டும் என்று ஆரம்பித்து சிறிது சிறிதாக தினகரனின் தாயை ஒதுக்கத் தொடங்கியவள் அவளது ஏழாம் மாதம் ஏதோ சண்டையில் அவரை தள்ளிவிட்டதில் கால் உடைந்து படுத்த படுக்கையாக ஆக்கி விட்டாள். இது தெரிந்து தினகரன் மற்றும் அவன் தந்தை கேள்வி கேட்க உடனே அழுது புலம்பி என்று இருவர் வாயையும் அடைத்து விட்டாள்.
அதன்பின் தான் சின்னப் பெண்ணுக்கு அந்த வீடு தன் கனவன் பெயரில் இருப்பது தெரியவர அடுத்த ஒரு மாதத்தில் அவன் அம்மாவையும் அப்பாவையும் என்ன கொல்ல முயலுகிறார்கள் என்று பழி சுமத்தி தினகரன் கையாலேயே இருவரையும் வீட்டை விட்டு துறத்த வைத்தாள். தினக்கரனுக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை, உண்மையை சொல்ல போனால் “ தேவிக்கு இவுங்க பண்ணதுக்கு இவங்களுக்கு இது தேவை தான் “ என்று ஒரு மனம் சொன்னாலும் மற்றொரு மனம் “ என்ன தான் இருந்தாலும் உன் அம்மா அப்பா தானே “ என்று கூற வேறு வழியின்றி அவன் மனைவிக்குத் தெரியாமல் எங்க போக என்று தெரியாமல் முழித்து இருந்தவர்களை ஆட்களை வைத்து இருவரையும் இல்லத்தில் சேர்த்துவிட்டான்.
இவன் ஒரு நாளும் சென்று அவர்களை பார்க்க மாட்டான் ஆனால் அவர்கள் பற்றின அனைத்தும் இன்று வரை அவனுக்கு வந்துவிடும் இரண்டு ஆண்டு முன் தான் அவன் தாய் இறந்து விட்டதாக செய்தி வர, இவன் சென்று பார்க்கவே இல்லை. இது எதுவும் சின்னப் பெண்ணுக்கு தெரியாமல் பார்த்தும் கொண்டான். அதன் பிறகு தான் அவனுக்கு பெண் குழந்தை பிறக்க ஆசை ஆசையாக லட்சுமியின் பெயர் சேர்த்து லட்சுமிப் ப்ரியா என்று வைத்தான். சின்ன பெண்ணுக்கு லட்சுமி பற்றி எதுவும் தெரியாது அதனால் அந்த பெயரை எதுவும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் குழந்தை பிறந்த பின் சின்னப் பொண்ணு அப்படியே மாறிப் போனாள் தினகரன் அவன் அம்மாவே பரவாயில்லை என்று எண்ணும்படி மாறிப் போனாள். தினகரன் சம்பளத்தை முழுக்க செலவு செய்வது வீ்ட்டில் அனைத்திற்கும் வேலை ஆட்களை போட்டு விட்டு டிவி யில் காட்டுவதையெல்லாம் வாங்கி சாப்பிடுவது கடைக்கு போவது புது படத்திற்கு போவது என்று இருப்பவள். அவள் குழந்தையை கூட பார்த்துக்கொள்ள மாட்டாள். அதற்கும் வேலை ஆட்களை வைத்துப் பார்க்க என்று இருக்க அது தெரிந்து சின்னப் பொண்ணுவின் அம்மா அவளுக்கு அறிவுரை சொல்ல அவரிடம் சண்டை போட்டு அன்றிலிருந்து அவள் வீட்டு ஆட்கள் யாரையும் வீட்டுப் பக்கம் வர விடமாட்டாள்.
இவை அனைத்தையும் பார்த்த தினகரன் ஒரு நாள் அவளிடம் அமர்ந்து மிக பொறுமையாக “ இது சரியில்லையம்மா நம்ம பெண்ணுக்கு இரண்டு வயசே இப்போ தான் ஆகப் போகுது அதுக்குள்ளே நீ அவளை ஆள் விட்டு பார்க்கிறது சரியில்லையம்மா “ என்று சொன்னவனை பார்த்த சின்னப் பொண்ணு
“ எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் நீங்க போங்க “ என்று இவனை கவனிக்கக்கூட செய்யாமல் டிவியை பார்க்க அதில் கோபம் வந்து தினகரன் “ இங்க நான் பேசிட்டு தான இருக்கேன் “ என்று குரல் உயர்த்திப் பேச அதில் வேகமாக எழுந்த சின்ன பொண்ணு கீழே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை போட்டு “ சுளிரென்று …”என்று முதிகில் அடித்து தூக்கியபடி “ இந்த வீட்டில்ல நிம்மதியா டிவி கூட பார்க்க முடியாது போல “ என்று அறைக்குள் சென்று விட்டாள்.
இதுவே தொடர்கதையானது தினகரன் ஏதாவது சின்னப்பொண்ணுக்கு பிடிக்காதது போல பேசினாலே அல்லது அவள் கேட்டது தினகரன் வாங்கி தரவில்லை என்றாலோ போதும் குழந்தை ப்ரியாவிற்கு தான் அடிவிழும் இதை பார்த்த தினகரன் பயந்து தான் போனான். தன் வாழ்க்கை போல தன் குழந்தையைும் வாழ வேண்டுமா என்று நினைத்தவன் சின்னபொண்ணுவை மிரட்ட “ நீ இப்படி குழந்தையை தேவையில்லாம அடிச்சா உன்னை வீட்ட விட்டு அனுப்பிடுவேன் “ என்று மிரட்ட தான் சொன்னான் ஆனால் அவன் மனைவியோ
“ ஓ எப்படி என்ன அனுப்பிட்டு வேற எவளையோ கல்யாணம் பண்ணிட்டு உன் பெண்ணோட சந்தோஷமா வாழ்வ அதை நான் வெடிக்க பார்ப்பேன்னு நினச்சியோ?” என்று சேலையை உதறி விட்டு அவனை பார்த்து சோபாவில் அமர்ந்தவள் “ என்ன அனுப்பினா குழந்தையையும் சேர்த்துத்தான் கூட்டிப்போவேன் பெண் குழந்தை அம்மா கூட தான் வளரனும்னு தெரியும் தான படிச்சவன் தானே உனக்கு தெரியாததா? அதுக்கு அப்பறம் என்ன, உன் பொண்ணை உன் கண்ணில்ல படாதபடி ஆக்கிடுவேன் புரியுதா “ என்று பேசிவிட்டு டிவியை பார்க்க தொடங்க பயந்து தான் போனான் தினகரன்.
இப்படியே நாட்கள் செல்ல தன் பெண்ணுக்காக அவள் செய்யும் அனைத்தையும் சகித்து கொண்டு வீட்டில் இருந்தான். வருடம் போக போக சின்ன பொண்ணு, ப்ரியாவை நிறைய அடிக்க தொடங்கினாள். அவள் சொல்லும் வேலை செய்தாலும் அடி விழும் செய்யவில்லை என்றாலும் அடி விழும். இப்படி இருந்த ப்ரியா அம்மா என்றாலே பயப்படுவாள். அப்பா எப்போது வருவார் என்று பயந்து பயந்து இருப்பாள் . இப்படியே ஏழு வருடம் சென்று இருக்கும் பிரியா பள்ளியில் இருந்து தந்தையுடன் வீட்டிற்கு வந்தவள் கண்டது அவள் அம்மா ஹாலில் நெஞ்சை பிடித்தபடி இறந்து இருந்ததைத்தான்.