இன்று தான் முதல் முறையாக சக்தீஸ்வரனின் அறையில் இருக்கும் அந்தக் கண்ணாடி ஜன்னலைக் காண்கிறாள்.
அதனைப் பார்வையிட்டவளுக்கு எப்படி அன்று சக்தி தான் நிற்பதை அறிந்து பாடலின் ஓசையை அதிகரித்தான் எனப் புரிந்தது.
அந்த ஜன்னலின் கண்ணாடியில் அறையிலிருந்து பார்த்தால் மறுபக்கமுள்ளவர்கள் தெரிவார்கள் ஆனால் வெளிப்புறத்திலிருந்து பார்த்தால் அவர்களின் முகம் தான் தெரியும். வீட்டினுள்ளே இருப்பவர்கள் தெரிய மாட்டார்கள். இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட அந்த கண்ணாடி ஜன்னலின் வழியாகத் தான் தனது வீட்டைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் இளவஞ்சி.
“உங்களுக்கு கால் வலிக்கப் போகுது உட்காருங்க” என்று சக்தியின் கையைப் பற்றியவாறு மெத்தையில் அமர வைத்தவள், அதனருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
அந்த அறையைச் சுற்றி சுழன்ற கண்கள் அவன் மீது வந்து நிற்க, மென்னகையுடன் தன்னையே பார்த்திருந்தவனின் கண்களைச் சந்திக்க தடையிட்ட நாணத்தைத் தனக்குள்ளேயே ஒளித்து வைத்தவளாய், “என்ன அப்படி பார்க்கிறீங்க?” எனக் கேட்டாள்.
“இந்த தங்கப்பொண்ணு எனக்கே எனக்கானு பார்த்துட்டு இருக்கேன்” எனக் கூறி கண் சிமிட்டினான்.
“நான் ஒன்னும் வெட்கப்படலை” என்று வீராப்பாய் நிமிர்ந்து அவன் முகத்தினைப் பார்த்தவாறு அமர,
“அப்படியா? அப்ப ஒரு சேலஞ்ச்! தொடர்ந்து ஒரு நிமிஷம் நீ என் கண்ணைச் சிமிட்டாம பார்த்துட்டே இருக்கனும்! சரியா?” என்றான்.
“ஓகே சேலஞ்ச்! உங்களைப் பார்க்க எனக்கென்ன கஷ்டம்? அதெல்லாம் அசால்ட்டா செய்வா இந்த வஞ்சி” எனக் கூறியவளாய் மெத்தையில் அவன் எதிரே வந்து அமர்ந்தாள்.
“சரி டைமர் வைக்கிறேன்” என்று சுவாரஸ்யமான பாவனையுடன் கைபேசியை அவன் எடுக்க, “சரி சேலஞ்ச்னு சொல்றீங்க! வின் பண்ணா என்ன தருவீங்க?” எனக் கேட்டாள்.
“நான் தான் என்னையே தரேனே” என்று அவன் சிரிக்கவும்,
“ஆஹான் இதெல்லாம் போங்கு” என்று உதட்டைச் சுழித்தாள் அவள். அவளின் சுழித்த உதட்டின் மீதே அவனது பார்வை வட்டமிட, அவனின் தாடையைப் பிடித்து தனது கண்களைப் பார்க்கச் செய்தவள்,
“நான் கேட்குற இடத்துக்கு கூட்டிட்டுப் போகனும். இப்ப இல்ல! உங்க கால் சரியான பிறகு! சரியா” எனக் கேட்டாள்.
சரியெனத் தலையசைத்தவன் பார்வை தனது தாடையில் இருந்த அவளின் கைகளில் இருந்தது. அந்த உரிமையான செயல் அவனை மகிழச் செய்தது.
அவன் பார்வையின் பொருளில் கைகளைச் சட்டென அவள் அகற்றிக் கொள்ள, அதனைப் பற்றியவனாய், “என்கிட்ட நீ இயல்பா இருக்கலாம் வஞ்சி” என்றான்.
முதல் முறையாக இத்தனை நெருக்கமாக அவனுடன் இருக்கிறாள். இந்த அண்மை அவளைக் கூச்சங்கொள்ளச் செய்தது.
“ரெடியா? ஸ்டார்ட் செய்யலாமா?” எனக் கேட்டவன் அவளின் தலையசைத்தலில் டைமரை இயக்கி விட்டு வைத்தான்.
இத்தனை நெருக்கமாக அவனது முகத்தை இன்று தான் முதன் முதலாக பார்க்கிறாள். எப்பொழுதும் எழும் அதே உணர்வு. தனக்கு மிகுந்த பரிச்சயமான, தான் அனுதினமும் கண்டு ரசித்த முகம் என்ற அதே உணர்வு இப்பொழுதும் அவளை ஆட்கொள்ள, நெகிழ்வுடன் அவனது கண்களைப் பார்த்திருந்தாள்.
முதலில் அவனின் கண்களில் உள்ள கருவிழியில் பார்வையை வைத்தவளுக்கு, உள்ளுக்குள் சில்லிட்டாலும் காண்பிக்காது அமைதியாகப் பார்த்திருந்தவள் கருவிழியைச் சுற்றியுள்ள காபி நிற வட்டத்தைப் பார்க்க,
“தங்களின் கண்களுக்குள்ளேயே நான் அடைக்கலமாகி விட மனம் ஏங்குகிறது தேவி” அவளின் காதினில் இந்த வரிகள் கேட்க, அப்படியே சுருள் சுருளாய் சென்ற காட்சிகளுடன் பயணித்தவளின் பார்வைக்குப் படமாக ஓடின அந்த காட்சிகள்.
சக்தியின் பார்வைக்கு வஞ்சி தனது கண்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதாய் தெரிந்தாலும், வஞ்சியோ படமாய் கண்முன் விரிந்த காட்சிகளைப் பார்த்தவாறு இருந்தாள்.
பெரிய கோபுரத்துடன் கூடிய ஒரு கோவில் அவள் கண் முன்னே தெரிந்தது.
“அரி ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
அரி ஓம் நமோ நாராயணா”
கரங்களைக் கூப்பியவளாய் கண்களை மூடியவாறு ஆழ்ந்த பக்தியுடன் மூன்று கல் மூக்குத்தி மூக்கில் பளபளக்க தேன் குரலில் மூல ஸ்தானத்தில் இருந்த பெருமாளைத் துதி செய்து கொண்டிருந்தாள் அவள்.
‘இது என்ன? எப்பவுமே நாம நமசிவாய மந்திரம் தானே சொல்லுவோம். இன்னிக்கு ஏன் நாராயண மந்திரம் சொல்றோம். அட தாவணி கட்டிருக்கோம்’ சக்தி முன் அமர்ந்திருந்த வஞ்சி மனதினுள் நினைத்துக் கொண்டவாறே கண் முன் தெரிந்த காட்சிகளோடு மூழ்கிப் போனாள்.
தீபாராதனையைக் கண்டு களித்து கண்களில் ஒற்றி எடுத்தவள் பூக்கூடையைக் கையில் வாங்கியவளாய் நகர்ந்தாள்.
“முத்தரசி” என அழைத்தவாறு அவளின் முன்னே வந்து நின்றாள் ஒரு பெண்.
‘என் பேரு முத்தரசியா? இது என்ன வேற ஜென்மமா? நான் ஏன் தாவணி கட்டிருக்கேன்? சின்ன பொண்ணா வேற தெரியுறேனே’ மனதினுள் எழுந்த கேள்விகளோடு அந்தக் காட்சியை பார்த்திருந்தாள் இளவஞ்சி.
“என்னடி மதி இன்று சூரியன் சுட்டுவிட்டதோ! வியர்வையில் குளிர்த்திருக்கிறாயே” நகைப்புடன் நிறைமதியை கேட்டாள் முத்தரசி.
“உன்னைத் தேடி ஓடி வந்ததனால் உண்டான வியர்வையடி இது! என்னை விட்டு வந்து விட்டாயே பெருமாளைத் தரிசிக்க?”
“பின்னே கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே வந்தால் தான் எழுந்திருப்பேன் என்று நீ அடம்பிடித்து உறங்கினால் நான் என்ன செய்வது? அன்றாடம் பூரண அலங்காரத்துடன் இந்த பூரணனைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாம், அவரிடம் அலட்சியமாய் இருக்கலாமா கூறு?” கண்டனத்துடன் கேட்டாள்.
“தவறு தானடி! இனி நானும் விரைவாய் உறங்கி எழ முயல்கிறேன்” என்றாள் நிறைமதி.
“நீயும் இவ்வாறு தான் அனுதினமும் கூறுகிறாயடி” நிறைமதியின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் முத்தரசி.
‘ஹே இது நம்ம ஜானகில’ காட்சியில் தெரிந்த நிறைமதியைக் கண்டு வியந்தன இளவஞ்சியின் கண்கள்.
திடீரென்று கேட்ட அந்த கணீர் குரலில் உடலில் புல்லரிக்க, “யாரடி அது! நாராயணர் சன்னதியில் ஈசனைப் பூஜிப்பது?” எனக் கேட்டவாறு குரலின் ஓசை வந்த பாதை நோக்கி நடையிட்டாள்.
“நம் பெருமாள் கோவிலில் சிவன் சன்னதி உண்டல்லவா! அங்கு தான் யாரோ ஈசனைப் பூஜிக்கிறார்கள் போலும்” என்றாள் நிறைமதி.
இதை பார்த்திருந்த இளவஞ்சியோ, ‘அட இது நம்மாளோட குரல்! முத்தரிசி பொண்ணு இப்ப தான் அவரைப் பார்க்க போகுதா? அப்ப அவர் எல்லா ஜென்மத்துலயும் சிவனைத் தான் வணங்கினாரா? நான் தான் சைவம் வைணவம்னு மாறி மாறி பிறந்துட்டேனா?’ மனதோடு எண்ணியவளாய் காட்சிகளைப் பார்த்திருந்தவள் கண்ட காட்சியில் உள்ளம் பூரித்து அடங்கியது.
பெரிய சிவலிங்கத் திருமேனியின் முன்பு, இடையில் வேட்டியும், உடல் முழுவதும் ஆங்காங்கே மூன்று பட்டையான திருநீறும் முகத்தில் நிறைந்த பக்தியுமாக கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் சிவாய மந்திரத்தை உச்சரித்தவாறு அமர்ந்திருந்தவனைக் கண்டு புல்லரித்தது இளவஞ்சிக்கு.
அத்தனை கம்பீரமான முகத்தோற்றம். அடர்ந்த மீசைக்கு அடியில் அழுத்தமான உதடுகள். நெற்றியில் மூன்று பட்டையான திருநீறும் மத்தியில் குங்குமமும் அவன் முகத்தில் தெய்வீகக் களையைக் கூட்டியிருந்தது.
முத்தரிசியும் நிறைமதியும் சிவலிங்கத்தின் முன் வந்து நின்றதுமே அவனின் குரலில் கட்டுண்டவர்களாய் அப்படியே நின்று விட்டனர்.
முத்தரசியின் கண்கள் அவனின் முகத்தைத் தாண்டி நகரவில்லை. அவனின் கம்பீரமான குரலும் தோற்றமும் அவளைக் கவர்ந்திழுக்க, பார்வையை நகர்த்தாது இமை சிமிட்டாமல் அவனைப் பார்த்திருந்தாள் முத்தரசி.
முத்தரசியின் பார்வையில் தெரிந்த மையலில் தோழியின் தோளைத் தொட்ட நிறைமதி, “ஈசனின் அடியவர் ஈர்த்து விட்டாரே எங்களின் முத்தரசியை” என்று காதோடு கேலியாக உரைத்தாள்.
அன்றாடம் பெருமாளின் அலங்காரத்தை ரசிக்கும் இந்த கண்கள் இன்று ஈசனின் அடியவரை ரசித்து விட்டதே!
குற்றவுணர்வு கோபத்தை விளைவிக்க, சட்டென முகத்தைத் திருப்பி தோழியை தீப்பார்வை பார்த்து வைத்த முத்தரசி,
“பெருமாளின் அழகிற்கு எம்பெருமான் ஈசன் கூட நிகராகார் மதி! எவ்விதம் ஈசனின் அடியவரின் அழகிற்கு மயங்கி நிற்பேன் நான்” என்றவளாய் மதியின் கைப்பிடித்து அங்கிருந்து நகர்ந்து செல்ல, இதனைக் கேட்டு கண் விழித்த ஈசனின் நேசனான சிவநேசன் முத்தரசியைக் கோபக்கனலுடன் பார்த்தான்.
கண் முன்னே விரிந்த காட்சியில் கண்ட கோப முகமே இளவஞ்சியைப் பயங்கொள்ளச் செய்ய, சட்டெனக் கண் சிமிட்டி விட்டாள் இளவஞ்சி.
“ஹே நான் தான் வின்! நான் தான் வின்” என்று சந்தோஷத்தில் துள்ளிய சக்தீஸ்வரன் காலைத் தரையில் அழுத்தி வைக்க, ஆஆஆஆ என அலறி வலியில் துடித்தவனாய் காலைத் தூக்கி மெத்தையில் வைத்தான்.
அவனின் துள்ளலிலும் அலறலிலும் தன்னிலை வந்தவளாய், “அச்சோ என்னாச்சு?” என்று அடிப்பட்ட அவனது பாதத்தில் இருந்த கட்டில் மென்மையாய் தடவிக் கொடுத்தவள், “ஊஃப் ஊஃப்” என ஊதிவிட்டவாறே, “ரொம்ப வலிக்குதா?” எனக் கேட்டாள்.
அவளின் செய்கையில் வலியை மீறி முறுவலித்தவனாய், “வலிக்குது தான். ஆனா பரவாயில்லை” என்றான்.
அவளின் கைப்பிடித்து தன்னருகில் அமர வைத்து தோளில் கைப் போட்டவனாய், “நான் தான் வின் பண்ணேன். எனக்கு என்ன தருவ?” எனக் கேட்டான்.
“நீங்க தான் வின் பண்ணா என்ன வேணும்னு சொல்லலியே!” என்றாள் அவள்.
“சரி இப்ப சொல்லவா?” அவளின் உதட்டினில் பார்வை பதித்தவனாய் அவன் கேட்க,
உள்ளுக்குள் உதறலிட்ட மனதை மறைத்தவளாய் அவனது கையினைத் தோளிலிருந்து எடுத்து விட்டு தள்ளி அமர்ந்தவாறு, “சொல்லுங்க” என்றாள்.
அவளின் பயந்த பார்வையிலும் எச்சரிக்கை நடவடிக்கையிலும் சிரித்தவனாய்,
“உன் மடியில படுத்துக்கவா?” எனக் கேட்டான்.
“என்னது?” தான் சரியாக தான் கேட்டோமா என்ற கேள்வியுடன் அவனை அவள் பார்க்க,
“உன் மடியில படுத்துக்கவானு கேட்டேன்” ஒவ்வொரு வார்த்தையாய் அழுத்திக் கூறினான்.
சரியெனத் தலையசைத்தவள் அவன் தலை வைப்பதற்கு ஏதுவாக அமர்ந்தாள்.
காட்டன் சல்வார் அணிந்திருந்தவளின் மெத்தென்ற தொடை மீது தலையை வைத்தவன் பஞ்சு மெத்தையின் சுகத்தை உணர்ந்தவனாய் கண் மூடியிருந்தான்.
அவளுக்கு தற்போது தான் கண்ட காட்சிகளே மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
‘இப்படியும் கனவு வருமா என்ன? இது தான் கண்ணைத் திறந்துட்டே கனவு காணுறதோ’ எனச் சிந்தித்தவளாய் அவனின் தலை கோதியவள், “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்” என்றாள்.
கண் மூடிய நிலையிலேயே, “ம்ம்ம் கேட்கலாமே” என்றான்.
“அந்த கிஃப்ட்? அந்த பெயிண்டிங்? எப்படி அந்த ஐடியா வந்துச்சு உங்களுக்கு? அந்தப் பொண்ணு அப்படியே என்னை மாதிரியே இருந்துச்சே! எப்ப அதை பெயிண்ட் செய்ய சொன்னீங்க?” எனக் கேட்டாள்.
தன்னைப் போல் அவனுக்கும் கனவு வருகிறதா எனத் தெரிந்து கொள்ளவே இவ்வாறு கேட்டாள்.
“நான் சிவனை கும்பிட ஆரம்பிச்ச பிறகு எனக்கு எந்த மாதிரியான மனைவி வருவானு தொடர்ந்து அவர்கிட்ட கேட்டுட்டே இருந்தேனா அப்ப வந்த கனவு இது” என்றவுடன்,
‘என்னது இவருக்கும் கனவு வருதா?’ என்று நினைத்தவாறு, “என்னது கனவா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“ஆமா வஞ்சி! ஒரே ஒரு நேரம் கனவு வந்துச்சு! அந்த கனவுல பார்த்ததை அப்படியே பெயின்ட் செஞ்சி வாங்கி வச்சேன். நாலு வருஷமாச்சு. இதை மறந்தே போய்ட்டேன். அன்னிக்கு உன்னை கோவில்ல பார்க்கும் போது கூட உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு நினைச்சேன். உன்னோட மூக்குத்தி எனக்கு ரொம்ப பரிச்சயமான மாதிரி இருந்துச்சு” என்றதும்,
“என்னது மூக்குத்தியா?” என்று அவள் கேட்க,
“ஆமா அன்னிக்கு தான் அப்படி போட்டிருந்த! அப்புறம் நீ மூக்குத்தி போட்டு நான் பார்க்கவே இல்லை. ஏன் போடலை? உனக்கு அந்த மூக்குத்தி தனியழகை கொடுத்துச்சு” என்றான்.
“அய்யோ நான் மூக்கு குத்தவே இல்லங்க! பாருங்க” என்றவள் கூறியதும் கண் விழித்து பார்த்தவனுக்குப் பெருத்த ஆச்சரியம்.
“ஈஸ்வரா” என்றவனாய் எழுந்து அமர்ந்தே விட்டான்.
“நீ அன்னிக்கு மட்டும் மூக்குத்தி போட்டிருந்ததா நினைச்சிட்டு இருந்தேன் வஞ்சி. ஆனா அன்னிக்கு உன்னை கோவில்ல பார்த்தப்ப கூட இந்தக் கனவு எனக்கு ஞாபகம் வரலை. ஆனா இங்கே அழுகையோட உங்க தோட்டத்துல இருந்து என்னைப் பார்த்தல்ல என் மனசுல அவ்ளோ வலி. நீ அழுதா ஏன் எனக்கு வலிக்குதுனு புரியாம புலம்பிட்டுப் படுத்துட்டேன். அடுத்த நாள் தான் அதுக்கான விடையாக இந்த பெயிண்ட்ங்கை ஏதேச்சையாக எதையோ தேடிப் போய் இதைப் பார்த்தேன். நீ தான் என் மனைவினு அன்னிக்கு முடிவு செஞ்சேன்”
“எவ்ளோ ஆச்சரியம் பாரேன். நாம இரண்டு பேரும் இணைவது இறையோட சித்தம்னு எவ்ளோ அழகா உணர்த்திருக்காரு என் ஈசன்” என்றவனின் நெஞ்சம் நெகிழ, கண்கள் அவரின் அருளை எண்ணிக் கலங்கியது.
“பாரு எனக்கு புல்லரிக்குது!” எனத் தனது கைகளை நீட்டிக் காண்பித்தவன்,
“இப்பவே அவரைப் போய் பார்க்கனும் போல இருக்கு! ஒரு வாரமாச்சு அவரைப் பார்த்து” என்றதும் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“அச்சோ என்னங்க இது?” என்றவாறு அவனது கண்களை அவள் துடைக்க,
“என்னுடைய பலம் பலவீனம் எல்லாமே ஈசன் தான் வஞ்சி. என்னப்பன் அல்லவானு பாடும் போது அவரை என் அப்பனாவே தான் நினைச்சு பாடுவேன். அதான் என் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் அவரின் செயல்னு தீர்க்கமா நம்புறேன் வஞ்சி” என்றவன் குரலை செருமியவனாய்,
“நாளைக்கு நம்ம கல்யாணத்துல தம்பதியாக போய் அவரைப் பார்க்கலாம்” சிரித்தவாறு உரைத்தவன் அவள் மடியில் மீண்டுமாகத் தலை சாய்த்துக் கொண்டான். ஈசனின் அருளை எண்ணி மனம் நெகிழ்ந்து கிடந்தது அவனுக்கு.
‘அப்ப எனக்கு மட்டும் தான் இந்த கனவுலாம் வருதா? இப்ப பார்த்தது கனவு கூட இல்லையே! எல்லா ஜென்மத்துலயும் இவருக்கு தான் நான் மனைவியா வரேனா?’ மனதினுள் எழுந்த கேள்வியுடன் தலை கோதியவளின் ஸ்பரிசத்தில் உறங்கிப் போனான் சக்தீஸ்வரன்.
*****
மறுநாள் காலை திருவேற்காடு சிவன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவர்களுக்கான திருமண பந்தலில் காலை நீட்டியவாறு நாற்காலியில் அமர்ந்திருந்தான் சக்தீஸ்வரன்.
பட்டு வேஷ்டி சட்டையுடன் கல்யாண களையுடன் அமர்ந்திருந்தவனின் அருகில் அவனது குடும்பத்தினர் அனைவரும் நின்றிருக்க, மேனகாவும் ஜானகியும் இளவஞ்சியை அழைத்து வந்தனர்.
இளவஞ்சியின் முகத்தில் இருந்த அந்த மூன்று கல் மூக்குத்தியை பார்த்தவனுக்கு மனதினுள் இனம்புரியாத மகிழ்ச்சி. தனக்கு மட்டும் காட்சியளிக்கும் அந்த மூக்குத்தியை கண்டு பிரமிப்பு அவனுக்கு.
அவனை நிமிர்ந்தும் பாராது இவனருகே தரையில் அமர்ந்தவள் ஐயர் கூறிய மந்திரத்தை உரைத்து விட்டு எழுந்து நின்றாள்.
ஐயர் அவன் கையில் தாலியை கொடுக்க, தனது கழுத்தினில் கட்டுவதற்கு ஏதுவாக அவனருகே தலையைத் தாழ்த்தி நின்றவளின் பார்வையில் அவள் கனவினில் கண்டது போன்ற அதே திருநீறு பட்டையுடன் கம்பீரமாய் அவன் காட்சியளிக்க, இவளைப் பார்த்த அவனின் பார்வைக்கும் அவள் அவ்வாறே மூன்று கல் மூக்குத்தியுடன் சுந்தரியாய் காட்சியளித்தாள்.
ஐயரின் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற வார்த்தையில் நாதஸ்வர மேளம் முழங்க, பூ மழை தூவ, அவளின் கழுத்தினில் தாலியைக் கட்டியவனின் கண்களில் நீர் பொங்க, இவளின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.
நீண்ட நெடுங்காலமாய் காத்திருந்து அடைந்த பொக்கிஷமாய் இருவரின் மனதும் இனம்புரியாத வலியுடனான மகிழ்வில் நெகிழ்ந்திருக்க, உதடு துடிக்க அவனைப் பார்த்து அழுதவளை தன்னையும் மீறி இடையோடு அணைத்து உடல் குலுங்க அழுதிருந்தான் சக்தீஸ்வரன்.
குனிந்தவாறு அவன் தோளில் அவளும், அவளின் வயிற்றில் அவனும் முகத்தினைப் புதைத்திருக்க, குலுங்கிய அவர்களின் உடலை வைத்து தான் அழுகிறார்கள் என்றே புரிந்தது அனைவருக்கும்.
நீண்ட காலக் காத்திருப்பு கைகளில் கிட்டிய உணர்வில் அழுதிருந்தனர் இருவரும்.
எதற்காக அவர்களின் கண்ணீர் பெருகி வழிகிறதென அறியாதவர்களாய் அழுதார்கள் இருவரும். பொருள் விளங்கா மனத்தின் உணர்வுகளுக்கு கண்ணீர் பாதை அமைத்திருந்தது.
தனது திருவடியில் பணிந்து நின்றவர்களை புன்னகையுடன் ஆசிர்வதித்திருந்தார் எம்பெருமான் ஈசன்.