அத்தியாயம் 12

“இந்தா இந்தப் புடவையை சீக்கிரமா கட்டிட்டு வா! வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்காம நில்லு” என்று பட்டுப் புடவையை அவளின் கையினில் திணிக்க, அதிர்ச்சியும் கோபமுமாய் கண்களில் நீருடன் தாயைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி.

“என்ன பார்க்கிற? சீக்கிரம் மாத்திட்டு வா! இன்னிக்கு பூ வைக்கிற மாதிரி ஒப்பு தாம்பூலம் தான் மாத்துறாங்க. நிச்சயதார்த்தம் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நடக்கும்” என்று வசந்தா அவசர அவசரமாகக் கூற,

“ம்ம்மாஅஅஅ என்னம்மா நடக்குது இங்க?” எனக் கேட்டவாறு அங்கு வந்து நின்றாள் மங்கை.

“பார்த்தா தெரியலையா? உன் தங்கச்சிக்கு ஒப்பு தாம்பூலம் மாத்தி பூ வைக்க வந்திருக்காங்க” என்றார் வசந்தா‌‌.

“ஏன்மா முன்னாடியே சொல்லலை?” என்று மங்கை கேட்க,

“ஏன் சொல்லனும்? நீ உன் தங்கச்சிக்கிட்ட சொல்லி எப்படி இதை நிறுத்தலாம்னு பிளான் செய்றதுக்கா! எனக்கு உன் தங்கச்சி பத்தி தெரியும். உன்னை மாதிரி இல்ல அவ! வாக்குக்கு மதிப்பு கொடுத்து நடக்கிறவ அவ! இது தான் பையன்னு தாம்பூலம் மாத்திட்டா அதுக்கு பிறகு இதுலருந்து விலகனும்னு நினைக்க மாட்டா! வாழ்வோ சாவோ அவன் கூட தான் இனி நம்ம வாழ்க்கைனு மனசைத் தேத்திப்பா! பொண்ணு பார்த்த அன்னிக்கே தாம்பூலம் மாத்திட்டு போவாங்கனு நினைச்சேன். சரி எப்படியோ இப்ப வந்துட்டாங்களே! ஒழுங்கா உன் தங்கச்சிக்குப் புடவையைக் கட்டிக்கிட்டு கூட்டிட்டு வா” என்று உரைத்து விட்டு சென்று விட்டார் வசந்தா.

தனக்கெனத் தனது வாழ்விற்கெனத் தான் வைத்திருக்கும் கொள்கைகளை வைத்தே தன்னைக் கூண்டிற்குள் அடைக்கப் பார்க்கும் தாயின் புத்தியினை எண்ணி விரக்தியாகச் சிரித்துக் கொண்டாள் இளவஞ்சி.

“ஏன் அக்கா! குடும்பத்துக்காகத் தியாகம் செஞ்சி வாழுறதுக்காக மட்டும் தான் பொண்ணா பிறந்திருக்கோமா என்ன? குடும்பத்துக்காக எதுனாலும் செய்வேன்றதுக்காக எனக்குப் பிடிக்கலை வேண்டாம்னு சொல்றதையே என் மேல திணிக்கிறது எந்தவிதத்துல நியாயம்? எனக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை வாழனும்னு ஆசை! எந்த மாதிரியான‌ பையனைக் கட்டிக்கனும்னு ஆசைனு ஏதாவது அவங்களுக்குத் தெரியுமா? அவங்களுக்கு இந்த வீடு வேணும். மாப்பிள்ளை மூலமா வர்ற பணம் வேணும்னு எனக்குப் பிடிக்காத வாழ்க்கைக்குள்ள தள்ளுறது எந்தவிதத்துலக்கா நியாயம்?”

இத்தனை நாட்களாய் மனதினுள் பொருமிக் கொண்டிருந்ததை இன்று தாயின் செய்கையில் அடக்கமாட்டாமல் கதறலாய் கூறியிருந்தாள் இளவஞ்சி.

தங்கையின் கண்ணீரைத் துடைத்தவளாய், “நீ சக்தி அண்ணாக்கு கால் பண்ணி வரச்சொல்லு வஞ்சி” என்றாள் மங்கை.

அக்கா என்று அதிர்ச்சியுடன் வஞ்சி பார்க்க, “நீ சக்தியைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும். அவர் அன்னிக்கு ஏன் கோபமா பூந்தொட்டியைத் தூக்கிப் போட்டாருனு சந்தேகம் வந்துச்சு. அடுத்து மேனகா வந்து உன்கிட்ட பேசினது, அதுக்கு பிறகான உன்னோட நடவடிக்கைகள்லாம் கவனிச்ச பிறகு தான் தெரிஞ்சிது. நானும் ஒருத்தனைக் காதலிச்சிட்டுப் போராடிட்டு இருக்கவ தானே! உன் நிலைமை எனக்கு புரியுது வஞ்சி” என்றாள்.

அக்காவை ஆசுவாசத்துடன் பார்த்தவள் சக்தீஸ்வரனுக்கு அழைத்தாள்.

இளவஞ்சி தனது கைபேசியில் இருந்து அவனுக்கு அழைக்க, அனைத்தும் தவறிய அழைப்புகளாகவே சென்றது.

“எடுக்க மாட்டேங்கிறார்க்கா” என்றவள் கூறிய சமயம் உள்ளே வந்த திருச்செல்வம்,

“இன்னும் ரெடி ஆகாம அப்படி என்ன அக்காவும் தங்கச்சியும் உலக நடப்பைப் பத்திப் பேசிட்டு இருக்கீங்க?” சந்தேகமாய் இருவரையும் பார்த்தவன்,

“இரண்டு பேரும் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்ற மாதிரியே தோணுது எனக்கு” என்றவனாய் கண் இமைக்கும் நேரத்தில் அவர்களின் கையிலிருந்த கைபேசியைப் பிடுங்கி விட்டு சென்று விட்டான்.

“டேய் திரு” முகப்பறையில் இருந்தவர்களின் காதுக்கு எட்டாத வகையில் மங்கை அழைக்க, அது அவன் காதுக்குமே எட்டவில்லை.

“சரியான பிசாசு! எனக்குனு வந்து தம்பியா பொறந்திருக்குப் பாரு” என்று மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டாள் இளவஞ்சி.

“நாம இப்ப எது செஞ்சாலும் வந்தவங்க நம்ம குடும்பத்தைத் தான் தப்பா பேசுவாங்க. அதனால இப்போதைக்கு நீ புடவையைக் கட்டிக்கிட்டு அவங்க முன்னாடி போய் நில்லு! அவங்க கிளம்பியதும் சக்தியை வந்து அம்மாகிட்ட பேச சொல்வோம்” என்றாள் மங்கை.

“மனசுல ஒருத்தரை வச்சிக்கிட்டு எப்படிக்கா இன்னொருத்தர் முன்னாடி போய் நிக்கிறது” ஒவ்வாத உணர்வுடன் இளவஞ்சி கூறிக் கொண்டிருக்க,

“இன்னும் ரெடியாகாம எதுக்கு கண்ணுல தண்ணீர் வச்சிட்டு இருக்க நீ? அங்கே வந்து நம்ம குடும்ப மானத்தை வாங்குற மாதிரி ஏதாவது செஞ்சி வச்சீனா அவ்ளோ தான் சொல்லிட்டேன்!” என்ற வசந்தா இளவஞ்சியின் அருகில் வந்து அவளின் தாடையைப் பற்றியவராய்,

“அம்மா உனக்கு நல்லது தான்மா செய்வேன். அந்தப் பையன் ரொம்ப நல்லவன்மா! அது நல்ல குடும்பம். நிறைய சொத்துள்ள பாரம்பரியமான குடும்பம். இரண்டாம் தாரம்னு அதை மட்டுமே யோசிக்காத! மத்த நல்ல விஷயங்களை பாருமா. உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் பல வகையில் இந்த கல்யாணம் நல்லதா அமையும். அம்மாக்காக கிளம்பி வாமா” என்று கெஞ்சிக் கொஞ்சியவாறு உரைத்து விட்டு வெளியே சென்றார்.

எவ்வகையிலும் இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லாமல் போக, இளவஞ்சி தாய் அளித்த புடவையை அணிந்து கொண்டு சபையினர் முன் சென்று நின்றாள்.

வந்திருந்த பெரியோர்கள் முன் அவளை வணங்கச் சொல்லவும், அமைதியாக வணங்கி எழுந்தவளின் கரம் சில்லிட்டிருந்தது‌. இந்தச் சூழலில் தன்னைச் சிக்க வைத்த தாயை எண்ணி கடுங்கோபம் வந்தது அவளுக்கு.

அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும் தான் சக்திக்குச் செய்யும் துரோகமாகவே அவளுக்குத் தோன்ற, இதற்கு மேலும் முடியாதென அவளின் மனம் அவளை உந்தித் தள்ள, தன்னைத் திடப்படுத்திக் கொண்டு குரலைச் செருமினாள்.

“நான் இப்ப உங்க எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க விழுந்து வணங்கலை. எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்கனு சொல்ல தான் வணங்கினேன்” என்றவள் கை எடுத்துக் கும்பிட்டவளாய்,

“என்னை மன்னிச்சிடுங்க! எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. மணிகண்டன் நல்லவர் தான். ஆனா அவருக்கு ஏத்த பொண்ணு நான் இல்லை. நான் ஏற்கனவே வேறொருத்தரை விரும்புறேன். மணிகண்டனைப் பார்த்த அன்னிக்கு தான் அவரையும் பார்த்தேன். எனக்காகவே பிறந்தவரா தான் அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோணுச்சு. அவரை தவிர யாரையும் என் கணவரா என்னால ஏத்துக்க முடியாதுன்ற நிலைல தான் இப்ப இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க மணிகண்டன்” அவளின் கண்கள் அவனிடம் கெஞ்சியது.

சபையில் சலசலவென அனைவரும் பேசிக் கொள்ள, “உங்களைக் கூட்டிட்டு வந்து அவமானப்படுத்திட்டோம்னு மட்டும் நினைச்சிடாதீங்க பிளீஸ்” அவளின் கண்கள் இன்னுமே மணிகண்டனின் மீது தான்‌ இருந்தது. கூப்பிய இரு கரங்களையும் இறக்கவில்லை அவள்.

நிர்மலமான முகத்துடன் அவளை மணிகண்டன் பார்த்திருந்தாலும், மனதிற்குள் ஏமாற்றத்தின் வலி.

“ஏன்மா இப்ப இவ்வளோ பேசுறவ எதுக்குமா கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லி எங்களை வர வச்ச?” மணிகண்டனின் தாய் ஆற்றாமையுடன் கேட்க,

அவர்களது கேள்வியின் நியாயம் புரிந்தும் சபையில் தனது தாயை விட்டு கொடுக்க மனமில்லாது அந்தப் பழியை ஏற்று அமைதியாய் நின்றிருந்தாள் இளவஞ்சி.

“இந்த கல்யாணத்துக்கு வஞ்சி சம்மதம் சொல்லவே இல்லங்க. அவங்கம்மா அவளைக் கேட்கவும் இல்லை” என்றவாறு உள்ளே வந்தான் சக்தீஸ்வரன்.

அடர்ந்த தாடியுடன் சோர்ந்த முகமாய் பேண்ட் டீ சர்ட் அணிந்து கைத்தடியின் உதவியுடன் பெரிய கட்டுப் போட்டிருந்த காலை தாங்கி நடந்தவாறு உள்ளே வந்தவனைப் பார்த்தளுக்கு கண்ணீர் பொங்கியது. அவன் தனக்காக வந்தது இன்ப அதிர்ச்சியை அளித்திருந்தாலும், அவனை இந்நிலையில் காண முடியவில்லை அவளால்.

மங்கை ஆசுவாச பெருமூச்சு விட, வசந்தாவும் திருச்செல்வமும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

அவன் கால் வலியினால் தடுமாறியவாறு நிற்க, “பார்த்து சக்தி” என்றவாறு அவனது மறுகையைப் பற்றியவாறு உள்ளே அழைத்து வந்த இளவஞ்சி அவனை நாற்காலியில் அமர வைத்தாள்.

யாரிவன் என்பது போல் மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்திருக்க, “இவர் தான் நான் காதலிக்கிறவரு! சக்தீஸ்வரன்” என்றாள் இளவஞ்சி.

வலியினால் வாடியிருந்த முகத்திலும் பெருமிதம் மின்னியது அவனுக்கு. மென்னகையுடன் அவளைப் பார்த்திருந்தான் சக்தி.

“இது வரைக்கும் உங்களுக்கு நாங்க செஞ்ச நல்லதுக்கு கூட்டிட்டு வந்து நல்ல மரியாதை செஞ்சிட்டீங்க வசந்தா” என்றார் மணிகண்டனின் தந்தை.

“அய்யோ அப்படி இல்லங்க” வசந்தா பதறி ஏதோ கூற வரவும்,

“இந்த வீட்டைக் காலி பண்ணிடுங்க. இதுக்கு மேலயும் உங்களுக்கு நல்லது செய்ற பெரிய மனசு எனக்கு இல்லை” என்றார் அவர்.

“அப்பா” என்று அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாய் தலையசைத்த மணிகண்டன்,

“அப்பா ஏதோ கோபத்துல பேசுறாங்க. நீங்க இங்கேயே இருக்கலாம்” என்றவன் எழுந்து நின்றான்.

“தராதரம் தெரியாம பொண்ணு கேட்டு வந்தது எங்க தப்பு தான்” மனம் பொறுக்காமல் மணிகண்டனின் அம்மா பேச,

“அம்மா” என்று தாயை அதட்டலாய் பார்த்தவன், “அவங்கவங்க வாழ்க்கையை முடிவு செய்ய அவங்களுக்கு உரிமை இருக்கும்மா” என்றான்.

“ஆனா இதுல என்னை எங்க குடும்பத்தை இப்படி நீங்க இழுத்து விட்டுருக்க வேண்டாம். பையனுக்கு ஏதாவது நல்லது நடந்துடாதானு தவம் இருக்கும் என் அப்பா அம்மாக்கு நீங்க கொடுத்திருக்கிறது பெரிய ஏமாற்றம். அவரவர் செயலின் பலனை அவங்கவங்களே அனுபவிச்சு தானே ஆகனும்” என்று வசந்தாவிடம் பொறுமையாக உரைத்தவன்,

“இதுக்கு மேல இங்க யாரும் எதுவும் பேசக் கூடாது. எல்லாரும் கிளம்புங்க” என்றான்.

இந்நிலையிலும் பெண் வீட்டினரை அவர்களின் ஏச்சு பேச்சுலிருந்து காப்பாற்ற முனையும் மணிகண்டனது குணம் சக்தீஸ்வரனையும் இளவஞ்சியையும் நெகிழச் செய்தது.

மணிகண்டன் சக்தியைத் தாண்டிச் செல்லும் போது அவனின் கைப்பற்றிய சக்தி, “உங்களுக்கு எவ்ளோ வேதனையா இருக்கும்னு புரியுதுங்க. ஆனா இதுக்கு வஞ்சி காரணமில்லைனு நீங்க புரிஞ்சிக்கனும். ப்ளீஸ் அவ மேல கோபத்தை வச்சிக்கிட்டு போகாதீங்க” என்று கெஞ்சலாய் கூற, மென்னகை புரிந்தான் மணிகண்டன்.

“பொறாமையா இருக்குங்க உங்க இரண்டு பேரையும் பார்க்க! இப்படியே இருங்க! எனக்கு வஞ்சி மேல கோபம் இல்லை வருத்தம் தான். முன்னாடியே சொல்லிருக்கலாமேன்ற வருத்தம் தான். அது சரி ஆகிடும்!” என்றவாறு கிளம்பிச் சென்றான்.

மணிகண்டன் வீட்டினர் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்ற மறு நொடி, “வீட்டை விட்டு வெளியே போடி” கண்களில் கோபம் மின்ன ஆக்ரோஷமாக உரைத்திருந்தார் வசந்தா.

“அம்மாஅஅஅ” அத்தனை அதிர்ச்சி அவள் குரலில்.

“என்னம்மா இது” மங்கை தங்கைக்காக பரிந்து கொண்டு வர,

“அவளை வீட்டை விட்டு வெளில போக சொன்னேன்” என்றார் வசந்தா.

“இங்க பாருங்க” என்று சக்தி ஏதோ பேச வர,

“நீங்க ஒரு வார்த்தை பேசினாலும் அசிங்கமாகி போய்டும் தம்பி” என்று வசந்தா கூறவும் இளவஞ்சிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வர,

“ஓஹோ அவரை அசிங்கப்படுத்துவியா நீ? அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன் இல்ல அவர் தான் என்ன பண்ணிட்டாரு” என்று கேட்டாள் இளவஞ்சி‌.

தன்னைத் தனது தாய் ஏதும் கூறியிருந்தாலும் அமைதியாக இருந்திருப்பாள். சக்தியைக் கூறியது அவளைப் பொங்க வைத்தது.

“ஒன்னும் தெரியாத என் பொண்ணை ஏமாத்தி இப்படி எங்களை எதிர்த்து பேசுற அளவுக்கு கொண்டு வந்திருக்கானே இது போதாதா? உன்‌ மேல் மலையளவு நம்பிக்கை வச்சிருந்தேனேடி! எல்லாத்தையும் இப்படிச் சுக்கு நூறா உடைச்சிட்டியே! நாங்க இந்த வீடும் இல்லாம தெருவுல தான்‌ நிக்க போறோம். சந்தோஷமா உனக்கு! உன்னோட ஆசை தானே உனக்கு முக்கியமா போச்சு” என்று வசந்தா கண் கலங்கியவாறு பேசிக் கொண்டே போக,

அம்மாவின் அழுகை அவளின் மனத்தை வதைத்தாலும், “மனசுல ஒருத்தரை நினைச்சிக்கிட்டு இன்னொருத்தருக்கு பிராமிஸ் செய்றது பாவம்மா. பேருக்குக் கூட என்னால் அதை செய்ய முடியாதுமா” என்றவள் தாயின் கைகளைப் பிடித்தவளாய்,

“நீ எனக்காக மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொன்னப்ப நான் சக்தியை பார்க்கலமா! அன்னிக்கு மணிகண்டன் என்னைப் பொண்ணு பார்த்துட்டுப் போனப்ப கூட எனக்கு சக்தியை யாருனு தெரியாதும்மா! என்னை நம்பும்மா! இந்த ஒரு வாரத்துல என்னென்னமோ நடந்துடுச்சு! எப்ப அவர் தான் என் கணவர்னு முடிவு செஞ்சேனோ அப்பவே மணிகண்டன்கிட்ட பேசனும்னு நினைச்சிருந்தேன். நீதான் அதுக்குள்ள என்னைக் கேட்காம அவங்க குடும்பத்தை வர வச்சி அந்தக் குடும்பத்தை அசிங்கப்படுத்துற மாதிரி செஞ்சிட்ட!” என்றாள் இளவஞ்சி.

இளவஞ்சியின் கைகளை உதறியவராய், “அவன் தான்‌ வேணும்னு முடிவு செஞ்சிட்டல! கிளம்பு இங்கிருந்து” என்றார் வசந்தா.

அவரின் மனம் கொதித்து கொண்டிருந்தது. எதிர்பார்ப்பின் ஏமாற்றம் மனதில் கொடும் வலியை உண்டு செய்திருந்தது. அனைத்துக்கும் காரணம் மகள் தானென அவள் மீது கடுங்கோபம் உண்டானது.

“அம்மா என் காதலை ஒத்துக்கிட்டு இவ்வளோ வருஷம் காத்திருக்க அனுமதிச்சியே! தங்கச்சி காதலை ஏன்மா ஏத்துக்க மாட்டேங்கிற” எனக் கேட்டாள் மங்கை.

“உன் மேல எந்தவித எதிர்பார்ப்பும் நான் வச்சதில்லை மங்கை. ஆனா இவ மேல பெரிய எதிர்பார்ப்பு வச்சிருந்தேன். நான் சொல்றவனைத் தான் கட்டிப்பானு நினைச்சிருந்தேன். இவ மூலமா இனி ஆயுசுக்கும் சுகமா வாழலாம்னு நினைச்சிருந்தேன். எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சிட்டு எப்படிக் கல்லு மாதிரி நிக்கிறா பாரு” என்று இளவஞ்சியை அடிக்கவே சென்று விட்டார் வசந்தா.

சக்தீஸ்வரன் தடுமாறி எழும் முன்னே திருச்செல்வம் வந்து தாயின் கையைத் தடுத்து பிடித்திருந்தான்.

“அதான் அம்மா வீட்டை விட்டு போகச் சொல்லிடுச்சுல! இன்னும் ஏன் நின்னு அதோட கோபத்தைத் தூண்டிட்டு இருக்க! போ உனக்குப் பிடிச்சவன் கூடயே போய் சந்தோஷமா வாழு” என்றான்.

“இது என்னடா நியாயம்? நான் என்னடா தப்பு செஞ்சேன். நீங்க திடீர்னு ஒருத்தனை மாப்பிள்ளைனு கொண்டு வந்து நிறுத்தினா நான் என்ன‌ செய்றது. எல்லாத்துக்கும் நான் மண்டையை மண்டையை ஆட்டிட்டு நிப்பேன்னு நம்பினேன்னு சொல்றாங்க அம்மா! எனக்குனு மனசு இருக்குனு உங்களுக்கு யாருக்குமே புரியலைல. எனக்கும் நீங்க யாரும் வேண்டாம்”

கண்களில் நீர் நில்லாமல் வழிந்த வண்ணம் இருக்க, “நான் போறேன்! இங்கிருந்து போறேன். நீயா வந்து வீட்டுக்கு வாமானு கூப்பிடுற வரைக்கும் இந்த வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்மா” என்று கண்களைத் துடைத்தவளாய் சக்தியின் கைப்பிடித்து எழுப்பி அவனுடன் எதிர்வீட்டை நோக்கி சென்றாள் இளவஞ்சி.

இளவஞ்சியின் தோளில் கைகளைப் போட்டிருந்தவன், மென்மையாய் தட்டிக் கொடுத்தான். மேலும் அதிகமாக கண்ணீர் பொங்கி வழிந்தது அவளுக்கு.

அந்த தெருவில் பலரும் ஆங்காங்கே நின்று இவர்களைப் பார்த்தவாறு இருக்க, எதிர்வீட்டின் வாசலில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தீஸ்வரனின் தாய் மகேஸ்வரி, இளவஞ்சி தங்களது வீட்டை அடையும் போது அவளின் கண்களைத் துடைத்து அணைத்தவாறு உள்ளே அழைத்து சென்றார்.

இளவஞ்சி சக்தீஸ்வரனின் வாழ்வின் நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் தனது திருவிளையாடலை உணர்த்த அவர்களின் திருமணத்திற்காகக் காத்திருந்தார் எம்பெருமான் ஈசன்.