“மாத்த கூடிய இல்ல அட்ஜஸ் செஞ்சிக்க கூடிய விஷயமா இருந்தா ஓகே ஜானு! ஆனா ஆளே தவறானவரா இருந்தா பிடிச்சவராவே இருந்தாலும் அந்தக் கல்யாண வாழ்க்கை நரகம் தானே ஜானு. அதுக்கு கல்யாணமே செஞ்சிக்காம இருந்துக்கலாமே! சந்தோஷமா வாழுறதுக்குத் தானே வாழ்க்கை ஜானு” என்றவளைத் தழுவிக் கொண்டாள் ஜானகி.

“எல்லாம் வல்ல ஈசன் உனக்கு எல்லாமே நல்லதா தான் அமைச்சு தருவாரு. நான் ராஜாக்கிட்ட சொல்லி சக்தியைப் பத்தி விசாரிக்கச் சொல்றேன். சக்தியோட கார்மெண்ட்ஸ்ல வேலை செய்றவங்ககிட்ட விசாரிக்கலாம். அவர் படிச்ச காலேஜ் அப்புறம் முன்னாடி எங்கேயாவது வேலை பார்த்திருந்தா அந்த ஆபிஸ் இப்படி ஈசியா அப்ரோச் செய்ய கூடிய இடமா விசாரிக்கச் சொல்றேன்” என்றாள் ஜானகி‌.

தனக்கான தோழியின் அன்பிலும் அக்கறையிலும் நெகிழ்ந்து போனாள் இளவஞ்சி.

அந்த மருத்துவமனை நிகழ்விற்குப் பிறகு அவள் சக்தியை சந்திக்கவே இல்லை. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீடு திரும்பியிருந்தான். மேனகா வந்து அவனை பார்த்து விட்டு சென்ற அன்று அவனது உடல்நிலையைப் பற்றி மங்கை இளவஞ்சியிடம் கூறினாள்.

“மேனகா அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சாம் வஞ்சி. ஒரு மாசத்துக்கு பெட் ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காங்களாம். இன்னிக்கு நான் ஆபிஸ் லீவ்னால வீட்டுல இருந்தேனா அந்த பொண்ணு வந்து பேசிட்டு போச்சு” என்றாள் மங்கை‌.

உணர்வற்ற முகத்துடன் இயல்பாய் கேட்பது போல் கேட்டுக் கொண்டாள் இளவஞ்சி‌.

அன்றிரவு அவனிடம் பேச மனம் விழைந்த போதும், வசியக்காரன் என சேமித்து வைத்திருக்கும் அவனது வாட்ஸ்அப்பை எடுத்து பார்த்தவள், அதிலிருந்த அவனது புகைப்படத்தை வருடி பார்த்தவளாய் அப்படியே வைத்து விட்டாள். அவனைக் காண வேண்டுமென மனம் ஏங்கும் நேரங்களில் எல்லாம் இந்த புகைப்படத்தினைப் பார்த்து தான் தன்னைத் தேற்றிக் கொள்வாள் இளவஞ்சி.

அவனைப் பற்றி விசாரித்து ஜானகி அளிக்கும் தகவலுக்காகக் காத்திருந்தாள்.

அவன் தன்னை அழைக்காமல் தன்னிடம் பேசாமல் இருப்பதும் அவளுக்கு கவலையை அளித்த போதும், அவன் பேசினால் கண்டிப்பாகத் தனது மனத்திடம் உடைந்து விடும் என்ற எண்ணத்தில் இதுவும் நன்மைக்கே என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் இளவஞ்சி.

முந்தைய நாள் மதிய இடைவேளையில் தனது கணவன் ராஜாவிடம் நேரடியாகவே வஞ்சியைப் பேச வைத்திருந்தாள் ஜானகி.

“என்ன அண்ணா! சக்தி பத்தி எதுவும் நெகட்டிவ்வா தகவல் கிடைச்சுதா? இவளை கேட்டா ஒன்னும் சொல்லாம உங்ககிட்ட கால் செஞ்சி கொடுத்துட்டா!” என்று கேட்டாள் இளவஞ்சி.

“அதெல்லாம் ஒன்னுமில்லைமா! ரொம்ப நல்ல மனுஷன் தான்மா! எல்லாரையும் சக உயிராய் மதிக்கிற ஆளும்மா! கொஞ்சம் கோபம் அதிகம் வரும்னு சொல்றாங்க. ஃப்ரண்ட்ஸ்னு பெரிசா கேங்க்லாம் இல்லை. ஒன்னு இரண்டு பேரு தான் போல! நான் விசாரிச்ச வரைக்கும் நல்லதா தான்மா சொல்றாங்க” என்றவர் கூறி நிறுத்தவும், இவளின் முகம் நிலவாய் ஜொலித்தது.

“தேங்க்ஸ் அண்ணா” என்று இணைப்பைத் துண்டித்தாள்.

தோழியின் முகத்திலிருந்த மகிழ்வைக் கண்டு சிரித்தவளாய், “எப்போ உன் காதலை அவர்கிட்ட சொல்ல போற?” எனக் கேட்டாள் ஜானகி.

“இப்ப அவருக்கு என் நினைப்பு இருக்கா இல்லையானே தெரியலை ஜானு” வருத்தமான குரலில் அவள் உரைக்க,

“அதெல்லாம் இருக்கும். ஒழுங்கா அவர்கிட்ட பேசுற வழியை பாரு! இதுக்கு மேலேயும் இழுத்தடிக்காத வஞ்சி” என்று அறிவுரைக் கூறி அனுப்பியிருந்தாள் ஜானகி.

எவ்வாறேனும் அவனிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்துடனும், அவன் ஏன் தன்னை அழைக்கவில்லை? பால்கனியில் இருந்து தன்னைக் காணவும் நினைக்கவில்லை என்கின்ற ஆதங்கத்துடனும் உறங்கியவளுக்குத் தான் இவ்வாறான கனவு வந்திருந்தது.

அவனைக் காணும் ஆசையும் ஏக்கமும் நிறைந்த விழிகளுடன் ஜன்னல்களின் கம்பிகளைப் பற்றியவாறு பால்கனியைப் பார்த்தவாறு அவள் நின்றிருக்க, பாடலின் ஓசை திடீரென அதிகரிக்கப்பட்டு வரிகள் தெள்ளத்தெளிவாக அவளின் செவியைத் தீண்டியது.

மனசு தடுமாறும்
அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால

அவளின்‌ மனநிலையைக் கச்சிதமாக எடுத்துக் கூறிய இவ்வரிகளை அவன் இந்நேரம் இத்தனை சத்தமாக வைத்து அவளைக் கேட்க வைத்ததில் பெரும் வியப்பு அவளுக்கு.

‘நான்‌ இங்கே நிக்கிறது அவருக்கு தெரியுதா? என்னைத் தான்‌ பார்த்துட்டு இருக்காரா?’ யோசித்தவாறு அந்த பால்கனியின் ஜன்னலை உற்று நோக்கினாள்‌. மூடியிருந்த அந்த கண்ணாடி ஜன்னலில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை இவளால். ஆனால் அவன் அங்கிருந்து தன்னைப் பார்த்து கொண்டிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது அவளுக்கு.

அவனைக் காணும் நோக்கோடு தனது கைபேசியை எடுத்தவள், வாட்ஸ்அப் சென்று பார்க்க, அவனது புகைப்படம் அங்கிருந்து நீக்கப்பட்டிருந்தது.

வாடிய முகத்துடன் ஜன்னலருகே வந்து நின்றவள், அவனுக்குக் குறுஞ்செய்தி தட்டச்சு செய்வதும் அழிப்பதுமாக இருந்தாள்‌.

பின் தைரியம் வந்தவளாய்,

“எப்படி இருக்கீங்க?” என்று அனுப்பினாள்.‌

“நீ எப்படி விட்டுட்டு போனீயோ அப்படியே தான் இருக்கேன் கால் கட்டோட” என்று அனுப்பினான் அவன்.

நிமிர்ந்து ஜன்னல் வழியாக பால்கனியைப் பார்த்தவள், “மனசுல 96 விஜய் சேதுபதினு நினைப்பு” மெல்லிய குரலில் தனக்குள்ளேயே கூறிக் கொண்டவாறு சிரித்துக் கொண்டாள்.

மறுநொடி, “த்ரிஷாவோட விஜய் சேதுபதியா இருக்க ஆசை இல்ல! இளவஞ்சியோட சக்தீஸ்வரனா தான் இருக்க ஆசை” என்று அவன் அனுப்பியதும்,

“அய்யய்யோ நான்‌ பேசினது அவருக்கு எப்படி கேட்டுச்சு” சற்றுச் சத்தமாகவே அவள் அதிர்ந்து பேச,

“இதோ இப்படி தான் கேட்டுச்சு” அவளின் அலைபேசியிலிருந்து தான் கேட்டது அவனின் குரல்.

“அய்யய்யோ மெசேஜ் செய்றேன்னு போன் செஞ்சி வச்சிருக்கேனா உங்களுக்கு” அலைபேசியைக் காதில் வைத்தவாறு பதட்டத்துடன் அவள் கேட்க,

“ஆமாங்க மேடம்! அந்தளவுக்கு என் நினைப்புல பித்து பிடிச்சு சுத்துறீங்கனு புரிஞ்சிது” என்று கேலிச் செய்தான் அவன்.

“நிஜமாவே நான்‌ தான் கால் செஞ்சேனா?” இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை‌.

“உன் கை தவறி வாட்ஸ்அப்ல கால் வந்துடுச்சு போல! நான் அட்டெண்ட் செஞ்சிட்டு நீ பேசுவ பேசுவனு பார்த்தா.. மெசேஜ் டைப்பிங்னே வந்துச்சு! சரி ஏதோ டைப் பண்ணப் போறனு அமைதியாகப் பார்த்தா, கால் செஞ்ச ஞாபகமே உனக்கு இல்லைனு புரிஞ்சிது” என்றான்.

“ஹ்ம்ம்” என்று அவள் அமைதியாகி விட,

“சரி வச்சிடவா?” என்றான் அவன்.

“இல்ல இல்ல!” பதறியவாறு அவள் கூற,

“அப்ப வைக்க வேண்டாமா? சரி” என்றதும்,

“இல்ல இல்ல! அப்படி இல்ல” என்று மீண்டும் பதறியவாறு கூறியவள், ‘அய்யோ சொதப்புறியே வஞ்சி’ எனத் தனக்குள்ளாகவே கூறிக் கொண்டாள்.

அவள் இதயதுடிப்பின் ஓசை அவளுக்கே கேட்குமளவிற்குப் படபடவெனப் பதட்டத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆழ்ந்த பெருமூச்செறிந்து தன்னை சமன் செய்தவளாய், “இப்ப உடம்பு எப்படி இருக்கு? காயம்லாம் ஆறிடுச்சா?” எனக் கேட்டாள்.

“பாதிலயே விட்டுட்டு போனவங்களுக்கு என் காயம் பத்தி என்ன அக்கறையாம்?” சற்றுக் கோபமாகவே அவன் கேட்க,

“சாரி! ஆனா நான் அன்னிக்கு அங்கே இருந்திருந்தா நீங்க ஏன் காலேஜூக்கு வந்தீங்கனு கேள்வி வரும். நம்ம இரண்டு குடும்பத்துக்குள்ளயும் பிரச்சனை ஆகிடும்னு தான்‌ விட்டுட்டு வந்தேன்” என்றாள்.

அவனிடம் பதிலில்லாமல் அமைதியாக இருக்க, மனம் தவித்தவளாய், “என் மேல கோபமா இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.

“ரொம்ப ரொம்ப கோபமா இருந்தேன். உன் முகத்தைக் கூட பார்க்கக் கூடாதுனு தான் பால்கனி பக்கம் கூட வராம இருந்தேன்” முகத்தைப் பார்க்கக் கூடாது என்ற அவனின் வார்த்தையில் இவளின் கண்களில் நீர் நிறைந்தது.

“அப்படி என் முகத்தையே பார்க்க கூடாதுனு நினைச்சவரு இப்ப மட்டும் எதுக்கு பேசுறீங்களாம்?” கரகரத்த குரலில் சற்றுக் கோபமாகவே இவள் கேட்டிருக்க,

“ஏன்னா நான் என் வஞ்சி மேல உசுரையே வச்சிருக்கேனே! நான் வணங்குற ஈசன் அளவுக்கு அவ மேல அன்பும் பாசமும் வச்சிருக்கேனே! என்னால எப்படி அவ மேல கோபமா இருக்க முடியும்!”

அமைதியாகக் கேட்டிருந்தவளின் உள்ளம் பூரிப்பில் நெகிழ, வயிற்றினுள் பட்டாம்பூச்சி பறக்கும் குறுகுறுப்பு!

“ஆனா அவளுக்குத் தான்‌ அதுலாம் புரிய மாட்டேங்குது. புரிய வைக்கலாம்னு தான் அன்னிக்கு காலேஜூக்கு வந்தேன். இப்படி தான் பொம்பளைப் பிள்ளை பின்னாடியே போய் தொந்தரவு செய்வியானு ஈசன் காலை உடைச்சு உட்கார வச்சிட்டாரு” என்றான் சக்தீஸ்வரன்.

“இல்ல இல்ல நீங்க அப்படிலாம் ஒன்னும் தொந்தரவு செய்யலை! இது ஏதோ போதாத நேரம் இப்படி ஆகிட்டு. அதுக்காக உங்க மேலேயே ஏன் பழியை தூக்கிப் போட்டுக்கிறீங்க” அவனுக்காக அவனிடமே வாதாடும் அவளின் அன்பில் நெகிழ்ந்தவனாய்,

“வஞ்சிக்கு என்னை பிடிக்குமா?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்” என்றவளின் தலை ஆடியிருந்தது.

“கல்யாணம் செஞ்சிக்கலாமா?” அடுத்ததாய் அவன் கேட்க,

நாணத்தோடு “ம்ம்ம்” என்றவளின் தலை மீண்டுமொரு முறை ஆடியிருந்தது.

“உங்க வீட்டுல பொண்ணு கேட்டு வரவா?”

சந்தோஷமாய் “ம்ம்ம்” என்றவளின் தலை ஆடியிருந்தது.

அவளின் ம்ம்ம் மொழியையும் குரல் ஒலியையும் ரசித்தவனாய் கேட்டிருந்தவன்,

“இரண்டு பிள்ளை பெத்துக்கலாமா?” எனக் குறும்பாய் கேட்க,

தன்னைப் போல் “ம்ம்ம்ம்” என்று தலையை ஆட்டியவள் கேள்வியைக் கவனித்தவளாய் பதறியவாறு ம்ம்ம்ஹூம் என்றாள்.

அவனின் சத்தமான சிரிப்பொலி அவளின் செவியை நிறைக்க, “வஞ்சி தூங்காம என்ன செய்ற?” என்ற மங்கையின் குரலில் திடுக்கிட்டுக் கைபேசியைத் தனக்குப் பின்னே மறைத்தவளாய் மங்கையைப் பார்க்க, இவளைக் கேட்டவாறே போர்வையைப் போத்தியவாறு உறங்கியிருந்தாள் மங்கை.

ஆசுவாச பெருமூச்சு விட்டவளாய் படுக்கைக்குச் சென்றவள், “அப்புறம் பேசலாம். டேக் கேர்! பை” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கைப்பேசியைத் தூரமாய் தள்ளி வைத்து விட்டாள்.

அவளின் குறுஞ்செய்தியைப் பார்த்தவனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு.

அன்று காலை வெகு மகிழ்வான மனநிலையுடன் புடவை அணிந்து இளவஞ்சி கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க, அவளின் வீட்டின் முன்னே ஒரு மகிழுந்து வந்து நின்றது.

‘யாரது நம்ம வீட்டுக்கு கார்ல வருது’ என்று நினைத்தவளாய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, மணிகண்டனின் குடும்பத்தினர் மகிழுந்திலிருந்து இறங்கி வந்தனர்‌.

கையில் பழங்கள் பூவுடன் தாம்பூலத் தட்டுமாய் வந்தவர்களைப் பார்த்தவளுக்கு மனத்தினுள் பீதி உண்டாகியது.

“அம்மா” என்றவாறு ஆத்திரமாய் அவள் திரும்ப, அவள் முன் நின்றிருந்த வசந்தா, “இந்தா இந்தப் புடவையை சீக்கிரமா கட்டிட்டு வா! வந்தவங்க முன்னாடி என் மானத்தை வாங்காம நில்லு” என்று பட்டுப்புடவையை அவளின் கையினில் திணிக்க, அதிர்ச்சியும் கோபமுமாய் கண்களில் நீருடன் தாயைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி.