கண் முன் கண்ட காட்சியில், உடலும் உள்ளமும் பதற, “சக்தீஇஇஇ” என அலறியவாறு அவனை நோக்கி ஓடினாள் இளவஞ்சி. அந்த கல்லூரியின் வாயிலில் இருந்த காவல் பணியாளர் (செக்யூரிட்டி) இவளின் அலறலில் சாலையைப் பார்த்தவர் அவள் பின்னேயே ஓடினார்.
ஓடிய வேகத்தில் சேலைத் தடுக்க தார்சாலையிலேயே விழுந்தாள். அந்தத் தார்சாலை அவளின் முழுங்கையை பதம் பார்க்க, பின்னே வந்த காவல் பணியாளர் இவளைத் தூக்கி விட வருவதற்கு முன்பே இதில் எதிலும் கவனம் இல்லாதவளாய் அவசரமாகத் தட்டுத் தடுமாறி எழுந்து மீண்டுமாய் அவ்விடத்தை நோக்கி ஓடினாள்.
அதற்குள் கூட்டத்தில் இருந்த சிலரும் அந்த ஆட்டோ ஓட்டுனரும் சக்தியின் மீது விழுந்திருந்த வண்டியைத் தூக்கி நிறுத்தி சக்தியைத் தூக்கி ஓரமாய் அமர வைத்தனர். கால்களைச் சுத்தமாய் அசைக்க முடியாமல், அதீத வலியில் முகத்தைச் சுருக்கி கைகளிலும் கால்களிலும் ஆங்காங்கே சிராய்ப்புகளுடன் அமர்ந்திருந்த சக்தியிடம் வந்தாள் இளவஞ்சி.
“சக்தி! உங்களுக்கு ஒன்னும் ஆகலைல! நீங்க ஓகே தானே” அவளின் பார்வை அவனின் உடலை ஆராய, கண்களோ நீரைப் பொழிய, அவனது தோளைத் தொட்டிருந்த கைகளோ நடுங்கி கொண்டிருந்தன.
“ஏன் சார் ஒழுங்கா பார்த்து வர மாட்டீங்களா? இவருக்கு எதுவும் ஆச்சுனா உங்களைச் சும்மா விட மாட்டேன்” அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கோபமாய் கத்தியவள், “கொஞ்சம் பொறுத்துக்கோங்க சக்தி! ஹாஸ்பிட்டல் போய்டலாம்” என்றாள்.
“திடீர்னு பிரேக் பிடிக்காம போய்டுச்சுமா! நானும் கூட ஹாஸ்பிட்டல் வரேன்! அவருக்கு ஆகுற செலவை நான் பார்த்துக்கிறேன்” குற்றவுணர்வுடன் அந்த ஆட்டோ ஓட்டுனர் கூற,
“எல்லாத்தையும் பணம் கொடுத்து சரி செஞ்சிடலாம்ன்ற அளவுக்கு உங்களுக்கு மனுஷன் உசுரு ஈசியா போய்டுச்சுல!” ஆத்திரமாக உரைத்தவள், அங்கே நின்றிருந்த செக்யூரிட்டியிடம்,
“இந்த ஆட்டோ நம்பர் நோட் பண்ணிக்கோங்கண்ணா! அப்படியே ஹாஸ்பிட்டல் போக வண்டி பிடிச்சி தாங்கணா” என்றாள். இவளின் பேச்சிலேயே அங்கிருந்த கூட்டம் கலைந்து சென்றிருந்தது.
அந்த ஆட்டோ ஓட்டுனர், “அய்யோ சாரிமா சாரி! நீ நினைக்கிற மாதிரி உசுரை மதிக்காத ஆள் இல்லமா நானு. எனக்குமே இப்படி ஆகிடுச்சேனு கஷ்டமா தான் இருக்கு. இடிச்சிட்டு அப்படியே நான் போய்ருக்கலாம் தானே. மனசாட்சிக்குப் பயந்து வாழ்றவன்மா நானு. கேஸ்லாம் போட்டா அவங்க போடுற ஃபைன்னுக்கு என் வண்டில ஒன்னும் மிஞ்சாது மா. அந்தக் காசை அவரோட மருத்துவச் செலவுக்கு கொடுத்திடுறேன்னு தான் சொல்ல வந்தேன்மா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.
வலியின் தாக்கத்தில் சாலையிலேயே அருகில் முட்டியிட்டு அமர்ந்திருந்த வஞ்சியின் தோளில் சாய்ந்திருந்தவன், “விடு வஞ்சி! அவர் போகட்டும்” மெல்லிய குரலில் உரைக்க,
“அதெல்லாம் விட முடியாது. என் கண்ணு முன்னாடியே உங்களைக் கொல்ல பார்த்திருக்காரு. அதெப்படி விடுவேன்” என்று கத்தியவள்,
“வாங்க முதல்ல ஹாஸ்பிட்டல் போவோம்” என்று அவனுக்கு கைக் கொடுத்து தூக்கி நிறுத்த முனைய, ஆஆஆஆ என வலியில் துடித்தவாறு அலறினான் சக்தி.
செக்யூரிட்டி ஒரு ஆட்டோவை அங்கு கொண்டு வர, அனைவருமாக இணைந்து அவனைத் தூக்கி வண்டியில் அமர வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனரும் அவரது வண்டியை ஓரமாக அங்கே நிறுத்தி விட்டு இந்த ஆட்டோவின் முன் இருக்கையில் ஏறிக் கொண்டார். அருகிலிருக்கும் மருத்துவமனை நோக்கி சென்றது வண்டி.
தனது தோளில் அவனது தலையைச் சாய்த்துக் கொண்டாள். கால்கள் நீட்டியவாறு இருக்க, அவனது முகத்தில் வலியின் தாக்கம் அதிகரிப்பதின் வேதனை நன்றாகவே தெரிந்தது.
தோளில் இருந்த அவனது தலையை கோதியவள், “ரொம்ப வலிக்குதா?” கரகரத்த குரலில் கேட்டாள்.
ஹ்ம்ம் என்று முனகினான்.
அவனின் வலியையும் வேதனையும் கண்டு அவளுக்கு நெஞ்சம் வலிக்க, அழுகையில் விம்மிய குரலில், “ஒழுங்கா பார்த்து வந்திருக்கலாம்ல! தேவையா இந்த வலியும் வேதனையும் உங்களுக்கு! காலைல கனவு கண்டு தான் உங்களை பார்க்க வந்தேன். ஏதோ சரியில்லைனு மனசுல தோணிட்டே இருந்துச்சு. காலைல ஒழுங்கா கோவிலுக்குள்ளே போயிருக்கனும். வாசல் வரை வந்துட்டு ரிட்டர்ன் வந்துட்டேன்” மேலும் என்னென்னமோ அவள் புலம்பலாய் பேசிக் கொண்டே இருக்க,
அத்தனை வலியிலும் அவனின் முகத்தில் புன்முறுவல்.
தனக்காகக் கதறுகிறாள்! அழுகிறாள்! தனது வலியும் வேதனையும் அவளைத் தாக்குகிறது! இவற்றை எல்லாம் தாண்டி தன்னை பற்றி கனவு கண்டிருக்கிறாள்! தனக்காக இன்று கோவிலுக்குள்ளே சென்றிருக்க வேண்டும் என புலம்புகிறாள் அனைத்தும் இதமாக மனத்தைத் தாக்க, அந்த வலியிலும் மெல்லியதாக முறுவலித்தான் சக்தீஸ்வரன்.
“இப்ப வலி பரவாயில்லையா? என் மடியில வேணா சாஞ்சிக்கோங்க” என்று அவனது முகத்தைத் தனது மடியில் சாய்க்க, கண்கள் சொருகிக் கொண்டு போனது அவனுக்கு.
“சக்தி? என்ன செய்யுது சக்தி? என்னாச்சு?” என்று அவள் கேட்க, தலையை உலுக்கி கண்களைத் திறக்க முயற்சித்தவாறு சிறிது நேரம் தாக்குபிடித்த சக்தி, அவள் மடியிலேயே மயங்கிச் சரிந்தான்.
“சக்தி! சக்தி” அவனது கன்னத்தில் அவள் தட்டிப் பார்க்க, அசைவே இல்லை அவனிடம்.
“என்னம்மா? என்னாச்சுமா?” என்று முன்னே அமர்ந்திருந்த ஓட்டுனரும் இவளைப் பார்த்துக் கேட்க, “தெரியலைண்ணா” என்று அழுதாள்.
கண்களில் நீர் நில்லாமல் வழிய, “பயமுறுத்தாதீங்க சக்தி! முழிச்சிடுங்க சக்தி” எனத் கன்னத்தைத் தட்டியவாறு கூறியவளின் மனமோ, ‘கீழ விழுந்ததுல மண்டைல எங்கேயும் அடிப்பட்டிருக்குமோ’ அவனின் மண்டையை அசைத்து பார்த்தவள் வேறெங்கும் அடிப்பட்டுள்ளதா என உடலெங்கும் ஆராய்ந்தாள்.
காலில் அடிப்பட்ட இடத்தில் ரத்தம் வழிய, கைகளில் இருந்த சிராப்புகளிலும் ஆங்காங்கே ரத்தமாகி இருந்தது.
“என்னை விட்டுப் போய்டாதீங்க சக்தி” படபடப்புடன் அவளின் உள்ளம் கதறிக் கொண்டிருக்க, அவன் மார்பில் காதை வைத்து அவனின் சீரான இதயத் துடிப்பைக் கேட்டப்பின் தான் இவளின் இதயம் சற்றுச் சீராகத் துடித்தது.
“அண்ணா சீக்கிரம் போங்கண்ணா” ஓட்டுனரை அவள் துரிதப்படுத்த மருத்துவமனையில் நின்றது வண்டி.
விபத்து செய்த அந்த ஆட்டோ ஓட்டுனரே முன்னின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அனுமதி தாளை நிரப்பும் பொழுது இவளை மனைவி என்றே குறிப்பிட்டு அவசரம் அவசரமாக நிரப்பியவர் அவளிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டார்.
முதல் கட்டச் சிகிச்சையில் அதீத வலியில் மயங்கி இருப்பதாக உரைத்தவர்கள் அவனுக்கு மருத்துவத்தைத் துவங்கினர்.
அவனை உள்ளே அனுமதித்து விட்டு வெளியே நின்றிருந்தனர் அந்த ஆட்டோ ஓட்டுனரும் இளவஞ்சியும்.
அழுது வடிந்த முகத்துடன் சோகமாய் நின்றிருந்தவளிடம் சென்ற அந்த ஆட்டோ ஓட்டுனர், “ஒன்னும் ஆகாது தங்கச்சி! அழாதீங்க! என்னால் தானே இதெல்லாம்னு குற்றயுணர்ச்சியா இருக்குமா. உங்க வீட்டுகாரருக்கு சரியாகாம இங்கிருந்து நகர மாட்டேன்மா!” என்றார்.
அவசரமாக தலையசைத்து மறுத்த இளவஞ்சி, “அவர் என் வீட்டுக்காரர் இல்லண்ணா” என்றாள்.
“அய்யோ சாரிம்மா! அட்மிட் செய்யனும்னு அவசரமா ஃபார்ம்ல உங்களைக் கேட்காம அவருக்கு நீங்க வைஃப்னு போட சொல்லிட்டேன்” என்றதும் நிமிர்ந்து பார்த்தவளின் மனதில் சுருக்கென்று வலி!
என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்! இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்! சக்தியின் மனைவி என்று நினைக்கும் அளவிற்கு புலம்பி வைத்திருக்கிறேனே!
மண்டையைப் பிடித்தவாறு அமர்ந்து விட்டாள் இளவஞ்சி.
“தலை வலிக்குதாமா! டீ வாங்கிட்டு வரவா” என்று அவர் வாஞ்சையுடன் கேட்டுக் கொண்டிருந்த நேரம் அங்கு வந்து நின்றாள் ஜானகி.
ஜானகியைக் கண்டதும் தாயைக் கண்ட கன்றாய் ஓடிச் சென்று, ஜானு என அணைத்துக் கொண்டு அழுது விட்டாள் இளவஞ்சி.
“ஹே வஞ்சி! என்னடி? என்னாச்சு? நம்ம செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டுட்டு தான் ஓடோடி வந்தேன். யாருடி அந்தாளு? எதுக்காக இப்படி வந்து உட்கார்ந்திருக்க?” வஞ்சியின் முகத்தை நிமிர்த்தியவாறு அவள் கேட்க,
“நான் சொன்ன வசியக்காரன் இவர் தான்டி! கொஞ்ச நேரத்துல என் உசுரே போன மாதிரி ஆகிடுச்சு ஜானு!” என்றவள் நடந்ததை உரைத்தாள்.
“இந்த டிரைவர் அண்ணா வேற என்னை சக்தியோட வைஃப்னு சொல்லி ஃபார்ம் ஃபில் செஞ்சிருக்காரு” என்றவள் அமர்ந்து விட்டாள்.
அவளருகில் அமர்ந்த ஜானகி, “இப்ப உன் வசியக்காரர் எப்படி இருக்காரு?” என்று சிரிப்பை அடக்கியவாறு ஜானகி கேட்க,
“இங்கே ஒருத்தி புலம்பிட்டு இருக்கேன். சிரிக்கிற பக்கி நீ” அவளை முறைத்தாள் இளவஞ்சி.
“பின்னே நீ இவ்ளோ சொதப்பி வச்சா பொஞ்சாதினு சொல்லாம தங்கச்சினா சொல்லுவாங்க” என்று ஜானகி மேலும் சிரிக்க, வஞ்சிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘அய்யோ என்ன செஞ்சி வச்சிருக்க வஞ்சி நீ’ தலையிலேயே தட்டிக் கொள்ள,
“பார்த்து.. பார்த்து.. மூளை வெளியே கழண்டு விழுந்துடப் போகுது” ஜானகி கேலிச் செய்ய, செவிலியர் ஒருவர் வந்து இவர்களை உள்ளே அழைத்தார்.
‘மயக்கத்தில் இருக்கிறானா? உறக்கத்தில் இருக்கிறானா’ கண்டறிய முடியா விதத்தில் கண்களை மூடியவாறு படுத்திருந்த சக்தியை பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள் வஞ்சி.
“கால்ல பிராக்சர் ஆகிருக்கு. கொஞ்ச நேரத்துல பிசியோ டாக்டர் வந்து செக் பண்ணுவாரு. பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. ஃபுல் பாடி செக் அப் ஒரு தடவை செஞ்சிடுங்க” மேலும் சில விவரங்களை அவள் கேட்க, அதற்குத் தேவையான பதிலை அளித்துவிட்டு மருத்துவர் அங்கிருந்து நகர்ந்து விட, அவனருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள் இளவஞ்சி.
அவனை இப்படி காணவே மனம் கனத்து போனது அவளுக்கு. மீண்டுமாய் கண்களில் நீர் உற்பத்தியாக, ஜானகியை நிமிர்ந்து பார்த்த வஞ்சி, “இவர் எனக்கு யாரு? எனக்கு என்ன உறவு? என்ன பந்தம் எங்களுக்குள்ள? ஒன்னும் தெரியாது ஜானு! ஆனா அவருக்கு வலிச்சா என்னால தாங்கவே முடியலை ஜானு. என் மனசுலாம் ரணமா வலிக்குது” என்றதும் வஞ்சியின் தலையை வருடியவாறு ஜானகி வந்து நிற்க, அவளிடையை கட்டிக் கொண்டாள் இளவஞ்சி.
இளவஞ்சியின் மனத்தின் நிலையை நன்றாக புரிந்து கொண்டாள் ஜானகி. ஆனால் அதை இளவஞ்சி புரிந்து கொண்டாளா என்று ஜானகியால் கணிக்க முடியவில்லை.
“இவரோட அப்பா அம்மாக்குலாம் தகவல் சொல்லனுமே! அவங்க நம்பர் எதுவும் உன்கிட்ட இருக்கா?” என்று ஜானகி கேட்டதும் தான் கைபேசியைத் தேடினாள் இளவஞ்சி.
“நீ பாட்டுக்கு கையிலே ஒன்னுமே எடுத்துட்டு வராம வந்துட்ட! உன் போன் உன் கைல இருக்கா பேக்ல இருக்கானு கூட தெரியலையேனு எடுத்துட்டு வந்தேன்” என்று இளவஞ்சியின் தோள்பையை அவளிடம் கொடுத்தாள் ஜானகி.
“அதான் நான் போன் செஞ்சும் நீ எடுக்கலையா? ரிங் போச்சுடி” என்றவள் மீண்டுமாய் முயற்சி செய்ய, யாரோ ஒருவர் எடுத்துப் பேசினார்.
“ரோட்டுல கிடந்து அடிச்சிட்டு இருந்துச்சுங்க” என்று யாரோ ஒருவர் எடுத்துப் பேசவும், அவரிடம் கூறி அந்த கைபேசியை கல்லூரி செக்யூரிட்டியிடம் ஒப்படைக்குமாறு கூறினாள் ஜானகி.
“ஹப்பாடா காணாம மட்டும் போயிருந்துச்சு எங்கம்மா என்னை ஒரு வழியாக்கி இருப்பாங்க” என்று பயந்தவாறு உரைத்த இளவஞ்சி ஞாபகம் வந்தவளாய், “அய்யோ ஜானு ஏற்கனவே நிறையவே சொதப்பி வச்சிருக்கேன்டி!” என்றவள் விடியற்காலையில் கண்ட கனவினையும் அவனைச் சென்று பார்த்ததையும் உரைத்தாள்.
அவள் கூறியதைக் கேட்டு வியப்புற்ற ஜானகி, “நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே வஞ்சி! நீ ஏன் உன் வசியக்காரனையே கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது. என்னோட வேண்டுதலை நிறைவேற்ற ஈசன் செய்யும் வேலையா தான் இது எனக்குத் தோணுது வஞ்சி! உன் மனசும் அதுக்கேத்த மாதிரி தான் ரியாக்ட் செய்யுது” கண் சிமிட்டியவாறு ஜானகி கூற, இளவஞ்சி அவளை முறைத்தாள்.
“சரி சரி நான் போய் உனக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன். சக்தி வீட்டுக்குத் தகவல் சொல்ல முடியுமானு பார்க்கிறேன்” என்றவாறு தனது கைபேசியுடன் வெளியே சென்றாள்.
‘நீ ஏன் உன் வசியக்காரனையே கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது வஞ்சி’ ஜானகியின் குரல் அவளின் செவியினில் ஒலித்தவாறு இருக்க, நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்தாள்.
வலியில் சுருங்கிய முகத்துடன் உறக்கத்தில் இருந்தவனைப் பார்த்தவள், “உங்களை பத்தி எனக்கு என்ன தெரியும்? ஆனா எனக்கு ஏன் இப்படி ஃபீல் ஆகுது உங்க மேல! ஈசனே நீங்க தான் தெளிவுப்படுத்தனும்” என்று கை எடுத்து கும்பிட்டவாறு வாய் திறந்தே கூறியவளுக்கு அவனளித்த பரிசு நினைவினில் வர, சட்டெனத் தனது கைப்பையைத் திறந்து பார்த்தாள்.
அந்தப் பரிசினை எடுத்துப் பிரித்துப் பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்து போனது.
அவள் கனவில் கண்ட அதே பூஞ்சோலை வனத்தில் மூன்று பட்டையுடன் குங்குமம் வைத்தவாறு அவனும், மூன்று கல் மூக்குத்தியுடன் பேரரழகியாய் அவளும் கழுத்தில் மாலையுடன் மணக்கோலத்தில் கனவில் அவனுடன் பூஜித்த அதே சிவலிங்கத்தின் முன்பு நின்றிருக்கும் ஓவியத்தை அவளுக்கு பரிசாக அளித்திருந்தான் அவன்.
‘இது எப்படி சாத்தியம்? தான் கனவில் கண்டதை எவ்வாறு இவன் அப்படியே வரைந்து வைத்திருக்கிறான்’ அவளின் உள்ளம் முனங்க, அதிர்ச்சியும் வியப்புமாக அந்த ஓவியத்தைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி.