“அவங்க அதெல்லாம் பார்க்கலைங்கும்போது என்னத்த சொல்ல சொல்ற? அவங்க என்ன பொண்ணு பார்க்கவா வராங்க? உங்களையெல்லாம் பார்த்து அடுத்து பேச வராங்க. பொண்ணு எப்ப ஊருக்கு வராங்கறதைப் பொறுத்து கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லுங்க.”
“உங்கிட்ட வந்து சொன்னேன் பாரு”, சரோஜினி நொடிக்கவும்,
“எல்லாத்துக்கும் நாள் நட்சத்திரம் பார்த்து ப்ரீத்தியை கட்டிக் கொடுத்து என்ன நல்லது நடந்துடுச்சு? நீதான் சொல்லுவியே, என் விதிப்படித்தான் எல்லாம் நடக்குதுன்னு, அதே மாதிரி இதுவும் நடக்கட்டும் மா. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவங்ககிட்ட பேசமுடியாது”, கீர்த்தி பேசிய பேச்சில் சரோஜினி வாயை மூடிக்கொண்டார்.
“ப்ரீத்திக்கும் உடம்பு சரியில்லை. சாப்பாடே சாப்பிடமாட்டேங்கறா. மஞ்சக் காமாலை மாதிரி இருக்கு. டாக்டர் கிட்ட போலாம் வாடின்னா இப்பதான் வேலையில சேர்ந்திருக்கேன், லீவு போட முடியாதுங்கறா. பத்தாததுக்கு உன் மாமியா வேற வராங்க. வந்து போகட்டும் அடுத்த வாரம் பார்க்கலாம்னு சொல்லிட்டா”, அடுத்த குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.
“சாயந்திரம் போய் டாக்டரை பார்த்தா என்னவாம்? போய் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லு. மஞ்சக் காமாலைன்னா ஒழுங்கா மாத்திரை எடுக்கணும். அந்தம்மா வரதுக்கும் இவ டாக்டரை பார்க்கறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ அப்பாவை அப்பாயிண்ட்மென்ட் போட சொல்லி கூட்டிட்டு போ”, கீர்த்தி கடியவும்,
“ம்க்கும்… நான் என்ன சொல்லாமலா இருக்கேன். வேலைக்கு போயிட்டு வந்து டயர்டா இருக்குன்னு சுருண்டுக்கறா. பாதி நேரம் ஹர்ஷிக்கு சோறு ஊட்டக் கூட எழுந்துக்க முடியலை. என்னால ஆனது, கிழானெல்லி, கரிசலாங்கண்ணின்னு குடுக்கறேன்.”, என்றார் பாவமாக.
நெற்றியை தேய்த்தாள் கீர்த்தி, “தேவையில்லாம நோயை வளர்த்துகிட்டு காம்ப்ளிகேட் பண்ண வேணாம்னு சொல்லு.”, எரிச்சலானது. இரகுராமன் இறந்ததிலிருந்தே உணவு குறைந்துவிட்டது என்று அவ்வப்போது சரோஜினி புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார். இதோ சரியாகிவிடும், இன்னும் கொஞ்சம் போனால் தேறிக்கொள்வாள் என்று சொன்னதற்கு மாறாக இன்னும் மோசமாக படுத்துகிறாள். வயதான காலத்தில் சரோஜினிதான் எவ்வளவு வேலை செய்வார்?
“சரி பார்த்துக்கோமா. அப்பறமா பேசறேன். அப்பாகிட்ட சொல்லி டாக்டர்கிட்ட அழைசிட்டு போ”, என்பதோடு வைத்துவிட்டாள்.
சனிக்கிழமை இரவு ஜெயராணியிடமிருந்து ஜோசஃபிற்கு அழைப்பு வந்தது.
“கீர்த்தி வீட்டுக்கு போயிட்டு வந்தேன் தம்பி. வாடகை வீடுன்னாலும் கூட ரொம்ப சாதாரணமா இருக்கு. அந்த பொண்ணு ப்ரீத்தியும் அவ குழந்தையும் கூட இருந்தாங்க. பார்க்க பாவமா இருந்துச்சு.”
“…”
“ஜோசஃப்?”
“சொல்லுங்கம்மா. கேட்டுகிட்டுதான் இருக்கேன்.”
“ஹ்ம்ம். கீர்த்தி அப்பாவுமே தளர்ந்துதான் இருக்கார். நாளபின்ன எதுன்னாலும் நீயும் கீர்த்தியும்தான் பார்த்துக்கணும். அந்த பொண்ணு ப்ரீத்திக்கு நாளைக்கு வேற ஒரு வாழ்க்கை அமைச்சு தரணும்னாலும் நீங்கதான் முன்னெடுக்கணும். எல்லா பொறுப்பும் உங்களுக்குத்தான் வரும் தம்பி.”
எங்கே வருகிறார் என்று புரிந்த போதும், “தெரியும்மா. கீர்த்தி ப்ளஸ் மைனஸ் எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் செய்துக்க விருப்பப்படறேன். அவளும் அப்படித்தான். என் பொறுப்புங்க, கடமைங்களை உணர்ந்துதான் இருக்கா. அவங்க வீட்டு மனுஷங்களைக் கொண்டு மட்டும் அவளை எடை போடாதீங்க. அதே மாதிரி அவ என்ன சீர் கொண்டு வரான்னும் எதிர்பார்ப்பு வெச்சுக்கமாட்டீங்கன்னு நம்பறேன்.”, எச்சரிக்கையாவே கூறினான் ஜோ.
“ஏன் அவ வீட்டு மனுஷங்களுக்கு என்னடா? தன்மையாத்தான் பேசினாங்க.”, என்று ஜெயராணி கேட்க, ‘ஆமாமா தன்மையா பேசி காரியம் சாதிப்பாங்க’ என்று மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்தவன், “அவங்களை எனக்கு தெரியாதுமா. அதனால சொன்னேன்”, என்று மழுப்பினான்.
“என்ன கொஞ்சம் வசதி இருந்திருந்தா தேவலாம்”, என்று ஜெயராணி அடுத்து சொல்ல,
“வசதி வாய்ப்பு இல்லைன்னா என்னம்மா இப்ப? மருமக கொண்டு வந்துதான் வீடு நிறையணுமா?”
“இப்ப வித்தியாசமா தெரியலைன்னாலும், உன் தம்பிக்கு பொண்ணு பார்க்கும்போது, இதெல்லாமும் யோசிக்கணும். பெரிய இடத்துலர்ந்து அவனுக்கு பொண்ணு எடுத்தா, இரண்டு மருமகங்களுக்கும் உரசல் வரும் ஜோ”, நிதர்சனம் கூறினார்.
“அதனாலதான் சொல்றேன். நானே ஸ்டீஃபனுக்கு நல்ல பொண்ணா பார்த்திருக்கேன். உங்ககிட்டயும் சொல்லிட்டுதான வந்தேன். குடும்பத்துக்கு உழைக்கற பொறுப்பான பொண்ணு ஷீத்தல். அவன் குணத்துக்கும் ஒத்துப் போகும். என் கல்யாண முடிவைக் கொண்டு இந்த பொண்ணை வேணாம்னு சொல்லாதீங்க. கொஞ்சம் பிடிவாதத்தை தளர்த்துங்கம்மா. நான் விவரம் சொன்ன வரைக்கும் ஸ்டீஃபனுக்குமே சம்மதம்தான். ஆனாலும் நீங்க பார்த்து சொன்னாதான்னு சொல்லிட்டான். அவ போட்டோ அனுப்பறேன். பாருங்க. அவங்க வீட்டுக்கு பேசுங்க. முடிவானா, இரண்டு கல்யாணமுமே அடுத்தடுத்து வெச்சிக்கலாம்.”, ஜெயராணியை திசை திருப்பினான்.
இன்று ஜெயராணியுடன் அவனது ஒன்றுவிட்ட மாமாவும் சென்றிருந்தார். ஸ்டீஃபன் அவரிடம், இந்த இடம்தான். யார் என்ன சொன்னாலும் அண்ணன் கீர்த்தியைத்தான் திருமணம் செய்யப் போகிறான். அப்பாவின் இடத்தில் இருந்து நல்லவிதமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்க, அவருமே வேணுகோபாலுக்கு ஏதுவாக பேசியிருந்தார்.
அவரைக்கொண்டே அடுத்து ஸ்டீஃபனுக்கும் முடிக்க ஜோ பேசி ஷீத்தல் குடும்பம் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டான்.
ஒரு வழியாக வாழ்க்கை சரியான தடத்தில் செல்வதுபோல இருந்தது. கல்யாண முன்னெடுப்புகள், அவன் வேலை, கீர்த்தியுடனான அவனது நெருக்கம், இதோ இப்போது ஸ்டீஃபனுக்கான திருமணப் பேச்சு என்று எல்லாவற்றிலும் முன்னேற்றங்கள் தென்பட உற்சாகமாகவே இருந்தான்.
பள்ளி ஆண்டு விழாவிற்கான வேலைகள் அதிகம் இருக்க நாட்கள் பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தது.
ஆண்டு விழா தொடர்பான ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று மேடம் டெய்லர் தலைமையில் முடிந்து கலையும் நேரம், கைப்பையில் வைத்திருந்த கைப்பேசி அதிரவும், எடுத்தவள், வார மத்தியில் இந்த நேரத்தில் தந்தை அழைக்கவும், பதபதைத்து எடுத்தாள்.
“அப்பா? என்னாச்சு?”
“அம்மாடி… ப்ரீத்தி… ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்குடா. வேலையில மயங்கி விழுந்துட்டான்னு பக்கத்துல சேர்த்தாங்க. ஆனா… “, அவர் குரல் தழுதழுக்க,
“ஆனா என்னப்பா?”, அவள் முக மாற்றத்திலேயே, ஷீத்தலும் ஜோவும் வந்துவிட, அவர்களைப் பார்த்தவள், ப்ரீத்தி, ஹாஸ்பிட்டல்் என்று வாயசைத்தாள்.
“என்னவோ டெஸ்ட் எடுத்துட்டு வேற பெரிய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க சார்னு சொல்றாங்கடா… அவ ரத்தம் டெஸ்ட் பண்ணதுல நிறைய கோளாறா இருக்குன்னு சொல்லி… க்…கான்சர் டாக்டரை பார்க்க சொல்றாங்கடா”, என்ற போது குற்றுயிராய் வந்தது அந்த தகப்பனின் குரல்.
“ப்பா…என்ன சொல்றீங்க?”, கீர்த்தியுமே பயந்து கேட்க, அவளிடமிருந்து கைப்பேசியை ஜோ வாங்கியிருந்தான்.
“மாமா…ஜோ பேசறேன். என்ன ரிப்போர்ட்? சந்தேகமா இருக்கு ஒப்பினியன் வாங்கணும்னு சொன்னாங்களா? இப்பல்லாம் கேன்சர் இல்லைன்னு செக் பண்ணிட்டுதான் மத்த வியாதிக்கே வராங்க. பயப்படாதீங்க. ரிப்போர்ட் எனக்கு அனுப்புங்க. சென்னையில யார் டாக்டர்னு விசாரிச்சிட்டு சொல்றேன். இப்ப ப்ரீத்தி ஓகேதான?”
அவனின் தெளிவான பேச்சில் சற்று நிதானம் பெற்றவர், “ஹான்… ஆமாப்பா. அவ ஓகேதான், மஞ்சக் காமாலைக்கு மருந்து குடுத்துவிட்டிருக்காங்க. வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா அவளுக்கு பார்த்த டாக்டர் இப்படி சொல்லவும் பயந்துட்டேன்”, என்றார்.
அவன் பேச்சில் கீர்த்தியுமே சற்று தைரியம் பெற்றவளாக, “பயப்படாதீங்கப்பா, அப்படில்லாம் ஒரு ப்ளட் டெஸ்ட்ல சொல்லிடமுடியாது”, என்று இன்னும் சற்று தைரியம் சொல்லி வைத்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் ரிப்போர்ட் வாட்ஸப்பில் வந்து சேர்ந்தது.
“ஜோ…ஒன்னும் இருக்காதில்ல?”
“என் ஃப்ரெண்டோட அப்பாகிட்ட காட்டி கேட்க சொல்றேன் கீத்துமா. நீ வீட்டுக்குபோ. நான் அவங்கிட்ட பேசிட்டு, ரிப்போர்ட் அனுப்பிட்டு வரேன். ஷீத்தல் கூட போமா”, என்று அனுப்பி வைத்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் தோழனின் தந்தையே அழைத்திருந்தார். “ஜோசஃப், யாரோட ரிப்போர்ட்பா அது?”
ஜோ சொல்லவும், “ஹ்ம்ம்… சில ரீடிங் ரொம்ப அதிகமா இருக்கு. சீக்கிரமே ஒரு ஆன்காலஜிஸ்ட் பார்த்து இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எடுத்தா கன்ஃபர்மா சொல்ல முடியும். அப்பல்லோல எனக்கு தெரிஞ்ச டாக்டர் சொல்லவா? இல்லை அவங்களே பார்த்துக்குவாங்களா?”
“அப்பல்லோவா? ஃபாமிலி கொஞ்சம் வசதி வாய்ப்பு கம்மிதான் அங்கிள்”, என்று தயங்க,
“பரவாயில்லை. நான் சொல்லி வைக்கறேன். அவர்கிட்ட கன்சல்டேஷன் போகட்டும். இது கொஞ்சம் சீரியஸ் மாதிரிதான் தெரியுது ஜோ, டைம் வேஸ்ட் பண்ண வேணாம். முடிஞ்சா இன்னிக்கே போய் பார்க்கச் சொல்லு”, என்று எச்சரித்தே வைத்தார்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், இதை எப்படி கீர்த்தியிடமும், அவள் வீட்டினரிடமும் சொல்வது என்று யோசனையானான்.
கீர்த்தியோடு ஜோவும் ஸ்பீக்கர் போனில் பேசிக்கொண்டிருந்தான். “மாமா, சந்தேகம்னு வந்துட்டா, செக் பண்ணிடனும். நான் அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டேன். நம்ம வீட்டு நிலைமையும் தெரிஞ்ச டாக்டர், அப்படில்லாம் ஃபீஸ் வாங்கிட மாட்டார். போய் பார்த்துட்டு வாங்க. சொல்ற டெஸ்ட் எடுத்துடலாம்.”, ஜோ சொல்லவும்,
“ஆமாப்பா. காசு பத்தி யோசிக்காதீங்க. நான் அனுப்பறேன். இன்னிக்கு போய் பார்த்துட்டு வாங்க. பெரிய டாக்டர்ப்பா, நமக்காக உடனே அப்பாயின்ட்மென்ட் ஏற்பாடு பண்ணிருக்கார் ஜோ”, என்று கீர்த்தியும் அவள் பங்குக்கு சொல்லவும், கிளம்பிச் செல்வதாக ஒத்துக்கொண்டார்கள்.
“ஜோ?”, என்று அழைப்பை துண்டித்தபின் அவன் முகம் பார்க்க, அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டவன், “எதுவானாலும் ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும் கீத்துமா. இப்ப எவ்வளவோ மருந்துங்க வந்தாச்சு. செலவாகும். அது ஒன்னுதான். பார்த்துக்கலாம்”, தேறுதல் கூறினான்.